No icon

August 07, ஞாயிறு

ஆண்டின் பொதுக்காலம் 19 ஆம் ஞாயிறு

 சாஞா 18:6-9, எபி 11:1-2, 8-12, லூக் 12:32-48

நம்பிக்கையின் பொருள்

நம்முடைய கிறிஸ்தவ மரபில் நம்பிக்கை என்ற வார்த்தையை அடிக்கடி பயன்படுத்துகிறோம். இறையியல் மதிப்பீடுகளில் முதன்மையானதாக நம்பிக்கையைப் போற்றுகிறோம். விவிலியத்திலும், இந்த வார்த்தை அடிக்கடி காணக்கிடக்கிறது. இருந்தாலும், இதன் பொருள் நமக்கு மறை பொருளாகவே இருக்கிறது. இம்மறை பொருளைத் தெளி பொருள் ஆக்குகின்றது இன்றைய இறைவார்த்தை வழிபாடு. நம்பிக்கை என்றால் என்ன என்பதை இன்றைய வாசகங்கள் எடுத்தியம்புகின்றன.

இன்றைய முதல் வாசகத்தில் (காண். சாஞா 18:6-9), சாலமோனின் ஞானநூல் ஆசிரியர், இஸ்ரயேல் மக்கள் விடுதலைப்பயண நிகழ்வில் எகிப்திலிருந்து வெளியேறிய இரவை நினைத்துப் பார்க்கிறார். ‘எகிப்து நாட்டில் தாங்கள் நம்பியிருந்த வாக்குறுதிகளைத் தெளிவாக அறிந்து அவற்றில் மகிழ்ந்திருக்கும்படி அந்த இரவு எங்கள்

மூதாதையருக்கு முன்னறிவிக்கப்பட்டது’ என்கிறார் ஆசிரியர். கடவுளின் வாக்குறுதி உண்மையாக இருக்கும் என்று அவர்கள் நம்பினார்கள் என அழுத்தம் கொடுக்கிறார் ஆசிரியர்.  இவ்வார்த்தைகள் உண்மையான நம்பிக்கையின் முக்கியமான கூறு ஒன்றை வெளிப்படுத்துகின்றன. எகிப்தைவிட்டு வெளியேறியது இஸ்ரயேல் மக்கள் மேற்கொண்ட பெரிய ஆபத்தான காரியம். எகிப்தியர்கள் மிகவும் பலசாலிகள். எந்த ஒரு காரணத்திற்காகவும், அடிமைகள் தங்கள் நாட்டை நீங்கக்கூடாது என்று எண்ணியவர்கள். கடவுளின் திட்டம் ஒருவேளை தோற்றுப்போனால், அவர்கள் மிகப் பெரிய இழப்பை சந்திக்க வேண்டியதிருக்கும். ஆகவே, கடவுளின் வாக்குறுதியின் மேல் அல்லது வாக்குப்பிறழாமையின் மேல் நம்பிக்கை கொண்டவர்களாக இருந்து, தங்களுடைய நம்பிக்கையை வெளிப்படுத்துகின்றனர். எந்த அளவிற்கு என்றால், எகிப்தில் தாங்கள் கொண்டிருந்த பாதுகாப்பு வளையத்தைவிட்டு வெளியேறி, தாங்கள் முன்பின் தெரியாத ஒரு கடவுளைப் பின்பற்றும் துணிச்சல் கொள்கின்றனர்.

