மே 25, 2020. ஏற்காடு: இந்தியத் திருஅவை வரலாற்றிலேயே முதன் முறையாக தமிழகத்தில் உள்ள ஏற்காட்டில் இருக்கும் புனித திருச்சிலுவை நவத்துறவற பயிற்சி இல்லத்தில் மாற்றுத்திறனாளியான அருட்சகோதரர் ஜோசப் தெர்மாடம் (Rev.Bro.Joseph Thermadom CSC )தனது துறவற அழைத்தலுக்கான முதல் வார்த்தைப்பாட்டை நேற்று மே மாதம் 25 ஆம் தேதி கொடுத்தார். இந்தியத் திருஅவை வரலாற்றில் முதன் முறையாக துறவற வார்த்தைப்பாட்டைக் கொடுத்த காது கேட்காத, வாய்ப்பேச இயலாத முதல் மாற்றுத்திறனாளியான அருள்சகோதரர் ஜோசப் தெர்மாடம் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
மாற்றுத்திறனாளியான அருள்சகோதரர் ஜோசப் கேராளவில் உள்ள எர்ணாகுளம் - அங்கமாலி புனித திருச்சிலுவை இல்லத்தில் துறவற வாழ்வுக்கு தேர்ந்துகொள்ளப்பட்டார். திரு.தாமஸ்-திருமதி ரோஸி தம்பதியினருக்கு செவித்திறன் குறைபாடுள்ள உள்ள மகனாக இவர் பிறந்தார். இவரைப் போலவே செவித்திறன் குறைபாடு மிக்க இவர் சகோதரரும் இவரும் தங்கள் பெற்றோருடன் மும்பையில் வளர்ந்தனர். செவித்திறன் குறைபாட்டால் இவரால் பேச இயலாமல் போயிற்று. அங்கே இவர் சிறப்பு மாணவர்களுக்கான பள்ளிக்கல்வியைத் தம் சகோதரருடன் பெற்றார். தாம் ஒரு குருவாக வேண்டும் என்ற இறைவனின் அழைப்பை இவர் பள்ளி மாணவனாக இருக்கிறபோதே உணர்ந்திருந்தாலும் தம் சூழ்நிலையின் காரணமாக அவரால் குருமாணவராக சேர இயலவில்லை. தனது குறைபாடுகளை நன்கு உணர்ந்திருந்த இவர், அமெரிக்காவில் உள்ள காது கேளாதோருக்கான டோமினிக்கன் மிஷனரி துறவறச் சபையில் (Dominican Missionaries for the Deaf Apostolate, USA) துறவறப் பயிற்சியை மேற்கொண்டார். அங்கு மெய்யியல் மற்றும் இறையியல் கல்வியை முடித்து இந்தியா திரும்பினார்.
இந்தியா திரும்பிய பிறகு, புனித திருச்சிலுவைச் சபையினர் காதுகேளாதோருக்கான மறைபணியில் ஈடுபடுவதை இச்சபையைச் சேர்ந்த துறவற குருக்களின் வழியாக அறிந்து கொண்டார். அவர்களிடம் சென்று தாம் அவர்களுடைய மறைபணியில் சேர்ந்து உழைக்க தமக்குள்ள தீரா ஆர்வத்தை வெளிப்படுத்தினார். இவர்தம் சிறப்பு ஆர்வத்தையும் இறைவனின் அழைத்தலையும் கண்டுணர்ந்த அவர்கள். அவரை அய்மணத்தில் உள்ள தங்கள் திருச்சிலுவை துறவறக் குழுமத்தில் 2017 ஆம் ஆண்டு அனுமதித்து ‘ வந்து பார்’ உறுப்பினராக (come-and-see member) சேர்த்துக் கொண்டனர். அதன் பிறகு, அவர்தம் அழைத்தலில் அவர் உறுதியாக இருப்பதைக் கண்டு, அவரது நற்குணங்களை மேலும் வளர்த்து, இறைவனுக்கு உகந்தவராக அவரை மாற்றும்பொருட்டு, தமிழகத்தில் உள்ள ஏற்காட்டில் நவத்துறவற பயிற்சி இல்லத்தில் அனுமதித்தனர். அங்கு தனது ஓராண்டு பயிற்சியை முடித்து, தனது அழைத்தலில் தெளிந்து தேர்ந்து தனது முதல் வார்த்தைப் பாட்டை மே மாதம் 25 ஆம் தேதி, 2020 அன்று கொடுத்துள்ளார்.
Video Clip of His Profession
இந்தியத் திருஅவை வரலாற்றில் மாற்றுத்திறனாளிகளை, குறிப்பாக செவித்திறன் மற்றும் பேச்சுத்திறன் குறைபாடுள்ளவர்களை துறவற வாழ்வுக்கு அனுமதிப்பதில்லை அல்லது அவர்களுக்குரிய சிறப்புக் கல்வியளிக்கும் சிறப்புப் பயிற்சி இல்லங்கள் இந்தியாவில் இல்லை. இறைவனின் அழைப்பு எல்லோருக்கும் உரியது என்பதை இந்த வரலாற்று நிகழ்வு உணர்த்தியுள்ளது.
நாவன்மை அற்றவன் நான், ஏனெனில் எனக்கு வாய் திக்கும்; நாவு குழறும் என்று (விடுதலைப் பயணம் 4:10) தயங்கிய மோசேயையும் எனக்குப்பேசத் தெரியாதே, சிறுபிள்ளைதானே (எரேமியா 1 : 6) என்ற பயந்த எரேமியாவையும் இறைவன்தாமே தேர்ந்து கொண்டு தலைவராக, இறைவாக்கினராக வழிநடத்தினார் என்பதை இந்தியத் திருஅவை உணர வேண்டியிருக்கிறது. இந்தியத் திருஅவை அளவில், அல்லது தமிழகத் திருஅவை அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கான இறையழைத்தலை உணர்ந்து சிறப்புப் பயிற்சி துறவற இல்லங்களை நிறுவ வேண்டும்.
அருள்சகோதரர் தெர்மாடத்தின் சிறப்புமிக்க தனித்துவம் வாய்ந்த இறையழைத்தலுக்காக இறைவனைப் போற்றுவோம். இறைவன் விரும்பினால், இந்தியத் திருஅவை அளவில் காது கேட்காத, வாய்பேச இயலாத, முதல் குருவாக இவர் விளங்கக் கூடும். ஆகையால் இவருக்காக இம் மே மாதத்தின் இறுதிநாள்களில் குருக்களின் இராக்கினியான அன்னை மரியாவிடம் செபிப்போம்.
செய்தி மூலம்: Fr.Emmanuel Ralte CSC – Fr.John Pkc CSC
செய்தி உதவி : எறையூர் சாலமோன்