No icon

குடந்தை ஞானி

பொருளாதாரத் தடைகள், சிரியா மக்களுக்கு மரண தண்டனைகள்

சிரியா நாட்டுக்கு எதிராக, பொருளாதாரத் தடைகளை நிரந்தரமாக்கிக்கொண்டிருப்பது, அந்நாட்டு மக்களுக்கு மரண தண்டனையாக அமைந்துள்ளது என்று, அலெப்போ இலத்தீன் வழிபாட்டுமுறை மறைமாவட்டத்தின் அப்போஸ்தலிக்க நிர்வாகி ஆயர் ஜார்ஜஸ் அபோ கஷான் அவர்கள் கவலை தெரிவித்துள்ளார்.

சிரியாவின் பாஷர் அல் அசாத்தின் அரசுக்கு எதிராக மேற்கத்திய நாடுகள் பொருளாதாரத் தடைகளை விதித்திருப்பதன் பாதிப்புக்கள் குறித்து பீதேஸ் செய்தியிடம் விளக்கிய ஆயர் ஜார்ஜஸ் அபோ கஷான் அவர்கள், இத்தடைகள், இலட்சக்கணக்கான சிரியா மக்களின் தினசரி வாழ்க்கையின் மீது விதிக்கப்பட்ட மரண தண்டனை என்று கூறினார்.

சிரியாவின் அரசியல் தலைமைத்துவத்திற்கு அழுத்தம் கொடுக்கும்வண்ணம், மேற்கத்திய நாடுகள் நடைமுறைப்படுத்திவரும் பொருளாதாரத் தடைகளை, உறுதிசெய்வது மற்றும் விரிவுபடுத்துவது குறித்த குறிப்பிடத்தக்க தகவல்கள், அண்மை நாள்களில், அமெரிக்க ஐக்கிய நாடு மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வந்துள்ளன என்பதையும், ஆயர் ஜார்ஜஸ் அபோ கஷான் அவர்கள் சுட்டிக்காட்டினார்.

அலெப்போ நகர் போரிடும் தளமாக இருந்த நிலையைவிட, தற்போது அந்நகரம், ஒவ்வொரு நாளும், மிக மோசமான நிலையை அடைந்துவருகின்றது என்றும், வாழ்வதற்குத் தேவையான உணவு, மருந்துகள் உட்பட, அன்றாட அடிப்படைத் தேவைகளின்றி, மக்கள் மிகவும் துன்புறுகின்றனர் என்றும், ஆயர் ஜார்ஜஸ் அபோ கஷான் அவர்கள் குறிப்பிட்டார்.

இதற்கிடையே, இத்தடைகளை தளர்த்துவது குறித்த எந்த தீர்மானத்தையும் அமெரிக்க ஐக்கிய நாடு மேற்கொள்ளவில்லை என்று அந்நாட்டு அரசுப் பேச்சாளர் கூறியுள்ளார். ஐரோப்பிய ஒன்றியமும், 2011 ஆம் ஆண்டிலிருந்து சிரியாவிற்கு எதிரான பொருளாதாரத் தடைகளை நடைமுறைப்படுத்தி வருகிறது.

Comment