No icon

தலையங்கம்

உலக மகா நடிப்புடா சாமி!

உலக மகா நடிப்புடா சாமி!

ஒரே ஒருமுறை பாசிசம் அதிகாரத்தை ருசித்துவிட்டால் அதனை மீண்டும் தனக்காகத் தக்க வைப்பதில் மூர்க்கத்தனமாகப் போராடும். அனைத்து வழிகளிலும் தன் அதிகாரப் பலத்தைப் பயன்படுத்தி தனது மேலாதிக்கத்தை நிலைநிறுத்தும். பாசிசத்தின் அதிகார வெறி ஜனநாயகத்தின் கட்டமைப்பைத் தகர்ப்பதைப் பற்றி துளியளவும் கவலைப்படாது. சமூக அக்கறை கொண்டோரின் குரல்வளையை நெறிக்கும். ஏன் கொலையும் செய்யும். இவற்றிற்கு இத்தாலியின் முசோலினியும் ஜெர்மனியின் ஹிட்லரும் நல்ல முன்னுதாரணங்கள். 

கடந்த ஐந்து ஆண்டுகளாக மத்தியில் ஆட்சிப் பொறுப்பிலிருந்த பாசிச பாஜகவும் இதற்கு விதிவிலக்கல்ல. தேர்தல் நெருங்க நெருங்க பா.ஜ.க. தலைவர்களும் அதன் தாய்வீடான ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் அதன் சகக்கிழத்திகளான (சக்காளத்திகளான) ஏனைய இந்து அடிப்படைவாத அமைப்புகளும் எடுத்து விசுகிற ஒவ்வோர் அஸ்திரமும் பயன்படுத்துகிற யுக்திகளும் அவற்றின் அதிகாரப் பசியை அப்பட்டமாக வெளிச்சம்போட்டு காட்டுகின்றது. எல்லா விதங்களிலும் அவர்கள் வல்லாதிக்கம் செய்யவே துணிகின்றன. அண்மையில் நடந்து முடிந்த மாநிலத் தேர்தல்களில் மத்தியபிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் ஆட்சியை இழந்த நிலையில் அவர்களின் தாக்குதல் பன்மடங்கு உயர்ந்துள்ளது. 

பண முதலைகளிடமிருந்து பன் மடங்கு நன்கொடைகளைப் பெறுவதிலும் பெற்ற நன்கொடைகளைக் கொண்டு தங்களது அடிப்படைக் கட்டமைப்புகளை வலிமைப்படுத்துவதிலும் எதிர்கட்சிகளின் இருப்பை நிராகரிக்கிற அளவுக்கு மீடியாக்களில் கவனத்தைப் பெறுவதிலும் விளம் பரங்களைத் தந்து தங்களின் மேலாதிக்கத்தை நிலைநாட்டுவதிலும் பாஜகவினர் முன்னிலை வகிக்கின்றனர்.  கடந்த சில வாரங்களாக டிவிட்டர், ஃபேஸ்புக், வாட்ஸ்ஆப் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும் ரேடியோ, பண்பலை, தொலைக்காட்சி உள்ளிட்ட சமூக ஊடகங்களிலும் கோடிகளைக் கொட்டி விளம்பரங்களை பா.ஜ.க.வினர் மேற்கொண்டு வருகின்றனர். 

கீரியும் பாம்புமாக, எலியும் பூனையுமாக சண்டைப்போட்டுக் கொண்டிருந்த கட்சிகளோடு கசப்புணர்வுகளைக் கடந்து கூட்டணி அமைக் கின்றனர். மகாராஷ்டிராவில் சேரவே மாட்டார்கள் என்று நம்பிய சிவசேனாவோடு கைக்கோர்த்துள்ளதே ஓரு நல்லுதாரணம். அறுதி பெரும்பான்மை பெரும்பான்மையில்லாவிட்டாலும் ஆட்சியமைக்க எல்லாத் தந்திரங்களையும் மேற்கொள்வர். இதற்கு நல்லுதாரணம் ‘ஆப்பரேஷன் தாமரை’ என்று 400 கோடி வரை பேரம் பேசி குமாரசாமி தலைமையிலான அரசை கவிழ்க்க  எடியூரப்பா செய்த பேரம் ஊரறிந்த ரகசியம்.  திரும்பிய பக்கமெல்லாம் கார்ப்பரேட் பாணியில் பாசிச பா.ஜ.க.வினர் செயல்படுவதைப் பார்க்கிறோம். இதுவே நேரம்... இதுவே காலம் என்று எல்லா கோயில்  திருவிழாக்களையும்  கும்ப மேளாக்களையும் அப்படியே கபளிகரம் செய்து பிரச்சாரம் மேற்கொள்வது பாஜகவின் குறுக்குப் புத்திக்கு நல்லுதாரணம்.  தங்களுக்குச் சாதகம் இல்லாத தருணங்களில் ஆளுநர்களைக் கொண்டு எதிர்கட்சிகளை ஒரு கை பார்ப்பதையும் நாம் பார்க்கிறோம். உதாரணத்திற்கு புதுச்சேரியின் நாராயண சுவாமியும் டெல்லியின்

கெஜ்ரிவாலும். மறைமுகமாக ஆளுநர்களாலோ அல்லது தங்களாலே முடியாதப் பட்சத்தில் அமலாக்கத் துறையையும் சி.பி.ஐ.யையும் வைத்து மிரட்டி பணியவைப்பதும் கண்கூடு.

