No icon

சரி, பார்த்துக்கலாம்!

2024 - இந்த ஆண்டு நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு நிறையக் காணொளிகள் இந்தியாவின் வரலாறாக இருக்கும் இளைஞர்களின் கருத்துகளை வெளிப்படுத்தும் ஒன்றாக இருந்தன. அதில் நிறைய இளைஞர்களின் உள்ளக் குமுறலாக இருந்தது, ‘தகுதியான படிப்பு படித்தும் வேலைவாய்ப்பு இன்றி வயிற்றுப் பிழைப்பிற்கு ஏதோ ஒரு வேலையைச் செய்து வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருக்கிறோம்என்பது.

மற்றோர் இளைஞர் சொல்கிறார்: “நம் நாட்டுத் தலைவர்கள் மக்களைப் பற்றிக் கவலைக் கொள்ளாமல், தங்களைப் பற்றியே அதிகம் கவனம் செலுத்துகிறார்கள். எனவேதான் வரலாறு காணாத வேலையின்மை, தகுதியிருந்தும் வாய்ப்பின்மை, அனைத்து நிலைகளிலும் அடித்தட்டு மக்கள் தொடர்ந்து அடக்கப்படும் நிலை இவைகளைக் காணும்போது மிகுந்த கோபம் வருகிறது. ஆனால் இவர்களோடு சண்டை போட்டு நேரத்தை வீணாக்கினால், அன்றைய ஒரு வேளை உணவு கூட எனக்குக் கிடைக்காமல் போய்விடும். எனவேதான் வெந்ததைத் தின்று விதி வந்தால் செல்வோம் என நாள்களை நகர்த்துகிறேன்.” இவைதாம் பெரும்பாலான இந்திய இளைஞர்களின் அழுகுரல்கள்! இவற்றை யாராவது சரி செய்வார்களா?

2014 - ஆம் ஆண்டு ஜூலை 15-ஆம் நாளை ஐக்கிய நாடுகள் சபை அகில உலக இளையோர் திறன் மேம்பாடு நாளாக அறிவித்தது. குறிப்பாக, இந்த ஆண்டுஅமைதியும், திறன் மேம்பாடும்என்ற மையக்கருத்தைக் கொண்டு இளைஞர்களை வளர்த்தெடுக்க அழைப்பு விடுக்கிறது. ஏறக்குறைய பத்து ஆண்டுகளைக் கடந்தும் இன்னும் பெரிய மாற்றங்கள் இந்தியாவிலும், வளரும் நாடுகளிலும் ஏற்படவில்லை. காரணம், ‘சரி பார்த்துக்கலாம்!’ என்ற அரசியல் தலைவர்களின் அலட்சியப் போக்கு. தொழில்நுட்பத்திலும், அறிவியலிலும் தொடர்ந்து வளர்ந்து வரும் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக உள்ளது. ஆனால், வேலைவாய்ப்புகள் மட்டும் பெருகவில்லை. குறிப்பாக, கொரோனா தொற்று நோய்க்குப் பிறகு நிறைய இளைஞர்கள் தங்களின் வேலைகளை இழந்து அன்றாடத் தினக் கூலிகளாக மாறி உள்ளனர். அதிலும் குறிப்பாக, பலர் போதைப் பழக்கத்திற்கு அடிமைகளாக மாறி உள்ளனர். இதை ஒன்றிய அரசு கருத்தில் கொள்ள வேண்டும். இதில் ஒரு சிறிய ஆறுதல், ஒட்டுமொத்த இந்தியாவின் வேலைவாய்ப்பு வசதிகளைக் கொடுப்பதில் தமிழ்நாடு சற்று வளர்ந்துள்ளது. அனைத்து மக்களின் வாழ்வாதாரத்தை வளமாக்கும் மாநிலமாகத் தமிழ்நாடு உள்ளது. இருப்பினும், அரசுப் பணிகள் என்பது கானல் நீராகி விட்டது.

இத்தகைய சூழலில்சரி, பார்த்துக்கலாம்!’ என்று அரசியல் தலைவர்களைப் போல நாமும் கடந்து செல்வதா? அல்லது இளைஞர்களாகிய நாம் தீர்வு காண்பதா?

