இந்தியாவின் 17வது நாடாளுமன்றத் தேர்தல் ஒரு மாதத்திற்கும் மேலாக 7 கட்டங்களாக நடந்து ஏறக்குறைய ஒரு மாதமாக பெட்டியில் அடைகாக்கப்பட்டு ஒரு வழியாக 23 ஆம் தேதி அந்த பெட்டிகள் திறக்கப்பட்டு ஓட்டுகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டு அடுத்த அரசு அமைப்பதற்கான கொண்டாட்டங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. இந்தியாவின் ஒரு சில மாநிலங்களைத் தவிர மற்ற எல்லா மாநிலங்களிலும் உயர் நோட்டு மதிப்பிழப்பு நடவடிக்கை மிகவும் இனிப்பான விசயமாகப்பட்டிருக்கிறது; ஏடிஎம் வாசலில் 2000 ரூபாய்க்காக நாள்முழுதும் காத்துக்கிடந்து 100 க்கும் மேற்பட்ட உயிர்களை இழந்த சம்பவங்கள் மிக மிக இனிப்பானவையாகப்பட்டிருக்கின்றன. சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பால் சிறு, குறு தொழில்கள் அழிந்து கோடிக்கணக்கானவர்கள் வேலை இழந்து நடுத்தெருவுக்கு வந்ததெல்லாம் வேண்டி விரும்பி எதிர்பார்க்கப்பட்டவையாகிருக்கின்றன. விவசாயிகளின் வாழ்வாதாரம் மொத்தமாக அழிக்கப்பட்டு லட்சக்கணக்கில் விவசாயிகள் சாலையில் இறங்கி போராடியதெல்லாம் மகிழ்ச்சியான காரியமாகியிருக்கிறது. பெரும்பான்மை மதவாதம் பேசி சிறுபான்மை மக்களை அச்சுறுத்தியதும், மாட்டு இறைச்சி உண்டதற்காக மனிதர்களை தோலை உரித்து மாட்டிறைச்சிபோல் கொத்திக் கூறுபோட்டதெல்லாம் வரவேற்கப்பட்ட இனிய சம்பவங்களாகப்பட்டிருக்கிறது. அதனால் மக்கள் ஒத்த கருத்தோடு மீண்டும் ஒருமுறை பாஜக கூட்டணியை அசுரபலத்தோடு ஆட்சிக்கட்டிலில் அமர்த்தி இருக்கிறார்கள். மக்கள் தீர்ப்பை மனமுவந்து ஏற்றுக்கொள்வோம்.
ஆனால் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா போன்ற ஒரு சில மாநிலங்களில் தேர்தல் முடிவுகள் முற்றிலுமாக மாறியிருக்கின்றன. மிருக பலம் கொண்டு மீண்டும் வந்த பாஜக இந்த மாநிலங்களில் ஓர் இடம்கூட பிடிக்க முடியவில்லை. இருந்தாலும் புதிய இந்தியா? உருவாகிறது.
தமிழ்நாடு
தமிழ் நாட்டு மக்கள் மிகச் சரியான முடிவை பதிவு செய்திருக்கிறார்கள். வளர்ச்சித் திட்டங்கள் என்ற பெயரில் நாசகாரத் திட்டங்களை செயல் படுத்தி தமிழ்
நாட்டை பாலை வனமாக்கத் துடித்த பாஜக - ஆர். எஸ். எஸ் அரசுக்கு தமிழ்நாட்டு மக்கள் சரியான பாடம் புகட்டி இருக்கிறார்கள். சரக்குப் பெட்டகத் துறைமுகங்கள் அணு மின் நிலையங்கள், நிலக்கரி, இறங்குதளங்கள், பெட்ரோ கெமிக்கல் வளாகங்கள், ஹைட்ரோ கார்பன் திட்டங்கள், நியூட்ரினோ, ரசாயன ஆலைகள், எட்டுவழிச் சாலை - பாலங்கள் என்று கார்ப்பரேட்டுகள் கோடி, கோடியாக கொள்ளையடிக்க நாட்டு வளங்களை சூறையாடத் துடிக்கும் மத்திய அரசின் முயற்சிக்குத் தக்க பதிலை தங்கள் தேர்தல் முடிவு மூலம் தந்திருக்கிறார்கள் தமிழ்நாட்டு மக்கள்.
