Namvazhvu
Dr.Simon Hercules R.I.P சென்னை மயிலை பேராயர் மேதகு ஜார்ஜ் அந்தோணிசாமி அவர்களின்  விளக்க அறிக்கை
Thursday, 23 Apr 2020 06:40 am
Namvazhvu

Namvazhvu


கொரோனோ நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு  இறந்த மருத்துவர் திரு.சைமன் ஹெர்குலஸ் அவர்களின் அடக்கச் சடங்கின்போது  நடந்தது என்ன என்பது குறித்து 
சென்னை மயிலை பேராயர் மேதகு ஜார்ஜ் அந்தோணிசாமி அவர்களின்  விளக்க அறிக்கை

அன்பார்ந்த சகோதர சகோதரிகளே!
நல்லெண்ணம் கொண்ட அன்பு நெஞ்சங்களே!
உங்கள் அனைவருக்கும் கடவுள் தரும் அமைதியும், ஆசிரும் உரித்தாகுக!

கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி ஞாயிறன்று மரணமடைந்த மருத்துவர் திரு. சைமன் ஹெர்குலஸ் அவர்களின் ஆன்மா இறைவனில் இளைப்பாற, என்னுடைய உருக்கமான செபங்களை சமர்ப்பிக்கின்றேன். 

அந்தக் குடும்பத் தலைவரை இழந்து, ஆழ்ந்த துயரத்திற்கு தள்ளப்பட்டிருக்கிற அண்ணாரின் துணைவி திருமதி. ஆனந்தி சைமன் அவர்களுக்கும், இரு பிள்ளைகளுக்கும் எனது மரியாதையையும், இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். 

மருத்துவராக மக்கள் பணியில் தன்னையே முழுவதுமாக ஈடுபடுத்தி, பல்வேறு வகையில் மனித நேய தொண்டாற்றி வந்த ஒரு நல்ல மனிதரை நாம் அனைவரும் இன்று இழந்து வருந்துகின்றோம். அண்ணாரை இழந்து வாடுகின்ற அனைவருக்கும் எனது உருக்கமான செபங்கள்!

விஷமப் பிரச்சாரத்திற்கு கண்டனம்
ஊடகங்களிலும் குறிப்பாக செய்தித் தொலைக்காட்சியிலும் நாம் பார்க்கின்றவாறு, மருத்துவர் திரு. சைமன் அவர்களின் அடக்கத்தின்போது நடந்த விரும்பத்தகாத நிகழ்வுகள் வன்மையாகக் கண்டிக்கத் தக்கவை; எதிர்காலத்தில் தவிர்க்கப்பட வேண்டியவை ஆகும். 

144 ஊரடங்கு தடைச் சட்டம் நடைமுறையில் இருக்கும் இவ்வேளையில் அனைவரையும் போலவே நானும், இந்த அசம்பாவிதங்களைப் பற்றிய செய்தியை ஊடகத்தைப் பார்த்து தெரிந்து கொண்டேன். அண்ணாரின் குடும்பத்தை தொடர்பு கொண்டு, அவர்களுக்கு நமது ஆன்மிக உடனிருப்பையும், சகோதர உணர்வையும் தெரிவித்தேன். 

ஆனால் கடந்த சில நாட்களாக, சமூக ஊடகத்தில் பரப்பப்படும் காழ்ப்புணர்ச்சியும், வெறுப்புப் பிரச்சாரங்களும், ஆதாரமற்ற செய்திகளும் அதிர்ச்சியூட்டுபவையாகவும், வருத்தமளிப்பவையாகவும் உள்ளன. ஏற்கனவே பெரும் இழப்பையும் சொல்ல முடியாத துயரத்தையும் சந்தித்துக் கொண்டிருக்கும் மறைந்த திரு. சைமன் அவர்களின் குடும்பத்தை ஆதாரமற்ற இத்தகைய செய்திகளால் காயப்படுத்துவது மனிதப் பண்பல்ல. 

மறைந்த திரு. சைமன் அவர்களது குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவரும் உணர்வுப் பூர்வமாக மனதளவில் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கும் இவ்வேளையில், சமூக ஊடகங்களில் பரப்பப்படும் செய்திகளின் உண்மைத் தன்மையை அறிந்துகொள்ள, அவர்களை அணுகுவதும் தொந்தரவு செய்வதும் சரியல்ல. இருப்பினும், தவறான வதந்திகளைப் பரப்புவோரைக் கண்டித்து, அன்று நிகழ்ந்த சம்பவங்களின் உண்மை நிலையைத் தெரிவிக்க, தகுந்த ஆதாரத்தோடும், நேரடி மற்றும் எழுத்துப்பூர்வ சான்றுகள் அடிப்படையிலும், இந்த அறிக்கையை வழங்குகின்றேன். 
நடந்தது என்ன?
திரு. சைமன் ஹெர்குலஸ் அவர்கள் மரணமடைந்தார் என்ற செய்தி கிடைத்தவுடன் குடும்ப உறவினருள் ஒருவரான திரு. சுஷில் ஆதாம் அவர்கள் ஏப்ரல் 19 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு 8.30 மணிக்கு மேத்தா நகர் விண்ணேற்ற ஆண்டவர் ஆலய அருட்தந்தையை அணுகி, கீழ்ப்பாக்கம் கிறிஸ்தவ கல்லறையில் ஏப்ரல் 20 ஆம் தேதி  அடுத்தநாள் திங்கட்கிழமையன்று அடக்கம் செய்வதற்கு வேண்டிய அனுமதி கடிதத்தை பெற்றுக் கொண்டார். 

சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில்..
திரு.சைமன் அவர்கள் இறந்தவுடனே மருத்துவமனையிலிருந்து அவரது உடல் உடனடியாக குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டாலும், தொற்றுநோயால் இறந்ததன் காரணமாக உடலானது சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரப்பட்டது. 
நோய்த் தொற்றின் காரணமாக அடுத்த நாள் காலை வரை உடலை வைத்திருக்காமல், அன்று இரவே -அதாவது ஏப்ரல் 19 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவே- உடலை அடக்கம் செய்துவிட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டதால், கீழ்ப்பாக்கம் கிறிஸ்தவக் கல்லறையில் அடக்கம் செய்வதைத் தவிர்த்து, சென்னை மாநகராட்சி நிர்வாகத்திற்கு உட்பட்ட, கீழ்ப்பாக்கம் மாநகராட்சி கல்லறைத் தோட்டத்தில் ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்றிரவே உடலை அடக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டது. இதன் காரணமாகத்தான் உறவினர்கள் யாரும் அடக்கத்திற்காக கீழ்ப்பாக்கம் கிறிஸ்தவக் கல்லறை நிர்வாகத்தை நாடவில்லை. 
உடலானது மருத்துவமனையிலிருந்து வெளியேறுவதற்கு முன்பாகவே செய்தியை அறிந்த கீழ்ப்பாக்கம் மாநகராட்சி, கல்லறைப் பகுதியில் வாழும் மக்கள், கொரோனா தொற்றால் இறந்தவரின் உடலை அங்கு அடக்கம் செய்ய மறுப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்ட நிலையில், காவல்துறை துணை ஆணையர் அவர்கள் நேரில் சென்று மக்களோடு நடத்திய பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது.
வேலங்காடு இடுகாட்டில் அடக்கம் 
எனவே, சென்னை மாநகராட்சி நிர்வாகமானது இறுதி முடிவு மேற்கொண்டு, புதிய ஆவடி சாலையில் உள்ள வேலங்காடு இடுகாட்டில் உடலை அடக்கம் செய்ய அனுமதி அளித்து, மருத்துவமனையிலிருந்து உடலை அனுப்பி வைத்தது. 

அதன்பிறகு நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களும் விரும்பத்தகாத நிகழ்வுகளும், வேலங்காடு பகுதியில் நடந்தவையே தவிர, கீழ்ப்பாக்கம் பகுதியில் உள்ள கல்லறைத் தோட்டங்களுக்கு அருகில் நடந்தவை அல்ல. 
அடக்கம் செய்யச் சென்றவர்கள் தாக்கப்பட்டவுடனே, இறந்தவரின் உடலுடன் அங்கிருந்து தப்பிச் சென்றனர். மருத்துவர் திரு. பிரதீப் என்பவர் தாமே மருத்துவ அவசர ஊர்தியில் உடலை எடுத்துச் சென்று, காவல்துறை பாதுகாப்போடு வேலங்காடு இடுகாட்டில் அடக்கம் செய்தார். 
இவை அனைத்தையும் அறிந்து, மாண்புமிகு சென்னை-உயர் நீதிமன்றம் தாமே முன்வந்து, விசாரணை மேற்கொண்டு தமிழக அரசுக்கும், காவல் துறைக்கும், உடனடி நடவடிக்கைகள் எடுக்க ஆணையிட்டு, இனிமேல் இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள கேட்டுக் கொண்டுள்ளமைக்கு நன்றி கூறுகிறேன். விரைந்து நடவடிக்கை எடுக்கும் தமிழக அரசுக்கும், சென்னை மாநகரக் காவல் துறைக்கும் நன்றி கூறுகிறேன். 

