தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு முற்றுகைப் போராட்டத்தில் இருபத்தி எட்டுப்பேர் மீது துப்பாக்கியால் சுட்ட தமிழக காவல்துறைக்கும், தமிழக அரசுக்கும் பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனங்கள் குவிந்து வருகின்றன.
கடந்த 1980 ஆம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டம் குறிஞ்சான்குளத்தில், காவல்துறை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் விவசாயிகள் எட்டுப் பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
கடந்த 2011 ஆம் ஆண்டு இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் தியாகி இம்மானுவேல் சேகரன் நினைவு தினத்தில் ஏழு பேர் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டனர்.
இந்த இரண்டு சம்பவங்கள்தான் ஒரே இடத்தில் காவல்துறை துப்பாக்கிச்சூட்டிற்கு அதிக நபர்கள் பலியானது ஆகும். ஆனால் இந்திய விடுதலைப் போராட்ட காலத்தில் கூட நடைபெறாத அளவுக்கு, அதிக உயிர்களைப் பலி வாங்கியுள்ளது தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு சம்பவம்.
அதுவும் ஒரு வெளிநாட்டு தனியார் நிறுவனத்தைப் பாதுகாக்க அரசே முன் நின்று மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்துவது வேறெங் கும் நடந்திராத நிகழ்வு.
(இதற்கு முன்பு ‘நம் வாழ்வு’ வார இதழில் வெளிவந்த நான்கு தொடர் கட்டுரைகளைப் படித்து அறிந்து கொள்ளவும்).
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அ.குமரெட்டியாபுரம் பொதுமக்கள் தொடங்கி வைத்த போராட்டம், பண்டாரம் பட்டி, சங்கரப்பேரி, மீளவிட்டான், தெற்குவீர பாண்டியபுரம், மடத்தூர், சில்வர்புரம், பாளையா புரம், சுப்பிரமணியபுரம், தபால்தந்திகாலனி, மூன்றாவது மைல், மாதவன் நகர், கோரம்பள்ளம், முருகே சன்நகர், மில்லர்புரம் சிலோன் காலனி, பாத்திமாநகர், நேதா ஜிநகர், தேவர்நகர், விஸ்வபுரம், ஐயப்பநகர், அன்னைஇந்திரா நகர், யோகீஸ்வரர் காலனி, பனிமயமாதா கோவில் வளாகம், கீழசண்முகபுரம், மேலசண்முக புரம், தாமோதரநகர், புதுத்தெரு, புனித யாகப்பர் கோவில் தெரு, புனித பீட்டர் கோவில் தெரு, இரட்சண்யபுரம், குரூஸ்புரம், சூசையப்பர் கோவில் தெரு என முப்பதுக்கும் மேற்பட்ட கிராமங்களில் தொடர் போராட்டமாக மாறியது.
அ.குமரெட்டியாபுரம் மக்களின் நூறாவது நாள் போராட்டத்தை ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான முற்றுகைப் போராட்டமாக அறிவித்தார்கள். 2018 மார்ச் 24 அன்று கூடிய ஸ்டெர்லைட் எதிர்ப்புப் பொதுக்கூட்டத்தைவிட பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடவேண்டும் என்று சமூக ஊடகங்கள் வாயிலாகவும், நேரிடையாகவும் தொடர் பரப்புரை மேற்க்கொள்ளப்பட்டது.
இதனை அறிந்து கொண்ட வேதாந்தா ஸ்டெர்லைட் நிர்வாகம் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மே 22ஆம் தேதி நடைபெறும் போராட்டத்தின்போது ஆலையைச் சுற்றி 144 தடை உத்தரவு பிறப்பிக்க வேண்டுமென வழக்குத் தொடுத்தது.