கன்னியாகுமரி தொகுதி
கன்னியாகுமரி மக்களுக்கு 45000 கோடி ரூபாய்க் கான திட்டங்களை கடந்த ஐந்து ஆண்டுகளில் தந்து எல்லா மக்களின் வாழ்க்கைத் தரத்தையும் பாலங்கள் என்று அமைத்து பொன்முலாம் பூசி வைத்திருக்கும் பாஜக அரசின் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் யாராலும் தோற்கடிக்கவே முடியாத தலைவர்; அவர் வெற்றி உறுதி செய்யப்பட்டாகிவிட்டது என்று பாஜக அவரை வேட்பாளராக அறிவித்த நாள்முதல் ஊடகங்களும் அரசு ஆதரவாளர்களும் ஆணித்தரமாக அறிவித்துக்கொண்டிருந்தார்கள். “நாங்கள் தனியாக நின்றபோதே மூன்றேமுக்கால் லட்சம் ஓட்டு வாங்கினோம். இப்போது அதிமுக, தேமுதிக, பாமக, தமகா, புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி என்று பலமான கூட்டணி எங்களிடம் இருக்கிறது. கண்ணை மூடிக்கொண்டு மூன்று லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம். எழுதி வைத்துக்கொள்ளுங்கள்” என்று நாடு முழுக்க மிதப்பாகச் சொல்லிக்கொண்டு திரிந்தார்கள். அவ்வளவு சக்திவாய்ந்த பாஜக, ஆர்.எஸ்.எஸ் அடித்தளம் கொண்ட பொன். ராதாகிருஷ்ணன், காங்கிரஸ் வேட்பாளர்
ழ. வசந்தகுமார் அவர் களிடம் இரண்டரை லட்சத்
திற்கும் மேலான ஓட்டு வித்தி யாசத்தில் தோற்றுப்போனார்.
நாட்டில் எந்த தொகுதி யில் என்ன நடந்தாலும், வாரணாசி தொகுதியில் மோடி தோற்றாலும் கூட பொன்னார் ஜெயிப்பார் என்று சொன்ன கள நிலவரம் மாறிப்போனது எப்படி? என்ன நடந்தது கன்னியாகுமரியில்...!?
மீனவ வேட்பாளர்
கன்னியாகுமரி தொகுதியின் வெற்றி தோல்வியை நிர்ணயிப்பது சுமார் இரண்டரை லட்சம் வாக்காளர்களைக் கொண்ட மீனவர்கள்தான். இதுவரை எல்லா அரசியல் கட்சிகளும் மீனவர்களை வெறும் வாக்கு வங்கியாகவும் ஆட்டிவைத்தால் ஓட்டுப்போடும் இயந்திரமாகவும்தான் பார்த் தார்கள். மீனவர்களுக்கு அதிகாரத்தில் பங்கு கொடுக்கவோ, எம்எல்ஏ, எம்பி ஆக்கவோ
எந்த முயற்சியும் செய்யவில்லை. அப்படியே
ஏதாவது வாய்ப்பு வந்தாலும் பெரும்பான்மை சமூகம், சிறுபான்மை சமூகம் என்று பேசி அந்த வாய்ப்புகள் தட்டிப்பறிக்கப் பட்டுக்கொண்டிருக்கின்றன.