வெறுப்புணர்வை விதைக்கம் விஷமப் பிரச்சாரம்
இந்நிலையில் சமூக ஊடகங்கள் வழியாக பொதுமக்களிடையே சமய சமூக காழ்ப்புணர்ச்சியையும், வெறுப்புணர்வையும் விதைக்கும் செயல்கள் மிகுந்த மனவருத்தத்தை ஏற்படுத்துகின்றன.
1.    இறந்தவரின் அடக்கத்தைப் பற்றி அருட்தந்தையர்கள் கவலைப்படவில்லை எனவும், 
2.    இரு கிறிஸ்தவ திருச்சபைகளுக்கு இடையே ஏற்பட்ட தகராறுகளால் இறந்தவரின் உடல் உரிய முறையில் அடக்கம் செய்யப்படவில்லை எனவும்,  
3.    இறந்தவரின் குடும்பமே முடிவுசெய்து வேலங்காடு இடுகாட்டில் அடக்கம் செய்ய முயன்றதால்தான் வன்முறை நிகழ்ந்தது எனவும், 
முழுக்க முழுக்க விஷமத்தனமான, ஆதாரமற்ற, பொய்யான வதந்திகளும், செய்திகளும் பரப்பப்படுவது கண்டனத்துக்குரியது. இதுகுறித்து, சென்னை மாநகரக் காவல்துறை ஆணையர் அவர்களையும் தொடர்புகொண்டு, உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும் வேண்டுகோள் விடுத்துள்ளோம்.

மனிதநேயமிக்க செயல்பாடுகளே தேவை!

கொரோனா தொற்றின் காரணமாக நாம் இருக்கும் இந்த இக்கட்டான சூழ்நிலையில் மனித நேயமிக்க செயல்பாடுகள் வளர வேண்டுமே தவிர, சமய பூசல்களுக்கும் வன்முறைகளுக்கும், தனிமனித வன்மங்களுக்கும் இடம் தரக் கூடாது. இறந்த மருத்துவர் ஒரு மனிதர்! அவருக்கு உரிய மரியாதையை அளித்திருக்க வேண்டும். 
அதிலும் குறிப்பாக, அனைவரும் தங்களையே தொற்றுக் கிருமியிடமிருந்து காத்துக் கொள்ள வீடுகளில் முடங்கியிருக்கும் இவ்வேளையில், தங்களுக்கு நேரப்போகும் பேராபத்துக்களைப் பற்றி கவலைப்படாமல், தங்களது உயிரையும் பணயம் வைத்து பொதுநல சேவையில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள், அரசுப் பணியாளர்கள், காவல் துறையினர் ஆகியோருக்கு நாம் நன்றிக் கடன் பட்டிருக்கிறோம். 
அவர்களின் தன்னலமற்ற சேவையை மதம், மொழி, இனம் போன்ற பிரிவுகளின் அடிப்படையில் கொச்சைப் படுத்தாமல், அவர்களையும் மனிதர்களாக மதித்து, மானுடம் காப்பதுதான் இன்றைய இன்றியமையாத தேவையாக உள்ளது. எனவே, பொய்யான வதந்திகளையும், சமயப் பிரிவினைகளையும் பரப்பிக் கொண்டிருப்போர் யாராக இருந்தாலும், அவர்கள் மனித நேயத்திற்கு தலைவணங்கி, ஒத்துழைப்பு நல்குவதுதான் மனிதப் பண்பாகும். 

நல்லடக்கம் செய்யப்பட முழுமையான ஒத்துழைப்பு

இச்சமயத்திலே, மறைந்த திரு. சைமன் ஹெர்குலஸ் அவர்களின் துணைவியார் திருமதி. ஆனந்தி சைமன் அவர்கள் மாண்புமிகு தமிழக முதல்வருக்கு முன்வைத்துள்ள வேண்டுகோளை மனப்பூர்வமாக வரவேற்கிறேன். தமிழக அரசின் அனுமதியோடு, அண்ணார் திரு. சைமன் ஹெர்குலஸ் அவர்களின் உடலை கீழ்ப்பாக்கம் கிறிஸ்தவ கல்லறைத் தோட்டத்தில் உரிய முறையில் நல்லடக்கம் செய்ய முழு ஒத்துழைப்பு நல்குவோம் எனவும் தெரிவித்துக் கொள்கிறேன். 

இறந்த திரு. சைமன் ஹெர்குலஸ் அவர்களின் துணைவியாருக்கும், இரு பிள்ளைகளுக்கும், உற்றார் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கும், சென்னை-மயிலை உயர் மறைமாவட்டத்தின் அனைத்து அருட்பணியாளர்கள், இருபால் துறவியர் மற்றும் இறைமக்களின் சார்பாக செபங்களையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கின்றேன். 

இறந்த மருத்துவர் திரு. சைமன் ஹெர்குலஸ் அவர்களின் ஆன்மாவுக்கு உயிர்த்த ஆண்டவர் தம் உயிர்ப்பில் பங்களித்து முடிவில்லா இளைப்பாறுதலைத் தருவாராக! 
அண்ணாரின் பிரிவால் வாடும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு இறைஇரக்கத்தின் ஆண்டவர் ஆறுதலையும் தேறுதலையும் அளிப்பாராக!

 உண்மையுடன்,

 

 

 

 

+ பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி                     
சென்னை-மயிலை உயர் மறைமாவட்டம்                 

சாந்தோம், 22 ஏப்ரல் 2020