ஸ்டெர்லைட் ஆலைக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க உத்தரவிட்ட நீதிமன்றம் 144 தடை உத்தரவு பற்றி தீர்ப்பில் எதுவும் தெரிவிக்கவில்லை.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ் மே 20ம் தேதி சமாதானக் கூட்டத்திற்கு உத்தரவிடுகிறார். சார் ஆட்சியர் பிரசாந்த், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேந்திரன் தலைமையில் நடந்த கூட்டத்தில் பங்கேற்ற ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் தொடர் முழக்கப் போராட்டம் நடத்த ஒப்புதல் தெரிவித்தனர். இன்னொரு புறம் மாவட்ட ஆட்சியர் அலுவலக முற்றுகைப் போராட்டத்திற்கான ஏற்பாடுகளை ஸ்டெர்லைட் எதிர்ப்பு மாநகர மக்கள் கூட்டமைப்பு செய்து வந்தது.
மக்களின் போராட்டத்தைத் தடுக்க ஸ்டெர் லைட் ஆலையால் முன் வைக்கப்பட்ட கோரிக்கை யான 144 தடை உத்தரவை பிறப்பித்து உத்தரவிடுகிறார் மாவட்ட ஆட்சித்தலைவர் வெங்கடேஷ். ஸ்டெர்லைட் ஆலை அமைந் துள்ள சிப்காட் காவல்நிலையம், கவனஈர்ப்பு போராட்டம் நடத்த உள்ள எஸ். ஏ. வி. பள்ளி மைதானம் அமைந்துள்ள தென்பாகம் காவல்நிலைய பகுதிகளுக்கு இந்த தடை உத்தரவு மே 21 இரவு தொடங்கி, மே 23 காலை வரை என்று அறிவிப்பு வருகிறது.
நூறு நாள்களாகப் போராடும் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தக்கூட அரசு தயாராக இல்லை. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்கள் போராட்டங்களுக்கும், அரசியல் கட்சிகளின் போராட்டங்களுக்கும் ஒருமுறைகூட அனுமதி கொடுக்கவில்லை. நீதிமன்ற அனுமதி பெற்றுத்தான் சிலர் போராட்டமே நடத்தி உள்ளனர். இந்த நிலையில் அரசின் தடை உத்தரவு மக்களுக்கு அதிர்ச்சியை உண்டாக்கியது. மே 22 போராட்டத்துக்கு முதல்நாள் செய்தி யாளர்களைச் சந்தித்த மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ் ஸ்டெர்லைட் ஆலைக்கு தமிழக அரசு உத்தரவு கொடுக்கவில்லை. நிரந்தரத் தடை விதிக்கப்படுமா என்பதை நீதிமன்றம்தான் முடிவுசெய்ய வேண்டும் என்று அரசியல்வாதி போல தட்டிக்கழித்து பேட்டி கொடுத்தார்.
மே 21 மதியம் முதலே ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் முன்னெச்சரிக்கை என்ற பெயரில் கைது செய்யப்பட்டனர். தொடர் போராட்டம் நடத்தி வந்த பகுதிகளில் எல்லாம் காவல்துறை நான்கைந்து வாகனங்களில் சென்று அச்சுறுத்தியது. வீடு புகுந்து சிலரை மிரட்டியது.
போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களோ அறவழிப் போராட்டத்தில் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்று பாடம் நடத்திக் கொண்டிருந்தனர்.
குடிநீர் பாட்டில் அவசியம்! வெயிலை சமாளிக்க தலையில் துண்டு போட்டுக்கொள்ளுங்கள்:
வன்முறையில் யார் ஈடுபட்டாலும் அவர் களோடு செல்லவேண்டாம்: அமைதியாகச் சென்று முழக்கம் இடுவோம் ; மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காவல்துறை தடுத்து நிறுத்தினால் அங்கேயே அமர்ந்து தர்ணா செய்வோம்; ஸ்டெர்லைட் வாசலை மூடும் வரை, வீடு வாசல் திரும்ப வேண்டாம் என்றெல்லாம் மக்கள் உறுதி எடுத்துக்கொண்டார்கள்.
