No icon

குடந்தை ஞானி

‘உங்களோடு நாங்கள்’- உருவாகட்டும் மதச்சார்பற்ற கூட்டணி

காங்கிரசில்லாத இந்தியாஎன்பதை இலக்காகக்கொண்டு அரசியலில் களமாடும் பாரதிய ஜனதா கட்சி, கடந்த ஏழு ஆண்டுகளில் தன் கட்டமைப்பை அனைத்து மாநிலங்களிலும் மிகச் சிறப்பாக கட்டமைத்து, லடாக் முதல் கன்னியாகுமரி வரை கால் பதித்துள்ளது. தென்னிந்தியாவில் மட்டும் தேக்க நிலையை அடைந்தாலும், தனக்கு தடையாக உள்ள அனைத்தையும், அனைவரையும் ஒருங்கிணைத்து தொடர்ந்து வளர்ந்து வருகிறது.

கோஷ்டிப் பூசலுக்கு மறுபெயராக விளங்கும் காங்கிரஸ், அடுத்த தலைமுறைக்கு தன் கட்சியையும் அதன் கொள்கைகளையும் கொண்டு போய் சேர்க்காததோடு மட்டுமின்றி, குழு மனப்பான்மையில் வேரூன்றி, மூத்த தலைவர்களின் மேலாதிக்கத்தால், இளந்தலைவர்களை அடையாளங்காணாமல், தனக்கென்று உரிய தலைமையைத் தேர்ந்தெடுக்காமல் ஊதாரித் தந்தையைப்போல இந்தியாவில் தடுமாறிக் கொண்டிருக்கிறது. விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சில மாநிலங்களில் ஆட்சியில் இருந்தாலும், பாஜகவின் துடைத்தெறியும் அரசியலுக்கு பலியாகி மணிப்பூர், கோவா உள்ளிட்ட மாநிலங்களில் தன் தடத்தை இழந்து நிற்கிறது.

மாநிலங்களுக்கு மாநிலம், மாநில நலன் கருதி திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், தமிழ் மாநில காங்கிரஸ், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், பஞ்சாப் லோக் காங்கிரஸ் என்று சிதைந்து சிதைந்து, சின்னாபின்னமாகியுள்ளது. கால சுழற்சியில், உரிய தலைமையின்றி, மலை போன்று இருந்த காங்கிரஸ் இன்று மடுவாகிப்போனது. நாடாளுமன்றத்தில் எதிர்கட்சி அந்தஸ்துக்குரிய எண்ணிக்கையின்றி தகுதி இழந்த பரிதாப நிலை. இருப்பினும் இந்தியாவெங்கும் உள்ள சிறுபான்மையினர், தலித்துகள், பழங்குடிகள், ஒடுக்கப்பட்ட மக்கள், வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் ஏழைகள், நடுத்தர வகுப்பினர், ஏழைத் தொழிலாளர்கள் என்று எல்லாருக்கும் ஒரு நம்பிக்கை நட்சத்திரமாக காங்கிரஸ் உள்ளது. எதேச்சதிகாரத்தின் உச்சத்தில் கொட்டமடிக்கும் பாஜகவிற்கு சிம்ம சொப்பனமாக காங்கிரஸ் கட்சியும் இடது சாரிகளும், மாநிலங்களில் கோலேச்சும் திமுக, தெலுங்குதேசம், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் சமாஜ்வாதி கட்சியும் விளங்குகின்றன என்றால் அது மிகையன்று.

மாநிலங்களவையில் பாஜகவின் பலம் மேலோங்கும் பட்சத்தில் இந்தியாவின் எதிர்காலம் இருண்டதாகிவிடக்கூடும். சமயச் சார்பின்மை மீதும் சமூக நீதி மீதும் மிகப்பெரிய தாக்குதல் நடத்தப்படும். இந்திய அரசியலமைப்புச் சட்டமே இல்லாமல் போகும் பரிதாப நிலையும் ஏற்படக்கூடும்.

அந்த வகையில்தான், 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற மிகப்பெரிய மக்களவைத் தேர்தலில் சந்திரசேகர ராவ் உள்ளிட்ட தலைவர்கள், பாஜக அல்லாத கூட்டணியைக் கட்டமைக்க முயற்சித்தனர். ஆனால், அது வெற்றி பெறவில்லை. தலைமை இல்லாத ஊரில் ஆளாளுக்கு நாட்டாமை போன்று எல்லாருமே தலைவர்களாக ஆசைப்பட்டனர். ஆனால், அது நிராசையாகிப்போனது. தெலுங்குதேசத்தில் கோலேச்சும் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி, சத்தமின்றி பாஜக வளர்ந்து வருவதைக் கண்டு கலங்கி நிற்கிறது. 2019 நாடாளுமன்றத் தேர்தலில் சந்திரசேகர ராவின் மகள் கவிதாவின் தோல்வியும், 2021இல் ஹூஸூராபாத் இடைத்தேர்தலில் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி வேட்பாளரின் தோல்வியும் இதை உறுதிப்படுத்துகிறது.

மேற்கு வங்க சட்டசபைத் தேர்தலில் பாஜக பெற்ற வெற்றியும் அங்கு ஏற்பட்ட வன்முறையும், போராடி வென்ற மம்தா பானர்ஜியின் வெற்றியும் பதவியேற்பும் பாஜகவிற்கு எதிரான எதிர்ப்பு அரசியலுக்கு எண்ணெய் வார்த்துள்ளது.

