Namvazhvu
கதிகலக்கும் கதிரியக்கம்
Wednesday, 26 Jun 2019 08:59 am

Namvazhvu

“12000 மக்கள்தொகை கொண்ட எங்கள் கிராமத்
தில் இப்போதும் 500 பேருக்குமேல் புற்று நோயால் பாதிக்கப் பட்டு மருத்துவ சிகிச்சை யில் இருக்கிறார்கள். இதுவரை சுமார் 200 பேருக்குமேல் புற்றுநோய்க்கு பலியாகி இறந்து
விட்டதாக கடந்த பத்தாண்டு புள்ளி விபரம் சொல்கிறது. இளைஞர் இயக்கம் சார்பில் தெருத்தெரு வாக ஆய்வுப் பணிக்காக செல்லும்போது புற்றுநோயால் பாதிக்கப் பட்டிருக்கும். பலரும் தங்களுக்கு வந்திருப்பது புற்றுநோய் என்று வெளிப்படையாகச் சொல்ல தயங்குகிறார்கள். இது ஒரு புற்றுநோய்; இது குடும்பத்திலுள்ள வாரிசுகளுக்கும் வரும்; அதனால்தன் பிள்ளைகளை, பேரப்பிள்ளைகளை சமூகம் இழிவாகப் பார்க்கும்; அவர்களுக்கு நடக்கவேண்டிய நல்ல காரியங்கள் தடைபடும் என்று பலரும் தங்களுக்கு வந்தது புற்றுநோய் என்று சொல்லாமல் மறைக்கிறார்கள். டெங்கு காய்ச்சல், பன்றி காய்ச்சல் இருக்கிறது என்று சொன்னால் அந்த மாவட்டத்தின் சுகாதாரத்துறைக்கு கெட்டபெயர் ஏற்படும் என்பதற்காக அதை வெளிப்படையாகச் சொல்லாமல், எங்கள் மாவட்டத்தில் பன்றி காய்ச்சலே இல்லை என்று அரசுத் துறைகள் மறைப்பதுபோல், புற்றுநோய் பாதிப்புக்கு உள்ளான மக்கள் ஸ்டேஷன் சென்டர்களில் பரிசோதனைக்குச் செல்லும்போது ரிப்போர்ட்டில் கேன்சர் என்று குறிப்பிடாமல் ‘ளக்ஷ’ என்று ஏதோ ஒரு கோடுமுறையில் குறிப்பிட்டு புற்றுநோய் அதிகம் இல்லை என்று கூறி இருப்பது வெளியில் தெரியாமல் இருக்கிறது. பிறகு நோய் முற்றிய நிலையில் திருவனந்தபுரம் ரீஜனல் கேன்சர் சென்டர், வேலூர் சிஎம்சி, சென்னை அடையார் புற்றுநோய் சென்டர் என்று போகும்போது இனிமேல் காப்பாற்ற முடியாது என்று கைவிரிக்கும்போது சாவுதான் முடிவாகிப் போகிறது. எங்கள் ஊரில் புற்றுநோய் பாதித்து கொத்துக் கொத்தாக மக்கள் செத்துக் கொண்டிருக்கிறார்கள்” என்று இளைஞர் இயக்க நிர்வாகி ஒருவர் கண்ணீர் மல்கக் கூறுகிறார்.
கோடிமுனை என்ற கடற்கரை கிராமத்தில் ஏழுவயது சிறுவன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மூன்று ஆண்டுகளாக போகாத மருத்துவமனை
யெல்லாம் தேடிப்போய் சிகிச்சை பெற்று அந்த சிறுவனின் அப்பா மீன்பிடித்து அதுவரை சம்பாதித்து உருவாக்கிய சொத்துக்களையெல்லாம் மருத்துவ சிகிச்சைக்காக செலவழித்து, ஆசை ஆசையாகக் கட்டிய வீட்டையும் ஒத்திக்குக் கொடுத்துவிட்டு, பல இடங்களில் கடன் வாங்கி இப்போது சிறுவனையும் இழந்துவிட்டு இப் போதும் வெறும் கையும் காலுடன் நடுத்தெருவில் நிற்கும் நிலைக்கு உருவாக்கிவிட்டு இறந்துபோன அந்த சிறுவனின் அடக்கத்திற்காக அங்கு போயிருந்தபோது ஒரு வீட்டில் இருந்த தொலைக்காட்சிப் பெட்டியில் ‘தந்தி டி.வி’யில் நேரலை நிகழ்ச்சி ஒன்று ஓடிக்கொண்டிருந்தது.
