இரமதான் புனித நோன்பு மாதத்தைத் துவக்கியிருக்கும் இஸ்லாமியர் அனவருக்கும் தங்களின் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர், ஜெர்மன் கத்தோலிக்க ஆயர்கள்.
இரமதான் நோன்பு மாதத்தையொட்டி ஜெர்மனியில் வாழ்கின்ற அனைத்து முஸ்லிம்களுக்கும் வாழ்த்துத் தெரிவித்து செய்தி வெளியிட்டுள்ள, ஜெர்மன் கத்தோலிக்க ஆயர் பேரவைத் தலைவர் ஆயர் ஜியோர்க் பேட்ஸிங் (Georg Bätzing) அவர்கள், தற்போதைய கொள்ளை நோய் சூழலில் கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருப்பது குறித்து கவலை தெரிவித்துள்ளார்.
கிறிஸ்தவர்களுக்கு, இந்தக் கட்டுப்பாடுகள், குறிப்பாக, உயிர்ப்புக் காலத்தில் வேதனை நிறைந்த தவமாக இருந்தன என்றும், முஸ்லிம்களும், இந்த இரமதான் மாதத்தில், இத்தகைய நிலையை எதிர்கொள்ள வேண்டும் என்றும், ஆயரின் இரமதான் செய்தி கூறுகிறது.
மசூதிகள், தொழுகைக்கூடங்கள், ஆலயங்கள் போன்ற முக்கிய வழிபாட்டுத்தலங்கள் நம் ஆன்மீக வாழ்வுக்கு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதை, தன் செய்தியில் நினைவுபடுத்தியுள்ள ஆயர் ஜியோர்க் பேட்சிங் அவர்கள், கட்டாயமாக நம்மீது திணிக்கப்பட்டுள்ள இந்த சமுதாய தனித்திருத்தல் நடவடிக்கை, நம் வாழ்வின் அடுத்த பக்கத்தையும் நோக்குவதற்கு உதவுகின்றது என்று கூறியுள்ளார்.
உலகெங்கும், மசூதிகள், தொழுகைக்கூடங்கள், ஆலயங்கள் போன்ற வழிபாட்டுத்தலங்கள், வன்முறைகள் மற்றும் போர்களால் தாக்கப்படுகையில், அது நம், சமய வாழ்வுக்கு பெருமளவு பாதிப்பை ஏற்படுத்துகின்றது என்று குறிப்பிட்டுள்ள ஆயர், ஜெர்மனியிலும், பயங்கரவாதிகள் மற்றும், இனவெறியாளர்கள், வழிபாட்டுத்தலங்களைத் தாக்கி, பல்வேறு மதங்கள் மத்தியில் நிலவும் நல்லிணக்கத்தைச் சீரழிக்கின்றனர் என்று கூறியுள்ளார்.
இத்தகைய கொடூரங்களுக்குப் பலியானவர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்கு, தனது ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவித்துள்ள ஜெர்மன் கத்தோலிக்க ஆயர் பேரவைத் தலைவர் ஆயர் ஜியோர்க் பேட்ஸிங்அவர்கள், இத்தகைய வன்முறைச் செயல்களுக்கு எதிராய், எந்த அளவுக்கு கடுமையான சொற்களால் கண்டனம் தெரிவிக்க முடியுமோ, அந்த அளவுக்கு, நாம் ஒன்றுசேர்ந்து கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
கடவுள் நம் அருகில் இருக்கிறார், நாம் அவரின் உதவியில் நம்பிக்கை வைக்க முடியும் என்பதை, கிறிஸ்தவர்களும் முஸ்லிம்களும் உறுதியாய் நம்புகிறோம் என்று, ஜெர்மன் கத்தோலிக்க ஆயர் பேரவைத் தலைவர் ஆயர் ஜியோர்க் பேட்ஸிங் தன் இரமதான் செய்தியை நிறைவு செய்துள்ளார்.