Namvazhvu
கோவிட் 19 கொரோனா வைரஸ் -ஓர் இறையியல் பார்வை
Friday, 22 May 2020 05:03 am
Namvazhvu

Namvazhvu

    தற்கால உலகம் பல்வேறு நோய்களாலும் பேரிடர்களாலும் பேரழிவை சந்தித்து வருகிறது. நில நடுக்கம், புயல், பெருவெள்ளம், சுனாமி, காட்டுத் தீ போன்ற பேரிடர்களாலும், காலரா, பிளேக், இன்புளுயன்சா, பெரியம்மை, தட்டம்மை, பறவைக்காய்ச்சல், பன்றிக்காய்ச்சல் போன்ற நோய்களாலும் பெரும் பாதிப்பை சந்தித்து வருகிறது.

கோவிட் 19

                அண்மையில் சீனாவில் தொடங்கிய கோவிட் 19 என்னும் கொரோனா வைரஸ் உலக அளவில் பெரும்பான்மையான நாடுகளைப் பாதித்துள்ளது. ஆயுத வலிமைமிக்க வல்லரசுகளையும் அறிவியல் மருத்துவத்தில் முன்னேறிய நாடுகளையும், செல்வச் செழிப்புள்ள நாடுகளையும் திணறடித்துள்ளது. இலட்சக்கணக்கான மக்கள் கண்காண முடியாத இவ்வைரஸால் பாதிக்கப்பட்டு, தக்க மருந்தின்றி நாளும் ஆயிரக்கணக்கான மக்கள் மடிந்து கொண்டிருக்கிறார்கள்.

புதிரான புது வைரஸ்:

                கொரோனா வைரஸ் இயற்கையானதா? செயற்கை முறையில் உயிரி ஆயுதமாக உருவாக்கப்பட்டதா? உயிர் ஆயுதம் போர் தொடங்கி விட்டதா? எங்கே தோன்றியது? எப்படித் தோன்றியது? என்பன போன்ற கேள்விகளுக்கு அறிவார்ந்த விஞ்ஞான உலகம் விடைகாண முடியாமல் தவித்து வருகிறது.

அறிவியல் பார்வையும் இறையியல் பார்வையும்

                உலகையும் அதில் வாழும் மக்களையும் அவர்களைப் பாதித்த இக்கொள்ளை நோய்களையும் இயற்கைச் சீற்றத்தால் விளைந்த பேரிடர்களையும் பற்றி ஆய்வு செய்ய பல்வேறு கோணங்களில் நோக்கலாம். சிந்திக்கலாம். திறனாய்வு செய்யலாம். அம்முறைகளில் இறையியல் பார்வையும் ஒன்றாகும் என்பதில் ஐயமில்லை.

புனித அகுஸ்தினார்:

                “ கடவுள் இந்த உலகத்தின் வரலாற்றை இயக்குகிறார்” என்பதை ஒரு வரலாற்றுக் கோட்பாடாக (a principle of history)  வரலாற்றியம் (Historiagraphy) ஏற்றுக் கொண்டுள்ளது. மீட்பின் வரலாற்றை எடுத்துரைக்கும் ” கடவுளின் நகரம்” என்னும் புனித அகுஸ்தினார் எழுதிய புத்தகமே இதற்குக் காரணம் ஆகும். ஆகவே மீட்பின் வரலாறு அடிப்படையில் கொரோனா வைரஸ் பாதிப்பை ஆய்வு செய்வது என்பது அறிவார்ந்த உலகிற்கும் ஏற்புடைய ஒன்றேயாகும்.

