Namvazhvu
Pope prays Rosary அன்னை மரியா திருத்தலங்களுடன் இணைந்து செபமாலை செபிக்கும் திருத்தந்தை
Wednesday, 27 May 2020 05:30 am
Namvazhvu

Namvazhvu

இந்த கொரோனா கொள்ளைநோய் காலத்தில், மனித சமுதாயம் முழுவதையும் அன்னை மரியாவிடம் அர்ப்பணிப்பதற்கென, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மே 30, வருகிற சனிக்கிழமையன்று, வத்திக்கானில் அமைந்துள்ள அன்னை மரியா கெபியில் செபமாலை செபிக்கவுள்ளார் என்று திருப்பீடம் அறிவித்துள்ளது.

மே மாதம் 30 ஆம் தேதி, வருகிற சனிக்கிழமை,  உரோம் நேரம் மாலை 5.30 மணிக்கு, (இந்திய நேரம் இரவு 9.00 மணிக்கு) வத்திக்கானிலுள்ள புனித லூர்து அன்னை கெபியில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தலைமையேற்று நிறைவேற்றும் செபமாலை பக்திமுயற்சி, உலகெங்கும் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என்று, புதியவழி நற்செய்தி அறிவிப்பு திருப்பீட அவை அறிவித்துள்ளது.

இந்நிகழ்வு குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள இத்திருப்பீட அவை, திருத்தந்தை செபமாலை செபிக்கும் அதேநேரத்தில், உலகின் அன்னை மரியா திருத்தலங்களில் மக்கள் கூடியிருந்து, திருத்தந்தையோடு இணைந்து, குடும்பங்களுக்காகச் செபிப்பார்கள் என்று அறிவித்துள்ளது.

இந்நிகழ்வில், செபமாலையின் ஒவ்வொரு பத்து மணி செபங்களையும், கொரோனா தொற்றுக்கிருமியோடு தொடர்புடைய பெண்கள் மற்றும், ஆண்கள் செபிப்பார்கள்.

பெந்தக்கோஸ்து பெருவிழா திருவிழிப்பு நாளான வருகிற சனிக்கிழமையன்று, திருத்தந்தை, கோவிட்-19 கொள்ளைநோயின் தாக்கத்தால் துன்புறும் மனித சமுதாயத்தை, அன்னை மரியாவின் திருப்பாதத்தில் அர்ப்பணித்து செபிப்பார் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில், செபமாலையின் ஒவ்வொரு பத்து மணிகளையும், கொரோனா தொற்றுக்கிருமியோடு தொடர்புடைய பெண்கள் மற்றும், ஆண்கள் செபிப்பார்கள்.

இந்நோயாளிகள் மத்தியில் பணியாற்றும், மருத்துவர், செவிலியர், இந்நோயினின்று குணமடைந்த ஒருவர், இந்நோயில் உயிரிழந்த குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர், இந்நோயளிகள் பராமரிக்கப்படும் மருத்துவமனையில் ஆன்மீகப் பணியாற்றும் அருள்பணியாளர், செவிலியர் அருள்சகோதரி, மருந்தகப் பணியாளர், தன்னார்வலர்,  இந்த காலக்கட்டத்தில் குழந்தையைப் பெற்றெடுத்த இளம் பெற்றோர் போன்றோர், இந்த நேரடி ஒளிபரப்பு நிகழ்வில் செபமாலை மணிகளைச் செபிப்பார்கள்.

“அவர்கள் அனைவரும் இயேசுவின் தாய் மரியாவோடு இணைந்து ஒரே மனத்தோடு இறைவனிடம் வேண்டிக்கொண்டிருந்தார்கள் (தி.ப.1,14)” என்ற தலைப்பில் இந்த செபமாலை பக்திமுயற்சி நடைபெறும்.

நம்வாழ்வு இணையதளத்திலும் அதன் முகநூலிலும் நேரடியாக ஒளிபரப்பப்படும்.  இதனை நம் வாழ்வு வாசகர்கள் இணைந்து கொள்ளலாம்.