No icon

தன்னம்பிக்கைத் தொடர்-2

இவர்களால் முடிந்ததென்றால் உங்களாலும்...! 2. நான், நான் தான்!

இவ்வுலகில் ஒவ்வொன்றுக்கும் உதாரணங்கள் உண்டு. இப்படித்தான் வாழ வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டுகள் இருக்கின்றன என்றால், இப்படி வாழக்கூடாது என்பதற்கும் உதாரணமானவர்கள் பலர் உண்டு. இவை அனைத்தும் நன்றாக தெரிந்திருந்தும் தன் விருப்பம் போல் செயல்பட்டு, குட்டுபட்டு, முட்டி குனிபவர்களும் உண்டு. இறுதிவரை தோல்விகளில் வாழ்வோரும் உண்டு. தொடர்ந்து தவறான முயற்சியால் தோற்று, மாண்டு போவோரும் உண்டு.

எல்லாரும் செய்வதைப் போல் செய்து, பிறர் சென்ற பாதையில் பயணிப்பது பாதுகாப்பானது மட்டுமல்ல; சுலபமானதும் தான். இதற்கு தனித்துவமான தாலந்துகள் தேவையில்லை. ஆனால், இதை செய்ய கடவுள் நம்மை படைக்கவில்லை. புதுமையாக செயல்படவே படைத்துள்ளார். குறைந்தபட்சமாக பிறர் செய்வதை வேறுபட்ட கோணத்தில் செய்வதற்காவது முயற்சிக்கலாமே! தன்னால் முடியாது என்று நேற்று ஒருவன் புறந்தள்ளியதைத் தான், இன்னொருவன் இன்று தனது முயற்சியால் சாதிக்கிறான். இது இன்று நாம் காணும் உண்மை.

“எந்த இடத்தில் வசதியாக உணர்கிறீர்களோ அந்த இடத்தை விட்டு விலகிச் சென்று, புதியவற்றைத் தேடத் தொடங்குங்கள்; அதுவே உங்களை வெற்றியாளர்களாக உருவாக்கும்” என்றார் சிந்தனையாளர் ஒருவர். இருக்கும் இடத்தில் வசதியைப் பார்த்துவிட்டால் சோம்பேறியாக மாறி விடுவோம். இந்தச் சோம்பேறித்தனம் நாளடைவில் வறுமைக்கு வழிவகுக்கும். ஒரு குடும்பத்தில் ஒரு சோம்பேறி உருவானாலே அக்குடும்பத்தின் இறங்கு முகப் பயணம் தவிர்க்க முடியாததாக ஆகிவிடும்.

நமது உழைப்பு, நேரம், முயற்சி ஆகியவற்றை செய்யும் பணியில் குவிக்கும்போது, நமது தாலந்துகள் பயன்படுவது மட்டுமின்றி, நமது திறமைகளும் வெளிப்படும். ஆனால், மனிதர்களான நமக்கு ஒரு விரும்பத்தகாத குணம் உண்டு. எல்லாவற்றிலும் நமக்குத்தெரிந்த ஒருசில மனிதர்களோடு நம்மை ஒப்பிட்டு பார்க்கின்றோம்.

இப்படி ஆராய்வதாலும், ஒப்பிடுவதாலும் நம்மை நாம் திரும்பிப் பார்க்க தவறுகின்றோம். நம்முள் இருப்பதை பயன்படுத்த மறக்கின்றோம்.

ஒவ்வொருவரின் படைப்பிலும் மறைந்திருக்கும் ஆழமான நுட்பத்தை நாம் புரிந்து கொள்ளாததால் தான் பிறரோடு ஒப்பிடுவதில் நமது நேரத்தை விரயமாக்குகின்றோம். அவனைப்போல, அவளைப்போல கடவுள் தன்னை உருவாக்கவில்லை என்பதையும் தனக்குக் கொடுத்திருக்கும் திறமை இன்னொருவரிடம் இருப்பதைப் போன்றதும் அல்ல என்பதையும் எப்போது ஒருவன் உணர்வானோ அப்போதிலிருந்து தன்னில் இருப்பதை அவன் பயன்படுத்தத் தொடங்குவான்.