தொடக்க நூல் காட்டும் இயற்கை என்னும் இறைவனின் படைப்பு

               

உலகைப் படைத்தவர் இறைவன். தான் படைத்த அண்டம் எனும் உலகை, இயற்கையை கடவுள் நோக்கினார். அவை அனைத்தும் நல்லவை என்றும் கண்டார். அதை ஆளும் பொறுப்பை தன் சாயலில் தான் படைத்த மனிதனிடம் ஒப்படைத்தார். அதணை ஆண்டுகொள்ளுங்கள் என்றார். (காண்க தொடக்க நூல்  1:28)

                கடவுள் படைத்த நிலம், நீர். நெருப்பு, காற்று, ஆகாயம் எனும் பஞ்சபூதங்களையும், சந்திரன், சூரியன், விண்மீன்கள் ஆகிய மண்டலங்களையும், நீரில் வாழ் மீனினங்களையும், வானத்துப் பறவைகளையும், தரை வாழ் உயிரினங்களையும், மரம்  செடி கொடிகளையும் படைத்த இறைவனின் திருவுளப்படி ஆளக்கடமைப்பட்டவனாக மனிதன் இருந்தான் இன்றும் இருக்கின்றான்.

இந்திய யோகா பாரம்பரியம் காட்டும் நெறி:

             

  

" அண்டமும் பிண்டமும் ஒன்று "என்றும் கூற்றின்படி அண்டத்தின் கூறுகள் அனைத்தும் மனிதப் பிண்டத்திலே நீக்கமற நிறைந்துள்ளன. 1. நிலம் - உடல், பருப்பொருள் மட்ட வாழ்வையும்ï 2. நீர் - இச்சை, ஆசை உணர்ச்சிமட்ட வாழ்வையும், 3. நெருப்பு- அறிவு மட்ட வாழ்வையும், 4. காற்று - ஆவி, ஆன்மிக மட்ட வாழ்வையும், 5. ஆகாயம் - ஞானம், உள் ஒளி, உள்ளுணர்வு இறைவாhத்தை நம்பிக்கை மட்ட வாழ்வையும், 6. சந்திரன் - உணர்வு நிலை, படைக்கும் ஆற்றல் மட்ட வாழ்வையும், 7. சூரியன் - இறைவனுடன் மனிதன் ஐக்கியமாகும் வாழ்க்கை நிலையையும் எடுத்துக் காட்டுவதாக இந்திய யோகா பாரம்பரியம் நமக்கு எடுத்துரைக்கிறது.

மீட்பின் வரலாற்றில் பேரழிவுகள்

                இறைமனித உறவு வாழ்விலே இயற்கையை மனிதன் கையாளும் போது ஏற்படும் மதிப்பீட்டுப் பிறழ்வே பேரழிவின் காரணி என மீட்பின் வரலாறு நமக்கு எடுத்துரைக்கிறது. இறைவனுக்கு எதிராகச் செல்வது என்பது இயற்கை நலன்களுக்கும், மானிட நலன்களுக்கும் எதிராகச் செல்லும் மானிட சுயநலச் செயல்பாடுகளே காரணமாய் அமைகின்றன என்பது மீட்பின் வரலாறு நமக்க உணர்த்தும் பாடமாகும்.

1.மதிப்பீட்டுப் பிறழ்வு வாழ்வு:

                ஆதாமின் அல்லது மனித குலத்தின் வீழ்ச்சி என்பது பருப்பொருள் மட்ட பற்றுதலும், உணர்ச்சிமட்ட நுகர்வு ஆசையும, அறிவு மட்டத்தில் எழுந்த இறைவனுக்கு நிகரான எழும்பத் தூண்டிய நான் (Ego) என்னும் முனைப்பும், பொய்மையை நம்பி மெய்மையை கைவிட்ட கையறு நிலையில் விளைந்த வீழ்ச்சியே ஆகும். (காண்க தொடக்க நூல் அதிகாரம் 3) ஆதாமுக்கு வந்த சோதனையை ஒரு குறியீடாக (Symbol) அல்லது மூலப்படிவமாக (Archy Type) எடுத்துக் கொண்டால், இப்படி இறைவனுக்கும் இயற்கைக்கும் எதிராகச் செல்லும் போக்கு அல்லது மனநிலை மனித இயல்புக்குள்ளே இருப்பதை நாம் கண்டுகொள்ள முடியும்.

