No icon

குடந்தை ஞானியின் எழுத்து அஞ்சலி

விளக்கின் வெளிச்சம் - அறிவுச் சுடர் அணைந்தது!

ஒவ்வொரு திருத்தந்தையும் உன்னதமானவர்கள். கிறிஸ்துவின் பிரதிநிதியாக, திரு அவையின் தலைவராக, உரோமையின் ஆயராக, பேதுருவின் வழித்தோன்றலாக, நல்லாயனாக திரு அவைக்கு பெருமை சேர்ப்பவர்கள்.

265 வது திருத்தந்தையாக பொறுப்பேற்று, 7 ஆண்டுகள், 10 மாதங்கள், 9 நாட்கள் (மார்ச் 19, 2005 - பிப்ரவரி 28, 2013) திருத்தந்தையாக திரு அவையை திறம்பட வழிநடத்தியுள்ளார். இவர் ஞானத்தின் பிறப்பிடம். தன்னடக்கத்தின் உறைவிடம். தாழ்ச்சியின் மனித வடிவம். அறிவின் திருப்பீடம்!

ஒரு போர்வீரனாக, குருவாக, பேராசிரியராக, பேராயராக, கர்தினாலாக, திருத்தந்தையாக, ஓய்வுக்குப் பிறகு செப வீரராக 95 வருட கால நிறை வாழ்வில் வானவில்லாய் ஏழு நிலைகளில் பரிணமித்தவர். நாசிப் படையில் போர்வீரனாக தன் வாழ்வைத் தொலைத்தவர், மரணிக்கும்போது திரு அவைக்காக திரு அவையின் தாய் (Mater Ecclesiae) இல்லத்தில் இறுதி வரை செபிக்கும்போர் வீரராக / மரியின் மகனாக வாழ்வைக் கண்டடைந்தார்.

விசுவாசத்திற்கும் பகுத்தறிவுக்கும் இடையே உரையாடல் தொடர்ந்து நிகழ அகுஸ்தீனிய வழியில் பொனவெந்தூர் வழியில் நிகழ்வினை புரிந்தவர்.

ஒரு சிறந்த நூலாசிரியர். எழுத்தறிவித்தவன் இறைவன். அந்த இறைவனை என் எழுத்தால் அறிவிக்கிறேன் என்று ஏகாந்தத்தில் பூத்து, காய்த்து, கனிந்து பலன் தந்தவர். திருத்தந்தை ஆறாம் பவுல், திருத்தந்தை இரண்டாம் ஜான் பவுல் என்று தம் காலத்து தலைமை ஆயரை, அருகே அமர்ந்து அளவளாவி, விசுவாசத்தை விதைத்து, அறிவைப் பெருக்கி, இறையாட்சிக்காக விளைநிலத்தில் விதை விதைத்து விழிப்புணர்வோடு காத்திருக்கிற விவசாயியைப் போல பாடுபட்டவர்.

ஜெர்மானியருக்கே உரிய கடின உழைப்பும் நேரந்தவறாமையும் முழுமையை நோக்கிய விடாமுயற்சியும் இவருக்குள் இருந்தது இயல்பானதே. ஒழுக்கத்தின் விழுமியத்தில் ஒளிர்முத்தாக ஒளிர்ந்தவர். சமரசத்திற்கு கிஞ்சித்தும் இடம் கொடாதவர். அறிவில் சிறந்தவர். அறிஞர். அறிஞர்களின் அறிஞர். மறைவல்லுநர். திரு அவை தேடித் தேடி தேர்ந்து கண்டுபிடித்த நல்முத்து இவர். பாறைமீது கட்டப்பட்ட திரு அவையை பாதுகாத்த படைவீரர்.

திருத்தந்தை இரண்டாம் ஜான் பவுல் அவர்களின் வழிகாட்டுதலில் திரு அவையின் நம்பிக்கை அறிக்கையை நுணுக்கமாக, நுண்மான் நுழைபுலத்துடன், தெளிந்த நீரோடையைப்போல கோர்வைப்படுத்தி, சிறிய தவறுக்கும் இடம்கொடாமல் சிற்பியைப் போல அல்லவை நீக்கி, நீக்கி, அற்புதமாய் வடித்து தந்தமறைக்கல்வியின் தந்தைஇவர்.

அதிகாரப் போதையில் தள்ளாடுவது சில தலைவர்களின் இயல்பு. தலைவராக இருப்பதைவிட அதிகாரிகளாக இருக்கவே சிலர் விழைவர். ஆயர்கள் இதற்கு விதிவிலக்கல்ல. ஆகையால் ஆண்டவர் இயேசு, ‘தலைவன் தொண்டராகட்டும்; பாதம் கழுவட்டும்என்று சீடத்துவத்தைப் பக்குவப்படுத்தினார். தலைமைத்துவத்தைப் பண்படுத்தினார். பேதுருவுக்கு சாவி கொடுப்பதற்கு முன்பாக பூட்டைக் கொடுத்தார். பாதங்களைக் கழுவுவதற்கு, அவர்தம் மனத்தைக் கழுவினார். ஆயருக்குரிய கோல் கொடுப்பதற்கு முன்பாக, காணாமல் போன ஆட்டை தேடி கண்டுபிடிக்க கற்றுக்கொடுத்தார். சிலர் பதவியைத் தேடி அலைவர்; ஆனால், சிலரைப் பதவி தேடி வரும். சிலர் இதில் தலைவர், அதில் சேர்மன், அதில் துணைத் தலைவர், அதில் செகரட்டரி என்று தங்கள் வாழ்க்கை விவரக் குறிப்பை அலங்கரித்துக் கொள்வர். சிலர் பதவியை அலங்கரிப்பர்; சிலரைப் பதவி தாமே அலங்கரிக்கும். அங்கீகரிக்கும். நிறைகுடமும் தழும்பாது; வெறுங்குடமும் தழும்பாது. சிலர் நிறைகுடமாக பரிபூரணத்துவம் பெறுவர். சிலர் வெறுங்குடமாக, வெறுங்கை முழம்போடுவதுபோல் நடித்து வாழ்வர்.

