Namvazhvu
27 அக்டோபர் 2024 ஆண்டின் பொதுக்காலம் 30-ஆம் ஞாயிறு–எரே 31:7-9 எபி 5:1-6 மாற்கு 10:46-52
Thursday, 24 Oct 2024 08:48 am
Namvazhvu

Namvazhvu

ஏழையின் கூக்குரலுக்கு எப்போதும் செவிசாய்க்கும் இறைவன்!

நாம் எல்லாரும், நம் வாழ்வை கடந்து செல்லும் ஒவ்வொருவர் வழியாகவும் ஏதாவது ஒன்றைக் கற்றுக் கொள்கின்றோம். அவற்றில் சில பாடங்கள் வேதனையாகவும், சில பாடங்கள் வேதனையின்றியும் உள்ளன. கசப்பும் இனிமையும் கலந்து வருவதுதானே வாழ்க்கை! வாழ்க்கையில் இன்பம் கொஞ்சம் நேரம்தான் இருக்கும்; துன்பம் எப்போதும் இருக்கும். இதை நம் வாழ்க்கையிலே நாம் அனுபவித்திருக்கிறோம், கண்டுமிருக்கிறோம். மலையாளத் திரைப்படப் பாடலாசிரியர் வயலார் இரவி வர்மா அவர்கள் மிக அழகாகக் கூறுகிறார்: “இன்பம் கொஞ்ச நேரம் தங்கிவிட்டுப் போகும் விருந்தாளி; துன்பம் எப்போதும் நம்மோடிருக்கும் சொந்தக்காரன்.” ஆம், நம் வாழ்வு தேவைகளின்றி, பிரச்சினைகளின்றி ஒருபோதும் அமையாது.

துன்பம் இல்லையென்றால் இன்பம் இல்லை. துன்பத்தை அறியாதவன் இன்பத்தை அறிய முடியாது. வெயிலில் அதிகமாகத் துன்பப்பட்டவருக்குத்தானே நிழலின் அருமை புரியும்! பசியால் வாடியவனுக்கே கூழும் அமுதமாக ருசிக்கும்! காரத்தை உணராத நாவினால், இனிப்பின் முழுமையான சுவையை எப்படி உணர முடியும்? கண்ணீரோடு விதைப்பவரே அக்களிப்போடு அறுவடை செய்வர். வாழ்க்கையில் துன்பப்பட்டு உழைப்பவர்களே இன்பத்தை அனுபவிப்பர். ஒளியிலே இருப்பவருக்கு ஒளியின் அருமை தெரியாது. தோல்வியைத் தழுவாத ஒருவரால் ஒருநாளும் வெற்றியின் முழுமையான மகிழ்ச்சியை உணர முடியாது. ஆகவே, வாழ்க்கையில் துன்பம் அதிகமாகவும், இன்பம் குறைவாகவும் இருப்பதற்குக் காரணம் இன்பத்தை நாம் முழுமையாக அனுபவிக்க வேண்டும் என்பதற்காகவே. எனவே, துன்பத்திலிருந்தே இன்பத்தை உருவாக்குகிறார் இறைவன். இருளிலிருந்துதான் ஒளியைப் படைத்தார் இறைவன். இந்த ஆழமான பேருண்மையைப் பாங்குடன் விவரிக்கின்றது ஆண்டின் பொதுக்காலத்தின் 30 -ஆம் ஞாயிறு வாசகங்கள்.

தம்மை நம்பி இருக்கும் எந்த உள்ளத்தையும் உடைய விடாதவர் கடவுள். வாழ்வில் பெருந்துயரங்களை எதிர்கொள்ளும்போது, தம்மை நாடி வருவோருக்கு நேசக்கரம் நீட்டுபவர் அவர். அவர் தம் மக்கள்மீது கொண்டுள்ள அன்பும் ஆதரவும் மிகப்பெரிது. இந்த உண்மையை இன்றைய முதல் வாசகத்தில் காண்கிறோம். எரேமியா 31-ஆம் அதிகாரம் எரேமியா நூலின் இதயம் எனலாம். இறைவன் இஸ்ரயேல் மக்கள் மூலமாக மனித குலத்தோடு ஏற்படுத்திக்கொண்ட உடன்படிக்கை இங்கு வெளிப்படுகிறது. இஸ்ரயேல் மக்கள் உடன்படிக்கைக்கு எதிராகச் செயல்பட்டதால், கடவுள் தங்களைக் கைவிட்டு விட்டார் என உணர்ந்தனர். ஆனால், எரேமியா இந்தச் சிந்தனையை மாற்றுகிறார். மனிதர்கள் நம்பிக்கைத் துரோகம் செய்தாலும் கடவுளால் அவர்களைக் கைவிட முடியவில்லை. கடவுள் தம் உடன்படிக்கையை மறக்கவில்லை என்கிறார். இஸ்ரயேல் மக்களின் துன்பத்திலிருந்து இன்பம் பிறக்கிறது; அழுகையிலிருந்து ஆனந்தம் பிறக்கிறது; அடிமை வாழ்விலிருந்து விடுதலை வாழ்வு பிறக்கிறது; கண்ணீரிலிருந்தே புன்னகைப் பூ மலர்கிறது. இவ்வாறு இன்றைய முதல் வாசகத்தில் உறுதி தரும் வார்த்தைகளால் தம் மக்களைத் திடப்படுத்துகிறார் இறைவாக்கினர் எரேமியா.