அன்று உலக புற்று நோய் தினமாம். அதற்காக தொலைக்காட்சி நேரலை நிகழ்ச்சியில், நாட்டின் பிரபலமான ஒரு மருத்துவர் அரங்கில் இருந்து கால்மேல் கால்போட்டுக் கொண்டு பேசிக் கொண்டிருந்தார். அதில் “மக்களுக்கு புற்றுநோய் வருவதற்குக் காரணமே. அவர்களின் உணவுப் பழக்கமும், பொருத்தமற்ற உணவுகளும், போதைப் பழக்கமும். பான்பராக் போன்ற புகையிலை பயன்படுத்தும் பழக்கமும்தான்” என்று சொன்னார். அந்த வீட்டில் தொலைக்காட்சியைப் பார்த்துக்கொண்டு, வெத்திலைக் கிண்ணியில் வெற்றிலை, பாக்கு, புகையிலை எல்லாம் இடித்து வாயில் போட்டுக் குதப்பிக் கொண்டிருந்த 80 வயது பாம்படம் அணிந்த பாட்டி நம்மிடம், “இல்ல மக்களே! இவன் சொல்லுதது பொய்யி. இத்தன வருசமா வெத்துல, பாக்கு, யாழ்ப்பாண போயில, நட்டு, காசுகட்டி, சுண்ணாம்புண்ணு போட்டிண்டிருக்க எனக்கு புத்துநோய் வரேல... இந்த மாசற்ற புள்ளைக்கு வந்திருக்குன்னா அதுக்கு வேற காரணம் இருக்கணும். நம்ம கடக்கர மக்களுக்குத்தான் இந்த நோய் பெருத்து வருது. அப்படின்னா கடக்கர மக்களுக்கு ஆண்டவன் குடுத்த சாபமா இருக்குமோ?” என்று கூறியது.
கன்னியாகுமரி மாவட்டத்தின் கடற்கரை கிராமங்களில் பிறந்த குழந்தையிலிருந்து வயது முதிர்ந்த முதியவர் வரை வயது வித்தியாசம் இல்லாமல் பலரையும் இந்த நோய் பாதித்துள்ளது. ஆண்-பெண் என்ற பாலின பாகுபாடு இல்லாமல் தலைமுடி முதல் பாதம் வரை ஒவ்வொரு இடத்திலும் இந்த புற்றுநோய் பாதிப்பு உள்ளது. தலையில் மூக்கில், பல்லில், கன்னத்தில், நாக்கில், தொண்டையில், இதயத்தில், மார்பில் வயிற்றில், ஈரலில், குடலில், கையில், பிறப்புறுப்பில், கர்பப்பையில், காலில், இரத்தத்தில் என்று எங்கு பார்த்தாலும் வியாபித்திருக்கிறது இந்நோய்.
