Namvazhvu
தமிழ்நாட்டின் சமூகநீதிப் பயணம்
Friday, 18 Oct 2024 08:48 am
Namvazhvu

Namvazhvu

சமூக நீதியே தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு மூல காரணம். சமூக நீதிப் பயணம், காலங்காலமாகத்  தடை தகர்த்து, திராவிட ஆட்சியாளர்களால் முன்னெடுக்கப்பட்டது. கல்வி, சுகாதாரம், வாழ்க்கைத்  தரம், தொழில் வளர்ச்சி, தனிநபர் வருவாய் என்பவை  முன்னேற்றத்தின் முதல் படிகள். இன்று ஒன்றிய அளவில் முதல் ஐந்து இடங்களில் தமிழ்நாடு வளர்ச்சி பெற்றுள்ளது. அதற்கு அடிப்படைக் காரணம் கங்காரு மடியாகப் பாதுகாப்புப் பெற்ற தமிழ்நாட்டின் சமூக நீதியே. பல்வேறு காலங்களில், காலத்திற்கேற்ப  உள் இடஒதுக்கீடுகள், அவை எதிர்கொண்ட இடர்ப்பாடுகள், உயர், உச்சநீதிமன்ற வழக்குகள்பெற்ற வெற்றிகள் எனத்  தமிழ்நாட்டின் சமூக நீதிப் பயணத்தைப் பார்ப்போம்.

1980-ஆம் ஆண்டு காடுவெட்டி குரு தலைமையில் வன்னியர் சங்கம் எழுச்சி பெற்ற காலம். வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என்ற கோரிக்கைகள் கிளம்பியது. 1987 -ஆம் ஆண்டு செப்டம்பரில் இட ஒதுக்கீடு கோரி சாலை மறியல் போராட்டம் நடந்தது. சாலையில் மரங்கள் வெட்டிப் போடப்பட்டு, வட மாவட்டங்களில் சாலைப் போக்குவரத்து தடை செய்யப்பட்டது; துண்டிக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட 21 பேர் துப்பாக்கிச் சூட்டில் மரணம் அடைந்தனர்.

அன்று முதல்வராக இருந்தவர் எம்.ஜி. இராமச்சந்திரன். உடல் நலமின்றி இருந்த எம்.ஜி.ஆர். உடல் நலம் பெற்றவுடன், 1987 நவம்பர் 25  அன்று வன்னியர் சங்கப் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். முடிவு எட்டப்படவில்லை. எம்.ஜி.ஆர். மறைந்தார். அடுத்து முதல்வரானார் ஜானகி அம்மையார். பிறகு குடியரசுத் தலைவர் ஆட்சி எனக் காலம் ஓடியது.

1989-ஆம் ஆண்டு மு. கருணாநிதி முதல்வராகிறார். பிற்படுத்தப்பட்ட பிரிவினரின் இட ஒதுக்கீட்டின்  50 சதவிகிதத்தைப் பிரித்துவன்னியர் உள்பட 106 சாதிகளை உள்ளடக்கி  மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என்ற  வகையில் 20 சதவிகிதம் உள்ஒதுக்கீடு தருகிறார்.

2021 -ஆம் ஆண்டு  சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னர் சில மணி நேரங்களுக்கு முன்பு அன்றைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இந்த 20 சதவிகிதத்தில் 10.5 சதவிகிதம் வன்னியருக்கு உள்ஒதுக்கீடு தருகிறார். அன்றைய துணை முதல்வரும், .தி.மு.. ஒருங்கிணைப்பாளருமான பன்னீர்செல்வம் அவர்களுக்கு இதில் முரண் ஏற்படுகிறது. இது குறித்துப் பொதுவெளிகளில் மாற்றுக்கருத்துகள் .தி.மு.. மூத்தத் தலைவர்களால் பேசப்பட்டன. 10.5 சதவிகித  வன்னியர் இட ஒதுக்கீட்டிற்கு எதிராக வழக்கம் போல் வழக்குப் போடப்பட்டது. போதியத் தரவுகள் இல்லாமல், அவசர கதியில் இந்த உள்ஒதுக்கீடு வழங்கப்பட்டது எனக் கூறி நீதிமன்றம் வன்னியர் இட ஒதுக்கீட்டை இரத்து செய்துவிட்டது.

