“அஞ்சாதீர், உமது மன்றாட்டு கேட்கப்பட்டது” (லூக் 1:13)
அன்புள்ள அருள்பணியாளர்கள், துறவியர், பொதுநிலையினர் ஆகியோர் அனைவருக்கும் குடந்தை ஆயர் F. அந்தோணிசாமி அனுப்பும் அன்பு மடல்.
நமது பாசத்திற்குரிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அண்மையில் வழங்கியுள்ள செய்தியில் உலகம் முழுவதும் உள்ள நம்பிக்கையாளர்கள் அனைவரும் வருகின்ற 14.05.2020 (வியாழன்) அன்று ஆன்மிக வழியில் ஒன்றுபட்டு, செபம், தவம் மற்றும் பரிவிரக்கச் செயல்களில் ஈடுபடவேண்டுமென்று அழைப்பு விடுத்துள்ளார்கள்.
நமது தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கத்திலிருந்து நாம் அனைவரும் விடுபடவும் பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் நலம் பெறவும் அனைத்து முயற்சிகளையும் எடுக்கும் தமிழக முதலமைச்சர், அனைத்து அமைச்சர் பெருமக்கள், மாவட்ட ஆட்சியாளர்கள், வருவாய்த்துறை அதிகாரிகள், காவல்துறை நண்பர்கள், நன்கொடையாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், தன்னார்வத் தொண்டர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் அனைவரையும் மறைமாவட்டத்தின் பெயரால் பாராட்டி நன்றி கூறுகின்றோம்.
நாம் மேற்கொள்ள வேண்டிய செப, தவ, பரிவிரக்கச் செயல்கள்:
1.பங்கு ஆலயங்களில் அருள்பணியாளர்களும், துறவறசபைக் குருக்களும், அருள்சகோதரிகளும் அவர்களது சிற்றாலயங்களில் வருகின்ற 14ஆம் தேதி வியாழன் அன்று நற்கருணை ஆண்டவர் பிரசன்னத்தில் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை உபவாசத்தோடு (உண்ணாநோன்போடு) செபவழிபாட்டில் பங்குப்பெறக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
2. இறைமக்கள் தங்கள் இல்லங்களில் உள்ள திருச்சிலுவை, புனிதர்களின் திருவுருவம் மற்றும் படங்களுக்கு முன்பாக ஒன்றுகூடி, காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மன்றாடலாம். நான்கு தேவ இரகசியங்களையும் உள்ளடக்கிய முழு செபமாலையைச் சொல்லலாம். திருப்பாடல்கள் 8 மற்றும் 23, 51, 91, விடுதலைப் பயணம் 14:1-31, லூக் 10: 25-37, 1 கொரி 13: 1-13 போன்ற வாசகங்களை வாசித்துத் தியானிக்கலாம்.
3.இறைமக்கள் அனைவரும் மே 14, வியாழன் அன்று உபவாசம் (உண்ணாநோன்பு) அனுசரித்து அதில் கிடைக்கும் தொகையை அல்லது உணவு பொருள்களை தங்கள் வீடுகளுக்கு அருகில் உள்ள ஏழைகளோடு பகிர்ந்துகொள்ளும் பரிவிரக்கச் செயலில் ஈடுபடலாம்.
4. பங்குதந்தையர்களும், அருள்சகோதரிகளும் மே 14, வியாழன் அன்று தர்மச் செயல்களில் ஈடுபட்டு ஏழைகளுக்கு உணவு அளிப்பது சாலச்சிறந்த செயலாகும்.
“என் காலடிக்கு உம் வாக்கே விளக்கு!” (திருப்பாடல்கள் 119:105)
அன்பார்ந்த அருள்பணியாளர்களே, துறவியரே, இறைமக்களே!