திருத்தந்தை பதினாறாம் பெனடிக்டைப் பொறுத்தவரை அனைத்து பதவிகளும் இவரைத்தேடி வந்தது. இவரைப் பதவி பணிவுடன் அலங்கரித்து. இவர் நிறைகுடமாக, அமேசான் முதல் ஆசியா வரை பெருமை சேர்த்தார். இவர் பரிபூரணத்துவம் வாய்ந்தவர். திரு அவை பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாக்கியவர்களிடம் மனந்திறந்து மன்னிப்பை வேண்டியவர். மூவாயிரமாவது ஆண்டின் தொடக்கத்தில் செம்மாந்து வளர்ந்துள்ள புதிய தகவல் தொழில்நுட்பங்களுடன் திரு அவையை பிணைத்தவர். இணையத் திரு அவையாக புதிய பரிமாணம் எடுக்க வழிகாட்டியவர். பற்றற்றவர்; பண்பாடுமிக்கவர்.

78 முதிர்வயதில் திருத்தந்தையாக தேர்ந்தெடுக்கப்பட்டபோது இது இறைவனின் திருவுளம் என்றறிந்து சிஸ்டைன் தேவாலய வெண்புகை விண்ணை முட்டுவதற்கு இவர் கொண்டிருந்த மனநிலையே பிப். 28, 2013 அன்று சுற்றும் பூமியே சற்று தள்ளாடும்வகையில் தன் உடல்நிலையைக் காரணம் காட்டி, ராஜிநாமா செய்தபோதும் கொண்டிருந்தார். எப்போதும் அமைந்த மனநிலை இவருக்குரியது. ஓய்வுக்குப் பிறகு, “நான் திரு அவைக்காக செபிக்கிற முதுபெரும் துறவியாக இருப்பேன்என்று தனக்குத்தானே வரையறை செய்து கொண்டார்.

எழுத்தாற்றல்மிக்க ஆயர்கள் இன்றைய திரு அவையில் சொற்பமே. எழுத்தை நேசித்து ஆதரிப்பவர்களும் அரிதே. கம்யூனியோ என்ற இறையியல் இதழை நிறுவியவர்களில் ஒருவர். ஒரு பேராசிரியராக, கர்தினாலாக, திருத்தந்தையாக, பணி நிறைவுப் பெற்ற திருத்தந்தையாக என்று எல்லா நிலையிலும் கடிகார முள்ளோடு தன் பேனா முள்ளையும் நகர்த்தியவர். நூல்களின் வாசம் அறிய மறுக்கிற அருள்நிலையினர் இவரின் நூல்களில் மனம் புதைய வேண்டும். திரு அவையின் வேர்களாக வீரியம் பெற வேண்டும்.

இவர் ஒரு மறைவல்லுநர். திரு அவையின் மிகப்பெரிய சொத்து. சமய நல்லிணக்கத்திற்கு சாமரம் வீசியவர். கீழைத் திரு அவைக்கு கிழக்கு முகமாக இருந்தவர். பேதுருவின் வழித்தோன்றலாக, தலைமைத்துவத்தில் தன்னிகரற்று மிளிர்ந்தவர்; ஒளிர்ந்தவர். அவரின் திருத்தூது மடல்களில் ஞானமும் நம்பிக்கையும் பகுத்தறிவும் முப்பரிமாணத்தில் நம்முள் ஒளி பாய்ச்சும்.

என் காலடிக்கு உம் வாக்கே விளக்கு (119:105) என்பார் திருப்பாடலாசிரியர். அந்த இறைவாக்கை உள்வாங்கி ஒளிர்ந்த அந்த விளக்கின் வெளிச்சம், திரு அவைக்கு ஒரு மாபெரும் அறிவுச் சுடர்! ஆம் திரு அவையின் ஒரு மாபெரும் அறிவுச் சுடர் அணைந்தது. ஆனால், கடத்திய ஒளியும் வெம்மையும் நம்மை வளப்படுத்தும். விண்ணகத்தில் பிறந்துள்ள எழுத்தாளரான திருத்தந்தை பதினாறாம் பெனடிக்டே! எழுத்துகள் வழியாக தமிழகத் திரு அவையைக் கட்டியெழுப்பும், தட்டியெழுப்பும் நம் வாழ்வு வார இதழுக்காகவும் நம் வாழ்வு வாசகர்களுக்காகவும் விண்ணகத்தில் மன்றாடும். இதழ்களையும் நூல்களையும் நேசிக்கும் தமிழகத் திரு அவை உருவாக வேண்டும்!

(திருத்தந்தை பிரான்சிஸ், முன்னாள் திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட்  (பிப்ரவரி 28, 2013 - டிசம்பர் 31,2022) ஆகிய இவர்கள் வாழ்ந்த சம காலத்தில் நாமும் வாழ்கிறோம் என்பதே வரலாறுதானே. எழுத்தாளரான ஒரு திருத்தந்தைக்கு  நம் வாழ்வு வழியாக எழுத்தாளராக அஞ்சலி செய்வதே நான் பெற்ற பேறு! )

Comment