No icon

ஞாயிறு தோழன்

ஆண்டின் பொதுக்காலம் 33ஆம் ஞாயிறு மலா 4:1-2, 2 தெச 3:7-12, லூக் 21:5-19

திருப்பலி முன்னுரை

இன்று நாம் பொதுக்காலத்தின் 33 ஆவது ஞாயிறு திருவழிபாட்டை சிறப்பிக்கின்றோம். எருசலேம் ஆலயத்தை பற்றி பெருமையாக பேசிக் கொண்டிருந்த, யூத மக்களை பார்த்து ஆண்டவர் இயேசு, இந்த ஆலயம் இடிந்துபோகும் நாட்கள் வரும். ஆகவே, அதைப் பற்றி கவலைப்படுவதை விட்டுவிட்டு, வரப்போகும் தீர்ப்பு நாளின் அழிவிலிருந்து உங்களை காத்துக்கொள்ள, இப்போதே மன உறுதியோடு, ஒழுங்கோடு, வாழுங்கள் என்று கூறுகிறார். எருசலேம் ஆலயம் தங்கள் இனத்தின் பெருமைக்குரிய ஒன்றாக யூதர்கள் நினைத்தார்கள். ஏனெனில், ஆபிரகாம் தனது மகன் ஈசாக்கை பலியிட சென்ற மோரியா மலையிலே ஆண்டவரோடு ஏற்படுத்திக் கொண்ட உடன்படிக்கையின் நினைவாக எழுப்பிய பலிபீடத்தின் மேலே இக்கோயிலானது கட்டப்பட்டிருந்தது. இஸ்ரயேல் அரசர்களிலே சிறந்தவராகக் கருதப்பட்ட தாவீது அரசரின் மகன் சாலமோன் கட்டியது. எருசலேம் ஆலயத்தில் குவிந்த காணிக்கைகள், செல்வங்கள் எளிதில் கணக்கிட முடியாதவை. அவ்வளவு வளமான, செழிப்பான ஓர் ஆலயமாக இருந்ததாலே பாபிலோனியர்களும், உரோமையர்களும் படையெடுத்து நகரை அழித்ததோடு மட்டுமல்லாமல், இக்கோவிலையும் சூரையாடி, அழித்துவிட்டு சென்றார்கள். ஆண்டவர் இயேசு முன்னறிவித்தவாரே எருசலேம் ஆலயமானது அழிவை சந்தித்தது. எனவேதான், ஆண்டவர் இயேசு கோயிலின் பெருமையைப் பேசுவதை விட்டுவிட்டு, வரப்போகும் தீர்வை நாளில் ஆண்டவர் தரும் நிலைவாழ்வை பெற்றுக்கொள்ளவும், அழிவிலிருந்து தப்பித்துக்கொள்ளவும் உங்கள் ஆன்மாவை திடப்படுத்துங்கள், ஒழுங்குபடுத்துங்கள் என்று கூறுகிறார். அழகு பார்த்து பெருத்த பொருட் செலவில் நாம் கட்டும் ஆலயங்கள், இறுதிநாளில் அழிந்து போகலாம். ஆனால், தூய ஆவியின் ஆலயமாகிய நமது உடலின் ஆன்மா வாழும் தன்மை கொண்டது. ஏனெனில், அது ஆண்டவருக்கு உரிமையானது. எனவே, தூயதாகப் பெற்ற ஆன்மாவை தூயதாகவே ஆண்டவரிடம் திருப்பி ஒப்படைக்க இத்திருப்பலியில் இறையருளை கெஞ்சி மன்றாடுவோம்.

முதல் வாசக முன்னுரை

ஆண்டவர் தீர்ப்பளிக்கப் போகிற நாள் வரப்போகின்றது. அப்போது ஆணவக்காரர்கள், கொடுமை செய்பவர்கள் தீச்சூலையில் போடப்படுவார்கள். ஆண்டவருக்கு அஞ்சியவர்கள் நிலைவாழ்வு பெறுவார்கள் என்றுரைக்கும் இம்முதல் வாசகத்தைக் கேட்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை

எந்த வேலையும் செய்யாமல் சோம்பேறிகளாக சுற்றித்திரிபவர்களே, உங்களது உணவுக்காக, பாடுபட்டு உழைத்து, ஒழுக்கமாய் வாழ வேண்டும் என்று அறிவுரை கூறும் இவ்விரண்டாம் வாசகத்திற்கு செவிமடுப்போம்.

மன்றாட்டுகள்

1. எங்கள் அருமை நேசரே! உமது திரு அவையை வழிநடத்தும் திருப்பணியாளர்கள், உமது மந்தைகளை நம்பிக்கையிலும், ஒழுக்கத்திலும் சிறந்தவர்களாக கட்டமைத்து, நீர் தரும் நிலைவாழ்வை நோக்கி வழி நடத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. அரணும் கோட்டையுமானவரே! நாடுகளை ஆளும் தலைவர்கள், செல்வங்களை கவின்மிகு கட்டடங்கள் கட்டுவதில் வீணாக்காமல், மக்களின் வாழ்வாதாரங்களை உயர்த்திட பயன்படுத்த வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. எல்லாம் வல்லவரே! எங்கள் பங்கிலும், இல்லங்களிலும் இருக்கும் இளையோர்கள், தீய பழக்கங்களுக்கு அடிமையாகாமல் தங்களது ஆற்றல்களை ஆக்கபூர்வமான செயல்களுக்கு பயன்படுத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. வாழ்வளிப்பவரே! எங்களது உடல் தூய ஆவியின் ஆலயங்கள் என்பதை உணர்ந்து, அதை மதித்து அன்பு செய்திடவும், கொலை, தற்கொலை போன்ற எண்ணங்களிலிருந்து விடுபடவும் இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. அதிசயங்கள் புரிபவரே! இறந்தோருக்கான மாதத்தில் இருக்கும் நாங்கள், எங்கள் இல்லங்களில் இறந்துபோன ஆன்மாக்களுக்காக நாங்கள் ஒப்புகொடுக்கும் இப்பலியை ஏற்று, அவர்களுக்கு நீர் நிலைவாழ்வை தந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

Comment