மே 22 காலை முதலே பொதுமக்கள் ஆங்காங்கே திரளத் தொடங்கினர். தங்கள் உயிர் காக்கும் போராட்டத்திற்கு முன்னால் 144 தடை உத்தரவு ஒன்றும் மக்களுக்குப் பெரிதாகத் தெரியவில்லை.
காலை எட்டு மணி முதல் திருநெல்வேலி மண்டல டி.ஐ.ஜி. கபில்குமார் சரத்கார் தலைமையில் காவல்துறை பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டது. அது மட்டுமில்லாமல் முதல்நாள் இரவில் ஒத்திகை பார்த்த படியே, வெள்ளைப் பேப்பரில் எழுதி வைத்த திட்டங் களைச் செயல் படுத்த குறிப்பிட்ட சில இடங் களில் அதிகளவில் காவலர்கள் குவிக்கப் பட்டனர்.
தூத்துக்குடி பனிமயமாதா அலுவலகத்தின் முன்பு கூடிய பொதுமக்களை அங்கேயே தடுத்து நிறுத்த முயற்சி செய்தது காவல்துறை. ஆனால், பின் வாசல் வழியாக ஊர்வலத்தை தொடங்கி ஓட்டமும், நடையுமாக செல்லத் தொடங் கினர் பொதுமக்கள்.
தூத்துக்குடி தீய ணைப்பு நிலையம் அருகே தடுப்புகள் அமைத்து மறித்த ஐம்பதுக்கும் மேற்பட்ட காவல் துறையோடு சமாதானம் பேசிய பொதுமக்கள் தடுப்புகளைத் தாண்டி வி.இ.சாலையில் ஊர் வலத்தை தொடர்ந்து நடத்தினர்.
இன்னொருபுறம் பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் மடத்தூரில் கூட, தடுப்புகள் அமைத்து மக்களை நகரவிடாமல் பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருந்தது காவல்துறை.
பனிமயமாதா ஆலயத்தில் தொடங்கிய ஊர்வலத்தில், ஆங்காங்கே இருந்த பொதுமக்கள் ஒன்றிணைய, மாவட்ட நீதிமன்ற பகுதியை அடையும்போது மக்களின் எண்ணிக்கை பத்தா யிரத்துக்கும் மேல் தாண்டியது.
சிக்னல் பகுதியில் காத்திருந்த உதவி காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் தலைமையிலான காவல்துறை தடுப்புகளைத் தாண்ட முயற்சித்த மக்கள் மீது தடியடி நடத்தி ஆப்ரேசனை தொடங்கி வைத்தது. மக்கள் கூட்டத்தின் உள்ளே மாடுகள் அவிழ்த்து விடப்பட்டன. தடியடியால் நாலாபுறமும் தெறித்து ஓடிய மக்கள் ஒரு கட்டத்தில் காவலர்கள் மீது கல்வீசி திருப்பித் தாக்க, இருதரப்பு தாக்குதலில் பின்வாங்கியது காவல்துறை. யாரும் எதிர்பாராத வகையில் சாலையில் காவல் வாகனம் (TN 69 ழG 0616) ஒன்று கவிழ்த்து விடப்பட்டது. இந்த இடம்தான் முதல் தாக்குதல் இடம்.
அடுத்து, வ.உ.சி.கல்லூரி பகுதியைத் தாண்டும் போது ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கை ஆயிரக் கணக்கில் அதிகரித்துவிட்டது. காவல்துறையோ தங்களுடைய அடுத்த பகுதியில் தடுப்புகள் அமைத்து காத்திருந்தது. மூன்றாவது மைல் பகுதி தேவர் சிலை அருகே ஊர்வலம் சென்றதும் தடுத்து நிறுத்தியது காவல்துறை. இருதரப்புக்கும் இடையே ஏற்பட்ட தள்ளுமுள்ளு கைகலப்பாக மாறியது. காவல்துறையின் முதல்நாள் இரவு ஒத்திகையின்படி இது இரண்டாவது தாக்குதல் இடம்.
