அன்புடையீர்!
தமிழக ஆயர் பேரவையின் கிறிஸ்துவ ஒன்றிப்பு மற்றும் பல்சமய உரையாடல் பணிக்குழுவின் சார்பாக வணக்கமும், வாழ்த்துக்களும்!
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கெதிராக போராடிக்கொண்டிருக்கிறது. கிறிஸ்தவர்களாகிய நாம் இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்காகவும், நோய் இன்னும் அதிகமாக பரவாமல் இருக்கவும், இறைவேண்டல் மற்றும் பிறரன்பு பணிகளில் ஈடுபட்டுகொண்டிருக்கின்றோம். இவ்வேளையில் இந்தியாவில் உள்ள அனைத்து கிறிஸ்தவர்களும் ஒன்றிணைந்து ஜெபிக்க மீண்டும் ஒரு அழைப்பு.
இந்திய தேசத்திற்கான ஐக்கிய இறைவேண்டல் (UCPI) அமைப்பும், தமிழக ஆயர் பேரவையின் கிறிஸ்துவ ஒன்றிப்பு பணி குழுவும் இணைந்து, வரும் பெந்தக்கோஸ்தே பெருவிழாவினை (மே 31, 2020) 'இந்திய நாட்டிற்கான ஐக்கிய இறைவேண்டல் நாளாக" கொண்டாட அழைக்கின்றது. தமிழகம் முழுவதும் இருக்கும் எல்லா சபையை சேர்ந்த கிறிஸ்துவ நம்பிக்கையாளர்களும் ஒன்றாக இணைந்து எல்லா ஆலயங்களிலிருந்தும், ஒவ்வொரு இல்லத்திலிருந்தும் இந்திய தேசத்திற்காக பரிந்துரைத்து செபிக்க அழைக்கின்றோம்.
May 31- ஐக்கிய செபக் கையேடு -INTERCHURCHES PRAYER- நம் வாழ்வு FREE FLIPBOOK
வரும் மே 31 ம் தேதி பெந்தக்கோஸ்தே பெருவிழா ஞாயிறன்று நண்பகல் 12.00 மணிக்கு எல்லா ஆலயங்களிலும்சிற்றாலயங்களிலும் ஆலய மணிகளை ஒலிக்க செய்து நமது ஆழமான எதிர்நோக்கை நாட்டிற்கு பறைசாற்றுவோம். தொடர்ந்து அனைவரும் இறைவேண்டல் மற்றும் இறைபுகழ்ச்சியில் இணைந்து நம் இந்திய தேசத்தின் வளமான, நலமான எதிர்காலத்திற்காகவும், கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்காகவும், விரைவில் இந்நோய் அகலவும் மன்றாடுவோம். இங்கே பரிந்துரைக்கப்பட்ட கால அட்டவணையையும், மாதிரி செபங்களையும் பின்பற்றி நமது நம்பிக்கையின் ஓசையை நாடு முழுவதும் எதிரொலிக்க செய்வோம்.
இதை எல்லா சபையை சார்ந்த ஆயர்கள், குருக்கள், போதகர்கள் மற்றும் இறைமக்கள் அனைவரோடும் பகிர்வோம். இப்பெருவிழாவை நம்பிக்கை, இறைவேண்டல் மற்றும் இறைபுகழ்ச்சியின் நாளாக கொண்டாடுவோம். இயேசுவின் தாய் மரியாவோடு இறைவேண்டலில் நிலைத்துநின்று, ஆண்டவரால் வாக்களிக்கப்பட்ட தூய ஆவிக்காகக் காத்திருந்த திருதூதர்கள், சீடர்கள் போன்று (திருதூதர் பணிகள் 1:14) நாமும், நலம் தரும், ஆறுதல் தரும் மற்றும் புதுப்பிக்கும் ஆவியின் கொடைகளுக்காக காத்திருந்து மன்றாடுவோம்.
அனைவருக்கும் பெந்தக்கோஸ்தே பெருவிழா நல்வாழ்த்துகளும், ஆசிரும்!
இறையாசீருடன்
மேதகு ஆயர் லாரன்ஸ் பயஸ், DD
தலைவர், தமிழக ஆயர் பேரவையின் கிறிஸ்துவ ஒன்றிப்பு
மற்றும் பல் சமய உரையாடல் பணிக்குழு.