 “எங்கள் ஊரில் 8000 மக்கள்தொகை. எங்கள் ஊரில் இறந்தவர்களை அடக்கம் செய்ய 15 ஏக்கரில் ஒரு கல்லறைத் தோட்டம் உள்ளது. இன்னும் 200 ஆண்டுகளுக்கு இந்த கல்லறையில் இடம் தட்டுப்பாடு இல்லாமல் இறந்தோரை நல்லடக்கம் செய்யவேண்டும் என்று எங்கள் முன்னோர்கள் கல்லறைத் தோட்டம் அமைத்து வைத்திருக்கிறார்கள். ஆனால் இப்போது அந்த கல்லறைத் தோட்டத்தில் இடநெருக்கடியால் ஊரில் மிகப்பெரிய பிரச்சினை. ஒரு வருடத்தில் கல்லறை நிறைந்து விடுகிறது. மூன்றுபேர் இறந்தால் அதில் இருவராவது புற்றுநோயால் இறந்திருப்பர். தங்களிடமிருந்து பிரிந்த தங்கள் உறவுகளின் கல்லறைகளில் வந்து அவர்களை நினைவுகூர்வது; ஆண்டிற்கு ஒருமுறை வந்து தங்கள் சொந்தங்களின் கல்லறைகளைத் தேடிக் கண்டுபிடித்து, அதை மலர்களால் அலங்கரித்து, மெழுகுவர்த்தி- ஊதுபத்தி - வாசனைப் பொருட்கள் ஏற்றிவைத்து கல்லறைத் திருவிழா கொண்டாடுவது என்ற நிலமை மாறிப்போய் விட்டது. ஒரு வருடத்திற்குள் கல்லறைத் தோட்டம் நிரம்பிவிடுவதால் ஓராண்டு
கூட கல்லறைகளை-இறந்தோரை மறந்துவிடக் கூடிய சூழ்நிலை ஏற்படுகிறது. அதற்காக இப்போது கல்லறை மேலாண்மைக்காக ஊரில் பல திட்டங்கள் போடவேண்டியிருக்கிறது” என்று குறும்பனை கடற்கரை கிராமத்தின் ஊர் நிர்வாகி கூறுவதன்மூலம் யதார்த்தம் புரிந்தது.

“பெண்களுக்கு 40 வயதுக்குள் கர்ப்பப் பையை அகற்றும் அறுவை சிகிச்சை செய்யக்கூடாது என்று அரசும், மருத்துவத்துறையும் சொல்கிறது. இதுபோன்ற உயர்சிகிச்சைகளுக்கு 40 வயதுக்குள் உள்ளவர்களுக்கு காப்பீடு உதவியும் கிடைக்காது. ஆனால் கன்னியாகுமரி மாவட்டத்தில் 40 வயதுக்கு உட்பட்டு 40 சதவிகிதம் பெண்களுக்கு கர்ப்பப்பை அகற்றும் ஆப்ரேசன் நடக்கிறது என்றால் நம்புவீர்களா? கர்ப்பப்பை கட்டி என்ற மிகப்பெரிய புற்றுநோய் அபாயம் பெருகி வருகிறது. கருச்சிதைவு என்பது மிகச் சர்வசாதாரணமாக நடந்துகொண்டிருக்கிறது. எங்கள் பாட்டி, அம்மா காலத்தில் கருவுற்ற பெண்கள் வீட்டு வேலைகள் குனிந்து நிமிர்ந்து செய்வதன் மூலமும், மாவு இடிப்பது, அம்மி அரைப்பது, ஓடுவது, சாடுவது, நடப்பது என்று உடற்பயிற்சி செய்வதன் மூலமும், சுகப்பிரசவம் நடக்கலாம் என்று சொன்னார்கள். ஆனால், இப்போது ஒரு செம்பு தண்ணியைத் தூக்கினாலே கருகலைந்துவிடும் என்று சொல்லி மருத்துவர்கள் படுக்கையில் அசைவில்லாமல் போதைப் பழக்கம், புகையிலைப் பழக்கம் இல்லாத பெண்களுக்கு ஏன் இந்த புற்றுநோய் பாதிப்பு” என்று மறைமாவட்ட பெண்கள் பணிக்குழு நிர்வாகி கேட்பதற்கான பதில் யாரிடமாவது இருக்கிறதா?
கடலில் இயற்கையை எதிர்த்துப் போராடி தங்கள் உடலை வருத்தி நெற்றி வியர்வை கடலில்  விழ உழைத்து சம்பாதித்து, கப்பலைப் போன்று எப்போதும் கடலிலே கிடந்து சொத்து சுகம் என்று சேர்த்து வைத்த கடற்கரை மக்களின் ஒவ்வொரு வீட்டிலும் புற்றுநோய், பாதிப்பின் சோக வடுக்கள் ஆயிரம் கதைகளைச் சொல்லிக் கொண்டிருக்கிறது.