அடுத்து, மக்களின் ஊர்வலம் பைபாஸ் சாலைப் பகுதியை சென்றடையும் முன்பு தயாராக இருந்த வஜ்ரா வாகனம் கண்ணீர்புகை குண்டுகளை வீசத்தொடங்குகிறது. திருநெல்வேலி மாவட் டத்தில் இருந்து வரவழைக்கப்பட்ட அந்த ஒரேயொரு வஜ்ரா வாகனம் (TN 72 G 0648) சரிவர இயங்க முடியாமல் திணறுகிறது. இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட மக்கள் ஊர்வலத்தில் மேலும் முன்னேறினர். எப்.சி.ஐ. குடோன் பகுதியில் பத்திரிகையாளர்கள் மீது சிலர் கோபத்துடன் அவதூறாகப் பேச, கேமராக்களைப் பிடுங்க, சலசலப்புகள் உருவாயின. அதனால் பத்திரிகையாளர்களும் தொடர்ந்து ஊர்வலத் தோடு செல்லாமல் பைபாஸ் பாலத்தில் இருந்து விட்டனர்.
பைபாஸ் சாலையில் நடந்த தடியடியை திருநெல்வேலி காவல் கண்காணிப்பாளர் அருண்சக்திகுமார் தலைமையிலான காவலர்கள் நடத்தினர். தடை உத்தரவு, தடுப்பு, தடியடி, கண்ணீர்புகை குண்டு வீச்சு என்று தொடர்ந்து மக்களின் கோபத்தைத் தூண்டிவிடும் வேளையில் முழுமையாக இறங்கியது காவல்துறை.
காவல் என்று எழுதிய வாகனங்கள், பைபாஸ் பாலத்தின் கீழே தீ வைத்துக் கொளுத்தப்பட்டன. மூன்று தடியடிகளைக் கடந்து வந்த பொது மக்களின் ஊர்வலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை அடைந்தது. கண் இமைக்கும் நேரத்தில் துப்பாக்கிக் குண்டுகள் சத்தம் கேட்கத் தொடங்கி விட்டன. மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வாகனங்கள் தீப்பிடித்து எரியத் தொடங்கின. ஒருவர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் துப்பாக்கிக் குண்டு காயத்துடன் உயிரிழந்து கிடந்தார். நிலைமை மோசமானதைத் தொடர்ந்து ஊடகத் தினர் ஆட்சியர் அலுவலகம் வந்து செய்தியை வெளியிட்டனர். மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் இருந்த அரசு ஊழியர்கள் பின்புற வாசல் வழியாக வெளியேற்றப்பட்டனர். ஆட்சியர் அலுவலக வளாகத்தில் என்ன நடந்தது என்ற மர்மம் கடைசிவரை தெரியாமலேயே போனது.
ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு திரு நெல்வேலி – தூத்துக்குடி சாலையில் தடியடி நடத்தி விரட்டியடிக்கப்பட்ட மக்கள் கூட்டம் தூத்துக்குடி மாநகரை நோக்கி திரும்பி ஓடியது. விரட்டி விரட்டி தாக்குதல் நடத்தியது காவல்துறை. ஸ்டெர்லைட் ஊழியர்களின் தாமிரா குடியிருப்பு பகுதியில் வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன.
மக்களின் கொந்தளிப்பை தூண்டிவிட்ட வர்கள், பொதுமக்களின் அடுத்த இலக்கு ஸ்டெர்லைட் ஆலையை நோக்கித்தான் இருக்கும் என்று கணித்து தங்களது அடுத்த ஆப்ரேசன் திட்டத்தை நிறைவேற்றத் தொடங் கினர்.