2. வன்முறை:

                காயின் தன் தம்பி ஆபேலைக் கொலை செய்தான். காயினிடம் உருவான அறிவு மட்ட சுயநலமும். ஆபேலுக்கு எதிரான உணர்ச்சி மட்ட பொறாமையும், சீற்றமும், வன்முறையாக மாறி, கொலை செய்து, நாடு இழந்து நாடோடியாய் வாழும் நிலையை உருவாக்கியது. (காண்க. தொநூ 4:1-12).

3. பாலியல் சீரழிவு.

                நோவா காலத்திய பாலியல் சீரழிவு, தெய்வப் புதல்வரும், மானிடப் புதல்வியரும் இயற்கைக்கு மாறான முரண்பட்ட பாலியல் தொடர்பால் உலகிலே அரக்கர்கள் பிறந்தனர். இத்தகு பாலியல் சீரழிவைக் கண்ணுற்ற கடவுள் மனிதனைப் படைத்தத்தைக் குறித்து வருந்தினார்.பாலியல் சீரழிவுடன் வன்முறையும், தீமையும் தலைவிரித்தாடின. எனவே தான், நீர்ப்பெருக்கால் உலகை அழித்த கடவுள் நேர்மையாளர் நோவாவையும், அவர் குடும்பத்தையும் பேழை வழி காப்பாற்றினார். (காண்க தொ நூல் 6,7,8 அதிகாரங்கள்) அடுத்து லோத்தின் காலத்தில் இதேபோன்று தீமையும், வன்முறையும் பாலியல் சீரழிவும் தலைவிரித்தாடின. அப்போது கடவுள் சோதோம் கொமோரா நகர்களின் மீது கந்தகமும் நெருப்பும் பொழிந்து அழியச் செய்தார். நேர்மையால் வாழ்ந்த லோத்தின் குடும்பத்தை காப்பாற்றினார். (காண்க தொநூ அதிகாரம் 19)

4. அறிவுச் செருக்கும் அகந்தையும்:

                மொழி ஆறறிவின் வழிசெயல்படுகிறது. ஆனால் சாயல் அடையாளம் குறியீடு (image, sign and symbol)  ஆகியவை ஞானம் பேசும் மொழி ஆகும். வெறும் ஆறறிவும் ((rational knowledge) பகுத்தறிவும்  (Analetical knowledge) மட்டும் போதாது. நுண்ணறிவும் ( (intelligence) ஒற்றையில்  பார்ப்பதை ((Particularity) விடுத்து முழுமையில் பார்க்கும் (look whole)  ஞானமும் (wisdom) மனித உயர் வாழ்வுக்கு மிகவும் அவசியம் ஆகும். ஆறறிவின் வளர்ச்சியால் நான், நாங்கள் என்னும் சுயநலத்தால், அகங்காரத்துடன் பாபேல் கோபுரத்தைக் கட்ட முனைந்தார்கள் அறிவின் செருக்கால். ஆணவத்தால் அந்தோ பாபேல் கோபுரம் இடித்து தகர்க்கப்பட்டது.

 தற்கால உலகின் நிலை:

வன்முறைகள்:        உலகில் எம்மருங்கு நோக்கினும் வன்முறை நாட்டுக்கு நாடு போர். வீட்டுக்கு வீடு சண்டை. தனிமனிதர்கள் சமூகங்களுக்கு இடையே தொடரும் வன்முறை, வல்லவன் வாழ்வான் என்னும் அதீத போக்கு. சாதி, சமய, இன மொழி வேற்றுமையால் தலைவிரித்தாடும் வன்முறைகள் ஏழைகளும், நலிவுற்றோரும், பெண்டிரும் பாதுகாப்பற்ற சூழலில் வாழ்கிறார்கள். சிறுபான்மையினர்  மீது அரசுகள் காட்டும் வன்முறையும் பன்முகத் தன்மையின் சிறப்பும், அதிகாரக் குவிப்பும் தொடர்கின்றன.