புற்றுநோய் என்று ஒன்று வந்ததால் அதுவரை தாங்கள் சம்பாதித்த அத்தனை செல்வங்களையும் இழந்து, வீடு-வாசல்-சொத்து-சுகங்களைப் பறிகொடுத்து, ஊர் முழுக்க கடன் வாங்கி நோய்க்குச் செலவிட்டு கடையில் வருவாய் ஈட்டித்தரும் தலைவரையே இழந்து நடுத்தெருவில் நடைபிணங்களாகத்திரியும் குடும்பங்கள் ஏராளம்.
கடலில் கணவனை இழந்தோ, புற்று நோய்க்குக் கணவனை இழந்தோ குடும்பத்தைக் காக்க மீன்சட்டியைத் தலையில் தூக்கி உருகி ஓடும் தார்ச்சாலையில் செருப்பு இல்லாத வெறும்காலில் நடந்து செல்லும் தலைச்சுமடு பெண்கள். ஏராளம்.
மார்பில் புற்று, வயிற்றில் புற்று, கர்ப்பப்பை புற்று நோய் பாதிக்கப்பட்டு, அன்பும்-பாசமும் அள்ளி வழங்க வேண்டிய நேரத்தில் பச்சிளம் குழந்தைகளைப் பரிதவிக்க விட்டுச் செல்லும் தாய்மார்கள் ஏராளம். தவமிருந்து பெற்ற ஒற்றைக் குழந்தையையும் புற்றுநோய்க்கு வாரிக் கொடுத்துவிட்டு வாரிசுகளற்ற அநாதைகளாக அலையும் பெற்றோர்கள் ஏராளம். கடற்கரைக்கு ஏனிந்த நிலை. பாம்படப் பாட்டி சொன்னதுபோல் ஆண்டவனின் சாபமா? பிரபல மருத்துவர் சொன்னதுபோல் போதை, புகை, புகையிலை பயன்படுத்துவதன் மாயமா? ஒரு கடலோர சமூகமே கொத்துக் கொத்தாய் புற்றுநோய்க்கு செத்துக் கொண்டிருக்கும் அலலத்தை பொதுப்பரப்பில் கவனப்படுத்தக்கூட வழியில்லையா?
மே 13,2015 அன்று திருவிதாங்கோட்டில் நடந்த ஒரு புற்றுநோய் கண்டறியும் முகாமில் திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவர் அஜெய்குமார் அவர்கள்பேசியது கவனிக்கப்பட வேண்டியது.
“கடந்த 15 ஆண்டுகளாக திருவனந்த புரத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு வரும் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த புற்று நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. குறிப்பாக தைராய்டு மூலம் மூளையில் புற்று, கண்ணப்புற்று போன்ற வித்தியாசமான நோய்கள் அதிகரித்து வருகின்றன. எனவே, இம்மாவட்டத்தில் புற்றுநோயாளிகள் மற்றும் நோய் தாக்கம் குறித்த ஆய்வு உடனடியாக நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.  இங்கு சுற்றுச்சூழல் காரணமாகத் தான் பெருமளவு புற்றுநோய் ஏற்படுவதாகத் தெரிகிறது. கதிரியக்கத்தின் தாக்கத்தாலேயே தைராய்டு புற்றுநோய் ஏற்படுகிறது. எங்களிடம் சிகிச்சைக்கு வருபவர்கள் பெரும்பாலும் கன்னியாகுமரி மாவட்ட கடலோரப் பகுதிகளைச் சார்ந்தவர்களாகவே உள்ளனர். எனவே இம்மக்களின் அச்சத்தைப் போக்கவும், நோய் பாதிப்புகளைக் குறைக்கவும், தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளவும் உடனடியாக ஆய்வு மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்-(தி இந்து 14.05.2015)” என்று கூறுகிறார் புற்றுநோய் மருத்துவர் அஜெய்குமார்.