Namvazhvu
மோடி தோற்றாரா?
Friday, 11 Oct 2024 11:07 am
Namvazhvu

Namvazhvu

பாரதிய சனதா கட்சி மீண்டும் ஆட்சிக் கட்டிலேறும். இம்முறை 400 இடங்களுக்கு மேல் பாரதிய சனதா கட்சி பெறும். தேர்தலுக்குப் பின் எதிர்க்கட்சிகள் எவருக்கும் நாடாளுமன்றத்தில் இடமிருக்காது. அவை நடைபெறும் நாள்களில் பார்வையாளர் பகுதியில்தான் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமர்ந்து அவை நடவடிக்கையைக் கவனிப்பர்.”

- நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரையின்போது இந்தியப் பிரதமர் மோடி உதிர்த்த பொன்னான சொற்களே இவை.

மோடி உறுதியளித்த 400 இடங்களைப் பெற அவர் மேற்கொண்ட பரப்புரைகள், பரப்புரையின்போது கையாண்ட முறையற்ற நெறிகள், பொய்யுரைகள், பகை கக்கும் சொல்லாடல்கள், வெறுப்பரசியலின் அனைத்துப் பரிமாணங்களும் வெளிப்பட்ட முறை, தெருக்களில் ஓயாது சண்டையிடும் நபர்கள் போன்று இந்நபர்கள் பேசும் அர்த்தமற்ற கெட்ட வார்த்தைகள் போன்று அதிகாரப் பீடத்தை அலங்கரிப்பதாகப் பாராட்டப் பெறுகின்ற இந்தியப் பிரதமர், அதிகாரம் கொடுத்த அதிக சலுகைகளால் விமானமேறிப் பயணித்து, நாட்டின் பல்வேறு பகுதிகளில் துவேஷப் பிரச்சாரம் செய்தார். கடந்த இருமுறை இம்மாதிரியான துஷ்டப் பிரச்சாரங்களால் பாதிப்புறாத நம் வாக்காளப் பெருமக்கள், இம்முறையும் அதே தவற்றினைச் செய்வாரோ என்ற அச்சம் மக்களிடம் எழுந்ததில் வியப்பில்லையே! சமூக நல்லிணக்கம், சமயச் சார்பின்மை, அடையாளப் பாதுகாப்பு என்பதிலெல்லாம் நம்பிக்கை கொண்ட ஒரு மக்கள் திரள், மோடி மீண்டும் வந்துவிடுவார் என்ற அச்சத்தில் வாழ்ந்ததில் தவறில்லையே!

இந்தியா விடுதலை பெறுமுன்பே, விடுதலை பெற்ற இந்தியாவின் தலைமைப் பறிபோய்விடுமோ என்று அஞ்சி, விடுதலைப் போராட்டத்தில் எந்தப் பங்கும் வகிக்காமல் ஒதுங்கி நின்றதோடு, மக்களை மதரீதியாக ஒருங்கிணைத்து, எதிர் அரசியலுக்காக உருவாக்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ். (1925) அமைப்பின் மூலம் வகுப்புவாத நச்சினையும், நச்சின் கொடிய விளைவால் மதக்கலவரங்களைத் தூண்டி வகுப்புவாத அரசியல் மூலம் ஆட்சியதிகாரத்தைக் கூட்டணி எனும் யுக்தி மூலம் கைப்பற்றி, 2014 முதல் சர்வ அதிகாரம் பொருந்திய முழுபலத்தோடு ஆட்சியேற்று, அரசியல் வாழ்வின் அனைத்து நாகரிக முறைமைகளையும் கைவிட்டு வரும் இன்றைய ஆளும் கட்சி, மீண்டும் அரசுப் பதவியை ஏற்கும் நிலை வருமோ என்ற அச்சம் அரசமைப்புச் சட்டத்தையும் சனநாயகத்தையும் நம்பும் சக்திகளிடம் இருந்தது என்பது உண்மையே.

சனநாயகத்தில் நம்பிக்கையற்ற ஓரமைப்பு ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றுமானால், கண்ணீர் விட்டு வளர்த்த சுதந்திரப் பயிர் கருகிப் போய் விடுமோ என்ற அச்சம் இச்சமூகத்தை வியாபித்திருந்தது என்பதும் உண்மையே. சனநாயகத்தின் மிகப்பெரிய உரிமையான தெரிவு செய்யும் தேர்தல் முறையை மட்டும் விடாது கடைப்பிடிக்கும் இக்கட்சி, சனநாயகத்தின் ஏனைய உயிர்ப் பண்புகளைக் காவு கொடுத்தலில் ஒரு சூழ்ச்சியிருப்பதை நம்மவர் புரிந்துகொள்ளவில்லை என்பதும் உண்மைதானே!