பெற்றவர்களும், பெரியவர்களும்சரி, பார்த்துக்கலாம்என்று தட்டிக் கொடுத்து உடனிருந்து வழிநடத்துவது என்பது மிக மிக முக்கியமான ஒன்றாக உள்ளது. படிப்பதற்குத் தேவையானவைகளைச் செய்து தரும் பெற்றோரும், ஏட்டுக்கல்வி மட்டும் போதும் என்று வளரும் இளைஞர்களும் ஒன்றைக் கருத்தில் கொண்டு வாழ வேண்டும். ஏட்டுக் கல்வியோடு தொழில் திறன் மேம்பாட்டுக் கல்வியையும் அன்றாடம் சில மணி நேரம் கற்றுக்கொள்ள வேண்டும்.

திறன்களை வளர்த்துக்கொள்வது தனிமனித ஆளுமையை வளர்த்துவிடும், தன்னம்பிக்கையை அதிகமாக்கும், அவசரத் தேவைக்கு கரம் நீட்டும், சில நேரங்களில் அவைகளே பொருளாதாரத்தையும் ஈட்டிக் கொடுக்கும் மற்றும் அடுத்தத் தலைமுறைக்குக் கற்றுக்கொடுக்க வாய்ப்பாக இருக்கும்இதன் வழியாக ஒரு முக்கியமான சமத்துவக் கல்வியை அனைவரும் கற்றுக்கொள்ள முடியும். அதாவது, அலுவலங்களில் குளிரூட்டப்பட்ட அறைகளில் பணி செய்பவரும், வீதியில் கடும் வெயிலில் சாலை அமைப்பவரும், கடை வீதியில் அன்றாட உணவிற்குச் சிற்றுண்டிவிற்கும் முதியவரும் ஒன்றே என்ற, பாகுபாடு அற்ற கருத்தியலை அனைவரிலும் வளர்க்க முடியும்.

சரி, பார்த்துக்கலாம்!’ என்று அலட்சியம் செய்பவர்களுக்கு மத்தியில் தனித்திறன்களை வளர்த்துக்கொண்டு நான் என்னையும், என் சமூகத்தையும் சரியாகவும், சமத்துவமாகவும், சமூக நீதியுடனும் பார்த்துக்கொள்வேன் என்ற மனநிலை அனைத்து இளைஞர் மனத்திலும் ஆழமாகப் பதிய வேண்டும். திறன் வளர்ப்பு என்பது நல்ல மனவளர்ப்பு என்பதை அறிந்து, அன்றாடம் ஒரு திறனை நமக்குப் பிடித்த ஒன்றை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.

படிப்பும், பட்டமும் வேலைவாய்ப்பிற்கான நுழைவுச் சீட்டு மட்டுமே! அதன் அடிப்படையில் வேலைகள் கொடுப்பது என்பது மிக மிகக் குறைவு. தனி ஒருவரின் கல்வித் தகுதியோடு தனித்திறன் தகுதியும் எதிர்பார்க்கும் வேலையைக் கொடுக்கும்.

உழைத்து வாழ வேண்டும்

பிறர் உழைப்பில் வாழ்ந்திடதே!’

என்ற அன்பு நேர்மறை வேண்டுகோளோடும்,

தெண்ணீர் அடுபுற்கை ஆயினும் தாள்தந்தது

உண்ணலின் ஊங்கினிய தில்’ (குறள் 1065)

என்ற வள்ளுவரின் இறைவாக்கினை வாழ்வாக்க உழைப்போம்! உயர்வோம்! அனைத்தையும் சரி, பார்த்துக்கொள்வோம்!

தோழர்களே! இளைஞர்களாகிய நீங்கள் எதிர்பார்த்த வேலைவாய்ப்புகளை ஒருபுறம் தேடுங்கள்; அதேசமயம் வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தும் தொழில் முனைவோராகவும் மாறிட முயற்சி செய்யுங்கள். ஏனெனில், உங்களின் புரட்சிகரமான மற்றும் புதுமையானச் சிந்தனைகளுக்கு நீங்களே உயிர் கொடுக்கலாம். அனைத்து விதமானச் சுரண்டல்களுக்கும் மத்தியில் பொருளாதாரச் சமத்துவத்தையும், இயற்கை நீதியையும், தனிமனித மாண்பையும், மனித உரிமைகளையும் உங்களால் மட்டுமே நிலைநாட்டிட முடியும்.

நீங்கள் அமைதியாக

கடினமாக உழையுங்கள்.

உங்களுடைய வெற்றி

உங்களுக்காகச் சத்தமிடட்டும்” - பிராங் ஓசன்.

Comment