‘உலகிலும் மறைப்பணியிலும் திருஅவை’ என்ற தலைப்பில், ஜெர்மன் ஆயர்கள், இவ்வாரம் மேற்கொண்ட ஆண்டுக் கூட்டத்தில், பருவ நிலை மாற்றங்கள் குறித்த கருத்துப் பரிமாற்றங்கள் முக்கிய இடம் வகித்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகில் ஜெர்மன் ஆயர்கள் ஆற்றும் பணிகளில் தொடர்பு கொண்டுள்ள பிரதிநிதிகள் 140 பேருடன், அமேசான் பகுதி பிரதிநிதிகள், செனகல், மற்றும், ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்துகொண்ட இந்த மூன்று நாள் கூட்டம்,மே 27 ஆம் தேதி முதல் மே 29 வரை இடம்பெற்றது.
உலகம் வெப்பமடைவதால் ஏற்படும் விளைவுகள் குறித்தும், அதை மாற்றியமைப்பதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், இந்த மூன்று நாள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. கடல் மட்டம் உயர்தல், உலகில் குடிநீரின் அளவும், விவசாய நிலங்களும் குறைந்து வருதல், போன்ற பிரச்சினைகளை விவாதித்த இந்த கூட்டம், பாரீஸ் ஒப்பந்தத்தின் விதிகள் நடைமுறைக்கு கொணரப்பட வேண்டும் என்ற விண்ணப்பத்தை முன்வைத்துள்ளது.
ஜெர்மனியின் பாம்பெர்க் பேராயார் லுட்விக் ஷிக் உரையாற்றுகையில், பசுமை இல்ல வாயுக்களை கட்டுப்படுத்த ஒவ்வொரு ஜெர்மன் மறைமாவட்டமும் எடுத்துவரும் நடவடிக்கைகளைப் பாராட்டியதோடு, சுற்றுச்சூழலைக் காப்பதற்கும், மனித குலத்தின் வளமான வருங்காலத்தை உறுதிசெய்வதற்கும், இன்னும் நிறைய ஆற்றவேண்டியுள்ளது என்று கூறினார். சுற்றுச்சூழலுக்கும், மனிதகுல வருங்காலத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கும் ஒரு சமுதாயத்தை உருவாக்கும் நோக்கம் கொண்ட கருத்துப் பரிமாற்றங்கள், சமுதாயத்தில் இடம்பெற, ஆயர் பேரவைகள் தூண்டுதலாக இருக்க வேண்டுமென, ஜெர்மன் ஆயர்களின் ஆதரவால் நடத்தப்பட்ட இந்தக் கலந்துரையாடலில் பரிந்துரைக்கப்பட்டது.