No icon

தமிழகத்தில் தலைதூக்கும் இந்துத்துவம்

தாக்குதலுக்குள்ளாகும் கிறிஸ்தவர்கள் - (தமிழில் : அருள்பணி. P. ஜான் பால்)

தமிழகத் தேர்தல் அரசியலில், பாரதிய ஜனதா கட்சி ஒரு சாதாரண விளிம்புநிலை ஆட்டக்காரர் என்பதைவிட வேறொன்றுமில்லை. ஆனால், தனது திராவிட மாடல் அரசியலை குறித்து பெருமிதம் கொள்ளும் இம்மாநிலத்தில், அந்தக் காவிக் கட்சியின் இந்துத்துவக் கொள்கை மிகவும் ஆழமாக வேரூன்றி வளரும் நிலையில் அதற்கு இதனை சொல்ல இயலாது. கடந்த 2014 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்றதிலிருந்து கிறிஸ்தவர்கள் மற்றும் அவர்கள்தம் நிறுவனங்களுக்கு எதிரான குற்றச்செயல்கள் தமிழகத்தில் அதிர்ச்சியளிக்கும் வகையில் அதிகரித்து வருவதாக கடந்த ஆகஸ்ட் மாதம் உச்சநீதிமன்றத்தில் கிறிஸ்தவ அமைப்புகள் தாக்கல் செய்த பொதுநல வழக்கு (PIL) தெளிவாகக் குறிப்பிடுகிறது.

‘த நியுஸ் மினிட்’(TNM) களத்தில் இறங்கி, மாநிலத்தில் கிறித்தவ-விரோத வன்முறையின் கூற்றுகளை விசாரிக்க முடிவு செய்தபோது, மாநிலத்தின் உட்பகுதிகளில் மதவெறுப்பு சித்தாந்தத்தின் வலுவான தடயங்களை மட்டும் நாங்கள் கண்டறியவில்லை; அதோடு காவல்துறையும் அதிகார வர்க்கமும் கிறிஸ்துவ மறைபணியாளர்களிடம் (மிஷனரிகளிடம்) விரோதமாக நடந்து கொள்ளும் சம்பவங்களைக் கண்டுபிடித்தோம்.

 

மாநிலம்

2019

2020

2021

2022

உத்தரப் பிரதேசம்

73

71

105

121

தமிழ்நாடு

56

17

21

26

சத்தீஸ்கர்

36

66

91

85

கர்நாடகா

27

16

62

27

ஜார்கண்ட்

23

28

46

39

தெலுங்கானா

18

6

3

3

மகாராஷ்டிரா

15

9

17

6

ஆந்திரா

19

8

9

6

கேரளா

2

0

0

0

2019 ஆம் ஆண்டில், கிறிஸ்தவர்களுக்கு எதிரான வெறுக்கத்தக்க குற்றங்களில் உத்தரபிரதேசத்திற்கு அடுத்தபடியாக தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் இருந்தது, (அட்டவணையைப் பார்க்கவும்) பொதுநல வழக்கின் மனுதாரர்களில் ஒருவராக உள்ள ஐக்கிய கிறிஸ்தவ முன்னணி (United Christian Forum) தொகுத்தளித்த புள்ளிவிவரங்களின்படி வெறுப்புக் குற்றங்களில் பெரும்பாலானவை பாஜக ஆளும் மாநிலங்களிலோ அல்லது அக்கட்சி வலுவாக உள்ள மாநிலங்களிலோ பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்தப் போக்கிற்கு தமிழ்நாடு மட்டும் விதிவிலக்காக தன்னை முன் நிறுத்துகிறது.

