Namvazhvu
மேதகு பேராயர் அந்தோணி ஆனந்தராயர் புதுவை – கடலூர் உயர் மறைமாவட்டத்தில் மே 14,  2020 உலக இறைவேண்டல்- நோன்பு நாள்
Monday, 11 May 2020 08:06 am
Namvazhvu

Namvazhvu

அன்பிற்குரிய குருக்களே, இருபால் துறவியரே, இறைமக்களே அன்பும் வாழ்த்துக்களும்.

நம்மை அச்சுறுத்தும் கொரோனா தீநுண்மியிடமிருந்து இவ்வுலகைப் பாதுகாக்க, மே 14ம் தேதியை, இறைவேண்டல், நோன்பு மற்றும் இரக்கச் செயல்கள் செய்யும் நாளாகக் கடைபிடிக்க மனித சகோதரத்துவ உயர்மட்டக்குழு (Higher Committee of  Human Fraternity) அழைப்பு விடுத்துள்ளது. இந்த அழைப்பை திருத்ததந்தை பிரான்சிஸ் அவர்களும், அல் அசார் பெருந்தலைவர் ஷேக் அகமத் அல் தயுப் அவர்களும் ஏற்றுக்கொண்டதோடு தங்கள் சார்பில் மக்களிடம் இது குறித்து விண்ணப்பித்துள்ளனர்.

பாலஸ்தீன நாட்டின் அரசுத் தலைவர் மஹ்முத் அப்பாஸ் இதை வரவேற்றுள்ளார். இந்த முயற்சியில் பாலஸ்தீன மக்கள் அனைவரும் கலந்துகொள்ளும்படி அவர் அழைப்பு விடுத்துள்ளார். பஹ்ரைன் மன்னர் ஹமாத் பின் இசா அல் காலிஃபா இதே விண்ணப்பத்தை தன் மக்களுக்கு விடுத்துள்ளார். இவர்களைத் தொடர்ந்து இந்தக் கடினமான காலத்தில் மக்களினம் அனைத்தும் ஒருங்கிணைந்து தங்கள் மத நம்பிக்கையை வெளிப்படுத்துவது சிறந்தது என ஐ.நா. அவையின் தலைமை பொதுச் செயலர் அந்தோனியோ கூட்டேரஸ் அவர்களும் அழைப்பு விடுத்துள்ளார்.

இதன் தொடர்ச்சியாக கடந்த 3ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நமது திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கியுள்ள செய்தியில் உலகம் முழுவதும் உள்ள அனைத்து மத மக்களும் வருகிற 14ம் தேதி வியாழக்கிழமை அன்று ஆன்மிக வழியில் ஒன்றுபட்டு, செபம், விரதம் மற்றும் பிறரன்புக் காரியங்களில் ஈடுபட வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்.

Kindly read also

தமிழக ஆயர் பேரவை வேண்டுகோள் திருத்தந்தையின் அழைப்பை ஏற்று, தமிழகத்தில் மே 14- செபம் மற்றும் பிறரன்புக்கான நாள்

எனவே, தி;ருத்தந்தை அவர்களின் வேண்டுகோளை ஏற்று நமது உயர்மறைமாவட்டத்தில் அன்றைய நாளில் இறைவேண்டல், நோன்பு மற்றும் பிறரன்பு இரக்கச் செயல்களில் ஈடுபட்டு இறைவனை மன்றாட கேட்டுக்கொள்கிறேன்.

நாம் வாழும் பகுதியில் உள்ள பிற மத சகோதர சகோதரிகளிடம் இச்செய்தியைப் பரப்பி அவர்களும் இந்நற்செயல்களில் ஈடுபட தூண்டுதல் செய்ய அழைப்புவிடுக்கிறேன்.

அன்னை மரியாவுக்கென அர்ப்பணிக்கப்பட்டுள்ள இந்த மே மாதத்தில் அவரிடம் இக்கருத்துக்காக சிறப்பாக மன்றாடுமாறும் கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி!
இறையாசீருடன்
மேதகு பேராயர் அந்தோணி ஆனந்தராயர்
புதுவை – கடலூர் உயர் மறைமாவட்டம்

09.05.2020