Namvazhvu
சிந்தனைச் சிறுகதை (நவம்பர் 02) காணாமல் போன “கடைசி பெயர்”
Friday, 25 Oct 2024 09:39 am
Namvazhvu

Namvazhvu

அன்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. ஒவ்வொரு வருடமும் கல்லறைத் திருநாளில் கண்டிப்பாக மழை வரும் என வீட்டில் பெரியவர்கள் சொல்வார்கள். அப்படித்தான் அன்றும் காலையிலிருந்து மழை தொடர்ந்து பெய்து கொண்டிருந்ததால் கல்லறைத் தோட்டம் முழுவதும் சேறும் சகதியுமாகக் காட்சியளித்தது. மழைக்கோட்டுடனும், குடை பிடித்தவாறும் சிலர் மழையில் நனைந்தவாறே தங்கள் குடும்பக் கல்லறைகளுக்கு வந்து போய்க் கொண்டிருந்தனர்.

வெளியூர்வாசிகள் முதல்நாளே கல்லறைகளுக்கு வந்து சென்றதன் அடையாளமாகச் சில கல்லறைகளில் மாலைகளும், பூக்களும் சிதறிக் கிடந்தன. அரையும் குறையுமாக எரிந்துபோன மெழுகுதிரிகள் பரிதாபமாக நின்று கொண்டிருந்ததைப் பார்த்தபோது மனித வாழ்க்கையும் இப்படித்தான் என்பதைச் சொல்லாமல் சொல்வதுபோல் இருந்தது.

ஒலிபெருக்கியில் கிறிஸ்தவர்களின் பழங்காலத்துப் பாடலானகேளுங்கள் தரப்படும், தட்டுங்கள் திறக்கப்படும்பாடல் வரிகள் அதிக சத்தத்துடன் ஒலித்துக் கொண்டிருந்தது. அந்தக் கல்லறைத் தோட்டத்திலேயே மிக உயரமான கல்லறை அதுதான். மார்பிள் கற்கள் வேலைப்பாடுகளுடன் கட்டப்பட்டிருந்த அந்தக் கல்லறையின்மேல் உயர்ந்து நிற்கும் இரண்டு வானதூதர்கள் சுரூபம் அந்தக் கல்லறைக்கு மேலும் அழகு சேர்ப்பதாக இருந்தது.

பெங்களூரிலிருந்து வரவழைக்கப்பட்ட வண்ண வண்ணப் பூக்களை வீட்டு வேலைக்காரப் பெண் எடுத்துக்கொடுக்க, கல்லறை மேல் அழகாகப் பரப்பி அலங்கரித்துக் கொண்டிருந்தாள் அனிதா. மழைக்கோட்டில் அடைக்கலமாயிருந்த அவளின் ஐந்து வயது மகன், கையில் ஐபோனை வைத்துக் கொண்டுகேம்விளையாடிக் கொண்டிருந்தான்.

தம்பி அமலன், இங்கே வந்து இந்த கேண்டிலையெல்லாம் கொளுத்தி வை.”

அம்மா அழைத்தது செல்போன் விளையாட்டில் மூழ்கிப் போயிருந்த சிறுவனுக்குக் கேட்கவில்லை. இன்றைய காலத்தில் ஆலயத்தில் திருப்பலி நடக்கும்போதுகூட பெரும்பாலான சிறு குழந்தைகள் இப்படித்தான் இருக்கின்றன. இவன் மட்டும் விதிவிலக்கா என்ன?

அனிதா எழுந்து சென்று சிறுவனின் கையிலிருந்த செல்போனை வாங்கி வைத்துக்கொண்டு, அவனை அழைத்து வந்து கையில் மெழுகுதிரி பாக்கெட்டுகளையும், தீப்பெட்டியையும் கொடுத்தாள். சிணுங்கிக்கொண்டே வந்து நின்றான் சிறுவன். “இந்தக் கேண்டிலையெல்லாம் கொளுத்தி கல்லறை மேல வரிசையா வை பார்ப்போம்என்று அம்மா அன்புக் கட்டளையிட்டாள்.

