ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் ஆர்ஆர் வெங்கடபுரம் கிராமத்தில் இயங்கிவரும் தனியார் தொழிற்சாலையில் மே 07 ஆம் தேதி வியாழக்கிழமை அதிகாலையில் ஏற்பட்ட விஷவாயு கசிவு, போபால் விஷவாயு கசிவு துயர நிகழ்வு போன்றது என்று, ஆந்திர தலத்திருஅவை விசாகப்பட்டினம் பேராயர் மல்லவரப்பு கருத்து தெரிவித்துள்ளார்.
இந்த விபத்து குறித்து ஆசியச் செய்தியிடம் பேசிய, விசாகபட்டினம் பேராயர் பிரகாஷ் மல்லவரப்பு அவர்கள், உயிரினங்களின் நரம்பு மண்டல அமைப்பைப் பாதிக்கும் இந்த வாயு, ஏறத்தாழ மூன்று கிலோ மீட்டர் தூரம் பரவியுள்ளது என்றும், இந்த வாயு, மக்கள், விலங்குகள், பறவைகள், மரங்கள் ஆகிய அனைத்தையும் பாதித்துள்ளது என்றும் கூறினார்.
இந்த வேதியத் தொழிற்சாலைக்கு அருகிலுள்ள புட்ஜிராஜூபாலம் (Butchirajupalem) ஊரின் புனித தோமையார் ஆலயப் பங்குத் தந்தையும், அங்குள்ள அருள்சகோதரிகளும் இந்த விபத்தால் பாதுக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவி வருகின்றனர் என்றும், பேராயர் மல்லவரப்பு அவர்கள் கூறினார்.
வாயுக் கசிவு ஏற்பட்ட இரவில், அருள்பணியாளர்கள் சில குடும்பங்களை, பங்குத்தள இல்லத்தில் தங்க வைத்து, அவர்களுக்கு ஆதரவாக இருந்துள்ளனர் மற்றும், தேவையான உதவிகளையும் வழங்கியுள்ளனர் என்று, விசாகப்பட்டினம் பேராயர் மல்லவரப்பு அவர்கள் கூறினார்.
இந்தியாவின் கிழக்குக் கடற்கரையில் அமைந்துள்ள, விசாகப்பட்டினத்தில், எல்.ஜி.பாலிமர்ஸ் (LG Polymers) என்ற பன்னாட்டு வேதியத் தொழிற்சாலையில், ஏறத்தாழ 5,000 டன் எடையுள்ள இரண்டு உலைகளில் ஏற்பட்ட வாயுக் கசிவு, கொரோனா ஊரடங்கு காரணமாக, கடந்த மார்ச் மாத இறுதியிலிருந்தே கவனிக்கப்படாமல் இருந்துள்ளன.
இந்த தொழிற்சாலையில், மே 07, இவ்வியாழன் அதிகாலையில் ஏற்பட்ட கசிவு. காரணமாக, 13 பேர் உயிரிழந்துள்ளனர். மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு, ஆந்திர அரசு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்நிலையில் மனித உரிமை குழு, இந்நிகழ்வுக்கு மத்திய, மாநில அரசுகளிடம் விளக்கம் கேட்டுள்ளது.
1984 ஆம் ஆண்டு, மத்திய பிரதேச மாநிலம், போபாலில் விஷவாயு கசிவு விபத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். இது நடந்து 35 ஆண்டுகளுக்கு மேலாகியும், அதன் எதிர்மறை விளைவுகளால் மக்கள் இன்னும் துன்புறுகின்றனர். பல குழந்தைகள், மாற்றுத்திறன்களோடு பிறக்கின்றனர் என்று செய்திகள் கூறுகின்றன.