நாம் பயன்படுத்தும் மன்றாட்டுகளில் இரண்டு மிகவும் ஆற்றல் மிக்கவை:
1. பரிந்துரை மன்றாட்டு, 2. கேட்டல் மன்றாட்டு
1. பரிந்துரை மன்றாட்டு
பரிந்துரை மன்றாட்டின் போது நாம் நம்மை மறந்து கொரோனா வைரஸால் துன்புறும் அனைவர்க்காகவும் கடவுளிடம் மன்றாடுகின்றோம்.
நம்மை மறப்பதும் மற்றவர்களை நினைப்பதும் ஓர் அன்புச் செயல். அன்பு எங்கே இருக்கின்றதோ அங்கே கடவுள் இருப்பார். கடவுள் இருக்கும் இடத்திலே அற்புதங்களும் அதிசயங்களுமம் புதுமைகளும் நடக்கும்.
உ.ம்.: விடுதலைப் பயணம் 17: 10-12
“மோசே தம் கையை உயர்த்தியிருக்கும் போதெல்லாம் இஸ்ரயேலர் வெற்றி அடைந்தனர் (17:11).” நாம் கைகளை உயர்த்தி இறைவனிடம் மன்றாடினால் நம் எதிரி கொரோனா வைரஸின் பலம் முறியடிக்கப்படும்.
உ.ம்.: மாற்கு நற்செய்தி 5: 22-23, 35-43
“என் மகள் சாகுந்தறுவாயில் இருக்கிறாள். நீர் வந்து அவள் மீது உம் கைகளை வையும், அப்போது அவள் நலம்பெற்றுப் பிழைத்துக் கொள்வாள் (5:23).” ஒரு தந்தை அவரது மகளுக்காக மன்றாடுகிறார். இயேசு அந்தத் தந்தையின் பன்னிரண்டு வயது சிறுமியை உயிர்ப்பிக்கின்றார்.
ஆம். நமது அன்பு நிறைந்த பரிந்துரை மன்றாட்டுக்கு மிகுந்த ஆற்றல் உண்டு.
2. கேட்டல் மன்றாட்டு
கேட்டல் மன்றாட்டின் போது நாம் நமது தேவைகளுக்காகவும் மற்றவர்களின் தேவைகளுக்காகவும் கடவுளிடம் நம்பிக்கையோடு வரம் கேட்கிறோம். நம்மிடம் உள்ள கண்ணீர், கவலை, உடல், பொருள், ஆவி அனைத்தையும் கடவுளின் திருவடிகளில் வைத்து, எங்களுக்கு எல்லாமே நீர்தான் இறைவா, எங்களைக் காப்பாற்றும் என்று கூறுகிறோம்.
நம்பிக்கை நிறைந்த கேட்டல் செபத்திற்கு கடவுளின் மனத்தைக்கூட மாற்றும் ஆற்றல் உண்டு.
உ.ம்.: யோனா நூல் 3:1-10
“கடவுள் அவர்கள் செய்தது அனைத்தையும் பார்த்தார். அவர்கள் தீய வழிகளினின்று விலகியதை அவர் கண்டு, தம் மனத்தை மாற்றிக்கொண்டார். தாம் அவர்கள்மீது அனுப்புவதாகச் சொல்லியிருந்த தண்டனையை அனுப்பவில்லை” (3:10). அரசனின் கட்டளைப்படி நினிவே நகரில் வாழ்ந்த பாவிகள் அனைவரும் நாற்பது நாள்கள் தங்கள் பாவங்களை மன்னிக்குமாறு தவமிருந்து கடவுளை நோக்கி மன்றாடினார்கள் (3:8). கடவுள் மக்களின் தவம் நிறைந்த மன்றாட்டுக்களை ஏற்றுக் கொண்டு, தமது மனத்தை மாற்றிக்கொண்டு பாவிகளின் பாவங்கள் அனைத்தையும் மன்னித்துவிட்டார்.