சிறுவனின் கையிலிருந்த மெழுகுதிரிகள் ஒவ்வொன்றாகக் கல்லறைக்கு வந்தன.

கல்லறையை நோட்டமிட்ட சிறுவன், “மம்மி, நம்ம வீட்டுக் கல்லறை மட்டும் உயரமா இருக்கு? மத்த கல்லறைகள் எல்லாம் குட்டியா இருக்கே... அது ஏன் மம்மி?” அப்பாவித்தனமாகக் கேட்டான்.

அதுடா தம்பி, உங்க தாத்தா இந்த ஊருக்குள்ளேயே மிக முக்கியமான ஆளு. அதனால்தான்என்றாள் அனிதா.

முக்கியமான ஆளுன்னா என்னா மம்மி?” விடாமல் கேட்டான் சிறுவன்.

முக்கியமான ஆளுன்னா, உங்க தாத்தாதான் கோவிலுக்கெல்லாம் நிறைய டொனேஷன் கொடுப்பாரு. நம்ம ஊருல ஸ்கூல் கட்டுறதுக்கு எல்லாம் இடம் இலவசமாக் கொடுத்திருக்காரு. இந்தக் கல்லறைத் தோட்டத்து இடம் கூட உங்க தாத்தாவுடைய அப்பா கொடுத்ததுதான். யார் டொனேஷன்னு கேட்டு வந்தாலும் இல்லைன்னு சொல்லாமல் கொடுப்பாராம் உங்க தாத்தா.”

தாத்தாவின் பெருமைகளைச் சொல்லிக்கொண்டு போனவளை இடைமறித்தான் சிறுவன்.

அப்போ காசு கொடுத்தா யாரும் பெரிய கல்லறையா கட்டிக்கலாமா மம்மி?”

சிறுவனின் இந்தக் கேள்விக்கு அனிதாவிடம் பதில் இல்லை.

சரி சரி, இந்த ஊதுபத்தியையும் எடுத்து கொளுத்தி வைப்பா தம்பிஎன்றாள்சிறுவன் விடாப்பிடியாக அம்மாவைப் பார்த்து மீண்டும் கேட்டான்.

மம்மி, அந்தக் கிராஸ்ல எழுதியிருக்கிற பெயரெல்லாம் யாரு மம்மி?”

கீழே எழுதியிருக்கிற பேரு உங்க தாத்தாவுடைய அம்மா; அதற்கு மேலே உள்ளது அவுங்க அப்பா; அதற்கு மேலே உள்ளது பாட்டி பேரு; அதற்கு மேலே  உள்ளதுதான் உங்க தாத்தா பேரு...” சற்றும் சளைக்காமல் பதில் அளித்தாள் அனிதா.

குறும்புக்கார சிறுவன் விடுவதாகத் தெரியவில்லை. அம்மாவைப் பார்த்து மறுபடியும் ஒரு சந்தேகத்தைக் கேட்டான்.

ஏன் மம்மி, தாத்தாவுடைய பேருக்குக் கடைசியிலேயும், தாத்தாவுடைய அப்பா பேருக்குப் பின்னாடியும் ஒரே பெயரா இருக்குதே, அது எப்படி மம்மி?”

அது நம்ம குடும்பத்துடைய பட்டப்பேருப்பாஎன்றாள் அனிதா.

பட்டப்பேருன்னா? அவுங்க படிச்சு வாங்கின பட்டமா மம்மி?”

புரியாமல் கேட்ட சிறுவனைப் பார்த்து மெல்லச் சிரித்தாள் அனிதா.

மம்மி சொல்லுங்க மம்மி... பாட்டிக்கு மட்டும் கடைசியில அந்தப் பெயரைக் காணோம். தாத்தாவுக்குக் கடைசியில மட்டும் ஏன் அந்தப் பெயரைப் போட்டிருக்காங்க. அது என்ன பெயர் மம்மி?” சிறுவன் விடுவதாகத் தெரியவில்லை.

