No icon

குடந்தை ஞானி

இன்னொரு போர் இனியும் வேண்டாம்!

உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு உலக நாடுகளை மிகுந்த கவலையில் ஆழ்த்தியிருக்கிறது. பிப்ரவரி 24 ஆம் தேதி முதல் நடைபெற்று வரும் ரஷ்யப் படைகளின் வலிமையான தாக்குதலில் உக்ரைன் உருக்குலைந்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக, உலக நாடுகளை கொரோனா பெருந்தொற்று முடக்கி, மெல்ல மெல்ல உலகப் பொருளாதாரம் இயல்பு நிலைக்குத் திரும்பி வரும் நிலையில், ரஷ்யா-உக்ரைன் ஆகியவற்றிற்கு இடையிலான போர் பெருத்த சேதாரத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்னொரு உலகப்போர் மூண்டு விடுமோ என்ற அச்சம் இருந்த நிலையில், நேட்டோவில் உறுப்பினராக இல்லாத உக்ரைனுக்காக நேட்டோ நாடுகள் களமிறங்காத காரணத்தால், உலகப்போர் ஏற்படும் அபாயம் இல்லை என்றாலும் காலப்போக்கில் எதுவும் நேரலாம்.

உலக வல்லரசான அமெரிக்காவும் ரஷ்யாவும் இன்னும் பனிப்போரில் ஈடுபட்டிருப்பது கண்கூடு. சிரியா, ஈரான், ஈராக், ஆப்கானிஸ்தான் என்று உலகின் ஒரு பகுதி போர்களால் கடந்த முப்பது ஆண்டுகளில் சிதைக்கப்பட்டு, தற்போதுதான் அமைதி திரும்பியிருக்கிறது என்று ஆசுவாசப்பட்ட நிலையில், ரஷ்யாவின் இந்த அத்துமீறல் புலிவால் தொட்ட கதையாகவே நீடிக்கும். சோவியத் யூனியனிலிருந்து பிரிந்த உக்ரைனை, ரஷ்யா ஒரு பொருட்டாகவே கருதுவதில்லை. எனவேதான் 2014 ஆம் ஆண்டு அதன் தென் பகுதியான கிரிமியாவை இணைத்துக்கொண்டது. உக்ரைனில் ரஷ்யாவுக்கு ஆதரவாக குரல்கொடுக்கும் பிரிவினைவாதிகளுக்கு போதுமான ஆயுதங்களைக் கொடுத்து, தொடர்ந்து தொல்லைக்கொடுத்து வந்தது ரஷ்யா.

உலக நாடுகள் அதன் போக்கிற்கு எதிராக கண்டனம் தெரிவித்தாலும் கருத்து தெரிவித்தாலும் வீட்டோ அதிகாரமிக்க ரஷ்யா பொருட்படுத்துவதேயில்லை. அமெரிக்காவும் பிரிட்டனும் சேர்ந்து முப்பது நாடுகளை உருவாக்கிய நேட்டோ கூட்டமைப்பில் உக்ரைன் உறுப்பினராக இணைய எடுக்கும் முயற்சியைத் தகர்ப்பதுதான் ரஷ்யாவின் நோக்கமாக இருந்தாலும் அதற்காக போர் தொடுப்பது என்பது புதினின் சர்வாதிகாரத்தையே காட்டுகிறது. ரஷ்யாவின் அண்டை நாடுகளான எஸ்தோனியா, லாட்வியா, லிதுவேனியா ஆகியவை ஏற்கனவே நேட்டோவில் உறுப்பினராக உள்ள காரணத்தினால், அமெரிக்காவின் ஆதிக்கத்தை ஏற்றுக்கொள்ளாத ரஷ்யா, இப்போது உக்ரைனை தகர்க்கிறது. கிழக்கு ஐரோப்பாவில் நேட்டோவின் படைகள் தங்கியிருப்பது தனக்கு ஆபத்து என்பதால், தனது வல்லாண்மையை மீண்டும் நிறுவ முயல்கிறார். உலகின் ஒற்றை போலீஸ்காரனாக அமெரிக்கா இருப்பதை, சிதைந்த சோவியத் யூனியனால் ஏற்றுகொள்ள இயலவில்லை. அதே சமயம், ரஷ்யா மீண்டும் வலிமையடைவதை மத்திய, கிழக்கு ஐரோப்பிய நாடுகளும் விரும்பவில்லை. ஆகையால்தான், தங்களின் படைகளை ரஷ்யாவைச் சுற்றியுள்ள நாடுகளில் குவித்துள்ளன.