இன்றைய நற்செய்தியில், ‘என் வாழ்க்கையே இருளாகிப் போனதுஎன்று புலம்பிக்கொண்டிருந்த பர்த்திமேயுவுக்குப் ‘பார்வை - ஒளிகொடுத்துத் துயர் துடைக்கிறார் இயேசு. மத்தேயு, மாற்கு, லூக்கா ஆகிய மூன்று நற்செய்தி நூல்களிலும் பார்வைத்திறனற்ற பர்த்திமேயு பார்வை பெறும் நிகழ்வு தரப்பட்டாலும், மாற்குவில் மட்டுமே பார்வையற்ற மனிதர் ‘திமேயுவின் மகன் பர்த்திமேயுஎனப் பெயரிடப்பட்டுள்ளார். அவருக்கான பெயர் அவரோடு உடன் இருக்கும் மரியாதை. எனவே, பர்த்திமேயு பார்வை பெறுதல் என்ற பகுதி மாற்குவிற்கே உரிய தனித்துவமான ஒரு பகுதியாகிறது. இப்பகுதியில் பார்வை பெறும் பர்த்திமேயுவின் நம்பிக்கைச் செயல்பாடுகள் ஒவ்வொன்றும் ஆழமான சிந்தனைக்குரியவை.

இயேசு தம் சீடர் குழாமோடு எரிகோவை விட்டு வெளியே செல்லும்போது, பிச்சை எடுத்துக் கொண்டிருந்த பார்வையற்ற பர்த்திமேயு நாசரேத்து இயேசுதான் போகிறார் என்பதைக் கேள்விப்பட்டு உடனே ‘தாவீதின் மகனே, எனக்கு இரங்கும்எனக் கத்தத் தொடங்குகிறார். இந்த வரிகளைச் சற்றுக் கூர்ந்து நோக்கும்போது ஓர் உண்மையை நாம் புரிந்துகொள்ள முடிகிறது. அதாவது, பார்வையற்ற பர்த்திமேயு கேள்விப்பட்டது, அங்கே போகிறவர் ‘நாசரேத்தூர் இயேசுஎன்று; ஆனால், பர்த்திமேயு இயேசுவை அழைத்தது, ‘இயேசுவே, தாவீதின் மகனேஎன்று. இயேசுவை எல்லாரும் நசரேத்தூரில் பிறந்த ஒரு மனிதராகப் பார்க்கும்போது, பர்த்திமேயு மட்டும் இயேசுவை மெசியாவாக, தாவீதின் மகனாகப் பார்த்ததோடல்லாமல், உரக்கக் கூறி அறிக்கையிடுகிறார்.

இவ்வாறு ஓங்கி ஒலிக்கும் பர்த்திமேயுவின் இந்தக் குரல் காலங்காலமாய் அவர் சமூகத்தில் ஒடுக்கப்பட்ட வலியிலிருந்து எழும் குரலாக ஒலிக்கிறது. அவரது குரல் ‘ஆண்டவரே, எனக்கு விடுதலை தாரும்என விண்ணப்பிக்கும் குரலாக ஒலிக்கிறது. அவர் பேசாதிருக்குமாறு பலர் அதட்டினாலும், வீறுகொண்டு எழும் குரலாக ஒலிக்கிறது. நகைப்புக்கும் புறக்கணிப்புக்கும் ஆளாகியிருந்த அவர், மனித மாண்பும் உரிமைகளும் பெற முழக்கமுடன் ஓங்கும் குரலாக அமைகிறது. இதுவே பர்த்திமேயுவின் நம்பிக்கையின் வெளிப்பாடு. இதுவே அவரைக் குணமாக்க இயேசுவைத் தூண்டியது எனலாம்.

பர்த்திமேயுவின் புறக்கண்கள் பார்வை இழந்திருந்தாலும், அவரது அகக்கண்கள் தெளிவான பார்வையைப் பெற்றிருந்தன. கடந்த வார நற்செய்தியில், “நான் என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள்?” (மாற் 10:36) என்று யாக்கோபு, யோவான் ஆகிய இருவரிடமும் இயேசு கேட்டபோது, அவர்கள் இயேசுவின் இருபுறமும் அரியணைகளில் அமர்வதைக் குறித்துப் பேசினர். இன்றைய நற்செய்தியிலும் “உமக்கு நான் என்ன செய்ய வேண்டும் என விரும்புகிறீர்?” (10:51) என்று அதே கேள்வியைப் பர்த்திமேயுவிடம் இயேசு கேட்டதும், ‘ரபூனி, நான் மீண்டும் பார்வைபெற வேண்டும் (10:51) என உறுதிப்பட தெரிவிக்கிறார். “துணிவுடன் எழுந்து வாரும், இயேசு உம்மைக் கூப்பிடுகிறார் (10:49) என அதட்டியவர்களே தற்போது பர்த்திமேயுவை அழைக்கும்போது, தன் மேலுடையை எறிந்துவிட்டு, குதித்தெழுந்து இயேசுவிடம் வருவதில் அவரது நம்பிக்கை புலப்படுகிறது (10:50). மீண்டும் பார்வை பெறுகிறார். உண்மையான, ஆழமான நம்பிக்கை என்பது எத்தனை தடைகள், இடர்கள் வந்தாலும் நம்பிக்கையோடு துவங்கி, விடாமுயற்சியோடு தொடர்ந்தால், நாம் வேண்டுவதும் விரும்புவதும் கண்டிப்பாகக் கிடைக்கும் என்பதைப் பர்த்திமேயு நமக்குச் சொல்லித்தருகிறார்.

