No icon

வாழையடி வாழையாக. -25.04.2021

 

வாழையடி வாழையாக.

இறையழைத்தல் என்பது ஓர் அணையா விளக்கு. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு "என்னைப் பின் செல்" என்று அன்று கலிலேயக் கடற்கரையில் நம் ஆண்டவர் இயேசு ஏற்றிவைத்த தீபம், குன்றின் மேலிட்ட விளக்காக, "என் ஆடுகளை மேய், என் ஆடுகளை பேணி வளர்" என்று புனித பேதுருவின் தலைமையில் கட்டமைக்கப்பட்டு, இன்றுவரை தொன்று தொட்டுவரும் பாரம்பரியமாக விளங்கி வருகிறது. இந்தியத் திருநாடு ஓர் ஆன்மீக பூமி, இங்கு இல்லறமும் துறவறமும் ஓர் அறமாகவே பாவிக்கப்பட்ட காரணத்தால், ஆசையைத்துற என்றுரைத்த புத்தர் தொடங்கி, சைன மதத்தின் நிர்வாணத்தில் நிலைத்து, இந்து சமயத்தின் பிரம்மச்சரியம் என்று தொடர்ந்து, இன்றுவரை ஏகாந்தத்தின் பூர்வீகமாய், வளமையான ஆன்மீகத்தின் கருவறையாய், துறவறம் தலைநிமிர்ந்து நிற்கிறது. 
அய்யன் வள்ளுவனின் அறத்துப்பாலில் துறவு அதிகாரம் தொடங்கி, ஐம்பெருங்காப்பியமான மணிமேகலையின் அமுதசுரபியில் நிலைத்து, பக்தி இலக்கிய காலம் வரை தொடர்ந்து, நாயன்மார்கள், ஆழ்வார்கள் என்று நம் தமிழர் பாரம்பரியத்திலும் துறவறத்திற்கு உயரிய மரியாதை என்றும் உண்டு. ’துறவு ஓர் அறம்’. 
இல்லறத்திலிருந்து தழைக்கும் இந்தத் துறவறமும் அதன் மூலவேரான குடும்பமும் நகமும் தசையுமாக பின்னி பிணைந்தே இருக்கின்றன. ஒன்றிலிருந்து ஒன்று மேம்பட்டதைப் போன்று தோன்றினாலும் ஒன்றோடொன்று சமத்துவத்தில் சமர் புரிந்து கொண்டேயிருக்கின்றன.  நாசரேத்து திருக்குடும்பத்திலிருந்து இயேசு வந்தது போல ஒவ்வொரு கிறிஸ்தவத் திருக்குடும்பத்திலிருந்துதான் மறுகிறிஸ்துகள் உருவாகிறார்கள்.  
 ஈராயிரம் ஆண்டுகளாக, இயேசு நிறுவிய திருஅவை, உயிரோட்டம் நிறைந்த வேரோட்டத்தோடு இன்றுவரை நிலைத்திருப்பதற்கு காரணமே, இயேசுவின் தொண்டுள்ளத்தை தன்வயப்படுத்தி, தலைமைத்துவமிக்க தொண்டராற்றுப்படை தொய்வின்றி தொடர்ந்து தொடர்கிற காரணத்தால்தான். பாறைமீது கட்டப்பட்ட திருஅவை, பஞ்சைப் போன்று மென்மையான மனம் படைத்த நல்லுள்ளங்களின் தலைமைத்துவத்தால்தான் தன்னிகரற்று இன்று வரை நீடித்துக் கொண்டேயிருக்கிறது.  
குருத்துவத்தின் மேன்மை தொண்டாற்றுவதிலும் துறவறத்தின் சிறப்பு தன்னைக் கரைப்பதிலும் புடமிடப்பட்ட தங்கமாக ஜொலித்துக்கொண்டேயிருக்கிறது.  ’அறுவடையோ மிகுதி; வேலையாள்களோ குறைவு’ என்று அன்று இயேசு சொன்ன வார்த்தைகள் இன்றளவும் இப்பணியின், துறவறத்தின் சவாலை, பற்றாக்குறையை பறைசாற்றிக் கொண்டேயிருக்கிறது.  
ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் கொண்டிருப்பவர்கள் இன்றும் இயேசுவுக்கு தேவைப்பட்டுக் கொண்டேயிருக்கிறார்கள்; படகை ஆழத்திற்கு செலுத்தவும் வலையை இடப்புறமாக - வலப்புறமாக சூழலுக்கேற்ப வீசவும் ஆட்கள் தேவைப்பட்டுக் கொண்டேயிருக்கிறார்கள்.  இது ஆண்டவருக்குத் தேவை என்று அவிழ்க்கப்படவேண்டிய எருசலேம்  கழுதைகள் இன்றும் உண்டு. 
இருப்பதைத் துறப்பது துறவு என்பதைவிட, இல்லாததையும் துறப்பதுதான் துறவின் சிறப்பாகும். துறவு என்பது வாழ்வைத் துறப்பது அல்ல. மாறாக, செய்யும் செயலின் பலனைத் துறப்பது. இதைத்தான் இயேசு, நாங்கள் பயனற்றப் பணியாளர்கள்; எங்கள் கடமையைத்தான் செய்தோம் என்று வரையறுக்கிறார் (லூக் 17:10).  உண்மையான பலி என்பது தன் சுயநலத்தைச் சுத்திகரம் செய்வதுதான். புனிதர்களான அன்னை தெரசா, மாக்சி மில்லியன் கோல்பே, பீட்டர் தமியான், பிரான்சிஸ் அசிசியார் ஆகியோரெல்லாம் துறவறத்தின் முன்னோடிகள். தொண்டுள்ளம் என்பதே தூய உள்ளம் என்பதை வாழ்க்கை நெறியாக வாழ்ந்து சளைத்தவர்கள்; சாதித்தவர்கள்.  
இறையழைத்தல் என்னும் இந்த அணையா விளக்கு, இன்று எண்ணெய் பற்றாக்குறையால் அதன் எரி வேகமும் ஒளி பரவலும் குறைந்து வருகிறது. அதற்கு காரணங்கள் ஆயிரம் இருந்தாலும், இந்த அணையா விளக்கு எரிந்து கொண்டேயிருக்க வேண்டும். ‘ஆண்டவரே, பேசும்; உம் அடியான் கேட்கிறேன்’ என்று சாமுவேலின் அடியொற்றி இளைஞர்களும் இளம்பெண்களும் தியாக வாழ்வை வாழ களம் காண வேண்டும். ஆண்டவரின் குரலை, இந்த அவசர உலகில் சற்றே கேட்டு உள்வாங்கிக் கொள்ள வேண்டும். ’ஆம்’ என்பதும் ’இல்லை ’என்பதும் அவரவர் தனியுரிமை. ஆனால் பெற்றோரும் ஞானப் பெற்றோரும் தாய்வழி-தந்தை வழி பெற்றோரும் இறையழைத்தலின் குரலை இன்றைய தலைமுறை கேட்க துணை நிற்க வேண்டும். சாக்குப் போக்குகளைச் சொல்லி யாவரும் தப்பித்துக் கொள்வது அறமல்ல (லூக் 9: 51-62). எலியாவின் போர்வை இன்றும் எலிசாக்களைத் தேடுகிறது (1அர 19:16-21); தேடிக்கொண்டேயிருக்கிறது.  இயேசு இன்றும் கரைகளில் வலைகளைப் பழுதுபார்க்கிற யோவானையும் யாக்கோபையும் தேடிக்கொண்டேயிருக்கிறார். 
வாழையடி வாழையாக... இன்றும் துறவறம் தொடர்ந்திட வேண்டும். வாழை என்பது மிக அழகான குறியீடு. 