1989-ஆம் ஆண்டு மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்ட ஆண்டில் துவங்கப்பட்ட வன்னியருக்கான பாட்டாளி மக்கள் கட்சி, இன்று தொடர் தோல்விகளால் துவண்டு கிடக்கிறது. ‘மாற்றம்’, ‘முன்னேற்றம்என இராமதாஸ் முன்னிறுத்திய அன்புமணி இராமதாஸ் ஏமாற்றத்தில் கதறுகிறார். மருத்துவர் இராமதாஸ், ‘வட மாவட்டங்கள் பற்றி எரியும், ஸ்தம்பிக்கும், வன்னியருக்கான தனி உள் இடஒதுக்கீட்டை வழங்காவிடில் போராட்டம் வெடிக்கும்எனக் கொதிக்கிறார். தமிழ்நாடு அரசு மக்கள்தொகை அடிப்படையில் மட்டுமே போதிய தரவுகள் இருந்தால் மட்டுமே உள் ஒதுக்கீடு தர முடியும் எனப் பதில் தருகிறது. மத்திய அரசை மக்கள்தொகை கணக்கெடுப்பை  நடத்தக் கோருங்கள் எனப் பந்தை வந்தவழி திருப்பி அடித்தார்கள்.

2024 தேர்தல் பரப்புரைகளில் பேசிய மோடி, ‘சாதிவாரிக் கணக்கெடுப்பு என்பது பிளவுவாத அரசியல்என்றார். ஆர்.எஸ்.எஸ். அமைப்பிற்குச் சாதிவாரிக் கணக்கெடுப்பு மற்றும் இடஒதுக்கீட்டில் உடன்பாடு இல்லை. இதை உணர்ந்த தேசிய ஜனநாயகக் கூட்டணியைச் சார்ந்த அன்புமணி இராமதாஸ் அவர்கள், ‘பீகாரில் நிதீஷ்குமார் அவர்கள் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தியதுபோல, தமிழ்நாடு அரசே நடத்தலாம்என்றார். ஆனால், பீகார் அரசு எடுத்த மக்கள்தொகை அடிப்படையிலான விவரங்களை பீகார் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது என்பதே தற்போதைய நிலை. இந்த அடிப்படையை உணராமல், இவ்வாறு தினம் தினம் இட ஒதுக்கீடு கேட்கும் சாதிச் சங்கங்கள் ஒருபுறம்; மற்றொருபுறம் தமிழ்நாட்டில் முஸ்லிம் அமைப்புகள், கொங்கு வேளாளர் அமைப்புகள், தேவர் சமூக அமைப்புகள், தேவேந்திரகுல வேளாளர் அமைப்புகள், செங்குந்தர் அமைப்புகள், அருந்ததியர் அமைப்புகள், பறையர் அமைப்புகள் எனச் சாதி சார்ந்த பல அமைப்புகள் தங்கள் சாதிக்கான உள் ஒதுக்கீட்டைத் தொடர்ந்து வேண்டி வலியுறுத்திப் போராட்டங்களை நடத்துகின்றன. கொடுத்த உள்ஒதுக்கீடுகளே நீதிமன்றங்களில் கேள்விக்கு உள்ளாகிறது.

25.03.2008-இல் அமைக்கப்பட்ட ஜனார்த்தனன் கமிட்டி அறிக்கை சிபாரிசுபடி, எஸ்.சி. பிரிவில் இருந்த 18 சதவிகித ஒதுக்கீட்டில் 3 சதவிகிதம் பிரித்து அருந்ததியினருக்கு உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டது. 27.11.2008 அன்று அன்றைய தமிழ்நாடு முதல்வர் கருணாநிதி அறுவை சிகிச்சை செய்து, மருத்துவக் கவனிப்பில் இருந்ததால், அன்றைய உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.. ஸ்டாலின் சட்ட மசோதாவைத் தாக்கல் செய்தார். வழக்கம்போல் அருந்ததியினர் உள் ஒதுக்கீடு மசோதா வழக்கு மன்றம் சென்றது.

உச்ச நீதிமன்றத்தில் சந்திர சூட் தலைமையில் 6 நீதிபதிகளை உள்ளடக்கிய அமர்வு, ஒருமித்த கருத்து அடிப்படையில் 01.08.2024 அன்று தீர்ப்பு வழங்கியது. “மாநில அரசுகள், பட்டியல் பழங்குடியினருக்கான  உள் ஒதுக்கீட்டை வழங்க அதிகாரம் படைத்தவைஎனச் சமூக நீதி வரலாற்றின் முக்கியத் தீர்ப்பை ஆணித்தரமாக  ஓங்கி அடித்தனர். பல மாநில அரசுகள் சிறுபான்மைக் கிறிஸ்தவ, முஸ்லிம்களுக்குத் தனி உள் ஒதுக்கீடுகள் வழங்கி உள்ளன. 2006 -ஆம் ஆண்டு  தி.மு.. தன் தேர்தல் அறிக்கையில்  சிறுபான்மை மக்களுக்கு மத ரீதியான இட ஒதுக்கீடு தர முன்மொழிந்தது.