சனநாயகத்தை நம்பவில்லையெனினும், தேர்தல் சனநாயக வழி மதரீதியாக மக்களை அணி திரட்டி (Polarise), பெரும்பான்மை என்ற பெயரில் பெரும்பான்மைவாதத்தைக் கட்டமைக்க முடியும் என்ற சூழ்ச்சியைத் திறம்பட நடத்திக் காட்டுதலில் வல்லவர்கள் மதவாதிகள். மதவாத அரசியல் செய்வோர்க்கு இவ்வழி மிகுந்த நம்பிக்கை தந்த ஒரு வழி.

ஆக, விடுதலை பெற்ற இந்தியா மதம் சார்ந்த நாடாகவே இருக்க வேண்டும் என்று விரும்பியவர்களின் தலையில் மண் விழும்படி, இந்தியத் தலைவர்கள் அரசியல் நிர்ணய சபையைக் கூட்டி, ‘குடிமக்களாகிய நாம்’ (We, the People of India) என்ற பெயரில் சனநாயக, சமத்துவ, சமயச் சார்பற்றக் குடியரசாக இந்தியாவை அறிவித்தனர். சனநாயகத்தின் எவ்விதச் சாயலும் இல்லாத இந்தியச் சமூக அமைப்பின்மீது அபரிமிதமான நம்பிக்கை கொண்டு, இப்படியான ஓர் அறிவிப்பைத் தந்த இத்தலைவர்களைப் பாராட்டத்தானே வேண்டும்?!

சனநாயகத்தை நம்பாத மதவாத சக்திகள் சனநாயகம் தந்த தேர்தல் முறையைக் கையிலெடுத்தனர். அரசமைப்புச் சட்டத்தின் எந்தக் கூறுகளையும் நம்பாத இவர்கள் சனநாயகம் தந்த தேர்தல் வழி வெற்றி கண்டு, பதவியேற்கும்போது சனநாயகம் பேண உருவாக்கப்பட்ட அரசமைப்புச் சட்டத்தின் மீது சத்தியப் பிரமாணம் செய்ய வேண்டிய நிலை! ‘இந்திய அரசமைப்புச் சட்டம் இந்துகளுக்கு எதிரானது’ (Unhindu) என்று உரத்து அறிவித்தார் கோல்வால்க்கர். இந்து தர்மத்துக்கு எதிரான அரசமைப்புச் சட்டம் வேதங்களுக்கு நிகரானது என மோடி புகழ்வதும், நவம்பர் 26 -ஆம் நாளை அரசமைப்புச் சட்ட நாளாக அறிவிக்க வேண்டும் என மோடி அறிவித்ததும் நாமறிந்த முரண்களில் மிகப் பெரிய முரணில்லையா? கொண்ட கொள்கைகள் சரியானவை அல்ல என்று கண்டு மாற்றிக்கொள்ளுதல் தவறில்லை; தவற்றினையும் மன்னித்து ஏற்றுக்கொள்வோம். தவறு செய்தோரையும் மன்னிக்கலாம். எப்போது? உளமார ஏற்றுக்கொள்ளும் மனநிலை இல்லாதபோது எப்படி சாத்தியம்? நாளும் பொழுதும் மோடியால் வேதமாகக் கருதப்படும் அரசமைப்புச் சட்டம் தாறுமாறாகச் சிதைக்கப்பட்டு வரும் நிலையில் இவர்களை எப்படி மன்னிப்பது?

இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கும், சனநாயக விழுமியங்களுக்கும் இப்போதைய ஆளும் கட்சியால் நாளும் செய்யப்படும் சேதங்கள் பற்றிக் கவலைப்படுவோர் ஏராளம். குசராத் மாநிலத்தில் 2002-ஆம் ஆண்டு மோடி தலைமையில் நடத்தப்பட்ட இனப்படுகொலைகளையும், இப்படுகொலையின்போது இஸ்லாமியச் சிறுபான்மையினர் சமூக அமைப்பிலிருந்தும் திட்டமிட்டு அந்நியமாக்கப்பட்ட சூழல் கண்டு  கவலைப்பட்டதோடு, ..எஸ். (IAS) ஆட்சிப் பணியையும் இராஜினாமா செய்தவர் அர்ஷ் மாத்தர் ஆவார்அவர் இந்திய அரசமைப்பின் சிறப்பு பற்றியநமது அரசியலமைப்பும் நம் மக்களும்என்ற விரிவான கட்டுரையில் இந்திய அரசியலமைப்புச் சட்டம், ‘நம் இலக்கு: உத்தரவாதங்களின் தொகுப்பு; ஆசைகளின் (aspirations) பெட்டகம்; நம் மக்களின் நெடிய கனவுக்கான விடை; நம் தேசியத் தத்துவம்; இந்தியாவின் அடையாளம்’ (Identity) என்று வர்ணிப்பார். இந்திய அரசமைப்பின் மீது உறுதிமொழி எடுத்து, ஆட்சிக் கட்டிலேறி தர்பார் நடத்தும் இன்றைய ஆட்சியாளர்கள், என்றாவது எங்கேயாவது அரசியல் அமைப்பின் உள்ளடக்கத்தை இவ்வாறு உருவகப்படுத்தியுள்ளனரா?