கடந்த சில தேர்தல்களாக மீனவர்களை வேட்பாளர்களாக அறிவிக்கவேண்டும் என்ற எல்லா கட்சிகளுக்கும் கோரிக்கை வைத்து, யாரும் அறிவிக்காவிட்டால் மீனவர்கள் தனியாகக் களம் கண்டு தன் பலத்தை நிரூபிக்க வேண்டும் என்று முடிவு செய்திருந்தனர். அப்போதுதான், ஜெயன்டீன் என்ற மீனவரை நாம் தமிழர் கட்சி வேட்பாளராக அறிவித்தது. அவருக்கே மீனவர்கள் அனைவரும் வாக்களிக்கவேண்டும் என்று ஒட்டுமொத்த மீனவ சமூகமும் முடிவெடுக்கும்போது குமரி மாவட்டத்தை அழிக்கத்துடிக்கும் அழிவுத்திட்டங்களைத் தடுக்க
பாஜக கட்சியையும் அதன் வேட்பாளர் ராதா
கிருஷ்ணனையும் தோற்கடிக்க வேண்டும் என்ற உன்னத கடமை மீனவர்கள் முன் வந்து நின்றது. தங்கள் சொந்தப் பணத்தைச் செலவிட்டு தொகுதி முழுக்க களப்பணி செய்துகொண்டிருந்த இளைஞர் களிடம் பேசி, இப்போது நம்முடைய முதல் கடமை என்பது தமிழ்நாட்டையும், கன்னியாகுமரி மாவட்டத்தையும், இயற்கையையும், மேற்குத் தொடர்ச்சி மலையையும், சிறுபான்மை மக்களையும் அழிக்கத் துடிக்கும் பாஜக, ஆர்.எஸ்.எஸ். ராதா கிருஷ்ணன் அவர்களைத் தோற்கடிக்க வேண்டும். அதற்காக மீனவர்களின் வாக்குகளை வேறு கட்சிகளுக்குப் பிரித்து நம் பலத்தை இழக்கவேண்டாம் நமது ஒட்டுமொத்த ஓட்டையும் காங்கிரசுக்கு வழங்கி வெற்றி பெறச் செய்வோம். சட்டமன்றத்தில் நமது பலத்தை நிரூபிப்போம் என்று சொல்லி ஓட்டுகள் வேறு எங்கும் சிதறாமல் ஒன்று சேர்த்தனர்.
மீனவ மருமகன்
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சியும் லெட்சு மணன் என்ற ஒரு வேட் பாளரை நிறுத் தியது. அவர் ஒரு மீனவ சமூகத்துப் பெண்ணை திருமணம் செய்திருந்ததால் மீனவர்களின் வாக்குகளைப் பெருமளவு பெற்றுவிடலாம் என்று எண்ணி களப்பணியில் இறங்கினார்கள். அமமுக கட்சித் தொண்டர்களையும் தலைவர்களையும் தனித் தனியாக சந்தித்து நம் ஓட்டுகளை சிதறவிடாமல் ஒரே வேட்பாளருக்குக் கொடுத்து பாஜக வேட்பாளரைத் தோற்கடிக்க ஒன்றுபடுவோம் என்று கூறியதும் அவர்களெல்லாம் தங்கள் கட்சியையும் தியாகம் செய்துவிட்டு காங்கிரசுக்கு வாக்களிக்க முன்வந்தனர்.
மீனவ அமைப்புகள்
இனையம் சர்வதேச சரக்குப் பெட்டக மாற்றுமுனைய எதிர்ப்பு மக்கள் இயக்கம், நெய்தல் மக்கள் இயக்கம், கன்னியாகுமரி சரக்குப்பெட்டக எதிர்ப்பு மக்கள் இயக்கம், கடலோர மக்கள் வளர்ச்சி மன்றம், கடலோர அமைதி மற்றும் வளர்ச்சி மையம், கன்னியாகுமரி மாவட்ட மீனவர் கூட்டமைப்பு போன்ற அமைப்புகள் தொகுதி முழுக்க களம் கண்டனர். காங்கிரஸ் கட்சி நேர்மையான கட்சி யென்றோ, காங்கிரஸ் வேட்பாளர் புனிதரென்றோ அல்ல; கடந்த காங்கிரஸ் ஆட்சியின்போது கூடங்குளம் அணுவுலை திட்டம் மூலம் மக்களை வதைத்த காங்கிரசை எதிர்த்துப் போராடிய மக்கள்தான் இன்று அதைவிட கொடிய சக்தியைத் தோற்கடிக்க காங்கிரசை வெற்றிபெறச் செய்ய, தங்கள் கைக்காசைச் செலவிட்டு, தங்கள் முழு நேரத்தையும் தேர்தல் பணிக்காக ஒதுக்கி, தங்கள் உழைப்பு முழுவதையும் கொடுத்து தொகுதி முழுக்க தேர்தல் பணி செய்தனர்.