UCF இன் கூற்றுப்படி, 2014 மற்றும் 2022 க்கு இடையில் தமிழ்நாட்டில் 227 மதவெறுப்பு குற்றங்கள் நடந்துள்ளன. இதில் கிறிஸ்தவ சமூகங்களும், மறை போதகர்களும் மற்றும் கிறிஸ்தவ ஆலயங்களும் இந்துத்துவா அடிப்படைவாதிகளால் குறிவைக்கப்பட்டன. இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்டப்பூர்வமாக உதவிட ஜனவரி 2015-ல் தொடங்கப்பட்ட UCF இன் கட்டணமில்லா தொலைபேசி உதவி எண் மூலம் சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த அறிக்கைகள் உருவாக்கப்பட்டுள்ளன. UCF அறிக்கையானது செபவழிபாட்டிற்கு இடையூறு விளைவித்தல், கிறிஸ்தவ நம்பிக்கையாளர்களைத் தாக்குதல், மறைபோதகர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களைத் தாக்குதல் / துஷ்பிரயோகம் செய்தல் மற்றும் ஆலயங்களைச் சேதப்படுத்துதல் போன்ற பல வன்முறை நிகழ்வுகளை உள்ளடக்கி சுட்டிக்காட்டுகிறது.

இவற்றில் ஏறக்குறைய பாதி வன்முறை நிகழ்வுகள் (117) கொங்கு மண்டலமான கோயம்புத்தூர் மற்றும் அதனருகிலுள்ள பகுதிகளான ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், திருப்பூர் ஆகிய மாவட்டங்களிலும் மதுரை மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளிலிருந்து பதிவாகியுள்ளன. நிலபுலன்கள் மற்றும் அரசியல் செல்வாக்கு பெற்ற கவுண்டர் மற்றும் தேவர் சாதியினரால் ஆதிக்கம் செலுத்தப்படும் இப்பகுதிகள், ஏழை தலித் மக்களுக்கு எதிரான ஒடுக்குமுறை செயல்பாடுகளுக்கு பெயர் போனது.

செபவழிபாடு கூட்டங்கள் நடத்துவதற்கு முன்தொகை செலுத்தி ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு வாடகைக்கு எடுத்த இடங்களிலிருந்து தாங்கள் வெளியேற்றப்பட்டதாகவும், மதமாற்றம் என்ற பொய்க்குற்றத்தைச் சுமத்தி இந்துத்துவா சக்திகளால், குறிப்பாக இந்து முன்னணியினரால் தாங்கள் தாக்கப்பட்டதாக பகிர்ந்து கொண்ட போதகர்களை நாங்கள் சந்தித்தோம். இப்பகுதியில் நடந்த பல தாக்குதல்களின் பின்னணி ஏறக்குறைய ஒரே மாதிரியாக உள்ளது: ஒரு தேவாலயம் அல்லது செபவழிபாடு கூட்டத்தைக் கண்டுபிடித்தல், மதமாற்றம் செய்யப்படுவதாக அங்கே குடியிருக்கும் சக இந்துக்களைத் தூண்டுதல். பிறகு தேவாலயங்கள், மறைபோதகர்கள், அவர்களது குடும்பங்கள் மற்றும் செபவழிபாட்டுக் கூடங்களைச் சுற்றி வளைத்து திடீரென்று தாக்குதல், அதன்பிறகு காவல்துறையை ஈடுபடுத்துதல், அடுத்து, இந்நிலை தொடர்ந்தால் மேலும் வன்முறை நடக்கும் என்று அச்சுறுத்தி நிலம் \ வீட்டு உரிமையாளரைக் கட்டாயப்படுத்தி கிறிஸ்தவர்களை அங்கிருந்து வெளியேற்றுதல் என்று கிறிஸ்தவர்களுக்கு எதிரானச் செயல்பாடுகள் தொடர்கின்றன.

கிறிஸ்தவ எதிர்ப்பு வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களை அணுகுவது கடினம் அல்ல என்றாலும், வன்முறையாளர்களிடமிருந்து கேட்க நாங்கள் மிகவும் ஆர்வமாக இருந்தோம். தமிழ்நாட்டின் இந்துத்துவா ஆய்வகமும், இந்து முன்னணியின் கோட்டையுமான கோயம்புத்தூருக்கு எங்களின் தேடல் எங்களை அழைத்துச் சென்றது. கொங்கு மண்டலமான கோயம்புத்தூர் 42 மதவெறுப்புக் குற்ற நிகழ்வுகளுடன் முதலிடத்தில் உள்ளதாக UCF அறிக்கை தெரிவிக்கிறது. இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையிலான தீவிர வகுப்புவாத வன்முறை கோயம்புத்தூரில் வழக்கமானதாக இருந்தாலும், கிறிஸ்தவ எதிர்ப்பு வன்முறை என்பது இங்கு நடைபெறும் புதிய நிகழ்வே. மேலும் இவற்றை தீவிரமாக்குவதில் இந்து முன்னணியினர் முதன்மையாக உள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்து முன்னணி