இன்றைய இரண்டாம் வாசகம் (காண். எபி 11:1-2,8-19) நேரடியாக நம்பிக்கையைப் பற்றிப் பேசுகிறது. ‘நம்பிக்கை என்பது நாம் எதிர்நோக்கி இருப்பவை கிடைக்கும் என்னும் உறுதி. கண்ணுக்குப் புலப்படாதவை பற்றிய ஐயமற்ற நிலை’  என்று, நம்பிக்கையை வரையறை செய்கிறார் ஆசிரியர். இவ்வரையறையைப் பொறுத்தமட்டில் நம்பிக்கை என்பது, காணாத ஒன்று நடந்தேறும் என்னும் உறுதி. இந்த வரையறைக்கு இலக்கணமாக ஆபேல் தொடங்கி மக்கபேயர் காலத்து மறைசாட்சியர் வரை முக்கியமான கதை மாந்தர்களை முன்வைக்கிறார் ஆசிரியர். இவர்களில் முக்கியமான இடம் வகிப்பவர் ஆபிரகாம். கடவுள் ஆபிரகாமுக்கு ஒரு நாட்டை வாக்களிக்கின்றார். இந்த வாக்குறுதியின்மேல் நம்பிக்கை கொள்கிற ஆபிரகாம், தான் எங்கு செல்கிறோம் என்று அறியாமலேயே புறப்பட்டுச் செல்கின்றார் - இஸ்ரயேல் மக்கள் போல. கானான் நாட்டில் கூடாரம் ஒன்றில் வசிக்கும் அவர் அந்த இடம் முழுவதும் தன்னுடைய வழிமரபினருக்கு உரிமைச்சொத்தாகும் என்று எதிர்நோக்குகின்றார். இந்த நம்பிக்கையை ஆசிரியர் வரப்போகும் எருசலேமிற்கான முன்னறிவிப்பாகப் பார்க்கின்றார். மேலும், குழந்தைப்பேறு இல்லாத ஆபிரகாம் - சாரா தம்பதியினர் வானத்து நட்சத்திரங்களைவிட, அவர் வழிமரபினர் பெருகுவதாக கடவுள் வாக்களித்தார். இந்த வாக்குறுதி ஒருநாள் நிறைவேறும் என்று, உறுதியாக இருந்தார். கடவுளின் வாக்குறுதியும் நிறைவேறியது.

இருந்தாலும், நம்பிக்கைக்கான இறுதிச் சோதனையும் வந்தது. தன் ஒரே மகனைப் பலியிடுமாறு கடவுள் ஆபிரகாமுக்குக் கட்டளையிட்டார். இது கீழ்ப்படிதலுக்கான சோதனை அல்ல; மாறாக, நம்பிக்கைக்கான சோதனையே. கடவுள் தந்த வாக்குறுதியான தன் மகனைக் கடவுளுக்கே கொடுக்க முன்வருகிறார் ஆபிரகாம். தான் வாக்களித்த மகனையே கடவுள் திரும்பப் பெற்றுக்கொள்வாரா? கடவுளின் கட்டளையை ஆபிரகாம் புரிந்து கொள்ளவில்லை. இருந்தாலும், தன் நம்பிக்கையில் உறுதியாக இருந்தவராய் கடவுளின் கட்டளையை நிறைவேற்றுகிறார். ஆபிரகாமின் மனவுறுதி மற்றும் நம்பிக்கையால் அவருடைய மகன் ஈசாக்கு அவருக்கே தரப்படுகின்றார். கடவுள் தன் வாக்குறுதியைக் காப்பாற்றுகின்றார். தங்களுடைய நம்பிக்கைக்காகத் துன்பங்கள் அனுபவித்த மக்களுக்கு அறிவுறுத்துகின்ற ஆசிரியர் ஆபிரகாமை எடுத்துக்காட்டாக முன்வைக்கிறார். நிலை வாழ்வு என்னும் கடவுளின் வாக்குறுதியின்மேல் நம்பிக்கைகொள்வோர் உயிர்த்தெழுவர் என்றும், இந்த நம்பிக்கையே இவ்வுலக வாழ்வை அவர்கள் வாழும் வழியை நிர்ணயிக்கிறது என்றும் அறிவுறுத்துகிறார் ஆசிரியர்.

இன்றைய நற்செய்தி வாசகம் (காண். லூக் 12:32-48) நம்பிக்கையின் பொருளை இன்னும் நீட்டுகிறது. தன்னுடைய சீடர்களை, ‘சிறுமந்தை’ என அழைக்கிற இயேசு, ‘அஞ்சவேண்டாம்’ என அறிவுறுத்துகின்றார். பெரிய ஆபத்தான உலகோடு ஒப்பிடும்போது சீடர்களின் எண்ணிக்கை மிகச் சிறியதாக இருந்தது. ஓநாய்களிடையே ஆடுகள் போல, அவர்கள் இருந்தார்கள் (காண். லூக் 10:3). இருந்தாலும், தந்தை அவர்களுக்கு ஆட்சியைத் தரத் திருவுளம் கொண்டுள்ளார் என்கிறார் இயேசு. சிறியவர்களாக, சாதாரணமானவர்களாக, துன்புறுவோர்களாக இருந்தாலும் அவர்கள் இறுதியில் நிலைவாழ்வைக் கண்டுகொள்கின்றனர். கடவுளின் இந்த வாக்குறுதியில் உறுதியாக இருக்க வேண்டிய சீடர்கள் இந்த உறுதிக்கேற்ப தங்களுடைய வாழ்வை நெறிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