2007 -ஆம் ஆண்டு முதல்வராக இருந்த மு. கருணாநிதி தன் கட்சி நிறுவுநர் பிறந்த நாளான செப்டம்பர் 15-ஆம் நாள் முதல் தமிழ்நாட்டில்  கிறிஸ்தவர்களுக்கும், முஸ்லிம்களுக்கும்  தனித் தனியே 3.5 சதவிகித உள்இடஒதுக்கீடு வழங்கப்படும் என அறிவித்தார். இந்த உள்ஒதுக்கீடு 30 சதவிகிதப் பிற்படுத்தப்பட்ட பிரிவு  இட ஒதுக்கீட்டில் இருந்து வழங்கப்பட்டது. ஜனார்த்தனன் தலைமையிலான தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் பரிந்துரையிலும், இரண்டாம் பிற்படுத்தப்பட்ட நல ஆணைய மக்கள்தொகை கணக்கெடுப்பு அடிப்படையிலும் கிறிஸ்தவ, முஸ்லிம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. இதில் புதிய திருப்பம் 2008, நவம்பர் 12 -ஆம் தேதி  நடந்தது.

அன்றைய சென்னை-மயிலை பேராயர் மேதகு .எம். சின்னப்பா தலைமையில், கோட்டாறு ஆயர் மேதகு ரெமிஜியுஸ், அன்றைய சிறுபான்மை ஆணையத் தலைவர் அருள்முனைவர் வின்சென்ட் சின்னதுரை, காங்கிரஸ் கட்சியின் திரு. பீட்டர் அல்போன்ஸ், சி.எஸ்.. பேராயர் மேதகு தேவசகாயம், பேராயர் மேதகு எஸ்றா சற்குணம் ஆகியோரை உள்ளடக்கிய  தூதுக் குழுவினர் முதல்வர் கருணாநிதியைச் சந்தித்தனர். அவர்கள் முதல்வரிடம், “எங்களுக்கு ஒருங்கிணைந்த பழைய இட ஒதுக்கீட்டு முறையே பலன் தருகிறது. புதிய 3.5 சதவிகித உள் ஒதுக்கீடு, உயர் கல்வி  நிறுவனங்களிலும், மாணவர் சேர்க்கையிலும், முன்பு பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டில் பெற்ற வாய்ப்புகளைவிடக் குறைவாக உள்ளதுஎன்றார்கள். மருத்துவப் படிப்பில், அவ்வாண்டு முன்பு இருந்த இட ஒதுக்கீட்டு முறை, தற்போதைய உள் ஒதுக்கீட்டு முறை என இரண்டுக்கும் நடுவே குறைந்த வாய்ப்பு என்று உதாரணங்களை எடுத்துரைத்தார்கள்.

முதல்வர் கருணாநிதி கிறிஸ்தவர்களின் உள் ஒதுக்கீடு 3.5 சதவிகிதத்தைக் கிறிஸ்தவப் பிரதிநிதிகளின் வேண்டுகோள்படி திரும்பப் பெற்றார். காலத்தே சிறுபான்மைக் கிறிஸ்தவ மக்களுக்கு எந்தச் சலுகைகளும் வழங்கப்படவில்லை.

சிறு ஆறுதலாக 2024,  ஏப்ரல் 19 அன்று ஒன்றிய அரசை வலியுறுத்தி, தமிழ்நாடு சட்ட மன்றத்தில் நிறைவேற்றப்பட்ட கிறிஸ்தவர் நலன் சார்ந்த தீர்மானம் கவனம் கொள்ளக்கூடியது. அத்தீர்மானம்கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய பட்டியல் சாதியினருக்கு, சட்டப்பூர்வப் பாதுகாப்பு, உரிமைகள், இட ஒதுக்கீடு  உள்பட்ட சலுகைகள் வழங்க வேண்டும்”  என்கிறது. கூடுதலாக, தமிழ்நாடு அரசு, பொருளாதார ரீதியான 10 சதவிகித .டபிள்யூ.எஸ். வழக்கில் தமிழ்நாட்டின் 89 சதவிகித மக்கள் 69 சதவிகித இட ஒதுக்கீட்டைப் பெறத் தகுதி உள்ளவர்கள் எனத் தெளிவாக நீதிமன்றத்தில் கூறிவிட்டது.

ஒன்றிய அரசு, மிஸ்ரா ஆணையப் பரிந்துரை அடிப்படையில் மதம் மாறிய கிறிஸ்தவர்களுக்கு, இம்மி அளவு கூட  எந்தச் சலுகையும் வழங்கவில்லை என்பதே  கவலை தரக்கூடிய செய்தி.

கிறிஸ்தவர்கள் நாம் நமக்கான சமூக நீதியைப் போராடிப் பெற, வெல்ல வேண்டிய நிலையில் உள்ளோம். நம் மத உரிமைகளுக்கு  ஒன்றிணைந்து குரல் கொடுப்போம்; போராடுவோம். சமூக நீதி குறித்து விழிப்புணர்வு பெறுவோம்.

நாம் செல்ல வேண்டிய பாதை நெடியது. எனினும், சமூக நீதியின் பாதையில் தொடர்ந்து பயணிப்போம்.