வல்ல செயலின் நிறைவில் வழியோரம் அமர்ந்திருந்த பர்த்திமேயு இப்போது இயேசுவோடு நடக்கிறார். இதுவரை இரந்துண்டவர் இப்போது இயேசுவின் சீடராக மாறுகிறார். பர்த்திமேயுவுக்கு அடையாளமாக இருந்த தனது மேலுடையும், அவ்வுடையில் சிதறிக்கிடந்த சில்லறைக்காசுகளும் பெரிதல்ல. இயேசுவையே தனது வாழ்வின் இலக்கெனக் கொள்கிறார்.

இயேசுவின் வல்ல செயல்களின் முழுமை, நலம் பெற்றவர் உடனே செயலில் இறங்குவது அல்லது பணிவிடை புரிவதுதான். அதுவே இயேசுவின் வல்ல செயல்களின் முக்கியத்துவமாக அமைகிறது. பேதுருவின் மாமியார் நலம் பெற்றதும் உடனே பணிவிடை செய்ததிலும் (1:31), கெரசேனர் பகுதியில் பேய் பிடித்தவர், நலம் பெற்றவர் இயேசுவோடு இருக்க விரும்பியதிலும், தெக்கப்பொலி நாட்டில் இயேசுவைப் பற்றி நற்செய்தியை அறிவித்ததிலும் (5:18, 20) அவர்கள் பெற்ற நலனின் முழுமையைக் காண்கிறோம். இங்கே பர்த்திமேயுவும் பார்வை பெற்றதும் இயேசுவைப் பின்பற்றி அவருடன் வழிநடந்ததைக் காண்கிறோம் (10:52). பர்த்திமேயுவின் நுட்பமான செயல்பாடுகள் ஒவ்வொன்றும் இன்று நாம் பின்பற்ற வேண்டிய வாழ்வுக்கான பாடங்கள்.

பர்த்திமேயுவிடமிருந்து சில பாடங்களைக் கற்றுக்கொள்ளும் அதேவேளையில், இயேசுவிடமிருந்தும் சில பாடங்களைக் கற்றுக்கொள்ள முயல்வோம். பர்த்திமேயுவை, ‘பேசாதிருஎன மக்கள் கூட்டம் அதட்டியபோது, அதட்டப்பட்டவர்களின் சார்பாகவே இயேசு நிற்கிறார். நலிந்தவர்களின் சார்பில் நின்றுகொண்டு, பெரும்பான்மை சமூகத்தின் அதட்டலை எதிர்க்கிறார். பெரும் இரைச்சல்களுக்கு மத்தியிலும் நலிந்தவர்களின் குரலை இறைவன் கேட்கிறார். இன்று இயேசுவைப் போல, நம் சமூகத்தில் குரல் எழுப்ப இயலாத மக்கள் சார்பாக நாம் செயலாற்றுகிறோமா? அன்றாடம் சாலையோரங்களில் விழிகளில் ஈரத்தோடு துண்டை விரித்து இரந்துண்பவர்களின் வலுவிழந்த குரலுக்கு நம் செவிகளைத் திறக்கிறோமா? மாற்றுத் திறனாளிகள், ஏழைகள் ஆகியோர் மனித மாண்போடும், மானிட உரிமைபெற்று வாழவும் நாம் என்ன திட்டங்கள் வகுத்துள்ளோம்? என ஆய்வு செய்வோம்.

நம்முடைய வாழ்வில் சமூகமும், உறவுகளும் நம்மை வெறுத்து ஒதுக்கினாலும் அல்லது நாம் ஓரங்கட்டப்பட்டாலும் ஆண்டவரை நோக்கிக் கூவியழைக்கின்றபோது, ஏழையின் கூக்குரலுக்குக் கடவுள் எப்போதும் செவிசாய்ப்பார் என்பதை நினைத்துக் கடவுளுக்கு நன்றி கூறுவோம். சமூகத்தின் விளிம்பில் தொற்றிக்கொண்டு நிற்கும் மக்களுக்கு உரிய மரியாதையைத் தரும் வகையில், அவர்களைப் பெயரிட்டு அழைக்கவும், இறைவன் நம் உள்ளத்தைத் தூய்மையாக்க வேண்டுவோம். கிறிஸ்தவ வாழ்வின் ஆணிவேரான அன்பை நம் வாழ்வின் வழியே பறைசாற்றுவோம்.