Namvazhvu
பொதுக்காலம் 30-ஆம் ஞாயிறு (27-10-2024) எரே 31:7-9; எபி 5:1-6; மாற்கு 10:46-52
Thursday, 24 Oct 2024 08:42 am
Namvazhvu

Namvazhvu

திருப்பலி முன்னுரை

வலி, துக்கம், துன்பம் ஆகிய மூன்றும்இயேசுவின் முத்தங்கள்என்பதை நினைவில் கொள்ளுங்கள். “வலியும் துன்பமும் உங்கள் வாழ்க்கையில் வந்துவிட்டது என்றால், நீங்கள் இறைவனுக்கு மிக அருகில் வந்துவிட்டீர்கள் என்பதன் அடையாளம்என்கிறார் கொல்கத்தா நகர் புனிதை அன்னை தெரேசா. பார்வையற்ற பர்த்திமேயு  ‘இயேசுவே, தாவீதின் மகனே, எனக்கு இரங்கும்என்று தன்னுடைய வலியை உரக்கக் கத்தி வெளிப்படுத்துகிறார். மாற்றுத்திறனாளிகள் தங்களின் குறைபாடுகளிலிருந்து மீண்டு வரும்போது உறுதியாகப் பேரானந்தம் அடைவார்கள் என்பது உண்மை. நாட்டை இழந்த மாற்றுத்திறனாளிகள் மீண்டும் தங்கள் நாட்டை அடையும்போது ஆனந்தம் அடைந்தார்கள் என்பதை முதல் வாசகம் எடுத்துரைக்கின்றது. குருக்களின் முப்பணிகளில் ஒன்று நலமாக்கும் பணி. பொதுக்குருத்துவத்தில் இருப்பவர்களுக்கும் அப்பணி முக்கியமானது. உடலின் குறைபாடுகளையும், உள்ளத்தின் குறைபாடுகளையும் குணமாக்க இறைவன் இன்று நமக்கு அழைப்பு விடுக்கிறார். அதற்கு அடிப்படையாக இருக்க வேண்டியது இறை நம்பிக்கைதுன்பத்தில் இறைவன் நம்மோடு இருக்கின்றார் என்ற நம்பிக்கை இருக்கும்போது, தோல்வி என்ற எண்ணத்திற்கு இடமில்லை. எனவே, ஆழமான, அழகான இறை நம்பிக்கையை நம் உள்ளத்தில் வளர்க்க வரம் வேண்டி இணைவோம்! இறை பதம் செபிப்போம் இத்திருப்பலியில்.

முதல் வாசக முன்னுரை

எரேமியா தென்னாடான யூதேயாவின் ஈடு இணையற்ற இறைவாக்கினர். இவர் வடநாடான இஸ்ரயேல் மக்களிடம் மிகுந்த அன்பு கொண்டிருந்தார். தங்கள் நாட்டை இழந்த பார்வையற்றோரும், கால் ஊனமுற்றோரும், கருவுற்றோரும், பேறுகாலப் பெண்டிரும் பெரும் கூட்டமாய்த் திரும்பி வருகிறார்கள். அடிமைகளாக இருந்தவர்கள் உரிமை மக்களாக நாட்டிற்குள்ளாக நுழையும் நிகழ்வாக முதல் வாசகம் அமைந்துள்ளது, அதனைப் பக்தியோடு கேட்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை

குருவானவர் கடவுளின் அழைப்பைப் பெற்று, மக்களின் சார்பாகப் பலி செலுத்த வேண்டும். மக்களின் பாவங்களுக்கு மட்டுமல்ல, அவருடைய தனிப்பட்டப் பாவங்களுக்கும் பலி செலுத்த வேண்டும். குருவின் பணியை நாம் அனைவரும் தேர்ந்தெடுத்துச் செயல்படுத்த முடியாது. கடவுளின் அழைப்பைப் பெற்றவர்கள் மட்டும்தான் குருத்துவப் பணியைச் செய்ய முடியும். ஆண்டவர் இயேசு, கடவுளின் அழைப்பைப் பெற்று, குருத்துவப் பணி செய்தார் என்று எடுத்துரைக்கும் இவ்விரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

மன்றாட்டுகள்

1. வழிநடத்தும் தெய்வமே எம் இறைவா, எங்களை வழிநடத்தும் ஆன்மிக, அரசியல், சமூகத் தலைவர்களை ஆசிர்வதியும். மக்களை வழிநடத்தத் தேவையான வரங்களையும், அருளையும் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. அன்பு ஆண்டவரே இறைவா, உம் பராமரிக்கும் பண்பைப் பாங்குடன் பணிபுரியும் எம் பெற்றோருக்காக மன்றாடுகிறோம். சுயநலத்தை விட்டு குழந்தைகளின் நலனுக்காக உழைக்கும் பெற்றோரை ஆசிர்வதித்து, உடல், உள்ள நலனைத் தர வேண்டுமென்று  இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. அரவணைக்கும் ஆண்டவரே, எம்மோடு வாழும் மாற்றுத்திறனாளிகள் தங்கள் பலவீனத்தை நினைத்து வருந்தாமல், தங்களின் பலத்தை நினைத்து வாழ்வில் முன்னேற அருள்புரிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. ‘நானே உலகின் ஒளிஎன்று மொழிந்த எம் இறைவா, எங்களுடைய புறக்கண்கள் தீயவற்றைப் பார்க்காமல், நன்மையானவற்றை மட்டும் பார்க்கும் வரம் அருளவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.