இந்த நம்பிக்கையின் முதல் வெளிப்பாடு உலகச் செல்வங்களைப் பற்றிய அவர்களுடைய பார்வையில் தொடங்குகிறது. ஒவ்வொரு மனிதருக்கு முன்னும் ஒரு தெரிவு இருக்கிறது. செல்வத்தை நம்புதல் அல்லது இறைவனை நம்புதல். செல்வத்தின் மேல் ஒருவர் கொள்ளும் நம்பிக்கை அவரை இவ்வுலகத்தோடு கட்டி விடுகிறது. இது ஒரு மடமையான தெரிவு. ஏனெனில், இந்த உலகம் கடந்து போகக் கூடியது. கடவுள்மேல் ஒருவர்கொள்ளும் நம்பிக்கை நிலைவாழ்வைத் தருவதால் அது விவேகமான தெரிவு. கடவுள் மட்டுமே நம்பிக்கைக்குரியவர். ஏனெனில், அவரே உண்மையான நிலைவாழ்வை நமக்குக் கொடுக்கிறார். இந்த வாழ்வையே சீடர்கள் புதையலாகத் தேட வேண்டும்.

நம்பிக்கையின் இரண்டாம் வெளிப்பாடு விழித்திருத்தல். தலைவரின் வருகைக்காக பணியாளர் விழித்திருக்கிறார். வரப்போகும் தலைவர் இயேசுவே. இத்தகைய விழித்திருத்தல் ஒருவரின் மனதில் இருக்கும் கவலை, கலக்கம் அனைத்தையும் அகற்றிவிடுகிறது. மேலும், சீடர்களின் உள்ளத்தில் இருக்கும் கவனச்சிதறல்களையும் இது அகற்றுகிறது.

நம்பிக்கையின் இறுதி வெளிப்பாடு பணிவிடை செய்தல். இரண்டு வகை வீட்டுப் பொறுப்பாளர்களை இயேசு எடுத்துக்காட்டாக முன்வைக்கின்றார். முதல் பொறுப்பாளர் நம்பிக்கைக்குரியவராய் இருக்கிறார். அதற்கேற்ற பரிசைப் பெறுகிறார். மற்றவர் தன் தலைவர் காலம் தாழ்த்துகிறார் என்று எண்ணித் தன் மனம் போலச் செயலாற்றுகிறார். தன்னுடைய செல்வம் மற்றும் இன்பத்தால் ஈர்க்கப்பெற்ற இப்பொறுப்பாளர் பணிவிடை செய்ய மறுத்ததால் அனைத்தையும் இழக்கிறார்.

உண்மையான நம்பிக்கை என்பது இயேசுவுக்காக காத்திருந்து விழித்திருப்பதிலும், பணிவிடை செய்வதிலும் அடங்கியுள்ளது எனக் கற்பிக்கிறார் லூக்கா. இந்த நம்பிக்கை, நம்பிக்கையாளர்களின் பார்வையை இந்த உலகத்திலிருந்து அப்புறப்படுத்தாது. மாறாக, இந்த உலகில் நல்ல வாழ்க்கை வாழ்வதற்கான இலக்கையும், நோக்கையும் தரும். உண்மையான நம்பிக்கை எதிர்நோக்குவதில் உறுதியாக இருந்தாலும், இன்றைய எதார்த்தத்தையும் ஏற்றுக்கொண்டு, இன்றைய வாழ்வை நன்றாக வாழத் தூண்டும்.

ஆக, நம்பிக்கை என்பது வெறும் சில கோட்பாடுகளுக்கு ‘ஆம்’ என்று சொல்வதல்ல என்றும், மாறாக, அன்றாட வாழ்வை இனிமையாகவும், நிறைவாகவும் வாழத் தூண்டும் ஒரு மதிப்பீடு. இஸ்ரயேல் மக்கள் கடவுளின் வாக்குறுதியை நம்பி எகிப்தை விட்டுப் புறப்பட்டனர். விடுதலை பெற்ற மக்களாக மாறினார்கள். ஆபிரகாம் கடவுளை நம்பினார். நம்பிக்கையின் குலமுதுவராக மாறினார். நிலைவாழ்வில் நம்பிக்கைக் கொள்ளத் தன் சீடர்களை அழைக்கும் இயேசு, அதை விழித்திருப்பதிலும் பணிவிடை செய்வதிலும் செலவழிக்கச் சொல்கின்றார். இவ்வனைத்துக் கதை மாந்தர்களையும் இணைக்கும் திருப்பாடல் ஆசிரியர் (33:20), ‘நாம் ஆண்டவரை நம்பியிருக்கின்றோம்; அவரே நமக்குத் துணையும் கேடயமும் ஆவார். உம்மையே நாங்கள் நம்பியிருப்பதால் உமது பேரன்பு எங்கள்மீது இருப்பதாக!’ என்று பாடுகிறார்.

