Namvazhvu
சுடுகாடாகப்போகும் தமிழ்நாடு
Wednesday, 26 Jun 2019 07:35 am

Namvazhvu

ஆளும் தமிழக அரசு தன் தலையை மீண்டும் மீண்டும் எரிகொள்ளிக் கட்டையால் சொரிந்து கொள்ள முற்படுகிறது என்பது கூடங்குளம் அணுக்கழிவு மையம் இன்னும் ஓர் உதாரணம்.  எந்த ஒரு மாநிலத்திலும் இல்லாத வகையில் இந்தியாவில் தமிழகத்தில்  மட்டும்தான் தலைமாட்டில் ஓர் அணு உலையும் (கல்பாக்கம்) கால்மாட்டில் ஓர் அணு உலையும் (கூடங்குளம்) உள்ளன. எங்கு விபத்து நடந்தாலும் தமிழகமே சுடுகாடுதான். காஞ்சிபுரம் மாவட்டம். கல்பாக்கத்தில் 220 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட இரண்டடு அலகுகள் உள்ளன. கடந்த ஆண்டு ஜனவரி மாதம் குளிர்விக்கப்படும் தண்ணீர்க்குழாயில் நீர்க்கசிவு என்று சொல்லி ஓர் அலகை நிறுத்தினர். ஆனால் உண்மையில் அணுக் கதிர்வீச்சின் அளவு அதிகமானதாலேயே நிறுத்தப்பட்டதாக தகவல் வெளியானது. பராமரிப்பு காரணமாக என்ற பசப்பு அறிக்கையை ளுசுடுனுஊ இணையதளம் சொன்னாலும் உண்மையானக் காரணத்தை மூடிமறைக்கப் பார்க்கிறது அரசு இயந்திரம். ஜனவரி தொடங்கி நவம்பர் வரையிலான காலங்களில் அணுக்கதிர்வீச்சின் அளவு அவர்களே கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு மிகவும் அதிகமாக இருந்தது. அதற்கானக் காரணத்தை கண்டறிய மும்பைக்கு ணு9 டீ9 சானல் மாதிரிகள் கதிர்வீச்சு பாதிப்புக்கான விஷயங்கள் எதுவும் இதுவரை வெளியே அறிக்கையாக வரவில்லை. சென்னை அணுமின் நிலையத்தின் கதிர்வீச்சு பாதிப்பு நாளுக்கு நாள்அதிகரித்துதான் வருகிறது. கதிர்வீச்சு கசிவு எங்கிருந்து வருகிறது என்று கூட கண்டுபிடிக்கமுடியாத நிலையில்தான் அணு விஞ்ஞானிகள் உள்ளனர். இதுவே இப்படி என்றால் மூன்றாம் தலைமுறை அணுவுலையை ரஷ்யாவிட மிருந்து அடம்பிடித்து நட்புக்காக வாங்கி இரண்டு அணுவுலைகளை 17270 கோடி செலவில் நிறுவி, மக்களின் எதிர்ப்பையும் போராட்டத்தையும் அதிகாரப் பலத்தைக் கொண்டு ஒடுக்கி, வழக்கு என்ற போர்வையில் இன்றுவரை அடிபணியவைத்து இன்னும் கூடுதலாக நான்கு உலைகளை நிறுவி, தமிழகத்துக்கு உலை வைக்க, மாநில அரசின் துணையோடு மத்திய அரசு முனைகிறது. அணு உலை வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு, எழுபதிற்கும் மேற்பட்டமுறை மூடப்பட்டு, இராட்சத சுற்றுச் சுவருக்குள் அமர்ந்து கொண்டு தமிழகத்தையே அச் சுறுத்திக் கொண்டிருக்கிறார்கள். தமிழகத் தில் கால்மாட்டிலும் தலைமாட்டிலும் கட்டி
முடிக்கப்பட்ட அணு உலைகள் தமிழகத்தைச் சுடுகாடாக்கி அச்சத்தை ஏற்படுத்துகின்றன என்றால், இப்போது அதிலிருந்து வெளியேற்றும் கழிவுகளையும் நம் மண்ணிலேயே புதைத்து வைத்து (வாஸ்துப்படி பாதுகாத்து), தமிழர்கள் நமக்கு நம்ம சுடுகாட்டிலேயே நம் கையால் கொள்ளி வைக்க அணுக்கழிவு மையம் அமைக்கப் போகிறார்கள். (அணுக்கழிவு மையம் - அமைப்பு முறை அனைத்தையும் உள்ளே பெட்டிச் செய்திகளில் காண்க) 