உக்ரைன் நாட்டிற்காக இதுவரை களமிறங்காத நாடுகள், குரல் கொடுக்காத நாடுகள், எதிர்காலத்திலும் இதே மனநிலையில் இருக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. சமாதானத் தூதுவராக செயல்படும் பிரான்சும் ஜெர்மனியும் ரஷ்யாவின் அதிகார துஷ்பிரயோகத்தைக் கண்டு துவண்டுபோய் உள்ளன. அணுஆயுத வல்லமை மிக்க நாடுகள் போருக்குள் ஈடுபடுவது உலகிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலே. பொருளாதாரத் தடை என்பது ஒரு தடுப்பணையே. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ரஷ்யா மீது பொருளாதாரத் தடை விதித்துள்ளன. ரஷ்யாவும் பதிலுக்கு விதித்துள்ளது. உக்ரைன் தலைநகர் கீவ் ரஷ்யப் படைகளின் கட்டுப்பாட்டில் சிதைக்கப்பட்டுள்ளது.

.நா உட்பட உலக நாடுகள் மௌனம் சாதிக்கின்றன. 1986 இல் அணுஉலை விபத்து நடந்த செர்னோபிள் ரஷ்யப் படைகளின் கட்டுப்பாட்டில் உள்ளது. மிகச் சிறிய நாடான உக்ரைன் சிதைக்கப்பட்டிருக்கிறது. இராணுவ பலமில்லாத நிலையில் உக்ரைன் இராணுவ வீரர்கள் ரஷ்யாவிடம் சரணடைந்துள்ளனர். விமான நிலையங்கள், துறைமுக நகரங்கள் என அனைத்தும் ரஷ்யப் படைகளின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளன. உலகநாடுகள் வழக்கம்போல் வேடிக்கைப் பார்த்து கொண்டிருக்கிறது. உலக வல்லரசுகள் ஒன்றையொன்று எதிர்க்கும் நிலை என்பது எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம். நாடுகள் ஆதரவு, எதிர்ப்பு என்று அணி திரண்டால், உலகப்போருக்கு இது இட்டுச் செல்லக்கூடும். ஆப்பிரிக்க, ஆசிய, ஆஸ்திரேலிய கண்டங்கள் வேண்டுமானால் பாதிக்கப்படாமல் போகக்கூடும். பேச்சு வார்த்தை மட்டுமே தீர்வாக அமைய முடியும். .நா அவசர கதியில் கூடி, முடிவெடுத்து செயல்பட வேண்டும். இனி உலகிற்கு அமைதிக்கான நோபல் பரிசு என்பது அர்த்தமிழந்துபோகும்.

உலகில் தனித்துவிடப்பட்டுள்ள உக்ரைன், கள்வர் கையில் சிக்கி அடிப்பட்டு, காயப்பட்டு கிடக்கிற மனிதனுக்குச் சமம். உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியின் நிலை அந்தோ பரிதாபம். ஒரு சிலரின் பேராசைக்கு போர்கள் ஒருபோதும் தீர்வாக முடியாது. இரத்தம் மட்டுமே இலக்காக முடியாது. ஆயுதங்கள் இல்லாத நாடுகளும் போர்கள் இல்லாத உலகமும் தான் நம் எதிர்கால சந்ததிக்கு நாம் தரும் சிறந்தப் பரிசுகளாகும். உலக நாடுகளே! அதன் தலைவர்களே! உங்கள் மௌனம் கலையட்டும். போரினால் இனியும் இன்னோர் உயிரை இழக்காதிருக்க, உரிய விதிமுறைகளை உலக அளவில் வகுப்போம்.

Comment