நம்பிக்கையின் பொருளை நாம் எப்படி இன்று வாழ்வாக்குவது?

இன்று நாம் பயன்படுத்தும் சொற்கள், பொருள்கள், சந்திக்கும் நபர்கள் என அனைத்தும், அனைவரும் நம்பகத்தன்மையை இழந்து கொண்டே இருக்கின்றனர். ஒவ்வொரு இடத்திற்கும் நேரத்திற்கும் நபருக்கும் ஏற்றவாறு இருப்பதே மதிப்பீடாகப் போற்றப்படுகிறது. எல்லா இடத்திற்கும் நேரத்திற்கும் நபருக்கும் பொருத்தமானவை எவையும் இல்லை என்ற நிலை உருவாகிக்கொண்டே இருக்கின்றது. ‘எனக்கு சரி என்றால் அது எனக்குச் சரி. உனக்குச் சரி என்றால் உனக்குச் சரி’ என்று, கேட்கும் மனப்பாங்கு வந்து விட்டது.

காண்பவை பற்றியே நமக்கு இன்று ஒத்த கருத்து இல்லாதபோது, காணாதவற்றின்மேல் எப்படி நம்பிக்கை வரும்? இன்றைய வாழ்வே கேள்விக்குறியாகி நிற்கும்போது நிலைவாழ்வின்மேல் மனம் எப்படி உறுதி கொள்ளும்?

நம்பகத்தன்மை அல்லது நம்பிக்கை வளர இறைவன் அல்லது மாறாத ஒன்று அடித்தளமாக அமைய வேண்டும். ஆகையால்தான், திருமணம் மற்றும் குருத்துவம் அருளடையாளக் கொண்டாட்டங்களில் இறைவன் முன்னிலையில் இனியவர்கள் வாக்குறுதி கொடுக்கின்றனர்.

நம்பிக்கையைத் தளராமல் வைத்திருப்பவர்கள் இறைவனை உறுதியாகப் பற்றிக்கொள்வார்கள். ஆக, என்னுடைய முதல் பாடம் இறைவனை இறுகப் பற்றிக் கொள்வது.

இரண்டாவதாக, விழித்திருத்தல். விழித்திருத்தல் என்பது இன்றைய பொழுதை முழுமையாக வாழ்வது. நம்பிக்கை கொண்ட ஒருவரே இன்றைய பொழுதை இனிதே வாழ முடியும். நம்பிக்கை குறையும்போது எதிர்காலம் பற்றிய அச்சமும், கடந்த காலம் பற்றிய குற்றவுணர்வும் வந்து விடுகிறது. நாம் நம்முடைய ஒவ்வொரு பொழுதையும் இனிமையாக வாழ்ந்தால் தொடர்ந்து முன்னேறிச் செல்லலாம். மாறாக, கோபம், சண்டை, கசப்புணர்வு என்று நிமிடங்களை நகர்த்தினால், அவற்றைச் சரிசெய்ய மீண்டும் நம் நிமிடங்களைச் செலவிட வேண்டிய நிலைவரும். செய்வதை திருந்தச் செய்துவிட்டால், அதை திரும்பச் செய்யத் தேவையில்லை தானே.

மூன்றாவதாக, பொறுப்புணர்வோடு பணிவிடை செய்தல்.

நான் ஒரு நம்பிக்கைக்குரிய அறிவாளியான வீட்டுப்பொறுப்பாளர் என்ற எண்ணம் எனக்கு வேண்டும். நம்பிக்கைக்குரிய நிலையோடு அறிவும் மிக அவசியம். அறிவு இல்லாத நம்பிக்கை

மூட நம்பிக்கையாகிவிடும். நம்பிக்கை இல்லாத அறிவு வெறும் பிதற்றலாகிவிடும்.  வாழ்வில் வெற்றி கண்டவர்கள், இவ்வுலகை முன்னேற்றியவர்கள் அனைவரும் பொறுப்புணர்வோடு பணிவிடை செய்தனர். அதற்குக் காரணம் அவர்களின் கண்களில் ஒளிர்ந்த நம்பிக்கையே.

இறுதியாக,

நம்பிக்கையின் பொருள் உணர்ந்த நாம் நம்பிக்கைப் பொருளாய் மாறும்போது வாழ்வும் நிலை வாழ்வும் நமதாகும் - இன்றும் என்றும்!

Comment