உ.ம்.: யோவான் நற்செய்தி 2:1-11
“திராட்சை இரசம் தீர்ந்துவிட்டது” (2:3). விண்ணகத் தாய் மரியா திருமண வீட்டிற்காக திராட்சை இரசத்தை மகனிடம் கேட்கிறார். 2:4இல் இயேசு மரியாவிடம், “அம்மா, இதைப் பற்றி நாம் என்ன செய்ய முடியும்? எனது நேரம் இன்னும் வரவில்லையே” என்கிறார்.
ஆனால் 2:7இல் இயேசு, “இத்தொட்டிகளில் தண்ணீர் நிரப்புங்கள்” என்கிறார். மாறியது நெஞ்சம்! மாற்றியது யாரோ? மாதாவின் கேட்டல் மன்றாட்டுதான் இயேசுவின் மனத்தை மாறியது. தாய் சொல்லைத் தட்டாத நல்ல மகனாக இயேசு அவரது முதல் புதுமையை கானாவூரில் நிகழ்த்தினார்.
ஆம், கேட்டல் மன்றாட்டுக்கு மிகுந்த வல்லமை உண்டு!
ஆகவே அருள்பணியாளர்களே, துறவியரே, இறைமக்களே, தனியாகவும், குடும்பமாகவும், குழுவாகவும் இந்நாள்களில், குறிப்பாக வியாழக்கிழமை (14.05.2020) அன்று இறைவனை நோக்கி, உலகம் கொரோனா வைரஸிடமிருந்து விடுதலை பெறவேண்டும் என்று மன்றாடுவோம்.
2 மாதிரி மன்றாட்டுகள்
ஆலயத்தில் நற்கருணை ஆண்டவரின் பிரசன்னத்தில்,
உங்கள் இல்லத்தில் தனியாகவோ, குடும்பமாகவோ, குழுவாகவோ அமர்ந்து
கீழ்க்கண்ட 2 மாதிரி மன்றாட்டு முறைகளைப் பின்பற்றி செபிக்கலாம்.
Youth Prays
மாதிரி 1
1. ஆரம்ப மன்றாட்டு அல்லது பாடல்
2. பழைய ஏற்பாட்டிலிருந்து வாசகம்: விடுதலைப் பயணம் 17:10-12
சில நிமிடங்கள் அமைதி - பிறகு யாராவது ஒருவர் அல்லது இருவர் வாசகத்திற்கு விளக்கம் அளிக்கலாம்.
3. புதிய ஏற்பாட்டிலிருந்து வாசகம் : மாற்கு 5:22-23, 35-43
சில நிமிடங்கள் அமைதி - பிறகு யாராவது ஒருவர் அல்லது இருவர் வாசகத்திற்கு விளக்கம் அளிக்கலாம்.
4. நம்பிக்கையாளர்களின் மன்றாட்டுகள்
1. எங்கள் திருத்தந்தை பிரான்சிஸ், மற்ற ஆயர்கள், அருள்பணியாளர்கள், துறவியர் அனைவரையும் கண்மணிபோல் காக்க வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
பதில் : ஆண்டவரே! எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
2. பொது நலனுக்காகப் பணிபுரியும் நாட்டுத் தலைவர்கள், காவல்துறை நண்பர்கள், தூய்மைப் பணியாளர்கள், தன்னார்வத் தொண்டர்கள், நன்கொடையாளர்கள் அனைவருக்கும் நீண்ட ஆயுளையும் பூரண சுகத்தையும் தந்தருளவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
பதில் : ஆண்டவரே! எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
3. விரைவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கான சரியான மருந்துகளை மருத்துவர்கள் கண்டுபிடிக்க, அவர்களுக்கு நிறைந்த ஞானத்தைத் தரவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
பதில் : ஆண்டவரே! எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
5. பிற கருத்துக்களுக்காக மன்றாடலாம்.
6. எல்லாரும் சேர்ந்து இயேசு கற்றுக்கொடுத்த மன்றாட்டைச் சொல்லுதல்: “விண்ணுலகில்....”
