Namvazhvu
ஜூலை 28, 2019 பொதுக்காலம் 17ஆம் ஞாயிறு
Wednesday, 17 Jul 2019 09:02 am
Namvazhvu

Namvazhvu

திருப்பலி முன்னுரை:
கிறிஸ்துவில் பேரன்புக்குரிய சகோதர சகோதரிகளே!
உலகில் தன் முதலாளியிடம் ஒரு வேலையாள் நேரில் நின்று பேசுவது என்பது, தனக்காக இருந்தாலும் சரி, பிறருக்காக இருந்தாலும் சரி நடைமுறையில் அவ்வளவு எளிதல்ல. சில இடங்களில் முதலாளியை கண்களால்
காண இயலாத நிலை எல்லாம் உண்டு. ஆனால் ஆபிரகாம் வாழ்வில், கடவுள் மிக அதிகமாகவே பிரசன்னமாகி பேசுகிறார். அந்த வகையில்தான் ஆபிரகாம் இன்றைய இறைவார்த்தை களில் சற்று உரிமையோடு பேசுவதாக அமைந்துள்ளது. கடவுள் தம் பிள்ளைகள் தன்னிடம் அன்பு கொள்ள வேண்டும். அதன் விளைவாக அவர்கள் வேண்டுதல் செய்ய வேண்டும் என்பதை விரும்புகிறார். கேளுங்கள் கொடுக்கப்படும் என்று இயேசு கூறும்போது (மத். 7:11) விண்ணுலகில் உள்ள தந்தை நீங்கள் கேட்டால் இன்னும் மிகுதியாக நன்மைகள் அளிப்பார் அல்லவா என்கிறார்.
இறைவனிடம் கேட்பது கிடைக்கும் என்ற நம்பிக்கை வலுவுள்ளதாக இருக்கவேண்டுமெனில் நம்மிடையே அதற்குரிய தகுதியும் வலுவுள்ளதாக இருக்க வேண்டும் என்பதை நமது தாய் திருஅவையின் இன்றைய இறைவார்த்தைகள் தெரிவிக்கின்றன. வேண்டுதல், செபித்தல், கேட்டல் என்ற மூன்று நிலைகளின் முக்கியம் இன்றைய இறைவார்த்தைகளின் உட்பொருளாக காணப்படுகிறது தகுதியோடு வேண்டுதல், தகுதிக்காக செபித்தல், நம்பிக்கையோடு கேட்டல். இது இறைவன் நம்மிடம் விரும்புவது அவரை நாம் செபித்தல் மூலம் மகிமை படுத்தும்போது அவர் நமது விருப்பங்களை நிறை வேற்றுகிறார் என்பதே நிதர்சனம். முக்கியமாக ஒன்றை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். நாம் வேண்டுதல் செய்யும்போது கடவுளின் பிரசன்னத்தில், அவரது பார்வையில் நாம் இருக்கிறோம் என்பதை உணரவேண்டும். இயேசுகிறிஸ்து கற்றுக் கொடுத்த செபத்தில் முதல் பகுதியில் அவரை மகிமைபடுத்தி, அவருடைய திருவுளமே நம் வாழ்வு என்று கூறி இரண்டாம் பகுதியில் நமது தேவைகளை கேட்கின்றோம். இது அவரிடம் நமக்குள்ள உறவு, அன்பு, உரிமை போன்ற உணர்வுகளைக் காட்டுகிறது. இந்த உணர்வுகள் என்றும் நிலைத்திட இத்திருப்பலியில் அருள் வேண்டி செபிப்போம்.
முதல் வாசக முன்னுரை: தொநூ 18:20-32
கடவுளுக்கு எதிராக தீமைகளின் குழியினுள் கிடக்கும் சோதோம் கொமோராவின் மக்களை கடவுள்
தண்டிக்க நீதியுடன் செயல்படுகிறார். ஆனால்  நீதிமான்களும், நல்லவர்களும் தீயவர்களோடு ஏன் அழிக்கப்பட வேண்டும் என்ற சமூக நீதியின் குரலாக ஆபிரகாம் கடவுளிடம் மன்றாடுகிறார்.
தான் ஒரு சாதாரண மனிதன் என்பதையும்தான் தடுத் தாட் கொள்வது மகாமகிமையும் பேராற்றலும் கொண்ட இறைவனை என்பதையும் மறந்து ஆபிரகாம் நியாயம் கேட்டு போராடும் ஓர் அழகான
நிகழ்வை இவ்வாசகத்தில் கேட்டு  தியானிப்போம்.