இந்நிலையில், கடந்த ஏப்ரல் 15, 16 ஆகிய தேதிகளில் ரஷ்யாவில், ‘ஆட்டம் எக்ஸ்போ 2019’ என்ற சர்வதேச அணுசக்தி மாநாடு நடைபெற்றது. 74 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்ற இம்மாநாட்டில் இந்திய அணுசக்திக் கழகத்தின் தலைவர் கமலேஷ் நில்கந்த் வியாஸும் பங்கேற்றார். அவரிடம், “கூடங்குளம் அணு உலைகள் அடிக்கடி பழுதடைகின்றனவே?” என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்குப் பதிலளித்த கமலேஷ், “கூடங்குளம் அணு உலைகள் அடிக்கடி நிறுத்தப்படுவது வழக்கத்துக்கு மாறானதுதான். அணு உலைகளில் அடிக்கடி பழுது ஏற்படுவதை நான் ஒப்புக்கொள்கிறேன். அவை மூன்றாம் தலைமுறை வகையைச் சேர்ந்தவை. இந்த வகையான அணு உலைகள் உலகிலேயே முதன்முறையாக அமைக்கப்பட்டிருப்பதால், தொடக்கநிலைப் பிரச்சினைகள் இருக்கின்றன. மஹாராஷ்டிர மாநிலத்தின் தாராப்பூரில் அமைக்கப்பட்டுள்ள அணு உலையிலும் இதேபோலப் பிரச்சினைகள் ஏற்பட்டன. மூன்று, நான்கு ஆண்டுகளில் அவை சரி செய்யப்பட்டன. கூடங்குளத்தில் ஏற்படும் பிரச்சினைகளைத் தீர்க்க இந்திய அணுசக்திக் கழகத்தினர் தீவிரமாகச் செயல்படுகிறார்கள்” என்று சொல்லியிருக்கிறார்.
இங்கே அவர் அளித்துள்ள பதிலின் ஒவ்வொரு வார்த்தையும் மிகவும் முக்கியமானவை.  உலகிலேயே முதல் முறையாக மூன்றாம் தலைமுறை அணு உலையை நிறுவி. நம் கைகளாலேயே நம் கண்களை குத்த வைத்தவர்கள், இப்போது இந்தியாவிலேயே முதல் முறையாக நம் மண்ணில் அணுக்கழிவு மையத்தை அமைத்து நம் கையால் நமக்குக் கொள்ளிவைக்கப் பார்க்கிறார்கள். அல்லது கொள்ளிக் கட்டையைக் கொடுத்து தலையைச் சொறிந்து கொள்ளுங்கள் என்கிறார்கள். 2018 மார்ச் மாதத்தோடு அணுக்கழிவு மையம் வைப்பதற்கான  கெடு முடிந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தில் பிப்ரவரி 2018 இல் அன்று இந்திய அணுமின் சக்தி நிலையம் தாக்கல் செய்த மனுவில், இந்த அணுக்கழிவு மையம் கையாளும் தொழில்நுட்பம் எங்களிடம் இல்லை. இந்தியாவில் முதல்முறையாக இதைச் செய்யப்போகிறோம். அதனால் இது மிகவும் சவாலானதாக இருக்கும். மேலும் 5 ஆண்டுகள் கால அவகாசம் தேவைப் படும்‘ என்று ஒப்பாரி வைத்துள்ளனர்.
கையாளும் தொழில் நுட்பம் இல்லை என்று ஒப்புக் கொள்ளும் உங்களுக்கு, கூடங்குளத்தில் செயல்படுத்துவதற்கு உத்தரவிட்டது யார்?
இந்தியாவில் முதல் முறையாகச் செய்யப்போகிறோம் என்கிற உங்களுக்கு பிற மாநிலங்களில் உள்ள அணுஉலை நிலையங்களில் செயல்படுத்த முடியாமல் உங்களைத் தடுத்தது எது?
சவாலானதாக இருக்கும் என்று தெரிந்திருந்தும் இங்கு செயல்படுத்திப் பார்க்கும்படி இசைவு தெரிவித்தது யார்?
