No icon

ஞாயிறு தோழன்

ஆண்டின் பொதுக்காலம் 27ஆம் ஞாயிறு அப 1:2-3, 2:2-4, 2 திமொ 1:6-8, 13-14, லூக் 17:5-10

எங்கள் நம்பிக்கையை மிகுதியாக்கும் என்று ஆண்டவர் இயேசுவிடம் கேட்ட திருத்தூதர்களுக்கு கடுகளவு நம்பிக்கை உங்களுக்கு இருந்தால் நீங்கள் இந்த காட்டு அத்தி மரத்தை நோக்கி,‘ நீ வேரோடு பெயர்ந்து போய் கடலில் வேரூன்றி நில்!’ என்று கூறினால் அது உங்களுக்கு கீழ்ப்படியும் என்று கூறுகிறார். எங்கள் நம்பிக்கையை மிகுதியாக்கும் என்று, திருத்தூதர்கள் ஆண்டவரிடம் வைத்த கோரிக்கை உண்மையாகவே ஆச்சரியத்துக்குரியது. ஏனெனில், ஆண்டவர் இயேசு கிறிஸ்து தன் சீடர்களை பலமுறை அவர்களின் நம்பிக்கை குறைவிற்காக அவர்களை கடிந்து கொண்டிருக்கிறார். உம் திருத்தூதர்களுக்கு பேய்களை விரட்ட தெரியவில்லை என்று மக்கள் கூறியபோது நம்பிக்கையற்ற தலைமுறையினரே இன்னும் எத்தனை காலம் தான் உங்களோடு நான் இருக்க முடியும், இதை பொறுத்துக் கொள்ள முடியும் என்று அவர்களை கடிந்து கொள்ளுகிறார். ஆண்டவரே நீர்தாம் என்றால் நானும் உம்மைப்போல கடலில் நடந்து வர எனக்கு கட்டளையிடும் என்று கோரிக்கைவைத்த பேதுரு அச்சமுற்று கடலில் மூழ்கிய போது நம்பிக்கை குன்றியவனே ஏன் ஐயம் கொண்டாய் என்று பேதுருவை சாடுகிறார். கடல் அலையில் படகு தத்தளித்த போது பயத்தில் அலறியவர்களை நம்பிக்கைக் குன்றியவர்களே என்று, ஆண்டவர் கடிந்து கொள்ளுகிறார். இவ்வாறு, தங்களின் நம்பிக்கை குறைவிற்கு பெயர் போன திருத்தூதர்களின் இக்கோரிக்கை ஆச்சரியம் அளிக்கிறது. அவர்கள் ஆண்டவரோடு இருந்தார்களே தவிர நம்பிக்கையோடு இருக்கவில்லை என்பதையே இது காட்டுகிறது. இன்று நாமும் ஆண்டவரிடம் இருக்கிறோம், ஆலயத்திற்கு வருகிறோம், தினமும் செபிக்கிறோம். ஆனால், நம்பிக்கையோடு இவற்றையெல்லாம் செய்கிறோமா என்று சுய ஆய்வு செய்திட இத்திருப்பலியில் நம்பிக்கையோடு பங்கு பெறுவோம்.

முதல் வாசக முன்னுரை

ஆண்டவரே! நான் எத்தனை நாள் அழுது புலம்புவேன், நீர் என் செபத்திற்கு செவி கொடுக்காமல் இருக்கின்றீரே என்று நாம் வேண்டுகிற பொழுதெல்லாம், எழுதப்பட்ட காட்சிகள் கண்டிப்பாக நிறைவேறும். காலம் தாழ்த்தினாலும் அது நிறைவேறும் என்று நம்பிக்கை கொள்ளுங்கள் என்று இறைவன் பதில் தருகிறார் என்று கூறும் இம்முதல் வாசகத்தைக் கேட்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை

ஆண்டவர் நமக்கு கோழை உள்ளத்தினை தரவில்லை. மாறாக, எத்தகைய துன்பம் வந்தாலும் அவற்றைத் தாங்கிக்கொள்ளும் வல்லமையும், அன்பும், கட்டுப்பாடும் கொண்ட உள்ளத்தையே வழங்கியிருக்கிறார். எனவே, என்ன நேர்ந்தாலும் ஆண்டவருக்கு சான்று பகர்வோம் என்று கூறும், இவ்விரண்டாம் வாசகத்தைக் கேட்போம்.

மன்றாட்டுக்கள்

1. அரணும் கோட்டையுமானவரே!  உமது திரு அவையை வழிநடத்தும் எம் திருப்பணியாளர்களுக்கு  கோழை உள்ளத்தை அல்ல; மாறாக, வல்லமை கொண்ட உள்ளத்தையே தந்திருக்கிறீர் என்பதை உணர்ந்து, உமக்குச் சான்று பகிர்ந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. என்றும் வாழ்பவரே!  நாட்டை ஆளும் தலைவர்கள், தங்கள் பதவி, பணம், அதிகாரம் இவற்றின் மீது நம்பிக்கை வைக்காமல், உம்மீது நம்பிக்கைக்கொண்டு, மக்களை வழிநடத்த வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. எல்லாம் வல்லவரே!  அனுதினமும் நாங்கள் பங்கு கொள்ளும் திருப்பலி மற்றும் திருப்பலியில் நாங்கள் உட்கொள்ளும் உம் திருமகனின் திரு உடலும், திரு இரத்தமும் உம்மீது எங்கள் நம்பிக்கையை அதிகமாக்கிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. அதிசயங்கள் செய்பவரே!  கிறிஸ்தவர்கள் என்பதற்காகவே துன்புறுத்தப்படும் உம் மக்கள் துன்பத்தைக் கண்டு விலகி ஓடாமல், உம்மீது இன்னும் அதிகமான நம்பிக்கைக்கொண்டு, சான்று பகர்ந்திட வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. அன்பின் உருவே இறைவா!  உமது சாயல்களான நாங்கள் வன்முறையிலும், தீவிரவாதத்திலும் நம்பிக்கை கொள்ளாமல், உம் திருமகன் கொண்டு வந்த அன்பிலும், இரக்கத்திலும் நம்பிக்கை உள்ளவர்களாக வாழ்ந்திட வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

Comment