‘கோ பேக் மோடி’ என்பது உலக அளவில் டிரெண்டு, ஆனால் ’வெல்கம் மோடி, தேங்க்ஸ் மோடி’ என்றும் நமோ வாhரியர்ஸ் கூப்பாடு போடுவார்கள். இதுவரை 6000 வாட்ஸ் ஆப் குருப்புகள், 700 ஃபேஸ்புக் பக்கங்கள்  45 யுடியூப் சேனல்கள் என்று பா.ஜ.க.வின் நமோ வாரியர்ஸ் களமிறங்கியுள்ளனர். விலைக்கு வாங்கப்பட்ட மீடியாக்களைக் கொண்டு தங்கள் செய்திகளை விளம்பரப்படுத்துவார்கள். தனது நாக்குப் பலத்தால் வாக்குப் பலத்தைத் திரட்டும் மோடி ‘மன்கிபாத்தால்’ மாதந்தோறும் பிரச்சாரம் செய்தார்.

தங்கள் ஆட்சிக் காலத்தில் மனிதக் கழிவுகளை மனிதர்களே அள்ளும் இழிநிலைக்கு முற்றுப்புள்ளி வைத்து அவர்களின் நல வாழ்வுக்காகத் எதையும் செய்யாதவர் கேமரா வெளிச்சத்தில் ஐந்து துப்புரவுத் தொழிலாளிகளின் பாதங்களைக் கழுவி தனது டிஆர்பி ரேட்டை ஏற்றிக்கொள்கிறார். மோடியா? லேடியா? என்று பிரச்சாரம் செய்த அ.தி.மு.க.வை, மோடிதான் என்று தங்கள் தலைமையைத் திணித்ததும்கூட பாசிசத்தின் தந்திரம்தான். பாசிசத்தின் தத்துவமே.. ஒன்று எதிரியை இல்லாமல் செய்வது.. அல்லது எதிரியை நண்பனாக்கி கபளீகரம் செய்து கொள்வது. எனவேதான் காங்கிரஸ் இல்லாத இந்தியா என்றார்கள். அதிமுகவை நண்பனாக்கி கபளீகரம் செய்கிறார்கள்.

புல்வாமா தாக்குதலைக் கூட அரசியலுக்கு பயன்படுத்தக்கூடிய ஈனத்தனமான அரசியலை அவர்களால் மட்டுமே செய்ய முடியும். கார்கில் போரைப் போல இல்லாத பதட்டத்தை திணிக்கப்பார்த்தார்கள். சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் என்று சப்பைக் கட்டு கட்டினார்கள். பிணத்தை வைத்துக் கொண்டு செல்பி எடுத்து அரசியல் செய்தார்கள். சிறுபான்மையின இராணுவ வீரர் என்றால் ஒதுங்கி நின்றார்கள். புல்வாமா தாக்குதல் நடந்த சமயம் ஃபோட்டோ சூட் எடுத்து தேசப்பற்றைக் காட்டினார்கள். இராணுவ சென்டிமென்ட்டை வைத்து தேச விரோதிகளைக் கட்டமைக்கிறார்கள். 

தம் வீட்டு வாசலில் நிர்வாணியாக நின்ற விவசாயிகளைப் பற்றி கவலைப்படாதவர்கள். இன்று  நிவாரணமாக ரூ.6000 தர ஆளாய் பறக்கிறார்கள். கஜா புயல்பாதித்த பகுதிகளைக் கூட காரில் சென்று பார்க்காதவர்கள் இரண்டாயிரம் நிவாரணம் என்று கடனில்முழ்கியிருக்கும் கஜானாவை மேலும் காலியாக்குகின்றனர். 

அண்டப் புளுகு மூட்டையுடன் அரிதாரம் பூசி, நம்மையும் நமது ஜனநாயகத்தையும் அடகுவைக்க இதோ வருகிறார்கள். தேர்தல் திருவிழாவில் நம் வாக்கைத் திருட பிரச்சாரத்திற்கு வருகிறார்கள். வாக்குப் பதிவு முடிந்த பிறகு சாக்கு மூட்டைகளுடன் பதுங்கும் இவர்கள் நம்பத் தகுந்தவர்கள் அல்ல. இவர்களைப் பொறுத்தவரை இவர்கள் எப்போதும் யோக்கியர்கள்தான்.  இதற்கு அவர்களே தயாரித்துள்ள சான்று ஒன்றே போதும். சர்க்கரைப் பாகை நாக்கில் தோய்த்து நம் வாக்கிற்காக நம் விரல்களைத் தீண்டுவார்கள். சிறுபான்மையினர் என்று சீண்டிப் பார்ப்பார்கள். இவர்களைப் பொருத்தவரை இவர்கள் ஐஎஸ்ஐ முத்திரை குத்தப்பட்ட யோக்கியர்கள்தான். வருகிறார்கள். சிறுபான்மையினரே.. உங்க சொம்பை எங்கே வைத்திருக்கிறீர்கள். உங்க சொம்பை நீங்கதான் பத்திரமாகப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். தேர்தல் திருவிழாவில் நாம் காணாமல் போகாதிருப்போம். கிறித்தவ வாழ்வுரிமையைப் பாதுகாக்க அணியமாவோம்.

Comment