1980களின் முற்பகுதியில் தொடங்கப்பட்ட ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (RSS) ஒரு போராட்டக் குழுவாகக் கருதப்படும் இந்து முன்னணி 1990களின் முற்பகுதியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் (அதிமுக) முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அரசாங்கத்தின் மறைமுக ஆதரவுடன், விநாயக சதுர்த்தி விழாக்களை ஏற்பாடு செய்வதன் மூலம் அதிவேகமாக வளர்ந்தது. மிகப்பெரிய ஊர்வலங்களை நடத்துவதை உள்ளடக்கிய இந்த விழாக்கள், முஸ்லீம்கள் அதிக அளவில் வசிக்கும் குடியிருப்புகள் வழியாகச் செல்லுமாறு விழா அமைப்பாளர்கள் வற்புறுத்தியதால், பெரும்பாலும் கலவரங்களாகவே இவ்விழாக்கள் நடந்தேறியுள்ளன. ஆனால், கடந்த 10 ஆண்டுகளாக, இந்து முன்னணியினர் தங்கள் கவனத்தை கிறிஸ்தவர்கள் மீது செலுத்தத் தொடங்கியுள்ளனர் என்று பெயர் வெளியிட விரும்பாத, கோவையில் உள்ள உயர் காவல்துறை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

நகரின் ஒவ்வொரு சுற்றுவட்டாரத்திலும் உள்ள கிறிஸ்தவ  சமூகத்தைக்  கண்காணிக்க ஒரு நபர் நியமிக்கப்பட்டுள்ளார் என்று இந்து முன்னணி அமைப்பின் கோவை தெற்கு மாவட்ட செயலாளர் கோவிந்தராஜ் நடராஜன் தெரிவித்தார். “கோவையில் உள்ள 100 வார்டுகளிலும் இந்து முன்னணி உறுப்பினர்களை நியமித்துள்ளோம். இந்து அல்லாத ஒருவர் நகரத்தின் எந்த வார்டில் குடியேறினாலும் எங்களுக்கு உடனடியாகத் தகவல் தரப்படும். அவர்கள் அங்கு மதமாற்றத்தில் ஈடுபடுகிறார்களா அல்லது சாதாரண வாழ்க்கையை நடத்துகிறார்களா என்பது எங்களுக்குத் தெரியப்படுத்தப்படும்.

இந்த வார்டு கண்காணிப்பாளர்களைப் பற்றி அறிந்த காவல்துறையினர், அவர்கள் அதிக பயிற்சிப் பெற்றவர்கள் என்று கூறுகின்றனர். “வன்முறை வெடிக்கும் போது நீங்கள் அவர்களை காண்பது அரிது. ஏனெனில் அவர்கள் வன்முறையை தலைமை தாங்கி நடத்துவதற்காகக் கண்காணிப்பாளர்களாக இல்லை. மாறாக சமூகத்தில் அமைதியாகப் பணியாற்றுவதும், வன்முறையில் ஈடுபடுவதை விட வன்முறையைத் தூண்டுவதும்தான் அவர்களின் பங்கு” என்கிறார் கோவையில் உள்ள மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர்.

