Namvazhvu
இறைவேண்டலின்  பரிமாணங்கள் – 23 இறைமொழி வாசிப்பு
Friday, 18 Oct 2024 10:11 am
Namvazhvu

Namvazhvu

நமது இறைவேண்டலில் அன்றாடம் தவறாமல் இடம்பெற வேண்டிய ஒன்று இறைமொழி வாசிப்பு (Lectio Divina). இறைவார்த்தையை வாசிக்கவும், அதை நம் வாழ்வாக்கவும் நம் முன்னோர்கள் உருவாக்கிய இறைவேண்டல் முறையே இறைமொழி வாசிப்பு. அது மூன்றாம் நூற்றாண்டிலிருந்தே திரு அவையின் மன்றாட்டு முறைகளில் ஒன்றாக இருந்திருக்கிறது. திரு அவைத் தந்தையர்கள் ஆரிஜன், புனித அம்புரோஸ், புனித அகுஸ்தினார் போன்றோர் இம்முறையை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

ஆறாம் நூற்றாண்டில் துறவு வாழ்வுக்கு அடித்தளமிட்ட புனித பெனடிக்ட்தான் இதனைத் துறவு வாழ்வின் இறைவேண்டல் முறையாக மாற்றியவர். தொடர்ந்து, திரு அவையின் புனிதர்கள் பலரும் இதனைத் தங்கள் வாழ்வாக்கிக் கொண்டனர். துறவியர், அருள்பணியாளர்களின் இறைவேண்டல் முறையாக இருந்த திருப்புகழ்மாலையைப் பொதுநிலையினரும் மன்றாட ஊக்குவித்த இரண்டாம் வத்திக்கான் சங்கம், இறைமொழி வாசிப்பையும் அனைவரும் பயன்படுத்த அழைப்பு விடுத்தது. இரண்டாம் வத்திக்கான் சங்கத்தின் இறைமொழி பற்றிய ஏடு (Dei Verbum) இதனை எல்லா இறைமக்களும் பின்பற்ற ஊக்கப்படுத்தியது.

இறைமொழி வாசிப்பு என்றால் என்ன? திருவிவிலியத்தை வாசித்து, தியானித்து, மன்றாடி, அதை வாழ்வாக்குவதே இறைமொழி வாசிப்பு என்று அழைக்கப்படுகிறது.

முன்பெல்லாம் கத்தோலிக்கர்கள் மரபு மன்றாட்டுகளை மட்டுமே தங்களின் தனி மற்றும் குடும்ப வேண்டல்களில் பயன்படுத்தி வந்தோம். ஆனால், திருவிவிலியத்தின் அவசியத்தை அறிந்துவிட்ட தற்காலத்தில் இறைவார்த்தையை அன்றாடம் பயன்படுத்தும் பழக்கம் அதிகரித்து வருகிறது. இறைவார்த்தையை வாசித்துத் தியானிப்பது ஓர் இறைவேண்டல் என்றும், திரு அவையின் திருவழிபாட்டுக் கொண்டாட்டத்தின் ஓர் அங்கம் என்றும் கத்தோலிக்கத் திரு அவையின் மறைக்கல்வி (எண் 1177) கூறுகிறது. இறைமொழி வாசிப்பில் பொதுவாக ஐந்து படிமுறைகள் இருக்கின்றன (அன்பியக் குழுக்களில் 7 படிமுறையாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது):

1. வாசித்தல் (Lectio): திருவிவிலியத்திலிருந்து ஒரு பகுதி நிதானமாகவும், கவனமாகவும் வாசிக்கப்படுகிறது. தேவைக்கேற்ப ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் வாசிக்கப்படலாம். “வார்த்தை உனக்கு மிக அருகில் உள்ளது. உன் வாயில், உன் இதயத்தில் உள்ளது. இதுவே நீங்கள் நம்பிக்கை கொள்ள வேண்டும் என நாங்கள் பறைசாற்றும் செய்தியாகும்” (உரோ 10:8) என்ற இறைமொழியின்படி, இறைவார்த்தையை நம்பிக்கையோடு வாசிக்க வேண்டும். ஆண்டவரையே நாம் சந்திக்கும் அனுபவத்தைப் பெறவேண்டும்.

