Namvazhvu
பிலிப்பீன்ஸ் கோவிட்-19க்குப்பின் பொருளாதாரத்தில் பசுமை புரட்சி அவசியம்
Saturday, 23 May 2020 06:34 am
Namvazhvu

Namvazhvu

பிலிப்பீன்ஸ் நாட்டில், கோவிட்-19 கொள்ளைநோயின் தாக்கம் முடிவுற்ற பின்னர், அரசு, பசுமை பொருளாதாரத்தில் முன்னேற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டால் மட்டுமே, அந்நாடு, கொள்ளைநோயின் பின்விளைவுகளிலிருந்து மீண்டெழும் என்று, அந்நாட்டு கத்தோலிக்க அமைப்புகள் கூறியுள்ளன.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின், இறைவா உமக்கே புகழ் என்று பொருள்படும், "Laudato Sì" திருமடல் வெளியிடப்பட்டதன் ஐந்தாம் ஆண்டை முன்னிட்டு, தற்போது சிறப்பிக்கப்பட்டுவரும் "Laudato Sì" வாரத்தில், இவ்வாறு அரசை அந்நாட்டு கத்தோலிக்க அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன,.

பிலிப்பீன்ஸ் அரசு, வேளாண்மையில் கவனம் செலுத்தவேண்டுமென்றும் அந்த அமைப்புகள் கேட்டுக்கொண்டுள்ளன.

சுற்றுச்சூழல் பராமரிப்பு குறித்தும், புதிய வளர்ச்சித் திட்டங்கள் குறித்தும் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை உருவாக்கும் நோக்கத்தில், பிலிப்பீன்ஸ் ஆயர் பேரவையின் காரித்தாஸ் அமைப்பு, "Laudato Sì" பசுமை புரட்சி" என்ற புதிய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

இது குறித்து பீதேஸ் செய்தியிடம் விளக்கிய, பிலிப்பீன்ஸ் காரித்தாஸ் அமைப்பின் செயலர் அருள்பணி எட்வின் காரிகஸ் Edwin Gariguez அவர்கள், உணவு பாதுகாப்பு, சுற்றுச்சூழல் மற்றும், பழங்குடி மக்கள் பாதுகாப்பு, சுத்தமான மற்றும், புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் முதலீடு போன்றவற்றை ஊக்குவித்து வருகின்றோம் என்று தெரிவித்தார்.

கொரோனா கொள்ளைநோய் காலத்திலும், அது முடிவுற்ற பின்னும், சமுதாயங்களில் உணவு பாதுகாப்புக்கு உறுதிவழங்கும் மற்றும், வேளாண்மையை ஊக்குவிக்கும் திட்டங்களையும் மேற்கொண்டு வருவதாக, அருள்பணி காரிகஸ் அவர்கள் கூறினார்.

கோவிட்-19 நெருக்கடிநிலை காலத்தில், நம்பிக்கை, அருகாமை, ஒருமைப்பாடு, பகிர்தல் ஆகியவை, நம்மோடு இருப்பவர்களைக் காப்பாற்ற இன்றியமையாத ஆயுதங்கள் என்றும், பிலிப்பீன்ஸ் காரித்தாஸ் அமைப்பின் செயலர் கூறினார்.