கோவிந்தராஜ் நடராஜனை மைலேரி பாளையத்தில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தது ஒரு வித்தியாசமான அனுபவம். பலத்த மழை பெய்த போதும்கூட அவர் எங்களை சாலையோர டீக்கடையில் இரண்டு மணி நேரம் காத்திருக்க வைத்தார். த நியுஸ் மினிட் (TNM) இறுதியாக அவரது இல்லத்திற்குள் நுழைய அனுமதிக்கப்பட்ட போது, இந்து முன்னணி தலைவர் எங்கள் நிருபரின் புகைப்படத்தையும் வீடியோவையும் கேட்டார்; மேலும் எங்களின் வருகை குறித்து அமைப்பில் உள்ள தனது மேலதிகாரிகளுக்கு ஏற்கனவே தெரிவித்திருந்தார். கோவிந்தராஜ் இல்லத்தில் இருந்த முன்னணி உறுப்பினர்கள், கிறிஸ்தவர்களுக்கு எதிராக இந்து முன்னணி அணிதிரள்வது குறித்து ஓர் ஆங்கிலச் செய்தி நிறுவனம் நேர்காணல் பெற வந்திருப்பது கண்டு மிகவும் சந்தேகத்துடனும் பதற்றத்துடனும் காணப் பட்டனர்.

இருப்பினும், நாங்கள் இறுதியாக ஒருவரையொருவர் சந்திக்க வந்தபோது, கோவிந்தராஜ் வியக்கத்தக்க வகையில் அன்பாகவும், கிறிஸ்தவர்களுக்கு எதிரான தனது குழுவின் பிரச்சாரத்தைப் பற்றி பேச ஆர்வமாகவும் இருந்தார். “இந்தப் பகுதி கவுண்டர் சாதியைச் சேர்ந்தவர்களால் நிரம்பியுள்ளது, எனவே நீங்கள் இங்கு சாதிப் பாகுபாட்டைக் காண முடியாது,” என்று அவர் கூறினார்.

“எங்கள் ஊரில் சில வருடங்களுக்கு முன்பு இரண்டு மூன்று கிறிஸ்தவ குடும்பங்கள்தான் இருந்தன. ஆனால், தற்போது, நாற்பதுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் கிறிஸ்தவ மதத்தில் நம்பிக்கை கொண்டுள்ளனர். சமீப காலமாக மதமாற்றம் அதிகரித்து வருகிறது. மதமாற்றம் தி.மு.க., ஆட்சியில்தான் உச்சகட்டத்தை அடைந்துள்ளது” என்றார். 17 ஆண்டுகளாக இந்து முன்னணியில் இருந்து வரும் கோவிந்தராஜ், சிறுபான்மை சமூகத்திற்கு எதிரான தாக்குதல்களில் இந்து முன்னணி ஈடுபடவில்லை, மாறாக, இந்து மதத்திற்கு ஏற்படும் அச்சுறுத்தல்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்துக்கள் மத்தியில் இந்து முன்னணி பணியாற்றியதாக அவர் கூறினார். சட்டவிரோதமாக செயல்படும் தேவாலயங்களுக்கு எதிராக காவல்துறையினரிடம் புகார் அளிப்பது மட்டுமே இந்து முன்னணியினரின் வேலை என்று கூறினார்.

கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் குறித்து பதிலளித்த அவர், ‘இது சாதாரண இந்துக்கள் தன்னிச்சையாக எதிர்வினையாற்றியதன் விளைவு’ என்று கூறினார். “இந்துக்களுக்கும், இந்துக்களை கிறிஸ்தவர்களாக மாற்ற முயற்சிக்கும் மக்களுக்கும் இடையே எப்போதும் ஒருவித பதற்றம் இருப்பதை நாங்கள் மறுக்க முடியாது. இந்து முன்னணி தலைவர்கள் எந்த ஒரு வன்முறையிலும் ஈடுபட்டதில்லை. ஆனால், இந்து தெய்வங்களை இழிவுபடுத்தும் மதபோதகர்களை சாதாரண இந்து மக்கள் உட்கார்ந்து வேடிக்கை பார்க்க முடியுமா?’ என்று அவர் கேட்டார்.