 உயரிய தொழில்நுட்ப வசதி நிறைந்த அமெரிக்காவிடமே அணுக்கழிவுகளை அப்புறப் படுத்த முடியாமல் விழிபிதுங்கி நிற்கிறபோது, இந்த மூன்றாம் தலைமுறை அணுஉலையைக் கொடுத்த ரஷ்யாவே  செர்னோபில் அணுஉலை விபத்தால் அல்லாடும்போது, புகுஷிமா விபத்தால் அணுக்கழிவுகளை அப்புறப்படுத்த முடியாமல்,  ஜப்பானே கதி கலங்கி நிற்கும்போது, ஐரோப்பிய நாடுகளே தற்போது செயல்படும் அணுஉலைகளை படிப்படியாக நிறுத்தி, அணுஉலை இல்லாத அமைப்பைக் கட்ட முனையும்போது,  அணு உலை தொழில்நுட்பத்தை  ரஷ்யாவிடம் பிச்சை எடுக்கும் இந்தியாவிற்கு, தமிழகத்தில் - கூடங்குளத்தில் - செயல்படுத்துவதற்கு எப்படித் துணிச்சல் வந்தது?
அண்டை நாடுகளான இலங்கை, மாலத் தீவைப் பாதித்தால்.. என்னவாகும்?
மத்திய அரசுக்கு ஜால்ரா போடும் எடப்பாடி தலைமையிலான அதிமுக அரசும் எதையும் ஆராய்ந்துப் பார்க்காமல், நாற்காலிச் சுகத்தை மட்டுமே கருத்தில் கொண்டு, ஹைட்ரோ கார்பன் திட்டத்தின் மூலமாகவும் நியுட்ரினோ மூலமாகவும் இப்போது அணுக்கழிவு மையத்தின் மூலமாகவும் தமிழகத்தைச் சுடுகாடாக்க ஒத்துழைக்கிறது. இந்த அணுக்கழிவு மையத்தை அமைப்பதற்கான பொதுமக்கள் கருத்துக்கேட்புக் கூட்டம் ஜூலை 10-ம் தேதி ராதாபுரத்தில் உள்ள என்.வி.சி. அரசுப் பள்ளியில் நடைபெறும் எனத் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. 
பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டத்தின் இலட்சணத்தைத்தான் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பிலும் எட்டுவழிச்சாலை எதிர்ப்பிலும் பார்த்தோமே. 
அரசுப் பயங்கரவாதத்தின் அடாவடித்தனத் திற்கு கூடங்குளம் பகுதி வாழ் மக்கள் மட்டுமல்ல.. தமிழகமே  ஜல்லிக்கட்டிற்கு அணி திரண்டதுபோல் அணி திரள வேண்டும். தமிழகத்தைச் சுடுகாடாக்க, புற்றுநோய்களின் பிறப்பிடமாக்க, மத்திய அரசையும் மாநில அரசையும் அனுமதிக்கலாகாது.
கூடங்குளம் அணுமின் நிலையத்தைப் பொருத்தவரை ரஷ்யாவின் அடிவருடிகளாகிப் போன கம்யூனிஸ்ட்டுகளும் தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு, இந்த அணுக்கழிவு மையம் அமைக்க பலமான எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டும்.  
உலகம் முழுவதும் அணுக்கழிவுகளைப் பாதுகாப்பாக வைக்கும் தொழில்நுட்பத்தை எந்த நாடும் கண்டுபிடிக்க முடியவில்லை, அது பெரிய சவாலாக உள்ளது. இந்நிலையில் சோதனை எலிகளாகத் தமிழர்களை மாற்றும் இந்த விபரீதமான திட்டத்திற்கு, தமிழக அரசு ஒருபோதும் அனுமதி அளிக்கக் கூடாது. நிரந்தரக் கழிவுமையம் அமைப்பது குறித்த தெளிவான திட்டத்தை மத்திய அரசு உருவாக்கும் வரையில் கூடங்குளத்தில் இரண்டு உலைகளிலும் மின்னுற்பத்தியை நிறுத்தவேண்டும். புலிவாலைப் பிடித்த கதையாக தமிழகம் உள்ளது.
இரவில் எந்தக் காவல் வேளையில் திருடன் வருவான் என்று வீட்டு உரிமையாளருக்குத் தெரிந்திருந்தால் அவர் விழித்திருந்து தம் வீட்டில் கன்னமிடவிடமாட்டார் என்பதை அறிவீர்கள்
(மத்தேயு 24 : 43). 
தமிழர்களாகிய நாம் தமிழகத்தைக் கன்னமிட விடாமல் காவல் காப்போம்.