அ. நிலத்தின் மீது வன்முறையும் சுரண்டலும்

               

இயற்கையை நாம் நேசிக்க/ வேண்டும் என்பதற்காகவே “இறைவா உமக்கு புகழ்” என்னும் அழகுறு காப்பியத்தை வடித்தார். திருத்தந்தை பிரான்சிஸ். இன்று இயற்கை சீரழிக்கப்படுகிறது. நிலம் சுரண்டப்படுகிறது. அரசுகளும், கார்ப்பரேட் நிறுவனங்களும் வணிக நோக்குடன் மீத்தேன், எரிவாயு, கனிம வளங்கள் இவைகளை எடுப்பதற்காக பூமியைத் தோண்டி பாழ்படுத்துகின்றனர். நெகிழிக் கழிவுகளால் பூமியை மாசு படுத்துகின்றனர். காடுகள் தீக்கிரையாக்கப் படுகின்றன. மழையைத் தருவிக்கும் மலைகள் கட்டாந்தரையாக்கப்படுகின்றன. இதனை மனிதன் இயற்கை மீது தொடுக்கும் போர் என்றால் மிகையாகாது.

ஆ. காற்றின்மீது தாக்குதல்:

                காடுகள் அழிக்கப்பட்டு, மரங்கள் வெட்டப்பட்டு, காற்றில் பிராண வாயுவின் இருத்தல் குறைக்கப்படுகிறது. தொழிற்சாலைப் புகைகளும் பிளாஸ்டிக் மற்றும் கழிவுகளை எரிப்பதால் எழும் புகைககளும் காற்றில் கலந்து ஆகாய மண்டலம் பாதிக்கப்பட்டு, புவியின் வெப்பம் அதிகரித்து, துருவமண்டலங்களின் பனிப்பாறைகள் கரைந்து, கடல் நீர் மட்டம் நாளும் உயர்ந்து வருகிறது. கடவுள் கொடுத்த சுத்தமான காற்று எனும் இலவசக் கொடை இன்று வாணிபம் பொருளாய் மாறியுள்ளது.

இ. நீரின் மீது தாக்குதல்:

                கடல், ஆறு, ஏரி, குளம், குட்டைகளிலுள் சுத்தமான தண்ணீர் சுகாதார மற்ற நீராக மாறிவருகிறது. காடுமலைகளில் பரப்பளவு குறைவதாலும், ஓடிவரும் தண்ணீரில் ஆலைக்கழிவுகளும், பெருநகரங்களின் கழிவுநீரும் கலப்பதால் தண்ணீர் மாசடைகிறது. நிலத்தடி நீர் சுரண்டப்படுகிறது இலவசமாய் இயற்கை வழங்கிய குடிநீர் இன்று பெரும் சந்தைப் .பொருளாய்  மாறிவிட்டது. நெகிழிகளின் பெருக்கத்தால் நீர் மாசடைந்து நீர் வாழ் உயிரினங்கள் பெரும் பாதிப்பு அடைந்துள்ளன.

ஈ. பாலியல் சீரழிவு:

                குடும்பத்தில் மனிதன் பாலியல் ஆற்றலைப் பயன்படுத்தி நன்மக்களை ஈன்றெடுக்க வேண்டும் என்பதே கடவுளின் திருவுளம், அதற்கு வெளியே பாலியல் ஆற்றலைப் பயன்படுத்துவது  முறையல்ல. அவ்வாறு செய்யின் புனிதமான திருமண இன்முக அன்பு உறவு சீரழிந்து போகும். இன்று மனிதன் உணர்ச்சிக்கும், நுகர்வு வெறிக்கும் அடிமையாகி, விலங்குகளைப் போல் முறைதவறி பாலியல் ஆற்றலைப் பயன்படுத்திட தன்னாட்சி உரிமை பெற்றவன் போல் கருதிக் கொள்கிறான். அதனால் குடும்பங்களில் இன்று மணமுறிவுகள் மலிந்து காணப்படுகின்றன. பெண்மை இன்று காட்சிப் பொருளாகவும், வாணிபப் பொருளாகவும் பார்க்கப்படுகிறது. பெண்களுக்கும், சிறுவர்களுக்கும் எதிரான பாலியல் வன்புணர்வுகளும் கொலைகளும் இன்று பெருகி வருகின்றன.