படித்த படிப்போ, அப்பா - அம்மா கொடுத்த ஆலோசனைகளோ, ஆசான் அளித்த அறிவுரைகளோ கொடுக்கப்பட்ட விதத்திலேயே வெளிப்படாது. தனக்குள் இருக்கும் திறமைக்கும், தாலந்துக்கும், விருப்பத்துக்கேற்பவுமே வெளிப்படும். இதைப்புரிந்து கொள்வது கடினமானதல்ல. எல்லாவித வசதிகளும், சொகுசுகளும் கொடுக்கப்படுவதால் ஒருவர் திறமைசாலியாக உருவாவது இல்லை. எதுவுமே இல்லாத நிலையிலும் சிலரிடம் திறமைக்கும், சாவர்யத்துக்கும் பற்றாக்குறை வருவதில்லை.

ஒவ்வொருவரிடமும் என்ன இருக்கின்றதோ அதை முழுமையாக பயன்படுத்தும் போது, அவரவர் தனித்தன்மை வெளிப்படும். சேற்றிலிருந்து செந்தாமரை முளைப்பதும், ஆண்டி அரசன் ஆவதும், அரசன் ஆண்டி ஆவதும் தவிர்க்க முடியாதவை. சிலருடைய வாழ்க்கையில் எதிர்பாராமல் வரும் திருப்பு முனைகள் அவர்களுக்குள் உறங்கிக் கிடக்கும் திறமைகளுக்கு உயிரோட்டம் கொடுத்து, புதிய பாதையை நோக்கி அவர்களை வழிநடத்தும்.

‘இவ்வளவு தூரத்துக்கு வளர்வேன் என நானே நினைக்கவில்லை’ என சிலர் ஆச்சரியமாகவும், மகிழ்ச்சியாகவும், நிறைவாகவும், நன்றியுணர்வோடும் பேசுவதை நாமும் கேட்டிருப்போம். சில வெற்றியாளர்களின் பேட்டிகள் அவ்வப்போது, சமூக ஊடகங்கள் மூலமாக வெளிவருவது உண்டு. அவற்றை நாம் ஆழ்ந்து கவனித்தால் நாம் நினைத்தே பார்க்காத சில உண்மைகளை நாமும் உள்வாங்க முடியும்.

ஒரு வாலிபன் வேலைக்கான ஒரு நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ள முடிவெடுத்தான். எப்படியோ படித்து, ஒரு பட்டம் வாங்கியிருந்தான். அவனது அப்பா, அம்மா தேனீர் கடை நடத்துபவர்கள். அவர்களிடம் சென்று தான் நேர்முகத் தேர்வுக்குச் செல்லப் போவதாகச் சொல்ல, அவசர அவசரமாக சிறிது காசு எடுத்துக் கொடுத்தாள் அவனது அம்மா. இது அவ்வப்போது நடக்கும் வாடிக்கை. தன்னிடம் இருந்த ஒரே நல்ல சட்டையை இருமுறை அயன் செய்து, மிடுக்காக அணிந்து சென்றான். அங்கே சென்ற போது தான் தெரிந்தது. வந்திருந்த அனைவரும் தன்னை விட நேர்த்தியாக, அழகாக, கம்பீரமாக இருந்தார்கள். கடைசி நபராக இவனது பெயர் அழைக்கப்பட்டது. வழக்கம் போல, இவன் பெற்றிருந்த குறைந்த மதிப்பெண்களைப் பார்த்துவிட்டு, சான்றிதழ்களைத் திரும்ப கொடுக்கும் போது, வெளியிடங்களில் இதுவரை வாயைத்திறந்து பேசாதவன் முதல் முறையாக வாயைத் திறந்தான். எனக்கு நீங்கள் வேலை தாருங்கள் என்று கேட்கவில்லை. இங்கே இருப்போர், வருவோர், போவோருக்கு தேனீர் வினியோகிக்க அனுமதி தாருங்கள் என்றான்.

இதுவரை யாரும் கேட்காத ஒன்றை இவன் கேட்டதால் ஆச்சரியப்பட்ட நிர்வாகத்தினர் அனுமதி கொடுத்தனர். வேலை கிடைத்த நிறைவோடு தெருவில் நடந்தான். கையில் எதுவுமில்லை. ஆனால், மனம் நிறை நம்பிக்கை இருந்தது. சற்று தொலைவில் இருந்த ஒரு தேனீர் கடையை அணுகினான். தனது நிலையைச் சொல்லி, 20 தேனீரும், பத்து ரொட்டியும் தந்து உதவுமாறு கேட்டான். இவனது கபடற்ற முகத்தையும், தன்னம்பிக்கையையும் பார்த்த கடைக்காரரும் அவன் கேட்டவற்றை அவனுக்குக் கொடுத்து உதவினார்.