"நாங்கள் இந்து மதத்தைப் பற்றிய படிப்பினைகளை மக்களுக்குக் கற்பிக்கிறோம், மேலும் பாரம்பரிய வழிபாட்டு முறைகளை நம்பவும், பின்பற்றவும் அறிவுறுத்துகிறோம். எங்கள் மதத்தின் நன்மைகளை பட்டியலிட்டு துண்டு பிரச்சாரங்களை வெளியிட்டு தலித் சமூகத்தினருக்கு அதிக விழிப்புணர்வை அளிக்கிறோம்” என்று கோவிந்தராஜ் வன்முறையை நியாயப்படுத்தினார். "இப்போது விழிப்புணர்வு ஏற்பட்ட பிறகு, அவர்கள் மதபோதகர்களுக்கு எதிராக கேள்விகளைக் கேட்கத் தொடங்கியுள்ளனர். இந்து தெய்வங்களை அவமதிக்கும் போது, இந்துக்கள் தகுந்த பதிலடி கொடுக்கின்றனர்” என்று கூறினார்.

கோவிந்தராஜின் மேலதிகாரியான, இந்து முன்னணியின் சக்திவாய்ந்த கோவைப் பொதுச் செயலாளர் ஜெயசங்கரைச் சந்தித்தபோது, "இந்து முன்னணிக் குழு அனைத்து கிறிஸ்தவர்களுக்கும் எதிரானது" என்ற கருத்தை மறுத்தார். கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் மற்றும் புராட்டஸ்டன்ட்டுகளுடன் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் பெந்தகோஸ்தே மிஷன் போன்ற மதத்தை பரப்பும் குழுக்களின் பரவலை சரிபார்த்தே ஆக வேண்டுமெனக் கூறினார். அவரது கருத்தை நிரூபிக்க, அவர் தனது புராட்டஸ்டன்ட்டு கிறிஸ்தவ நண்பரை இந்த பேட்டிக்கு அழைத்து வந்திருந்தார்.

“இங்க பாருங்கள், என் நண்பன் ஸ்டாலினைப் பாருங்கள். இவரும் கிறிஸ்தவர்தான், சின்ன வயசுல இருந்தே நாங்க நண்பர்கள். இவர் எங்களை கிறிஸ்மசுக்கு அழைக்கிறார், நாங்கள் இவரை தீபாவளி மற்றும் பொங்கலுக்கு அழைக்கிறோம். இவரோ அல்லது இவரது குழுவினரோ எந்த விதமான மதமாற்றத்திலும் ஈடுபடுவதில்லை” என்று ஜெயசங்கர் கூறினார். ஸ்டாலின் பேட்டியில் அமர்ந்து, பெந்தகோஸ்தே மிஷன் போன்ற மதத்தை பரப்பும் குழுக்களுக்கு எதிராக தனது நண்பர் ஜெயசங்கர் கூறியதை ஏற்றுக்கொண்டார்.

இந்து முன்னணியின் மாநில செயற்குழு உறுப்பினராக 25 ஆண்டுகளாக அக்குழுவில் இருக்கும் சதீஷையும், நாங்கள் சந்தித்தோம். அவர், “மாநிலத்தில் 70களின் பிற்பகுதியிலும், 80களின் முற்பகுதியிலும் மதமாற்றம் உச்சத்தை எட்டியது. ஆனால், இந்து முன்னணி இந்துக்களுக்கு பாதுகாப்பு தூணாக உருவான பிறகு மதமாற்ற விகிதம் குறைந்தது. மதம் மாற பல்வேறு பொருட்கள் வழியாக மக்கள் தூண்டுப்படுகின்றனர் என குற்றம்சாட்டிய அவர், “ராமாயணம், மகாபாரதம் போன்றவற்றைப் படிக்கத் தயக்கம் காட்டும் இந்துக்கள், கிறிஸ்தவ மதத்துக்கு மாறியவுடன் எந்தத் தயக்கமும் இன்றி பைபிளை முழுவதுமாகப் படிக்கிறார்கள். பணம் எப்படி மக்களை மாற்றுகிறது என்று பாருங்கள்’ என்று கூறினார்.

கோவையைச் சுற்றியுள்ள பேரூர், ஆலந்துறை, தொண்டாமுத்தூர், ஆனைகட்டி, புலியகுளம், சிவானந்தா காலனி, சரவணம்பட்டி, அறிவொளி நகர், மைலேக்கல், செட்டிபாளையம், கலைஞர் நகர் மற்றும் சமத்துவபுரம் போன்ற தலித் மற்றும் ஆதிவாசி மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளை தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் அவர் கூறினார்.