அரசமைப்புப் பற்றியும், இவ்வரசமைப்பின் மூலம் காக்கப்பெற வேண்டிய சனநாயகம் நாளும் கேள்விக்குள்ளாக்கப் பெறும் நிலையில், சனநாயகம் என்றால் என்ன என்பது பற்றியும் மக்களுக்குச் சொல்லியிருக்கிறோமா? சனநாயகமே குடிகளாயிருந்தோரைக் குடிமக்களாக்கிய அதிசயத்தை நாமாவது உணர்ந்திருக்கிறோமா? காங்கிரஸ் கட்சியின் இராகுல் காந்தியும், இடதுசாரி அமைப்புகளும், இன்னும் பிற சனநாயக அமைப்புகளும்சனநாயகத்திற்கு ஆபத்துஎன்று ஓலமிடுகின்றனரே! எங்கேயாவது சுதந்திரம் பெற்ற 78 ஆண்டுகளுக்குப் பின்பு இன்று சனநாயகத்துக்கு எதிராக எழுந்துள்ள சவால் பற்றிய விளக்கத்தை அடித்தட்டு மக்களிடம் கொண்டு சேர்த்திருக்கிறோமா?

சனநாயகம் பற்றிய சரியான கல்வியை மக்களுக்கு முறையாகக் கொண்டு செல்லாத வரை சனநாயகத்தில் நம்பிக்கை இல்லாத பாரதிய சனதாவின் பொய்மைதான் வெல்லும். சனநாயகம் ஓர் உயரிய மாந்தருக்கான மதிப்பீடு என்ற நிலையில் கூட மக்களிடம் சென்று சேரவில்லை.

மோடி நடந்து முடிந்த தேர்தலில் அவர்கள் எதிர்பார்த்த வகுப்புவாதம் பாசிசமாகவே இருக்கும் என்பது உண்மையானால் பாசிசம் பற்றி, சனநாயகத்தின் தேவை பற்றி மக்களிடம் சொல்லாத வரை மோடி தோற்கமாட்டார் என்பதே உண்மை.

சனநாயகத்தின் மிகப்பெரிய உயிர்ப்பண்பு சமத்துவம். சமத்துவமற்ற இந்தியச் சமூகத்தில் சமத்துவத்தை உரிமையாக்கியது இந்தியச் சனநாயகம். இந்தியாவின் அனைத்துப் பிரிவினருமே சமத்துவத்தை ஏற்றுக்கொண்டதாகக் கூற முடியாது. சமத்துவத்தைச் சமூக நீதியாகக் கருதியமையால்தான், இந்திய அரசமைப்பு சமத்துவத்தைக் காக்க இட ஒதுக்கீட்டை அடிப்படை உரிமையாக்கியது.

சமத்துவம் மதவாத அரசியலாருக்கு எதிரானது. சமத்துவம் அல்லது சோசலிசம் என்பது இடதுசாரிகளின் வலுவான கொள்கை. இந்தியச் சமூகத்தின் பெரும்பான்மையோர் ஒடுக்கலுக்கும் ஒதுக்கலுக்கும் உள்ளானோர், வர்க்க ரீதியான இந்தியச் சமூகத்தில் இம்மக்களை ஒருங்கிணைத்து, அம்மக்களிடம் அரசியல் அதிகாரத்தை வழங்குவதுதான் சோசலிசம். இக்கொள்கையின் அடிப்படையில்தான் சோசலிச நாடுகள் உருவாயின. இந்தியாவில் செயற்பட்ட இடதுசாரி இயக்கங்கள் சோசலிசத்தையே முன் வைத்தன. ஒடுக்கப்பட்டோர் விடுதலைக்கான இக்கொள்கை  இந்தியாவில் வேரூன்றியதன் விளைவே கேரளம், வங்காளம், திரிபுரா போன்ற மாநிலங்களில் இடதுசாரிக் கட்சிகளின் ஆட்சி உருவானது. ஏறத்தாழ 30 ஆண்டுகால இடதுசாரி ஆட்சி திரிபுராவிலும், வங்காளத்திலும் கவிழ்ந்தது. கவிழ்ந்த நிலையில் பாரதிய சனதா ஆட்சிக்கு வந்தது! வங்காளத்தில் முக்கிய எதிர்க்கட்சியாகப் பாரதிய சனதா உருவெடுத்துள்ளது. படிப்பறிவுமிக்க கேரளத்தில் மிகப் பெரிய சக்தியாக உருவாகி வருகிறதே? ஏனிந்த நிலை?