7. இறுதிப் பாடல் அல்லது மன்றாட்டு.
மாதிரி 2
1. ஆரம்பப் பாடல் அல்லது மன்றாட்டு
2. முதல் வாசகம் :யோனா 3:1-10
சில நிமிடங்கள் அமைதி - பிறகு யாராவது ஒருவர் அல்லது இருவர் வாசகத்திற்கு விளக்கம் அளிக்கலாம்.
3. நற்செய்தி வாசகம் : யோவான் 2:1-11
சில நிமிடங்கள் அமைதி - பிறகு யாராவது ஒருவர் அல்லது இருவர் வாசகத்திற்கு விளக்கம் அளிக்கலாம்.
4. நம்பிக்கையாளர்கள் மன்றாட்டு
1. எங்கள் திருத்தந்தை பிரான்சிஸ், மற்ற ஆயர்கள், அருள்பணியாளர்கள், துறவியர் அனைவருக்கும் பூரண சுகத்தை அளித்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
பதில் : ஆண்டவரே! எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
2. இறைமக்கள் அனைவரும், குறிப்பாகக் குழந்தைகள், இளைஞர்கள் பயத்திலிருக்கும் மன அழுத்தத்திலிருந்தும் விடுபட்டு, நிம்மதியோடு வாழ வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
பதில் : ஆண்டவரே! எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
3. அனைவரையும், குறிப்பாக எங்கள் நாட்டுத் தலைவர்களையும், கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுகின்றவர்களையும் நம்பிக்கையால் நிரப்பி அவர்கள் வேண்டி விரும்புகின்ற அருளையும் பொருளையும் அவர்களுக்குத் தாராளமாகத் தரவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
பதில்: ஆண்டவரே! எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
4. இந்த மறைமாவட்டத்திலுள்ள எல்லாரும், கிறிஸ்தவர்கள் பிற சமய சகோதர சகோதரிகள் அனைவரும், இந்தத் துன்ப வேளையில் ஒருவருக்கொருவர் தாராள மனத்தோடு உதவிசெய்து கொள்ள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
பதில் : ஆண்டவரே! எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
5. பிற கருத்துகளுக்காக மன்றாடலாம்.
6. இயேசு கற்றுக்கொடுத்த மன்றாட்டைச் சொல்லுதல்: “விண்ணுலகில்...”
7. இறுதி மன்றாட்டு அல்லது பாடல்
உங்கள் அனைவரையும் கடவுள் அவரது அன்பினால் அருள்பொழிவு செய்து, உங்களை அவரது அன்புத் தொண்டர்களாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.
கடவுளுக்கு நன்றி. உங்களுக்கு என் பாராட்டுகள். உங்கள் தர்மச் செயல்கள் மேன்மேலும் இனிதே தொடரட்டும்.
இறையாசிருடன்,
மேதகு F. அந்தோணிசாமி,
குடந்தை ஆயர்,
10.05.2020
கும்பகோணம்.
பின் குறிப்பு:
1. இந்தச் செய்தியை துறவற இல்லங்களுக்கும் ஊர் நாட்டார்களுக்கும் பங்குப் பேரவை உறுப்பினர்களுக்கும் பக்த சபைகளுக்கும் அன்பியத் தலைவர்களுக்கும் தெரிவித்து பங்கிலுள்ள அனைவரும் பக்தியுடன் மன்றாட, தர்மச் செயல்களில் ஈடுபட ஆவண செய்யும்படி பங்குதந்தையர்கள் அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
2. 14.05.2020 வியாழக்கிழமை அன்று காலை 8 மணி அளவில் அலைபேசி போன்ற சமூகத் தொடர்பு சாதனங்கள் வழியாக செப, தவ கடமைகளைப் பற்றி எல்லாருக்கும் நினைவூட்டும்படி பங்குதந்தையர்கள் அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.