Namvazhvu
Eucharistic Congress ? ? ? 52வது உலக நற்கருணை மாநாடு தள்ளி வைப்பு
Friday, 24 Apr 2020 13:35 pm
Namvazhvu

Namvazhvu

வருகிற செப்டம்பர் மாதத்தில், ஹங்கேரி நாட்டுத் தலைநகர், புடாபெஸ்ட் நகரில் நடைபெறவிருந்த, 52வது உலக திருநற்கருணை மாநாடு, அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குத் தள்ளி வைக்கப்பட்டுள்ளது என்று, திருப்பீட தகவல் தொடர்பகத்தின் இயக்குனர் மத்தேயோ புரூனி அவர்கள், ஏப்ரல் 23, வியாழனன்று அறிவித்தார்.

2020ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் புடாபெஸ்ட்டில் நடைபெறவிருந்த 52வது உலக நற்கருணை மாநாடு, 2021ம் ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குத் தள்ளிவைக்கப்பட்டுள்ளது என்று, புரூனி அவர்கள் கூறினார்.

தற்போதைய கொரோனா பரவல் நிலை, அதன் பின்விளைவுகள், விசுவாசிகளும், திருப்பயணிகளும் பயணம் மேற்கொள்வதற்கும், அந்நிகழ்வில் கூடுவதற்கும் எதிர்கொள்ளும் சிரமங்கள் போன்றவற்றால், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உலகளாவிய நற்கருணை மாநாடுகள் பாப்பிறை குழுவுடன் கலந்தாலோசித்தபின்,  52வது உலக திருநற்கருணை மாநாடு நடைபெறும் நாளை தள்ளி வைப்பதற்குத் தீர்மானித்துள்ளார் என்றும், புரூனி அவர்களின் அறிக்கை கூறுகிறது.

எங்கள் நலன்களின் ஊற்று உம்மிடமே உள்ளது (தி.பா.87:7)” என்ற தலைப்பில், 2020ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 13ம் தேதி முதல், 20ம் தேதி வரை புடாபெஸ்ட் நகரில், 52வது உலக நற்கருணை மாநாடு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

கத்தோலிக்கத் திருஅவையில், 1881ம் ஆண்டிலிருந்து, நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை, ஏதாவது ஒரு நாட்டில், உலக திருநற்கருணை மாநாடு, ஒரு வாரத்திற்குச் சிறப்பிக்கப்பட்டு வருகிறது. ஹங்கேரி நாட்டில், ஏற்கனவே, 1938ம் ஆண்டில், 34வது உலக திருநற்கருணை மாநாடு, “நற்கருணை: அன்பின் பிணைப்பு என்ற தலைப்பில் சிறப்பிக்கப்பட்டது.

2016ம் ஆண்டில் பிலிப்பீன்ஸ் நாட்டின் செபு நகரில் நடைபெற்ற 51வது உலக நற்கருணை மாநாட்டின் நிறைவு நிகழ்வில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

1964ம் ஆண்டு நவம்பர் 12ம் தேதி முதல் 15ம் தேதி வரை, இந்தியாவின் மும்பை நகரில் நடைபெற்ற, 38வது உலக திருநற்கருணை மாநாட்டில், புனித திருத்தந்தை ஆறாம் பவுல் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் பெருமளவில் கர்தினால்களும், ஏறத்தாழ இருபதாயிரம் வெளிநாட்டவரும் பங்குபெற்றனர்.

பிரான்ஸ் எமிலி மேரி டாஸ்மிஸ்ஸியர்  ( Emilie-Marie Tamisier)  (1834-1910) என்ற பெண்மணி, நற்கருணை மாநாட்டை நடத்துமாறு ஏறத்தாழ பத்து ஆண்டுகளாக, அருள்பணியாளர்களை வலியுறுத்தி வந்தார். இதன் பயனாக, அந்நாட்டு ஆயர் கஸ்டோன் டே செக்குர் (Gaston de Ségur) அவர்கள், பிரான்சின் லில்லே (Lille) என்ற நகரில், 1881ம் ஆண்டு ஜூன் மாதம் 21ம் தேதி, முதல் உலக நற்கருணை மாநாட்டை நடத்தினார்.