வாழை என்பது துறவிக்கு அடையாளம்.  வாழை மரத்தின் இலை, பூ, காய், கனி, தண்டு, நார் .. என அனைத்துமே பயனுள்ள வகையில் அமைகிறது. வேண்டாம் என்று எப்பாகத்தையும் நம்மால் ஒதுக்க முடியாது: அனைத்தும் பிறருக்காகவே பயன்படும்படி அமையும். அது துறவிகளின் அடையாளம். வாழை மரம், மாமரம் போன்றோ, புளிய மரம் போன்றோ வருடா வருடம் காய்க்காது. வாழ்நாளில் ஒரு குலை தள்ளும்: அதனோடு தன் வாழ்வை முடித்துக்கொள்ளும். அப்படி ஞானம் பெறுகிறவன், ஒன்றை உணர்ந்து ஒடுங்குபவன்தான் துறவி; ஞானி. 
வாழையடி வாழையாக என்று சொல்வதைப் போல அரசரடி அரசு என்றோ, ஆலடி ஆல் என்றோ நாம் சொல்வதில்லை.  அரச மரத்தின் அடியில் எதுவும் வளர முடியாது; ஆல மரத்தின் அடியில் எதுவும் தளிர்க்க முடியாது. பிறிதொன்று வளர அவை எப்போதும் அனுமதிக்காது. ஆனால் வாழை, துறவிக்கு அடையாளம். தன் கீழே பல சீடர்கள் வளர்வதை விரும்பும். வாழை பல கன்றுகளை ஈனும்; அதனால்தான் வாழையடி வாழை.
இல்லறத்தில் விருத்தி என்பது உடற் புணர்ச்சியால் உருவாகும். பொதுவாகவே ஏனைய மரம், செடி கொடிகள் அனைத்தும் மகரந்த சேர்க்கையால்தான் விதைகளை உற்பத்தி செய்யும். வாழை மட்டும்தான் தன் திருவடியிலிருந்து வாரிசுகளை உண்டாக்கும். ஞானி தன் திருவடி சம்பந்தத்தால் வாரிசு பெறுகிறான். மோயீசன்-யோசுவா, ஏலி - சாமுவேல், சவுல் - தாவீது, எலியா-எலிசா, இயேசு - பன்னிருவர் என சீடத்துவம் தொடரும். தொடர வேண்டும். 
அதற்காக ’நம் வாழ்வு’ வார இதழ் இந்த இறையழைத்தல் சிறப்பிதழை இந்த ஆண்டு முதல் ஒவ்வோர் ஆண்டும் வெளிக்கொணர்கிறது. இச்சிறப்பிதழ் ஒரு பாதுகாக்கப்பட வேண்டிய இதழாக மலரும். விதையாக தமிழகத் திருஅவைக்குள் விழுந்திடும். இவ்விதையை  பெற்றோரும் பங்குத்தந்தையர்களும், துறவிகளும் பீடச் சிறுவர்-சிறுமிகள், இளைஞர் இளம்பெண்களின் உள்ளத்தில் விதைத்து, திருஅவைக்கு அவர்கள் முப்பது மடங்கு, அறுபது மடங்கு, நூறு மடங்கு என்று பலன் தர உதவிட வேண்டுகிறேன். 
இவ்விதழுக்கு துறவறச் சபைத் தலைவர்களிடமிருந்து வழக்கம்போல் ஆற்றாமையோடு போதிய ஒத்துழைப்பு இல்லையென்றாலும் இவ்விதழுக்கு பத்தே பத்து துறவறச் சபைகள் மட்டுமே விளம்பரம் தந்து உதவியுள்ளனர். அவர்களுக்கு மனமார்ந்த நன்றி. அடுத்த ஆண்டு இரண்டாவது முறையாக வெளிவரும் இறையழைத்தல் ஞாயிறு சிறப்பிதழுக்கு போதிய ஆதரவு தர வேண்டும் என்று ஆயர்களையும் துறவறச் சபைத் தலைவர்களையும் தலைவிகளையும் கேட்டுக்கொள்கிறேன். வாருங்கள்.. நல்ல நிலத்தில் இறையழைத்தலுக்கான விதைகளை விதைப்போம்!

Comment