Namvazhvu
தமிழகத் திருச்சபைச் செய்திகள் லயோலாவும் அதன் வீதி விருது விழா சர்ச்சையும்
Wednesday, 13 Mar 2019 11:21 am
Namvazhvu

Namvazhvu

லயோலாவும் அதன் வீதி விருது விழா சர்ச்சையும்

‘லயோலா’ கல்லூரிதான் இன்றைய ஹாட் டாபிக். லயோலா கல்லூரியில் கடந்த 19, 20 ஆம் தேதிகளில் கருத்துரிமை காக்க கலைஞர்கள் ஆர்ப்பரிக்கும் ஆறாம் ஆண்டு ‘வீதி விருது விழா’ நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் சகாயம் ஐ.ஏ.எஸ். கலந்துகொண்டு நிகழ்ச்சியைத் துவக்கி வைத்து பேருரையாற்றினார். இதுதொடர் பாக பா.ஜ.க.வின் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ‘பாரதமாதா, பாரதப் பிரதமர் மற்றும் இந்து மதத்தை இழிவுப்படுத்தும் கண்காட்சியைத் திறந்து வைத்த சகாயம் ஐ.ஏ.எஸ் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனப் பதிவிட்டிருந்தார். இது சகாயம் ஐ.ஏ.எஸ் அவர்களைப் பின் தொடரும் "மக்கள் பாதை" அமைப்பினரைக் கொதிக்க வைத்திருக்கிறது. அதன் விளைவாக, மதப்பிளவை ஏற்படுத்தி பிரச்னையை உண்டாக்க நினைக்கும் ஹெச்.ராஜாவைக் கைது செய்ய வேண்டும். தமிழ்ச் சமூகத்தின் பொக்கிஷங்களாகக் கருதப்படுகின்ற மரபுக் கலைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற ஒரு நல்ல நோக்கில் சகாயம் ஐ.ஏ.எஸ் அந்த நிகழ்வில் கலந்து கொண்டார்கள். ஆனால், ஹெச்.ராஜா அவருடைய ட்விட்டர் பதிவில், கண்காட்சியைத் துவக்கி வைத்து இந்து மதத்தை அவமதித்தார் என சித்தரித்து ஒரு பதிவினை பதிவிட்டிருக் கிறார். இது முற்றிலும் தவறானது. அன்றைய தினம் சகாயம் ஐ.ஏ.எஸ் அவர்கள் அப்படியான எந்த கண்காட்சியையும் திறந்து வைக்கவில்லை.

அதுமட்டுமல்லாமல், கோவில்பட்டியில் ஊடகங்களுக்கு ஹெச்.ராஜா அளித்த பேட்டியில், சகாயம் ஐ.ஏ.எஸ் அவர்களை தேசவிரோதி, நக்சல் என்று களங்கம் விளைவிக்கும் வகையில் பேசியிருக்கிறார். தமிழ்ச்சமூகத்தை மிகவும் நேசிக்கக்கூடிய சகாயம் ஐ.ஏ.எஸ் அவர்கள் மீது திட்டமிட்டு ஹெச்.ராஜா அவதூறு பரப்பி வருகிறார். இவருடைய செயல்கள் குஜராத்தைப் போன்று தமிழகத்திலும் ஒரு மதக்கலவரத்தை உண்டு பண்ணி தமிழகத்தைத் துண்டாட சதிசெய்வது போன்று உள்ளது. எனவே, ஹெச்.ராஜா போன்ற சமூக விரோதிகளிடமிருந்து நம்முடைய தமிழ்ச் சமூகத்தைக் காக்க, அவரைக் கைது செய்ய வேண்டுமென ஈரோடு "மக்கள் பாதை" அமைப்பினர் எஸ்.பி.யிடம் புகார் மனு ஒன்றை அளித்தனர்.

இதில், சர்ச்சைக்குரிய ஓவியங்கள் வைக்கப்பட்டதாகக் கல்லூரி முதல்வர் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னைக் காவல் ஆணையர் அலுவலகத்தில் பா.ஜ.க, இந்து முன்னணி, விஷ்வ இந்து பரிஷத் புகார் மனு கொடுத்தது. அந்த ஓவியங்கள் இந்து மதத்தினை அவமதிப்பதாக இருப்பதாகக் கூறி பல்வேறு சர்ச்சைகள் ஏற்பட்டன. ஹெச்.ராஜா, தமிழிசை சௌந்தர்ராஜன் போன்றோர் லயோலா கல்லூரியின் மீது குற்றச்சாட்டு விடுத்திருந்தனர். இந்நிலையில், இன்று லயோலா கல்லூரி நிர்வாகம் இந்து மதம் குறித்த சர்ச்சைக்குரிய புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்ட விவகாரத்தில் மன்னிப்பு கோரியுள்ளது.

இதுதொடர்பாக கல்லூரி நிர்வாகம் கொடுத்த அறிக்கையில், “எந்த மதத்தையும் விமர்சிக்கும் நோக்கில் செய்யவில்லை. வீதி விருது விழாவுக்கு நாங்கள் கொடுத்த அனுமதி தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. சமூக அமைதியைச் சீர்குலைக்கும் வகையிலான எந்தச் செயலையும் நாங்கள் ஆதரிக்கவில்லை எங்களின் கவனத்துக்கு வந்ததும் சர்ச்சைக்குரிய ஓவியங்கள் நீக்கப்பட்டது. இது யாருடைய மனதையும் புண்படுத்தியிருந்தால் வருத்தம் தெரிவித்துக்கொள்கிறோம்” எனத் தெரிவித்துள்ளது.