நேர்முகத் தேர்வுக்குச் சென்ற இடத்தில் தேநீர் விற்க தொடர்ந்து அனுமதி கிடைத்தது மட்டுமல்லாமல், தேவையான முன்பணமும் கொடுத்துதவினர். நாட்கள் கடக்க, கடக்க பக்கத்து அலுவலகம், பக்கத்து ஊர், நகரம் என ஆர்டர்கள் பெருக ஆரம்பித்தன. அவன் பிரபலமானான். கட்டுக்கதையல்ல; இது உண்மை நிகழ்வு. அவனுக்குள் இருந்த உண்மையான அவன் விழித்துக் கொண்டான். இந்தக் கிராமத்து வாலிபனால் முடிந்தது என்றால் உங்களாலும் கண்டிப்பாக முடியும்.

இன்று பல கோடிகளுக்குச் சொந்தக்காரர்களாகிய உலக நாடுகளின் கவனத்தை ஈர்க்கும் K.F.C, வசந்த் & கோ, சரவணா ஸ்டோர் போன்ற நிறுவனங்கள் அனைத்தும் அவற்றைத் தொடங்கியவர்களின் மனதில் தூண்டப்பட்ட புதுமையான எண்ணங்களின் விளைவுகளே.

தனக்கான தாலந்துகளைப் பயன்படுத்தி, ஆக்கப்பூர்வமான எண்ணங்களைச் செயல்படுத்த முயலும் போது, அடைபட்ட வாயில்களும் திறக்கும். புதிய பாதைகளும் உருவாகும். தன் செயல்பாடுகளில் நம்பிக்கை, நாணயம், நேர்மை ஆகிய பண்புகளைக் கலக்கும் போது தொடங்கும் தொழில் எதுவாக இருந்தாலும், ஆற்றும் பணி எதுவானாலும் சாதிப்பது மட்டுமல்ல; தலைமுறைகளைக் கடந்து, நீடித்து வளரும்.

இந்த உலகம் எல்லாருக்குமானது. வாய்ப்புகளும் எல்லாருக்கும் வரும். பாரபட்சமற்றது அது; ஆனால், யாருக்கும் அது சொல்லிவிட்டு வருவது இல்லை. நாம்தான் கண்டுகொள்ள வேண்டும். யாருக்காகவும் அது காத்திருப்பதும், தாமதிப்பதும் இல்லை. கடந்து சென்று கொண்டேயிருக்கும்.

எப்போதும் விழிப்பு நிலையில் இருப்பவனே வரும் வாய்ப்பை சிக்கென பிடித்துக் கொள்வான். தவறவிட்டவனும், காலம் தாழ்த்தியவனும் தனக்கு இது தெரியவில்லையே எனப் பிற்காலங்களில் வருந்துவான்.

கற்றவன் கண்ணுக்கு மட்டுமே

வாய்ப்பு தெரியும் என்ற கட்டாயமில்லை!

வசதியானவனைத் தேடி மட்டுமே

வாய்ப்பு காத்திருக்கும் என்ற நிபந்தனையில்லை!

வாலிபப் பருவத்தில் மட்டுமே

வாய்ப்பு வாசலை தட்டும் என்ற உறுதிப்பாடில்லை!

வாய்ப்புகளைப் பயன்படுத்துவது புத்திசாலித்தனத்தோடு தொடர்புடையது. அது ஞானத்தோடு இணைந்தது. ஞானம் கடவுள் கொடுக்கும் கொடை. வாய்ப்பு வரும்போது, புத்திசாலி கண்டுகொள்கிறான். தவறவிட்டவன் தனக்கு அதிர்ஷ்டம் இல்லையென அங்கலாய்க்கிறான். திறமை இருந்தும் சோம்பேறியாக உருவெடுக்கிறான். வாய்ப்பைப் பயன்படுத்தியவனே வெற்றியாளனாக சிகரத்தில் நிற்கிறான்.

(தொடரும்)

Comment