தொய்வின்றி ஊடகப் பணி
கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக ஒட்டுமொத்த உலகமும் முடக்கப்பட்டுள்ள இந்நிலையில் தமிழக இறைமக்களின் தனிப்பெரும் ஒரே வார இதழான நம் வாழ்வு வார இதழ், தம்முடைய பத்திரிகைப் பணியை இணையதளம், இ-மேகசின், ஃபிளிப்புக், ஃபேஸ்புக், வாட்ஸ்அப், டிவிட்டர் போன்ற சமூக ஊடகங்கள் வாயிலாக அயராமல் ஆற்றி வருவதைக் குறித்து, நம் வாழ்வு வெளியீட்டுச் சங்கத் தலைவர் என்ற முறையில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.
தமிழக ஆயர் பேரவையின் திருவழிபாட்டுப் பணிக்குழுவோடு இணைந்து, இல்லங்களில் பாஸ்கா என்னும் புனிதவார கையேடு, இல்லங்களில் ஆலயம் பாஸ்கா கால திருவழிபாட்டுக் கையேடு, ‘இதுவும் கடந்து போகும்’ என்னும் பெரிய வெள்ளி சிலுவைப்பாதை, கொரேனா நோய்த்தொற்றிலிருந்து விடுபட செபம் உள்ளிட்ட ஐந்துக்கும் மேற்பட்ட நூல்களையும், நம்வாழ்வு நியூஸ் புல்லட்டின் முறையில் ஐந்துக்கும் மேற்பட்ட வார இதழ்களையும் ஏறக்குறைய ஐந்நூறுக்கும் அதிகமான செய்திக் குறிப்புகளையும் தமிழக இறைமக்கள் பயன்பெறும்பொருட்டு, அச்சுப் பிரதிகளை அனுப்புவதற்கு வாய்ப்பு இல்லாத இத்தகைய அசாதாரண சூழலிலும் இ-மேகசின் முறையில் வழங்கி பத்திரிகை ஊடகப் பணியைத் தொய்வின்றி ஆற்றிவருகிறது.
இந்த நூலைப் பயன்படுத்தி, இல்லங்களில் குடும்பமாக செபமாலை செபிக்க
வருகிறது வணக்க மாதம்! கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக உலகம் முழுவதும் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்டோர் உலகம் முழுவதும் உயிரிழந்துள்ளதைக் குறித்து மிகுந்த மன வேதனையிலுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அன்னை மரியாவின் வணக்கமாதமான மே மாதத்தில் அன்னை மரியாவிடம் செபிக்க பரிந்துரை செபங்களைக் கொடுத்து, செபமாலை செபிக்கும்படி ஏப்ரல் 25 ஆம் தேதி தம் திருமடல் வழியாக வேண்டுகோள் விடுத்துள்ளார். அதனைப் பரவலாக்கும் பொருட்டு, நம் வாழ்வு வெளியிடுகின்ற இந்த நூலைப் பயன்படுத்தி, (https://www.namvazhvu.in/magazine/magazine/823/------Marian-May-Devotions---FLIPBOOK?fbclid=IwAR1vbf-6FMCnRYsGtEmxxzioeXfTMmZ5TG1O26NGmJzi89jia1B2nFGK8AE) இல்லங்களில் குடும்பமாக செபமாலை செபிக்க உங்களை அன்புடன் வேண்டுகிறேன். “செபமாலையே இக்கால கட்டத்தில் நாம் ஏந்தும் மிக வலிமையான ஆயுதம்” என்னும் புனித பியோவின் வார்த்தைகளுக்கு ஏற்ப, திருத்தந்தை அவர்களோடு ஆன்மிக ரீதியில் நாமும் இணைவோம். ஒரே திருஅவையாக கரம் கோர்ப்போம்.
‘நம் வாழ்வு’ வார இதழ் குடும்பத்தின் உறுப்பினர்களாவோம்.
இப்பேரிடர் காலத்தில் குடும்பங்களாக நாம் அனைவரும் ஒன்றுசேர்ந்து, இறைவனை மாட்சிப்படுத்தவும், ஒருமித்து மன்றாடவும், அவரே நமக்கு அளித்துள்ள மாபெரும் வாய்ப்பென இச்சூழலைக் கருதி ஆன்மிகத்தில் வளருவோம். இ-மேகசின் வழியாக நம்மோடு தொடர்ந்து பயணிக்கும் ‘நம் வாழ்வு’ வார இதழ் குடும்பத்தின் உறுப்பினர்களாவோம்.
San Thome TV & Arputhar Yesu TV
மேலும் வாய்ப்புள்ளவர்கள் சாந்தோம் பேராலயத்திலிருந்து ஒளிபரப்பப்படும் San Thome TV & Arputhar Yesu TV (Youtube Channel) வழியாகவும், சாந்தோம் வெப் சேனல் அல்லது தொலைக்காட்சியின் மூலம் ஒளிபரப்பப்படுகிற அற்புதர் இயேசு டிவி மூலமாகவும் ஒவ்வொரு நாளும் மாலை 7.30 மணிக்கு என்னோடு இணைந்து செபமாலை செபிக்க உங்களை அன்புடன் அழைக்கிறேன். அனைவருக்கும் இறையாசீர்!
+ பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி
தலைவர், தமிழக ஆயர் பேரவையின் அச்சு ஊடகப் பணிக்குழு