அனிதாவுக்கும் இதற்கு விடைசொல்லத் தெரியவில்லை.

அதுதாண்டா தம்பி, நம்ம சாதி பேருஎன்று மெதுவாகப் பதிலளித்தாள் அனிதா.

சாதி பேருன்னா என்ன மம்மி மீனிங்?”

அறியாமல் கேட்ட சிறுவனை மீண்டும் ஒரு முறை பார்த்தாள். சிறுவனின் வெகுளித்தனமான கேள்வியில் ஆயிரம் அர்த்தங்கள் இருந்தன. கல்லறையில் பூக்களையெல்லாம் அலங்கரித்துவிட்டு எழுந்தாள்.

அதெல்லாம் சொன்னால் உனக்கு இப்போ புரியாது. இன்னும் கொஞ்சம் பெரியவனா ஆனவுடன் நீயே புரிஞ்சுக்குவேஎன்று முடித்தாள் அனிதா.

ஒலிபெருக்கியில் ஒலிபரப்பிக் கொண்டிருந்த பாடல் நிறுத்தப்பட்டது வேதியர் பேச ஆரம்பித்தார்.

இறைமக்களே, திருப்பலி நிறைவேற்ற நமது பங்குத்தந்தை வந்துவிட்டார். அனைவரும் அமைதி காக்கவும். வெடிவெடிப்பவர்கள் கொஞ்ச நேரம் நிறுத்தவும்.”

ஆலயப் பாடகர் குழுவின் வருகைப் பாடலுடன் திருப்பலி துவங்கியது. கல்லறையின் சிலுவையையே உற்றுநோக்கிக் கொண்டிருந்த அனிதாவின் மனத்தில் ஏதோ உறுத்திக் கொண்டிருந்தது. திருப்பலி முடிந்து குருவானவர் கல்லறைகளை மந்திரிக்கும் சடங்கும் முடிந்தது.

வீட்டு வேலைக்காரப் பெண்ணுடன் குறும்புக்கார மகனை அழைத்துக் கொண்டு கல்லறைத் தோட்டத்தின் வாயிலுக்கு வந்தாள் அனிதா. கல்லறைத் தோட்டத்துக் காவலாளியை அழைத்து ஒரு துண்டுச் சீட்டையும், ஆயிரம் ரூபாய் பணத்தையும் நீட்டினாள். ஏதும் புரியாத காவலாளி அந்தோணி, “எதுக்குமா பணம்? உள்ளே போகும்போதுதானே எங்க எல்லாருக்கும் பணம் கொடுத்தீங்களே... இந்தப் பணம் எதுக்குமா?” என்றார்.

எங்க வீட்டுக் கல்லறையிலே பெயரெல்லாம் சரியா தெரியலை, அதுனால நாளைக்குப் பெயிண்டரை வரச்சொல்லி, எல்லாப் பெயரையும் புதுசா எழுதச் சொல்லுப்பாசொல்லிவிட்டு நகர்ந்தாள் அனிதா.

துண்டுச்சீட்டைப் பிரித்துப் பார்த்த அந்தோணிக்கு ஆச்சரியமாக இருந்தது. அந்தத் துண்டுச் சீட்டில் தாத்தாவின் பெயருக்குக் கடைசியில், வழக்கமாக உள்ள பெயர் காணாமல் போயிருந்தது. ‘எழுத மறந்துவிட்டார்களா?’ என்று யோசித்தவர் வாசலுக்கு வெளியே ஓடிவந்தார். ஆனால், அதற்குள் அனிதாவின் கார் புறப்பட்டு விட்டது. காரின் முன் இருக்கையில் அமர்ந்திருந்த சிறுவன் அமலனோ செல்போன் விளையாட்டில் மூழ்கிப் போனான்.