பெர்னார்ட்ஷா என்ற பெயர் பெற்ற ஆங்கில அறிஞர் தன் சுய அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளும்போது, "என் வாழ்வில், நான் பிறந்தது முதல் இறுதிவரை தொடர்ந்து கற்றலில் ஈடுபட்டேன். ஆனால் அந்தத் தொடர் கற்றல், நான் பள்ளிக்குச் சென்று வந்த அந்தக் குறுகிய காலத்தில் மட்டுமே தடைபட்டுப்போனது" என்று குறிப்பிடுகின்றார். நம் பிள்ளைகளும் இப்படிச் சிந்திக்க, இப்படி சொல்லத் தொடங்கினால், நம் கல்வி நிறுவனங்கள் எவ்வாறு தங்களை நியாயப்படுத்திக் கொண்டு நிலை கொள்ள முடியும்!
கற்கால யுகத்தில் தன் புத்தியைக் கல்லில் உரசிப் பார்த்துக் கூர்மைப்படுத்திக் கொண்ட மனிதன், தொழில் புரட்சி வழியாக இயந்திர யுகத்தைப் படைத்துக் கொண்டான். கணினியுகத்தில் வாழும் இன்றைய மனிதன் தொடர்புத் தொழில் நுட்பத்தில் தொலை தூரம் பயணித்துக் கொண்டிருக்கின்றான். கல்வியில் வரலாறு காணாத கரையை எட்டி
விடத் துடிக்கும் கல்வியும் பட்டங்
களும் பட்டதாரிகளில் ஏற்படுத் தும் தாக்கங்களும் ஏக்கங்களும் பல வடிவங்களில் இன்று வெளிப் படுகின்றன.
கல்வி கடைச் சரக்காகிவிட்ட இன்றைய சமூகத்தில், எப்படி படிக்கப்போகிறோம் என்ற பிரம்மை ஒருபுறம், படித்துதான் என்ன சாதிக்கப்போகிறோம் என்ற கசப்பு இன்னொருபுறம். காலம் பொன் போன்றது என்றால், கல்வி கண் போன்றது. இக்கல்விக் கண் விழித்தாலும் பார்வை, மூடினாலும் சிந்தனை, உறங்கினாலும் உற்சாகம். கல்வி அதனைப் பெறும் ஒருவருக்குக் கடந்து செல்லும் கருணை புரிகிறது. அறியாமையிலிருந்து, இயலாமையிலிருந்து, முடங்கிய சிந்தனையிலிருந்து, பழகிப்போன அடிமைநிலையிலிருந்து, மழுங்கிப்போன மூடநம்பிக்கையிலிருந்து, சறுக்கும் சமூகக் கோணல் களிலிருந்து - என்று அடுக்கிக் கொண்டே போகலாம். கற்போரைக் கல்வி முழு மனித வளர்ச்சிக்கும் மாண்பு நிறைவாழ்வு நிலைக்கும் இட்டுக் செல்கிறது.
அறிவியல் ஆழங்களையும், தொழில்நுட்பத் துல்லியங்களையும் தேடச் செய்யும் கல்வி, வாழ்வின் யதார்த்தங்களையும், உயரிய விழுமியங்களையும், கூர்மைப்படுத்தும் சமூகத் தரவுகளையும், மறுமலர்ச்சி சிந்தனைகளையும், மாற்றுக் கலாச்சாரச் சாத்தியங்களையும், பொருளாதார மேம்பாட்டு யுக்திகளையும், நோய் நாடி தக்க மருந்துகளைக் கண்டறிந்து பயன்படுத்தும் மருத்துவப் பக்குவத்தினையும் தோற்றுவிக்க வேண்டும். கல்வி மாந்திரீக மந்திரங்களையும், மந்திரிப்பு மயக்கங்களையும், தொழிற்கூட இயந்திர மனநிலையையும் கடந்து, மானிட மாண்பைப் பேணும் மகத்தான செயலாக்கச் சிந்தனையை நம்மில் கடைந்தெடுக்க வேண்டும்.
உள்ளத்தில் உருக்கமான இறைத்தேடல் இடம்பெற வேண்டும். ஒருவர் கல்வி கற்றது உண்மை என்றால், உன்னதத்தில் உறையும் உண்மை தேவனை, மண்ணகத்தில், நடமாடும் மனிதர்களின் உறவு உரசல்களின் மத்தியில் காணும் விழி பெற வேண்டும். இறைவெளிப் பாட்டின் திறந்தவெளி அரங்கமாக இந்த உலகையும் உலகியல் நிகழ்வுகளையும் காணும் உள் பார்வையை, உளப்பாங்கைக் கல்வி தர வேண்டும். அண்டவெளிகளை ஆராய்ந்து, ஆழ்கடலை அகழ்ந்து சரித்திர சகாப்தங்களைப் படைக்கும் கல்வி, சக மனிதனின் நாடித் துடிப்பில் வாடிக் கிடக்கும் வாழ்வின் ஏக்கங்களைப் பதிவு செய்து பதிலிருக்க வழி காண வேண்டும்.
