இன்று நம்பிக்கைச் சிக்கலால் (Crisis of faith) பெரும்பான்மையான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். “திரு அவையும், அதன் மேய்ப்பர்களும் இயேசுவைப் போல பாலைவனத்திலிருந்து வாழ்வின் இடத்திற்கும், இறைமகனோடு கொள்ளும் நட்புறவிற்கும், வாழ்வளிப்பவரும், அதை நிறைவாக அளிப்பவருமாகியவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும்” (நம்பிக்கையின் வாயில், எண்:2). இப்பணியைத் திறம்பட ஆற்றிக் கொண்டிருக்கிறார் நம் திருத்தந்தை பிரான்சிஸ் என்றே சொல்லலாம்.
உலகளவில் நம்பிக்கைத் தருகின்ற சான்றாண்மைமிக்கத் தலைவர்களில் மிக முக்கியமான ஒருவராக ‘Times’ பத்திரிகை அவரை 2013 ஆம் ஆண்டின் சிறந்த மனிதராகத் தேர்ந்தெடுத்துப் பாராட்டிய தருணத்தில் அவ்விதழின் ஆசிரியர் நான்சி ஜிப்ஸ் (Nancy Gibbz), “திருத்தந்தை பிரான்சிஸ் இரக்கத்தின் நற்செய்தியைத் திரு அவைக்கும் உலகிற்கும் தர முடியும் என்று நம்புகிறார்” என்றார். ஒவ்வொரு நாளும் நம்பிக்கைக்கு உயிரூட்டம் தருவதாய் திருத்தந்தையின் தொடர் செயல்பாடுகள் அமைந்துள்ளன.
45-வது திருத்தூதுப் பயணம்
சமீபத்தில் அவர் மேற்கொண்ட ஆசியா மற்றும் ஓசியானியாவின் நான்கு நாடுகளுக்கான 45-வது பயணம் இதற்கு நற்சான்று. இப்பயணத்தை முன்னிட்டு வத்திக்கான் ஊடகத்திடம் உரைத்த கர்தினால் பியெத்ரோ பரோலின், “போர்களாலும், வன்முறைகளாலும் காயப்பட்ட இவ்வுலகத்தில் சந்திப்புகள், நேர்மையான உறவுகள் மற்றும் சுயநலத்தை வெல்வதன் வழியாகவே அமைதி ஏற்படுத்தப்படுகிறது. திருத்தந்தையின் இத்திருத்தூதுப் பயணத்தின் முக்கிய அம்சம் இவ்வுறவு ஒன்றிப்பே. அதாவது, செவிமடுத்தலுக்கான உறவு ஒன்றிப்பையும், கஷ்டங்கள் மற்றும் துன்பங்களைப் பகிர்ந்து கொள்வதற்கான உறவு ஒன்றிப்பையும், நற்செய்தியின் மகிழ்ச்சி, ஆறுதல் மற்றும் நம்பிக்கையைக் கொண்டு வரும் வெளிப்பாடு இப்பயணம்” என்றார்.
இளையோரே நம்பிக்கை
“நம்புவது என்பது வெறும் தனிநபர் சம்பந்தப்பட்ட செயல் என்று எந்தக் கிறிஸ்தவனும் நினைக்கக் கூடாது. நம்பிக்கை என்பது ஆண்டவரோடு நிற்கவும், அவரோடு வாழவும் எடுக்கும் நிலைப்பாடு” என்பார் திருத்தந்தை 16- ஆம் பெனடிக்ட். இவ்வுண்மையை உணர்ந்து இளைஞர்கள் வாழ வேண்டும் என்று தொடர்ந்து அழைப்பு விடுப்பவர்தான் திருத்தந்தை பிரான்சிஸ்.