கோவையைச் சேர்ந்த வழக்கறிஞர் ரா. முருகவேல் கூறியதாவது: அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்த காலக்கட்டத்தில் மதங்களுக்கு இடையே உறவுகளில் பெரும் சரிவு ஏற்பட்டது. “எடப்பாடி பழனிசாமியின் பெயரால் கோவையை ஆட்சி செய்தது பாஜகதான்” என்று கூறிய அவர், கடந்த பத்தாண்டு கால அதிமுக ஆட்சியில் பல விஷயங்கள் மோசமாக மாறிவிட்டன’ என்றார்.

“நகரத்தின் தெருக்களில் மதபோதகர்கள் நற்செய்தியைப் பரப்புவதைப் பார்ப்பது வழக்கம்; ஆனால் இனி அப்படி நடக்காது,” என்று அவர் கூறினார். இந்து கோவில் தேர்கள் பல ஆண்டுகளாக எவ்வித எதிர்ப்பும் இல்லாமல் கிறிஸ்தவ குடியிருப்புகளைக் கடந்து செல்லும். ஆனால் இதனால் சமூகங்களுக்கு இடையே ஏற்பட்ட பதட்டங்களால், இந்த நடைமுறையை இப்போது காண்பது அரிதாகிவிட்டது. “கடந்த நான்கு ஆண்டுகளில், இதுபோன்ற எந்த ஊர்வலத்தையும் என்னால் காண முடியவில்லை. உண்மைதான், இந்த ஊர்வலங்கள், இந்து அடிப்படைவாதிகளின் ஆதரவுடன், காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் மறைமுக ஆதரவுடன் கிறிஸ்தவ குடியிருப்புகளுக்குள் வலுக்கட்டாயமாக நுழைய முயற்சித்தபோது பல அசம்பாவித நிகழ்வுகள் நடந்தேறி உள்ளன,” என்று முருகவேல் கூறினார்.

திராவிட அரசியல் - அதிகாரத்துவம் என்ன ஆனது?

உச்சநீதிமன்றத்தில் கிறிஸ்தவ அமைப்புகள் தாக்கல் செய்த மனுவுக்கு, மத்திய உள்துறை அமைச்சகம் கடுமையாக பதிலளித்தது மற்றும் ஊடகங்களில் விவாதிக்கப்பட்ட செய்திகளின் அடிப்படையில் அவர்களின் தரவு அரைகுறையாக உள்ளது என்று கூறியது. உச்ச நீதிமன்றத்தில் உள்துறை அமைச்சகம் தனது பிரமாணப் பத்திரத்தில், “இதுபோன்ற ஏமாற்று மனுக்களை தாக்கல் செய்து, நாடு முழுவதும் அமைதியின்மையை உருவாக்குவதிலும், நமது நாட்டின் உள்விவகாரங்களில் தலையிடுவதற்கும் வெளி நாடுகளில் இருந்து உதவி பெறுவதில் சில மறைமுகமான செயல்திட்டம் இருப்பதாகத் தெரிகிறது ” எள்று கூறியுள்ளது.

மத்திய அரசின் வழக்கறிஞர், மனுவில் கூறப்பட்டுள்ள பிரச்சனைகளை மாநிலங்களில் உள்ள அதிகாரிகளாலே எளிதாகக் கையாள முடியும் என்றும் வாதிட்டார். இவரின் வாதம் தமிழ்நாட்டின் காவல்துறை மற்றும் மாநில நிர்வாகத்தை இன்னும் உன்னிப்பாகக் கவனிக்க வழிவகுத்தது.