மோடி தோற்றாரா?’ என்ற கேள்விக்கு இன்னும் பதில் தரவில்லை. ‘மோடி தோற்றாரா? வெற்றி பெற்றாரா?’

நாடாளுமன்றத் தேர்தல் மூலம் மோடி எதிர்பார்த்த 400 கிடைக்கவில்லையென்பது சனநாயகத்துக்குக் கிடைத்த வெற்றியே என்றாலும், மோடி தோற்கவில்லை என்பதுதான் உண்மை. மோடி தான் எதிர்பார்த்த நானூறு இடங்களை வெல்லவில்லையாயினும், சனநாயகம் தந்த தேர்தல்வழி வெற்றி பெற்று சனநாயகத்திற்கு எதிரான மோடியைக் காப்பாற்றத் துணை நிற்கும் நாயுடுவும், நிதிஷ்குமாரும் இருப்பது வரை மோடி வெற்றி பெற்றே ஆவார்.

தேர்தல் தந்த வெற்றி அல்லது தோல்வி வழி ஒரு கட்சியின் பெருமை அல்லது சிறுமையை எடை போட முடியாது என்பது உண்மையாயினும், பாரதிய சனதா கட்சி அண்மை தேர்தலில் சந்தித்த சிறிய பின்னடைவை வைத்து இக்கட்சி தோற்றது, மோடி தோற்றார் என்றெல்லாம் கூறிவிட முடியாது. ஏனெனில், பாரதிய சனதா எனும் அரசியல் கட்சி, தனித்த சுதந்திரமான கட்சியல்ல; ஆர்.எஸ்.எஸ். எனும் பேரமைப்பின் அரசியல் முன்னணி (Political proud). வலுவான கட்டமைப்பும், கொள்கை பலமும் தொண்டர் படையுமுடைய ஆர்.எஸ்.எஸ். தன் பணிகளுக்கு ஏற்ப பல்வேறு அமைப்புகளை உருவாக்கியுள்ளது.

அண்மையில் கேரளத்தின் பாலக்காட்டில் நடந்த ஆர்.எஸ்.எஸ். என்ற தலைமை அமைப்புக்கும், பாரதிய சனதாவிற்கும் இடையிலான உறவில் ஏற்பட்டிருப்பதாகச் சொல்லப்பட்ட விரிசல் பற்றிய கேள்விக்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் செயலர் ஒருவர் அளித்த பதில், “இது எங்கள் குடும்பப் பிரச்சினை; எங்கள் குடும்பத்திற்குள்ளே இப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும்” (இந்து, 3.9.2021). வலுவான கருத்தியலை உடைய இக்கட்சி மதவாத கருத்தியலை உள்ளடக்கமாகக் கொண்டிருப்பதால் எளிய மத நம்பிக்கை கொண்டவர்களை இதன் மத அடையாளங்கள் மூலம் கவர்ந்து விடுதலால், இம்மத அடையாளங்களில் (Symbols) புதைந்திருக்கும் அரசியல் அறியா மக்கள் எளிதில் வசப்படுகிறார்கள்.

ஆளும் பாரதிய சனதா அரசின் நடவடிக்கைகளில் பெரும்பான்மையும், மதச் சார்புடையதாகவே இருப்பதைப் பார்க்கிறோம். தேசத்தையும் மதத்தையும் பிரித்துப் பார்க்கும் பார்வையை முழுமையாக மறுத்த நிலையில், நாடெங்கும் அலை அலையாய் இதன் சூழ்ச்சி வலையில் மக்கள் சிக்கிக்கொள்கின்றனர். ஒடுக்கப்பட்ட மக்களுக்கான கொள்கைகள் கூட இவர்களின் நச்சு (Toxic) வலையில் வீழ்தலால் இனிவரும் தேர்தலிலும் கூட தானே பிரதமர் என்கிறார் மோடி.

மோடி வீழ, செல்ல வேண்டிய தூரம் உண்மையிலேயே நெடிது. என்ன செய்யப் போகிறோம்?