
பொதுக்காலம் 24 ஆம் ஞாயிறு - 17-09-2023
(சீஞா 27:30-28:7, உரோ 14:7-9; மத் 18: 21-35)
திருப்பலி முன்னுரை
இன்று நாம் ஆண்டின் பொதுக்காலத்தின் 24 ஆம் ஞாயிறு திருவழிபாட்டைச் சிறப்பிக்கின்றோம். ‘இத்தனை முறை அல்ல, எத்தனை முறை வேண்டுமானாலும் நமது சகோதர-சகோதரிகளை நாம் மன்னிக்க வேண்டும்’ என்ற கட்டளையை நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து இன்று நமக்குத் தருகின்றார். எந்த அளவுக்கு நாம், நமது சகோதர- சகோதரிகளை மன்னிக்க மறுக்கின்றோம் என்பதை நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து தாலந்து மற்றும் தெனாரியம் உவமையின் மூலம் விளக்குகின்றார். ஒரு யூதனின் ஒரு நாள் கூலி ஒரு தெனாரியம். 6000 தெனாரியம் ஒன்றுசேர்ந்ததுதான் ஒரு தாலந்து. அப்படியெனில், பத்தாயிரம் தாலந்து எத்தனை தெனாரியத்துக்குச் சமம் என்பதை நாம் கணக்கிட்டுப் பார்க்க வேண்டும். தற்போதைய கணக்குப்படி பத்தாயிரம் தாலந்து என்பது ஒரு மனிதனின் 2 இலட்சம் ஆண்டுகளுக்கான கூலி. நூறு தெனாரியமோ ஒரு மனிதனின் 100 நாள்களுக்கான கூலி. 2 இலட்சம் ஆண்டுகள், அதாவது பத்தாயிரம் தாலந்து கடன்பட்ட ஒரு மனிதனை அரசன் மனமிரங்கி மன்னிக்கிறான். ஆனால், மன்னிக்கப்பட்ட மனிதனோ, தன்னிடம் வெறும் 100 நாள்கள் அதாவது 100 தெனாரியங்கள் கடன்பட்ட மனிதனை மன்னிக்காது, அவனை சிறையில் அடைத்துத் துன்புறுத்துகிறான். இன்று நாம் பிறரை எப்படி மன்னிக்கின்றோமோ, அப்படித்தான் இறைவனும் நம்மை மன்னிப்பார். ஆண்டவர் நம்மை மன்னிக்கத் தயாராக இருக்கிறார், ஆனால், அவரின் மன்னிப்பைப் பெற நாம் தயாராக இருக்கின்றோமா? என்று சிந்தித்தவர்களாய், இத்தனை முறை அல்ல, எத்தனை முறை வேண்டுமானாலும் பிறரை மன்னிக்கும் மனம் வேண்டி இத்திருப்பலியில் பங்கு பெறுவோம்.
முதல் வாசக முன்னுரை
பிறர் நமக்கு எதிராகச் செய்த பாவங்களை மன்னிக்காமல், பழிக்குப் பழி வாங்க வேண்டும் என்ற எண்ணத்தோடு நாம் இருந்தோமென்றால், ஆண்டவரிடமிருந்து அதையே பெற்றுக்கொள்வோம் என்றுரைக்கும் இம்முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.
இரண்டாம் வாசக முன்னுரை
நாம் வாழ்வதும், இறப்பதும் ஆண்டவருக்காகவே. எனவே ஆண்டவருக்குரிய வாழ்வை வாழ்ந்து, அவரது மக்களாய், அவருக்குரியவராய் மாறிட வேண்டும் என்றுரைக்கும் இவ்விரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.
மன்றாட்டுகள்
* வாழ்வை வழங்கும் வள்ளலே! உமது திரு அவையை வழிநடத்தும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் மற்றும் பொதுநிலையினர் பாகுபாடுகள், பிளவுகள் பாராமல், ஒருவரை ஒருவர் மன்னித்து, உமது மன்னிப்பை உலகிற்கு வழங்கிட, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
* எங்கள் விண்ணகத் தந்தையே! எமது நாட்டை ஆளும் தலைவர்கள், அநீதியை எதிர்த்து நிற்கும் மக்களைத் தண்டித்து, பழி வாங்காமல், இரக்கம் காட்டி பகைமை நீக்கி வாழ வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
* இரக்கமுள்ள தந்தையே! எங்கள் பங்கிலும், இல்லங்களிலும், எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்பவரை, நீர் எங்களை மன்னிப்பது போலவே, நாங்களும் முழு மனத்தோடு மன்னிக்க வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
* வரங்கள் பல பொழிபவரே! தேவையற்றக் காரணங்களுக்காகச் சண்டையிட்டு, ஒருவரை ஒருவர் மன்னிக்காமல், மன அமைதியின்றி வாழ்வோரின் உள்ளங்களில், மன்னிப்பை வழங்கும் வரத்தை நீர் உருவாக்கிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
* நீதியின் தேவனே! சிறைச்சாலைகளில், சீர்திருத்தப் பள்ளிகளில், பிறரது மன்னிப்பைப் பெற முடியாமல், மற்றவரை மன்னிக்க முடியாமல் தவித்துக் கொண்டு இருப்பவருக்கு மனநிம்மதியும், அமைதியும் தந்து நீர் வழிநடத்த வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
Comment