2. தியானித்தல் (Meditatio): தொடர்ந்து வாசிக்கப்பட்ட இறைமொழி பற்றிய சிந்தனை அமைதியில் செய்யப்படுகிறது. இதன் வழியாக இறைவன் என்ன சொல்கிறார் என்பது சிந்திக்கப்படுகிறது. குழு வேண்டலில் இது சுருக்கமாகப் பகிரப்படலாம். “உம் செயல்கள் அனைத்தையும் பற்றித் தியானிப்பேன். உம் வலிமைமிகு செயல்களைப் பற்றிச் சிந்திப்பேன்” (திபா 77:12) என்று திருப்பாடல் ஆசிரியர் இத்தகைய தியானித்தலைப் பற்றிய அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார்.

3. மன்றாடுதல் (Oratio): தியானச் சிந்தனையின் அடிப்படையில் இறைவேண்டல் ஒன்று ஏறெடுக்கப்படுகிறது. குழுவில் உள்ள அனைவருமே சுருக்கமாக இறைவேண்டல் செய்யலாம். இறைவேண்டலே ஒருவர் நம்பிக்கையாளர் என்பதற்கான அடிப்படை. எனவேதான், தொடக்கக்காலக் கிறிஸ்தவர், “திருத்தூதர் கற்பித்தவற்றிலும், நட்புறவிலும், அப்பம் பிடுவதிலும், இறைவேண்டலிலும் உறுதியாய் நிலைத்திருந்தார்கள்” (திப 2:42) என்று திருத்தூதர் பணிகள் நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, இறைவார்த்தையின் அடிப்படையில் இறைவேண்டல் எழுப்பப்பட வேண்டும்.

4. ஒன்றித்தல் (Contemplatio): தொடர்ந்து இறைப் பிரசன்னத்தில் இறையொன்றிப்பு உணரப்படுகிறது. அமைதி காக்கப்படுகிறது. “அமைதி கொண்டு, நானே கடவுள் என உணர்ந்து கொள்ளுங்கள்” (திபா 46:10) என்னும் இறைவாக்கின்படி அமைதியின் ஆழத்தில்தான் ஆண்டவரை நாம் காணமுடியும். அது மட்டுமல்ல, “ஆண்டவரோடு சேர்ந்திருப்பவர் அவருடன் உள்ளத்தால் ஒன்றித்திருக்கிறார்” (1கொரி 6:17) என்னும் இறைமொழியின்படி, அந்த அமைதியின் ஆழத்தில் இறைவனோடு ஒன்றிக்கும் அனுபவத்தையும் நாம் பெறவேண்டும்.

5. செயல்படுதல் (Actio): இறைமொழி வாசிப்பு அன்றைய நாளுக்கான செயல்பாட்டுக்கு இட்டுச்செல்கிறது. இதனைத் தீர்மானமாகக் குழு உறுப்பினர்கள் பகிர்ந்துகொள்ளலாம். இறைமொழி வாசிப்பின் நிறைவு நிகழ்வாக இப்போது இந்தப்படியும் சேர்க்கப்பட்டுள்ளது. “நீரும் போய் அப்படியே செய்யும்" (லூக் 10:37) என்று திருச்சட்ட அறிஞரிடம் இயேசு கூறியவாறே, இறைமொழி வாசிப்பு நம்மைச் செயல்பாட்டுக்கு இட்டுச் செல்ல வேண்டும்.

இறைவாக்கின் மேன்மையை நன்றாக உணர்ந்திருக்கும் நாள்கள் இவை. “உயர்வானில் உள்ள கடவுளின் வாக்கே ஞானத்தின் ஊற்று. என்றுமுள கட்டளைகளே அதை அடையும் வழிகள்” (சீஞா 1:5) என்பதை நாம் அறிவோம். “என் காலடிக்கு உம் வாக்கே விளக்கு. என் பாதைக்கு ஒளியும் அதுவே” (திபா 119:105) என்கிறார் திருப்பாடல் ஆசிரியர். நம் வாழ்வுக்கு வழிகாட்டும் இறைவாக்கை வாசித்து, தியானித்து, செபித்து, அதன்படி வாழ்வதற்கு இறைமொழி வாசிப்பு உதவுகிறது.

இறைமொழி வாசிப்பைத் தனியாகவோ, குழு அல்லது குடும்பமாகவோ வேண்டலாம். ஐந்து முதல் பதினைந்து நிமிடங்களில் இறைமொழி வாசிப்பை நிறைவு செய்துவிடலாம். இறைவேண்டலில் ஆர்வமுடைய அனைவரும் இறைமொழி வாசிப்பையும் நமது அன்றாட இறைவேண்டலில் இணைத்துக் கொள்வோமாக!