துப்பாக்கி சுடுதலில் பயிற்சி பெற்ற, தூரத்தில் இருந்து சுட்டுக் கொல்வதில் நிபுணத்துவம் மிக்க, கமாண்டோ காவல் படையினர் களத்திற்கு வந்தனர். தூத்துக்குடி காவல் என்று எழுதப்பட்ட கூசூ 69 ழு 0651 என்ற எண் கொண்ட வாகனத்தின் மீது கமாண்டோ படை வீரர்கள் ஏறிக்கொண்டனர். ராஜா.. ராஜா.. வண்டிய வரச் சொல்லு என்று உத்தரவு பறக்கிறது. “சொல்லும் போது எறங்கி அடிக்கணும் திரும்ப உள்ள போயிரணும் சரியா” என்று அந்தப் படைக்கு தலைமையேற்கும் ஒருவர் உத்தரவு போடுகிறார். ”எய்ம் பண்ணித்தான் சுடப்போறோம் அப்டித்தானே” என்று ஒருவர் விளக்கம் கேட்கிறார். ”ஒருத்தனாவது சாகணும்” என்று காவல்படையில் இருந்து ஒரு குரல் வருகிறது. குறி பார்த்து சுடத் தொடங்கும் கமாண்டோ படையின் துப்பாக்கியில் இருந்து குண்டுகள் பொதுமக்களை நோக்கி சீறிப்பாய்கின்றன. ஒருவர் மாற்றி ஒருவர் என நான்கு வீரர்கள் இந்தப் படுகொலையை மேலிடத்தின் கட்டளைக்கு ஏற்ப அரங்கேற்றுகின்றனர்.
எதிரி நாட்டின் மீது போர் தொடுக்கும்போது பயன்படுத்தும் ளுசூஐஞநுசு வகைத் துப்பாக்கி பயன் படுத்தப்பட்டதாக படக்காட்சிகளைப் பார்த்த வர்கள் கூறுகிறார்கள். எல்லைப்படை வீரர்கள் பயன்படுத்தும் நீண்டதூர ளுடுசு துப்பாக்கி 7.2அஅ. இது 3800 மீட்டர் இலக்கைத் தாக்கும். ஆப்டிகல் சைட் 1300 மீட்டர், ஓபன் சைட் 1200 மீட்டர், சிறப்பு பயிற்சி பெற்ற வீரர்களால் 1.3 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஒரு தலைமுடி அளவிற்கு கூட குறி தவறாமல் சுட முடியும் என்று விபரம் அறிந்தவர்கள் விளக்குகிறார்கள்.
இலக்குத் தவறாமல் சுடுவதற்கான ஆயுதங்களும், சிறப்பு பயிற்சி பெற்ற சீருடை அணியாத காவல் வீரர்களும் பொதுமக்களின் போராட்ட களத்துக்கு எதற்காக அழைத்து வரப்பட்டனர் என்ற கேள்வி பல்வேறு சந்தேகங்களை வலுப்படுத்தியுள்ளது.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து தனது இல்லத்திற்குச் சென்ற தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் வாகனத்தை திரேஸ்புரம் பகுதியில் சிலர் வழிமறிக்க, பின்னால் சென்ற உதவி காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் தலைமையிலான காவல்படை திரேஸ்புரம் பகுதியில் மீண்டும் துப்பாக்கிச்சூடு நடத்தி சாலையில் நடந்து சென்ற வினிதா என்ற பெண் மூளை சிதறி பலியானார்.
துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்கள் விபரங்களை கூட தமிழக அரசோ, காவல் துறையோ வெளிப்படையாக அறிவிக்க முன் வரவில்லை. ஸ்னோவ்லின், வினிதா, கந்தையா, கிளாஸ்டன், தமிழரசன், சண்முகம், மணிராஜ், அந்தோணி செல்வராஜ், ரஞ்சித்குமார், கார்த்திக் என்று பத்து உயிர்கள் பலியானதாக நள்ளிரவு வரையிலான தகவல்கள் உறுதிப்படுத்தின. சுட்டுக்கொல்லப்பட்ட அனைவருக்கும் தலையிலும், மார்பிலும் மட்டுமே குண்டுகள் பாய்ந்துள்ளன. துப்பாக்கிகுண்டு காயத்துடன் உயிருக்குப் போராடும் பதினெட்டுப் பேரும் குறிவைத்து தாக்கப்பட்டவர்களாகவே இருக்கின்றனர்.