பதிலுரைப்பாடல்: ஆண்டவரே, நான் மன்றாடிய நாளில் எனக்குச் செவி சாய்த்தீர்.
திபா 138:1-2, 2-3, 6-7, 7-8
இரண்டாம் வாசக முன்னுரை: கொலோ 2:12-14
உடலின் விருத்தசேதனம் என்பது கடவுளின் மக்கள், தேர்ந்து கொள்ளப்பட்ட மக்கள் என்பதன் அடையாளம். அதுபோலவே பாவத்திற்கு இறந்து போனவர்களை இயேசு கிறிஸ்து திருமுழுக்கின் வழியாக அவரோடு உயிர்த்தெழச் செய்தார். இது மீட்பின் அடையாளம். எனவே இனி மரணம் என்பது இல்லை. வாழ்வு நம்மில் என்றும் நிலைத்திட இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பு தீமையின் விதிகளை அழித்து விட்டது என்ற புனித பவுலடிகளாரின் விளக்கங்களை இவ்வாசகத்தில் கேட்டு தெளிவு பெறுவோம்.
நற்செய்தி லூக் 11:1-13
நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்:
1. எங்கள் விண்ணப்பங்களை கேட்பவரான இறைவா!
எங்கள் திருத்தந்தை, ஆயர் பெருமக்கள், குருக்கள், துறவறத்தார் பொதுநிலையினரான எங்கள் விண்ணப்பங் களையும் குறிப்பாக எங்கள் திருத்தந்தை திருஅவைக்காக மன்றாடும் வேண்டுதல்களையும் பரிவோடு கேட்டு பதிலளிக்கவும், அதன்மூலம் நாங்கள் நிறைவு பெறவும் வேண்டுமென்று  உம்மை மன்றாடுகின்றோம்.
2. துன்பங்கள் எனை துரத்தியே வந்தாலும் எமை தூக்கிக் காத்திடும் இறைவா!
எங்கள் தாய்திருஅவையின் போதனைப் பணிகளும், மனித நேயப் பணிகளும், ஆன்மிகப் பணிகளும் பல்வேறு தலங்களில் தியாகமுள்ள பணிகளாகச் செய்யப்படும்போது ஏற்படும் அரசியல், பொருளாதார சவால்களை தைரியமுடன் சந்திக்கத் தேவையான ஆற்றல்களை அருளவேண்டும் என்று உம்மை மன்றாடுகிறோம்.
3. எங்கள் துக்கங்களை மகிழ்ச்சியாக மாற்றிடும் இறைவா!
அறிவியல் ஆய்வுகள் மூலம் நீர் ஆதாரங்கள் படிப்படியாக மிக விரைவில் மறைந்து போகும் நிலை ஏற்பட இருப்பதால் அச்சமுறும் நிலையில் வாழும் மனித இனம் நீரின்றி மாய்ந்து போகாதபடி நல்ல மழையைத் தக்க  காலங்களில் அபரிவிதமாக பொழிந்து எங்களைக் காக்க வேண்டும் என்று உம்மை மன்றாடுகிறோம்.
4. ஞானத்தின் முதல்வனாகிய இறைவா!
எங்கள் குடும்பத்துப் பிள்ளைகள் கல்விச் சாலைகளில் புதிய வகுப்புகளில் அடியெடுத்து வைத்துள்ள இக்காலக் கட்டங்களில், உயர்கல்வித் துறைகளிலும், கல்லூரிகளிலும் படிக்க பொருளாதார வசதிகள் பெருகவும், பிள்ளைகளும் பொறுப்புணர்ந்து முழுக் கவனமுடன் படிக்க அவர்களுக்குத் தேவையான ஞான வரங்களை அருளவும் வேண்டுமென்று  உம்மை மன்றாடுகிறோம்.
5. சமாதானத்தின் தேவனாகிய இறைவா!
பல கத்தோலிக்க திருமணங்கள் முறிவுக்கு தள்ளப் படுகிறன்றன. விட்டுக் கொடுக்காமை, ஆழ்மன புரிதல் இன்மை, பெற்றோரை ஒதுக்கித் தனி குடும்பம் தேடுதல், எதிர்பார்ப்பவை கிடைக்காமை எனப் பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் உம் வார்த்தையின்படி அவை ஒன்றுபட்டு இணைந்து வாழ வேண்டும் என்று உம்மை மன்றாடுகிறோம்.