மாநிலத்தின் குற்றப் புள்ளிவிவரங்களின் ஒரு சுவாரஸ்யமான அம்சம் என்னவென்றால், கிறிஸ்தவர்களுக்கு எதிரான தாக்குதல்கள் அரிதாகவே மதவெறுப்புக் குற்றங்களாக அல்லது வகுப்புவாத வன்முறையாகக் கணக்கிடப்படுகின்றன. பல வழக்குகளில், வன்முறையாளர்களுக்கும்,பாதிக்கப் பட்டவர்களுக்கும் இடையே காவல்துறையினர் சமரசம் செய்து வருவதாக முருகவேல் கூறினார். சென்னையைச் சேர்ந்த சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞரும், முன்னாள் அரசு வழக்கறிஞருமான ஒருவர் கூறுகையில், ‘காவல்துறையும் வழக்குகளில் உள்ள தீவிரத்தைக் குறைத்து பதிவு செய்கிறது. அவர்கள் வழக்குகளை பதிவு செய்யும் சமயங்களில், இந்திய தண்டனைச் சட்டத்தின் (IPC) பிரிவுகளான 295 (வழிபாட்டுத் தலத்தை நாசம் செய்தல்), 295 A (மத உணர்வுகளை சீர்குலைத்தல்), 296 (மதக்கூட்டங்களுக்கு இடையூறு விளைவித்தல்), 153 (கலவரத்தைத் தூண்டுதல்) மற்றும் 153 A (மதக்குழுக்களிடையே பகைமையை ஊக்குவித்தல்),” போன்ற மத வன்முறைக்கு எதிரான சட்டங்களை கையாள்வதைத் தவிர்க்கிறார்கள் என்று மூத்த வழக்கறிஞர் கூறினார்.

தமிழ்நாட்டின் டெல்டா பகுதியில், வன்முறைக்கு ஆளான கிறிஸ்தவர்களுக்கு சட்ட உதவி வழங்கும் மற்றொரு வழக்கறிஞரும் இதே கோரிக்கையை முன்வைத்துள்ளார். வகுப்புவாத வன்முறையைக் கையாள்வதற்கான சட்டப் பிரிவுகளைப் பயன்படுத்தாததன் மூலம், நன்கு திட்டமிடப்பட்ட தாக்குதல்களை, தனிநபர்களுக்கு இடையிலான பிரச்சனையாக காவல்துறையினரால் மாற்ற முடியும் என்று இந்த வழக்கறிஞர் கூறினார். “தாக்குதல்களுக்குப் பின்னால் உள்ள அரசியல் உள்நோக்கம் குறித்து, காவல்துறை தனது விசாரணையில் குறைந்தபட்ச கவனத்தையே செலுத்துகிறது. இது வன்முறையைத் தூண்டும் தலைவர்களைப் பாதுகாக்க உதவுகிறது. மேலும் திராவிடக் கட்சிகளுக்கு தமிழ்நாடு ஒரு மதச்சார்பற்ற மாநிலம் என்பதை காட்டிட உதவுகிறது” என்று வழக்கறிஞர் கூறினார்.

புதிய சீடர்களைத் தேடும் மறைப்பரப்பாளர்களுக்கு இந்த வன்முறை மூலமான அச்சுறுத்தல் ஒரு பணிசார்ந்த அபாயத்தைத் தருகிறது. உண்மையில், ஒரு சிலர், நற்செய்தியின்படி தனது நம்பிக்கைக்காக துன்புறுத்தப்பட்ட கிறிஸ்துவைப் பின்பற்ற இது உதவுகிறது என்று சொல்லி இத்தகைய துன்பங்களை விரும்பி ஏற்றுக்கொள்கிறார்கள். ஏனெனில் மறைப்பரப்பாளர்களுக்கு இருக்கும் பெரிய பிரச்சனை என்னவென்றால், செபக் கூட்டங்கள் நடத்தவும், ஆலயங்கள் கட்டவும் மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெறுவதுதான்.

புதிய இடத்தில் செபக் கூட்டங்கள் நடத்துவதற்கு மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற வேண்டும் என்று தமிழ்நாட்டின் கட்டிடச் சட்டங்கள் கூறுகின்றன. இந்த அனுமதிகள் அரிதாகவே செயல்படுத்தப்படுகின்றன. உயர் நீதிமன்ற இணையதளத்தினை நன்கு அறிந்த ஒரு சட்ட ஆய்வாளரின் உதவியுடன், அரசியலமைப்புச் சட்டங்கள் 25-28 பிரிவின் கீழ், மத சுதந்திரத்திற்கான அடிப்படை உரிமையை வலியுறுத்தி, கிறிஸ்தவ அமைப்புகளால் குறைந்தது 100 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பதைக் கண்டறிந்தோம்.