உ.ஓரினச் சேர்க்கை:

                இதனை இறைவனுக்கும், இயற்கைக்கும் மனித இயல்புக்கும் எதிரான பாவம் என்பதைவிட மாபெரும் தீமை என லாம். மனிதனின் தன்னாட்சி சுதந்திர உரிமை என்னும்போர்வையில் இயற்கைக்குப் பொருந்தாத இந்த ஒருபால் திருமணங்கள் சட்ட அங்கீகாரம் பெற்றிருப்பது மனித மாண்புக்கும்,  குடும்ப அமைப்புக்கும், ஒழுக்க மேம்பாட்டிற்கும் எதிரான  பின்னடைவாகவே கருத முடியும். மனிதன் உணர்ச்சியை மட்டும் கொண்ட மிருகமல்ல.  ஆன்மாவும், ஆவியும் கொண்டவன். எனவே மனிதன் பாலாற்றலை மனிதத்தன்மை கொண்டதாக மாற்ற வேண்டும். (Man has to humanize the sex)

ஊ) இயற்கை மீதான தாக்குதல்:

                இன்று உணவுகள் விஷத்தன்மை கொண்டதாக உள்ளன. காரணம் அபரிமிதமான உற்பத்திக்காக பயன்படுத்தப்படும் இரசாயணங்கள் உணவை விஷமாக்குவதோடு, நிலமும் வளமற்று மலடாக்கப்படுகிறது. இரசாயணங்களால் நுண்ணுயிரிகள் மடிவதால் உணவின் சுழற்சியும் வளமும் பாதிக்கப்படுகிறது.

                இன்று செயற்கைக் கருவூட்டல், மரபணுமாற்றம் இவைகளால் புதிய வகைத் தாவரங்களையும், உயிரினங்களையும் மனிதனையும் கூட செயற்கையாக உருவாக்க முயற்சி செய்வதால் இயற்கைத் தன்மை பாழ்படுத்தப்படுகிறது.

. இயற்கையின் எதிர் தாக்குதல்:

இவ்வாறு இயற்கையைத் தன் அறிவாற்றலால் மேற்கொள்ள நினைக்கும் மனித இனத்தின் மீது இயற்கையும் தன் எதிர்தாக்குதலைத் தொடுக்க முனைகிறது. மனிதன் உருவாக்கும் புதிய சூழ்நிலையில் தன்னை தகவமைத்துக் கொள்ள இயற்கையும் மனிதனோடு போராடுகிறது எனலாம். இவ்வாறு புதிய உயிரிகளை உற்பத்தி செய்து தனது எதிரியான மனிதன் மீது இயற்கை தன் தாக்கத்தை வெளிப்படுத்துகிறது என்பேன்.

                ஏனென்றால் எந்த செயலுக்கும் எதிர் செயல் உண்டு என்பது இயற்கையின் நியதி. ( every action has reaction) அந்த தனது நியதியை இயற்கையால் மீற முடியுமா? தன்னைத் தாக்கி அழிக்கத் துடிக்கும் மனிதனை புதிய வழிமுறையில் தாக்கி அழிக்க நினைக்கும் இயற்கையின் செயயல்பாடாகவே  கோவிட் 19 என்னும் கொரோனா வைரசின் தாக்கத்தை என்னால் பார்க்க முடிகிறது.

                “இதோ நான் அனைத்தையும் புதியது ஆக்குகிறேன்” (தி.வெ 21:5) என்று இறைவன் கூறியபடி மனிதனால் பாழ்படுத்தப்பட்ட தனது படைப்பைப் புதுப்படைப்பாக்கிட இயற்கை வழங்கிய கோவிட் 19 என்னும் கொரோனா வைரசின் வழியாக கடவுள் இந்த உலகத்தின் வரலாற்றை இயக்குகிறார் என்பதை நாம் உணர வேண்டும்.

 

இவண்,


கடிகை G. ஜெரோமியாஸ்
ஆசிரியர், தென்ஒலி மாத இதழ். நன்றி,