மீனவர்களின் ஓட்டுகள் நாம் தமிழர் கட்சி என்றும், அமமுக என்றும், மக்கள் நீதி மய்யம் என்றும் சிதறிவிடாமல் தடுத்து அனைத்து வாக்குகளையும் ஒருங்கிணைத்து காங்கிரஸ் கட்சியை மகத்தான வெற்றிபெறச் செய்துவிட்டனர். தமிழ்நாடு முழுக்க உள்ள மற்ற தொகுதிகளில் அமமுக, நாம் தமிழர் கட்சி, மநீம கட்சிகள் 50,000, 60,000, 1,00,000 என்று ஓட்டுகள் வாங்கியிருக்க கன்னியாகுமரி தொகுதியில் அந்த கட்சிகளின் வாக்குகள் 15,000, 12,000, 8,000 என்று கட்டுப்படுத்தப் பட்டிருக்கிறதென்றால், மீனவர்கள் வீடுவீடாக, வீதி வீதியாக, ஊர் ஊராக தொகுதி முழுக்க மக்களை சந்தித்து விழிப்புணர்வு பிரச்சாரம் செய்ததால்தான்.
பதில் சொல்ல...
28000 கோடி ரூபாயில் மக்கள் கேட்காத சரக்குப் பெட்டக துறைமுகம் கொண்டுவந்து நிலக்கரி இறக்க மக்களை அப்புறப்படுத்தி சாலைகள், பாலங்கள், இரயில்வே வழித்தடங்கள் அமைக்க திட்டமிட்டதை எதிர்த்து மாவட்டத்தைக் காக்க இரண்டு ஆண்டுகளாக மக்கள் போராடியதால் அதைக் கைவிட்டவர்கள் அதே திட்டத்தை கன்னியாகுமரிக்குக் கொண்டுவர முயற்சி செய்தது; மேம்பாலங்கள் கட்டுகிறோம் என்று சொல்லி மார்த்தாண்டம், பார்வதிபுரம் பகுதிகளில் உள்ள வர்த்தகர்களின் நிறவனங்களை மூடி சுவர் எழுப்பி அவர்கள் வயிற்றில் அடித்தது; நான்கு வழிச்சாலை என்று சொல்லி மாவட்டத்தின் குளங்களை, ஏரிகளை, நீர்நிலைகளை, மரங்களை, விவசாயத்தை அழித்தது, கடலோரக் கிராமங்களுக்கு குடிநீர், சுகாதாரம் போன்ற அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றவிடாமல் தடுத்தது, ஒக்கி புயல் நேரத்தில் மீனவர்களைக் காப்பாற்றாமல் அவர்கள் கடலில் செத்து ஒழியட்டும் என்று சொல்லி 200க்கும் மேற்பட்ட மீனவர்கள் இறக்கக் காரணமாக இருந்தது; இவைகளுக்கெல்லாம் பதில் சொல்வதற்காகத்தான் குமரி மாவட்ட மீனவர்கள் இத்தனையும் செய்தார்கள். அவர்கள் சொன்ன பாடம் தேர்தல் முடிவாக வெளிப்பட்டது.
தூத்துக்குடி, ராமநாதபுரம்
தூத்துக்குடி தொகுதியிலும், ராமநாதபுரம் தொகுதியிலும் கன்னியாகுமரி தொகுதியில் நடந்ததுபோன்று மீனவர்களின் பங்களிப்பு அதிகமாக இருந்தது. ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் வேதாந்தா நிறுவனத்திற்காக மத்திய அரசு 13 பேரை சுட்டுக்கொன்றதும், ராமநாதபுரம் மாவட்ட மீனவர்களின் உயிர்ப் பிரச்சினையும் அங்குள்ள பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தர் ராஜனையும்,
நைனார் நாகேந்திரனையும் மோசமான தோல்வி அடையச் செய்யும் காரணமாக அமைந்தது.
’மக்கள் ஏமாளிகள்; அவர்களை எளிதாக ஏமாற்றி சுகம் காணலாம்’ என நினைப் பவர்களுக்கு இந்தத் தேர்தல் மிகப்பெரிய பாடத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
வெற்றி பெற்றவர்களும் மக்கள் மனநிலைலையப் புரிந்து நடக்க வேண்டும் என்றும் எச்சரிக்கை செய்கிறது. தமிழ்நாட்டுத் தேர்தல் முடிவுகள்.