திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அன்னை மரியாவின் வணக்க மாதமான மே மாதம் குறித்து இறைநம்பிக்கையாளர்களுக்கு எழுதிய திருமடல்
அன்பார்ந்த சகோதர சகோதரிகளே!
மே மாதம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. இக்காலத்தில் இறைமக்கள் இன்னும் ஆழமாக தங்களுடைய அன்பையும் பக்தியையும் ஆசிர்வதிக்கப்பட்ட அன்னை கன்னி மரியாவுக்கு வெளிப்படுத்துவார்கள். இம்மாதத்தில் வீடுகளில் குடும்பமாக செபமாலை செபிப்பது வழக்கம். பெருந்தொற்றின் விளைவாக ஏற்படுத்தப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் எல்லாற்றிற்கும்மேலாக இந்த ‘குடும்ப’த் தன்மையை, ஆன்மிக நோக்கிலிருந்தும் பாராட்ட வைத்திருக்கிறது.
இதன் காரணமாக, இம் மே மாதத்தில் நம் இல்லங்களில் செபமாலை செபிப்பதன் அழகை ஒவ்வொருவரும் கண்டுணர்ந்திட நான் ஊக்கப்படுத்த விழைகிறேன். இதை ஒரு குழுவாகவோ அல்லது தனிநபராகவோ செய்திட முடியும். உங்கள் சொந்த சூழ்நிலைக்கேற்ப, பெரும்பாலும் இந்த இரு சந்தர்ப்பங்களைப் பயன்படுத்திட நீங்கள் முடிவெடுக்கலாம். இதை மிக எளிய முறையில் செய்திடலாம். இணையதளத்தை மிக எளிதாகப் பயன்படுத்தியும்
(ஆங்கிலத்தில்) (http://www.vatican.va/special/rosary/index_rosary.htm)
தமிழில் நம் வாழ்வு வெளியிட்டுள்ள இந்நூலைப் பயன்படுத்தியும் (https://www.namvazhvu.in/magazine/magazine/823/------Marian-May-Devotions---FLIPBOOK)
பல்வேறு நல்ல மாதிரிபடிவங்களைப் பயன்படுத்தியும் செபிக்கலாம்.
அன்னை மரியாவிடம் செபிக்கப்படும் இரண்டு செபங்களை நான் தருகிறேன். நீங்கள் இவற்றை செபமாலையின் முடிவில் சொல்லலாம். இவற்றை நானும் உங்கள் அனைவருடனும் ஆன்மிக ஒன்றிப்பில் இணைந்து இந்த வணக்கமாதமான மே மாதத்தில் செபிக்கவுள்ளேன். உங்கள் ஒவ்வொருவருக்கும் கிடைக்கும்பொருட்டு இந்த மடலின் இறுதியில் அவற்றை உள்ளடக்கியிருக்கிறேன்.
அன்பார்ந்த சகோதர சகோதரிகளே, நம் தாயான அன்னை மரியாவின் இதயத்துடன் கிறிஸ்துவின் திருமுகத்தை ஆழ்ந்து தியானிப்பது நம்மை இன்னும் மேலாக ஓர் ஆன்மிகக் குடும்பமாக அமைத்திடும்; இந்தத் துன்பக் காலத்தை வென்றெடுக்க நமக்கு உதவும். நான் உங்கள் அனைவரையும் குறிப்பாக மிக அதிகமாக துன்புறுவோரையும் என் செபங்களில் கொண்டிருக்கிறேன். நீங்களும் தயவு செய்து எனக்காகச் செபிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். நான் உங்களுக்கு நன்றி தெரிவித்து, பேரன்புடன் என்னுடைய ஆசீரை அளிக்கிறேன்.
திருத்தந்தை பிரான்சிஸ்
ஏப்ரல் 25, நற்செய்தியாளரான புனித மாற்கு திருநாள்
புனித யோவான் இலாத்தரன் பெருங்கோவில், உரோம்.