இந்த வழக்குகள், மாநிலத்தின் ஒவ்வொரு பகுதியிலும் வாழும் கிறிஸ்தவர்களால் பதிவு செய்யப்பட்டுள்ளன. “ஒரு மதச் சிறுபான்மையினர் தங்கள் கடவுளை வழிபட அனுமதி பெற வேண்டும்; மேலும் அதற்காக உயர்நீதிமன்றம் வரை செல்ல வேண்டும் என்பது, அந்த சிறுபான்மை சமூகம் சாதாரணமாக துன்புறுத்தப்படவில்லை என்பதையே காட்டுகிறது. அதிகாரவர்க்கமும் இதற்கு துணையாக உள்ளது என்பது வெள்ளிடைமலை,” என்று அவர் கூறினார்.

ஆய்வாளரின் உதவியுடன், கடந்த ஐந்து ஆண்டுகளில் நீதிமன்றங்களால் தீர்க்கப்பட்ட 45 வழக்குகளின் பட்டியலை நாங்கள் தொகுத்தோம். 45 வழக்குகளில் 10 வழக்குகள் மட்டுமே கிறிஸ்தவ மனுதாரர்களுக்கு சார்பாக இருந்தன. திண்டுக்கல்லில் உள்ள ‘பிலீவர்ஸ் சர்ச்’ தொடர்பான வழக்கில், மனுதாரர்களுக்கு, 12 வாரங்களுக்குள் பதிலளிக்க, சென்னை உயர்நீதிமன்ற மதுரை பெஞ்ச் 2020 பிப்ரவரியில், மாவட்ட நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரவின் பேரில் மாவட்ட நீதிமன்றம் இன்னும் செயல்படவில்லை என்று ஆலயத்தின் நிர்வாகிகள் த நியுஸ் மினிட் (TNM) -டம் தெரிவித்தனர்.

மற்றொரு வழக்கில், வாணியம்பாடி நகருக்கு வெளியே உள்ள ஒரு கிராமத்தில், தனது சொந்த நிலத்தில், மறைபோதகர் கிறிஸ்து ஆமோஸ் என்பவர் ஒரு சிற்றாலயத்தைக் கட்டினார். அங்குள்ள இந்துத்துவா குழுவுடன் தொடர்புடைய ஒருவர், மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்து, அந்த ஆலயத்தை இடிக்கக் கோரினார். மாவட்ட நீதிமன்றம் இந்த வழக்கை விசாரிக்க மறுத்தபோது, இந்துத்துவா ஆர்வலர் உயர்நீதிமன்றத்தை நாடினார். உயர்நீதிமன்றம் இந்த வழக்கை பிப்ரவரி 2020 இல் மீண்டும் மாவட்ட நீதிமன்றத்தின் பார்வைக்கே அனுப்பி வைத்தது. இந்த வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லை. மேலும் இறுதி உத்தரவு வரும் வரை மறைபோதகர் கிறிஸ்து ஆமோஸ் அந்த ஆலயத்தில் வழிபாடு நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இக்கிராமத்தில் உள்ள சிறு கிறிஸ்தவ சமூகத்துடன் தொடர்புடைய ஒருவர் TNMமிடம், “இந்த கிராமத்தில் மூன்று இந்து கோவில்கள் தனியார் நிலங்களில் உள்ளன. அங்கு வழிபட அவர்கள் யாரும் எந்த நிர்வாகத்திடம் அனுமதி பெற வேண்டியதில்லை. இந்த விதிகள் சிறுபான்மையினருக்கு என்றே வடிவமைக்கப்பட்டதாகத் தெரிகிறது” என்று கூறினார்.

நன்றி : www.thenewsminute.com

நன்றி : நித்யா பாண்டியன் Nithya Pandian

 

Comment