பள்ளிச் சீருடைகள் சிறப்பாக இருக்க, ஒரே மாதிரியாக அணிவகுக்க ஒப்பனை செய்யும் கல்வி நிறுவனங்கள், கல்வி பெறும் மனங்களில் இருக்கும் ஏற்றத்தாழ்வு வேறுபாடுகளைக் களைந்து சீருடை அணிந்த சமத்துவத் தர்மத்தைக் கற்றுத் தர வேண்டும். உயர்கல்வி என்பது உயர்த்தட்டு மக்களுக்கு மட்டுமே சாத்தியமாகும் வகையில், தகுதி பட்டியலையும், பள்ளிக் கட்டணங்களையும், டியூஷன் என்ற சின்ன வீட்டுப் பள்ளிக்கூட ஏற்பாடுகளையும், ஏனைய பள்ளிகள் வசூல்களையும் நிர்ணயம் செய்யும் நிலை மாற வேண்டும். எல்லாருக்கும் கல்வி பொதுவுடைமையாக்கப்பட வேண்டும்.
ஆசிரியர்களின் திறமைக்கு நிகராக, அவர்களின் தகைமை வலியுறுத்தப்பட வேண்டும். அவர்கள் வெறுமனே விளக்கம் கொடுப்பவர்களாக மட்டுமே அல்லாமல், அவர்களே விளக்காகவும், அவர்கள் வாழ்வே விளக்கம் அளிப்பதாகவும் இருக்க வேண்டும். காலத்திற்கேற்ற கல்வித் தரவுகள் தரப்பட வேண்டும். பைண்டு செய்த புத்தகத்திலிருந்து மட்டும் கற்றுக் கொடுக்காமல், திறந்த புத்தகமாக இருக்கும் வாழ்வின் பக்கங்களில் மாணவர்களின் விரல்கள் வரி தேட பழகிக் கொடுக்க வேண்டும். ஏட்டுச் சுரக்காயை வைத்து, கரி சுரக்காயைப் பயிர் செய்து, வாழ்வின் வரங்களைச் சமைத்துச் சுவைக்கும் யுக்தியினைக் கண்டறிய வேண்டும்.
கல்வி எல்லாருக்கும் ஒன்றே என்றாலும், கலைகள் ஒவ்வொருவரின் தனி விருப்பத்தையும் திறமைகளையும் சார்ந்தது
என்பதால், அதில் தனித்து தீவிர கவனம் செலுத்த வேண்டும். ஓடும் தடங்களையும் வரையும் விரிப்புகளையும், பாடும் இராகங்களையும், ஆடும் அரங்குகளையும், காவியமாகும் கவிதைகளையும், கதையாகும் சிந்தனையும், சொற்போர் புரியும் மன்றங் களையும், ஆய்வு செய்யும் கூடங்களையும் நம் பிள்ளை களுக்கு வாய்க்கச் செய்ய நாம் ஆவன செய்வோம். அத்துடன் நில்லாமல், மரபுவழி கலைகள், பாரம்பரிய பண்பாடுகள், கிராமியப் பாடல்கள், ஆடல்கள், சொல் வளங்கள், நாட்டுப்புற கலைவளங்கள் இவற்றில் ஆர்வத்தைக் கூட்டித் தர வேண்டும். உடற்பயிற்சி என்ற பெயரில் ஓய்வு வகுப்புகளைத் தேடிக் கொள்ளாமல், சுகாதாரக் கேடுகளை விளைவிக்கும் விபரீதங்களை விளக்கிச் சொல்லி, தக்க எடையோடு, பருமனோடு, உயரத்தோடு, உருவத்தோடு, உற்சாகத்தோடு உடலும் உள்ளமும் உலாவரும் வழிவகைகளைப் பயிற்சியாக்க வேண்டும். மனத்தை ஒருமுகப்படுத்தவும் கவனமுடன் காரியத்தில் கண்ணாய் இருக்கவும், கட்டுப்பாடான மனவொழுக்கத்தில் கண்ணியமாக வாழவும், கடமை உணர்வை உயர்த்திப் பிடிக்கவும், மதிப்பீட்டுப் போதனைகளைத் தெளிவாக்கித் தர வேண்டும். மனவொழுக்கம் மனப்புழுக்கத்தைக் குணப்படுத்தும் என்பதை உணரச் செய்ய வேண்டும்.
இதெல்லாம் கானல் நீர்ப்போல தோன்றினாலும், மனிதனின் அறிவில் ஆன்மா செயல்படுவதையும், ஆன்மா அவன் அறிவை செம்மைப்படுத்துவதையும் நாம் மறுக்க முடியாது. ஆன்மிகம் ஆலயத்தைமட்டும் சார்ந்தது அல்ல. அது மனித வாழ்வின் அனைத்துக் கூறுகளையும் ஊடுருவியது என்ற தெளிவைத் தரும் கல்வியே ஓர் ஆன்மிகம்தானே!