Namvazhvu
ஏழைகளின் திருத்தந்தைக்கு ரமதான் சமர்ப்பணம்
Wednesday, 26 Jun 2019 08:28 am

Namvazhvu

ஜூன் 3, செவ்வாயன்று, இஸ்லாமிய உலகில் சிறப்பிக்கப்பட்ட, ரமதான் ஈத் அல்-பிட்ர் விழாவை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு சமர்ப்பிப்பதாக இத்தாலியிலுள்ள அரபு சமூகங்களின் அமைப்பு அறிவித்துள்ளது.
இரமதான் நோன்பு மாதத்தின் இறுதியில் சிறப்பிக்கப்படும் ஈத் அல்-பிட்ர் விழாவை முன்னிட்டு, இத்தாலியின் அரபு சமூகங்களின் அமைப்பு, பல்சமய அனைத்துலக பொதுநிலை கூட்டமைப்பு, இத்தாலியிலுள்ள வெளிநாட்டு மருத்துவக் கழகங்கள் ஆகியவை இணைந்து இத்தாலி வாழ் இஸ்லாமியருக்கு வாழ்த்துச் செய்தியை வெளியிட்டுள்ளதுடன், இப்பெருவிழாவை திருத்தந்தைக்குச் சமர்ப்பிப்பதாகவும் தெரி வித்துள்ளனர்.
வலுவிழந்தோர், குடியேற்றதாரர் ஆகியோருக்காகவும், கலாச்சாரங்கள் மற்றும், மதங்களிடையே கலந்துரையாடல்களை ஊக்குவிப்பதற்காகவும், மனிதாபிமானம் மற்றும் ஒருமைப்பாட்டுணர்வுடன், மக் களின் உரிமைகளுக்காகவும் திருத்தந்தை ஆற்றிவரும் பணிகளை முன்னிட்டு அவரைக் கௌரவப்படுத்த விரும்புவதாக இத்தாலியிலுள்ள இஸ்லாமிய அமைப்பு தெரிவித்துள்ளது.
மேலும், ஈராக் நாட்டின் கல்தேய வழிபாட்டுமுறை முதுபெரும் தந்தை லூயிஸ் இரஃபேல் சாக்கோ அவர்கள் வெளியிட்டுள்ள ஈத் அல்-பிட்ர் வாழ்த்துச் செய்தியில், ஒருவர் மற்றவரை மனவுறுதி யுடன் மன்னிப்பது, மற்றும் மோதல்களை நிறுத்துவதன் வழியாக, ஈராக் நாட்டிற்கு அவசரமாக தேவைப்படும் ஒப்புரவின்மீது நம் அர்ப்பணத்தை வெளியிட முடியும் என குறிப்பிட்டுள்ளார்.