தேசிய முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகித்து, பிரிந்து, இன்று தேசியவாத காங்கிரஸோடும், காங்கிரஸோடும் கூட்டணி அமைத்து, மகாராஷ்டிராவில் ஆட்சி புரியும் சிவசேனா, பாஜகவிற்கு சிம்ம சொப்பனமாக விளங்கி வருகிறது.

மம்தாவும் சந்திரசேகர ராவும் காங்கிரஸ் இல்லாத மூன்றாவது கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டாலும், திமுகவின் தலைவர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினும், சிவசேனாவின் தலைவர் உத்தவ் தாக்ரேயும் அது சாத்தியமில்லை என்பதைத் தெளிவுப்படுத்திவிட்டனர். 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ராகுல் காந்தியை பிரதம வேட்பாளராகவே அறிவித்து பெருமைப்படுத்தியவர் திரு. மு..ஸ்டாலின் என்பது இங்கே நினைவுக்கூரத்தக்கது.

ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே தேர்வு, ஒரே மொழி, ஒரே ரேஷன், ஒரே வரி, ஒரே அடையாள அட்டை என்று அடுத்தடுத்து மாநில உரிமைகளைப் பறிக்கும் அடாவடி அரசியலை முன்னெடுக்கும் பாஜகவிற்கு, மாநில பிராந்திய கட்சிகளே மிகப்பெரிய முட்டுக்கட்டைகளாக உள்ளன. ஆகையால்தான், தாங்கள் நியமிக்கும் ஆளுநர்கள் வழியாக நெருக்கடிகளைக் கொடுத்து திக்குமுக்காட வைக்கின்றனர். மத்தியிலிருந்து தர வேண்டிய நிதி ஒதுக்கீட்டில் பாரபட்சம் காட்டுவதோடு மட்டுமின்றி, மாநிலங்களுக்குத் தர வேண்டிய நிதியைத் தராமல் இழுத்தடிப்பு செய்து பொருளாதாரத்தை முடக்குகின்றனர்.

இனியும் மூன்றாவது அணி என்று தேசிய அளவில் யாராவது அமைத்து செயல்பட்டால் அது பாஜகவிற்குத்தான் சாதகமாக முடியும். பாஜகவிற்கு எதிரான வாக்குகள் சிதறி, மீண்டும் மத்தியில் பாஜகவே ஆட்சியமைக்க வழி ஏற்படும். இந்திய அரசியல் சட்டம் தந்த 370 நீக்கத்தால் பாதிக்கப்பட்டு, துண்டாடப்பட்டுள்ள காஷ்மீர், பாஜகவின் அரசியலுக்கு ஓர் உதாரணம் மட்டுந்தான். தங்களுக்கு அதிகாரம் வேண்டும் என்றால் எதையும் செய்வார்கள் என்பதற்கு கோவா சட்டமன்றம், மத்திய பிரதேச சட்டமன்றம், மணிப்பூர் சட்டமன்றம் இவையெல்லாம் அடுத்தடுத்து உதாரணங்கள். தமிழ்நாட்டை மூன்றாகத் துண்டாடி கொங்கு நாடு அமைப்போம் என்பதெல்லாம் மறைமுகத் திட்டங்கள்தான்.

 மொழி வழி தேசியத்தையும் இன வழி தேசியத்தையும் உடைத்து தூள் தூளாக்கி, சாதிகள் வழியாகத் தலைமைத்துவப்படுத்தி, மதம் என்ற பெயரில் ஒருங்கிணைப்பதுதான் பாஜகவின் அரசியல். ஆகையால், அனைத்து ஜனநாயக அமைப்புகளையும் இந்துத்துவப்படுத்தி, தங்களுக்குச் சாதகமாக கட்டமைத்து, களமாடுகிறார்கள்.

 ‘உங்களில் ஒருவன்என்ற மாண்புமிகு மு..ஸ்டாலினின் நூல் வெளியீட்டு விழா மேடை. ஒரு திராவிட மேடை. திராவிடத் திமிருடன் வளமான எதிர்கால இந்தியாவிற்கு வழியமைக்கும் மேடை. காஷ்மீரின் உமர் அப்துல்லா, பீகாரின் தேஜஸ்வி யாதவ், கேரளாவின் பினராய் விஜயன், எல்லாவற்றிற்கும் மேலாக காங்கிரஸின் ராகுல் காந்தி என்று மேடையேறிய - பாஜக எதிர்ப்பு அரசியல், ‘உங்களோடு நாங்கள்என்பதற்கான தேசிய அடையாளம்.

உங்களோடு நாங்கள்என்று பாஜக அல்லாத மதச் சார்பற்ற தேசியக் கூட்டணி உருவாகி, வலிமையடைந்து, சனாதனத்தின் ஜனநாயக விரோத வேர்களை கருவறுக்க வேண்டும். சென்னையில் விழுந்த விதை, மும்பை, கொல்கத்தா, காஷ்மீர் என்று விரிந்து, வளர்ந்து விருட்சமாக வேண்டும். காத்திருப்போம். கோட்சேயின் வாரிசுகளை நிராகரிப்போம்.

திராவிடம் தேசியத்திற்கு வழிகாட்டட்டும். தேசத்தை வழிநடத்தட்டும். தேசத்திற்கு விடியல் தரட்டும்!

Comment