‘எதிர்நோக்கி இருப்பதில் மகிழ்ச்சி கொள்ளுங்கள்’ (உரோ 12:12) என்பது கடந்த ஆண்டு இளையோர் தின மையக் கருவாக அமைந்திருந்தது. இவ்வாண்டு எதிர்வரும் 2025 யூபிலி ஆண்டிற்கான தயாரிப்பாக, ‘ஆண்டவர் மேல் நம்பிக்கை வைத்திருப்பவர் நடந்து செல்வர்; சோர்வடையார்’ (எச 40:31) என்ற எசாயாவின் வார்த்தைகளை நவம்பர் மாதம் 24-ஆம் தேதி கிறிஸ்து அரசர் பெருவிழாவன்று நாம் கொண்டாடவிருக்கும் 39-வது உலக இளையோர் தினத்திற்கான மையக்கருவாகத் தந்துள்ளார்.
இன்றைய உலகில் போர் தரும் துயரங்கள், சமூக அநீதி, சரிநிகரற்ற நிலைகள், மக்களும் இயற்கை வளங்களும் சுரண்டப்படல் போன்ற பல்வேறு சூழல்களின் முன்னால் அதிக அளவில் பாதிக்கப்பட்டு, வருங்காலம் குறித்த அச்சத்தைப் பெறுபவர்கள் இளையோரே. எனவே, அவர்கள் மனச்சோர்வு, சலிப்பு ஆகியவைகளின் கைதிகளாக நம்பிக்கையை இழந்து வாழும் நிலையில் இளையோருக்கு நம்பிக்கையின் செய்தி கிடைக்க வேண்டும் என்கிற ஆவலை இம்மையக்கரு வழியாக இளையோருக்குத் தர விரும்புகிறார் திருத்தந்தை. எனவே, இளைஞர்கள் நம்பிக்கையின் சாட்சிகளாகத் துலங்க வேண்டும். அதற்குத் தங்களைத் திருப்பயணிகளாகத் தயாரிக்க வேண்டும்.
சுற்றுலாப் பயணிகளாக அல்ல, திருப்பயணிகளாக!
வாழ்வின் பல்வேறு தருணங்களில் மனச்சோர்வைச் சந்திக்கும்போது அங்கேயே நின்று ஓய்வெடுக்க முயலாமல் நம்பிக்கையின் திருப்பயணியாக முன்னோக்கிச் செல்ல நாம் எல்லாரும் குறிப்பாக, இளைஞர்கள் கற்க வேண்டும் என்று ஆவல் கொள்கிறார் திருத்தந்தை. நல்லதோர் இலக்கை வகுத்துக் கொண்டு அதனை நோக்கி நாம் நடைபோடும்போது, நம் கனவுகளும், திட்டங்களும், அதன் வெற்றிகளும் ஒருநாளும் இழக்கப்படாது. வாக்களிக்கப்பட்ட நிலத்தை நோக்கி நாம் நடைபோடும்போது பாலைவனத்தில் பல சோதனைகளைச் சந்திக்க வேண்டியிருக்கும். எனவே, நம் பயணம் சுற்றுலாப் பயணி என்ற நிலையிலிருந்து, திருப்பயணியாக உருவெடுக்கட்டும்.
இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் Scholas occurrents அமைப்பின் இளம் உறுப்பினர்களைச் சந்தித்த தருணத்தில் திருத்தந்தை வழங்கிய நான்கு வழிகாட்டுதல்களை ஒவ்வோர் இளையோரும் நடைமுறைச் செயலாக்குவோம். எண்ணங்களை விட எதார்த்தங்கள் சிறந்தவை; முரண்பாடுகளை விட ஒன்றிப்புகள் சிறந்தவை; ஒன்றின் பகுதியை விட அதன் முழுமை சிறந்தது; மற்றும் கருத்துகளை விட செயல்பாட்டின் முழுமை சிறந்தது. இதுவே நாளைய நம்பிக்கை ஒளிக்கீற்றுகளான இளையோரின் அமைதி மற்றும் சுக வாழ்விற்கான ஏணிப்படிகள்.