மக்கள் கூட்டத்தைக் கலைக்க ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு செய்ய வேண்டும், கண்ணீர் புகை குண்டுகளை வீசவேண்டும், தண்ணீரை பீய்ச்சி அடிக்க வேண்டும், துப்பாக்கிச்சூடு நடத்தும் அவசியம் ஏற்பட்டால் உயிர்பலிகள் ஏற்படும் என்று எச்சரிக்கை செய்ய வேண்டும். அப்படியே துப்பாக்கியால் சுட்டால் வானத்தை நோக்கி சுடவேண்டும், முழங்காலுக்கு கீழே சுட வேண்டும், இந்த அரசியலமைப்பு சட்ட விதிகள் எதையுமே காவல்துறையினர் மதிக்கவில்லை.
சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டிய தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ் துப்பாக்கிச்சூடு நடந்த இடத்தில் இல்லை. தமிழக அரசின் சார்பில் உரிய விளக்கங்கள் அளிக்க முடியவில்லை.
காயம்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட மக்களுக்கு உதவ நல்லதம்பி தனியார் மருத்துவமனை ஆம்புலன்சும், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக ஆம் புலன்சும் தொடர்ந்து இயங்கின. அரசின் 108 ஆம்புலன்ஸ் முடக்கி வைக்கப்பட்டது. உயிரிழந்தவர்களைப் பார்க்கவந்த உறவினர்கள் மீது அரசு மருத்துவமனையின் உள்ளேயே தடியடி நடத்தப்பட்டது.
பன்னாட்டு தனியார் ஆலையான ஸ்டெர் லைட்டை நிரந்தரமாக மூடுவோம் என்ற மக்களின் கோரிக்கைக்குச் செவிசாய்த்து அறிவிக்க மத்திய, மாநில அரசுகள் தயாராக இல்லை.
விடிய விடிய சோதனை என்ற பெயரில் இளைஞர்களைக் கைது செய்வதும், அடித்துத் துன்புறுத்துவதும், சாலையில் செல்வோரை எல்லாம் பிடித்து வைத்து சிறையில் அடைப்பதும் தொடர்கிறது.
சுற்றுச்சூழல் குற்றவாளி, பொருளாதார குற்றவாளி, உயிர்பலிகள் நிகழ்த்தும் நச்சு ஆலை, இரண்டு முறை சென்னை உயர்நீதிமன்றத்தால் தடை விதிக்கப்பட்ட ஆலை, இரண்டு முறை தமிழக மாசுக்கட்டுப்பாடு வாரியத்தால் இழுத்து மூடப்பட்ட ஆலை, தனது பணத்தால் சனநாயக அமைப்புகளை விலைக்கு வாங்கி விடலாம் என்று துடிக்கிறது. அரசு அதிகாரிகளும், அரசமைப்பில் இருக்கும் அரசியல் தலைவர்களும் சுதந்திரமாக செயல்படமுடியவில்லை, ஊடகங்கள் நெருக் கடிக்கு உள்ளாக்கப்படுகின்றன.
இந்த மக்கள் விரோத, சனநாயக விரோதப் போக்கை வன்மையாகக் கண்டிக்கிறோம். மக்களின் உணர்வுகளை மதித்து சூழல் சீர்கேட்டை உண்டாக்கி வரும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக அப்புறப்படுத்த அரசு உடனே உத்தரவிட வேண்டும். காவல்துறை துப்பாக்கிச்சூடு குறித்து பணியில் உள்ள உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தி நீதி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். வெளிமாவட்ட காவல்துறையினர் தூத்துக்குடியை விட்டு வெளியேறி மக்களின் இயல்பு வாழ்க்கைக்குத் துணை நிற்க வேண்டும் என்ற கோரிக்கைகளையும் வைக்கிறோம்.
(Thanks to ‘நம் வாழ்வு’ வார இதழில் வெளிவந்த கட்டுரை, June 03, 2018)