No icon

குடந்தை ஞானி

ஜனநாயகம் இனி..

நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல்களில், நான்கு மாநிலங்களில் பாஜக வெற்றிப் பெற்று ஆட்சியமைத்துள்ளது. மணிப்பூர் மற்றும் கோவா மாநிலங்களில் கடந்த முறை, எதிர்கட்சியினரை உள்வாங்கி தனக்கு அறுதிப் பெரும்பான்மையிருப்பதை நிருபித்த பாஜக, புல்லுருவியாக, அக்கட்சியினரைத் தின்று, மென்று, இப்போது பாஜகவாக தனிப்பெரும்பான்மையுடன் (கோவாவில் சுயேட்சைகளின் ஆதரவுடன்) ஆட்சிப்பீடம் ஏறியுள்ளது.

உத்தரப் பிரதேச தேர்தலில்புல்டோசர் பாபாஎன்று காத்திரமாக அகிலேஷ் யாதவால் அழைக்கப்பட்ட, யோகி ஆதித்யநாத் மீண்டும் இரண்டாவது முறையாக ஆட்சிப் பீடம் ஏறியுள்ளார். பாஜக தலைவர்களுக்குச் சாதகமாக ஏழு கட்டங்களாக நடத்தப்பட்ட தேர்தலில், ஒவ்வொரு மூன்று நாளுக்கும் ஒருமுறை உத்தரப் பிரதேசத்தில் பிரச்சாரம் மேற்கொண்டு, பட்டைப் போட்டு, உடுக்கையடித்து உசுப்பேற்றிய பிரதமர் மோடி இவ்வெற்றியால் புளங்காகிதம் அடைந்துள்ளார். வழக்கம்போல், கோஷ்டிப் பூசலுக்குப் பெயர்போன காங்கிரஸ் தன்வசம் வைத்திருந்த பஞ்சாப்பில் மண்ணைக் கவ்வி, ஆம் ஆத்மியிடம் ஆட்சியைப் பறிக்கொடுத்துள்ளது. அடிக்கடி முதல்வர்கள் மாற்றப்பட்ட உத்தரகாண்டிலும் அதிர்ஷ்டவசமாக பாஜக ஆட்சியை மீண்டும் கைப்பற்றியுள்ளது. எல்லா வகையிலும்மதவாதம்மீண்டும் மீண்டும் வெற்றிப்பெற்றுள்ளது.

பாஜகவின் தேர்தல் வியூகத்திற்கு சமாஜ்வாதி கட்சி ஒருவகையில் தற்காலிகத் தடை ஏற்படுத்தியுள்ளது. முன்னேறிய வகுப்பினரின் வாக்குகளைக் கைவசம் வைத்துள்ள பாஜக, கும்ப(ல்)மேளாவை வாக்குகளாக்கி, உத்தரப்பிரதேசத்திலும் உத்தராகண்டிலும் மீண்டும் ஆட்சியேறியுள்ளது. தேர்தலுக்கு முன்பாக கட்சித்தாவிய காங்கிரஸ் தலைமைகளும், மாநிலத்திற்கு மாநிலம் உள்ள கோஷ்டிப் பூசலும், மாயாவதியும் அசாதுதீன் ஓவைசியும் பாஜகவின் வெற்றிக்கு பெரிதும் உதவியுள்ளன.

இந்துக்களின் ஒரே பாதுகாவலன் பாரதிய ஜனதா கட்சிதான் என்ற எண்ணம் பசு வளைய மாநிலங்களில் வலிமையாக மேலோங்கியுள்ளது என்பது இதன்மூலம் மீண்டும் நிருபிக்கப்பட்டுள்ளது. மாயாவதியின் பகுஜன் சமாஜ்-ன் தலித்துகளின் வாக்குகளையும் அசாதுதீன் ஓவைசியின் முஸ்லீம் வாக்குகளையும் தனித்து பிரித்து, காட்டி எதிரிகளின் பலவீனங்களில் வலிமையான கோட்டையை பாஜக கட்டியுள்ளது.

கங்கையில் மிதந்த கொரோனா பிணங்களைப் பற்றி அங்கு யாரும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. லக்கிம்பூரில் கார் ஏற்றி படுகொலை செய்யப்பட்ட விவசாயிகளைப் பற்றி யாரும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. இந்தியக் குடியுரிமை சட்டத்தைப் பற்றியோ, மதமாற்ற தடைச்சட்டத்தைப் பற்றியோ, மாற்று மதத்தைச் சேர்ந்தவரை திருமணம் செய்வதற்குள்ள தடையைப் பற்றியோ, மாட்டுக்கறி படுகொலை அரசியலைப்பற்றியோ, உன்னாவ் படுகொலைப் பற்றியோ, ஹத்ராஸ் படுகொலைப் பற்றியோ, வேலையின்மை பற்றியோ, சிறுபான்மையினரின் பாதுகாப்புப் பற்றியோ, விலைவாசி உயர்வு பற்றியோ, உக்ரைனில் கஷ்டப்பட்ட இந்திய மாணவர்கள் பற்றியோ, வாக்காளர்கள் யாரும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.

மதம்மட்டுந்தான் அவர்களுக்குப் பிரதானம். ‘காவிமட்டுந்தான் கண்களுக்குத் தெரிகிறது. அயோத்தியின் ராமர் கோவிலும் மதுராவின் கிருஷ்ணர் கோவிலும்தான் அவர்களுக்கு இரு துவார மூச்சாக அமைகிறது. ‘கோசாலைகளும்பசு ஆம்புலன்ஸ்களும்தான் இவர்களின் பூரிப்பு. முஸ்லீம்களும் மதச்சிறுபான்மையினரும் தலித்துகளும்தான் இவர்களுக்கு எதிரிகள். ‘மதம்ஒன்றுதான் இத்தேர்தலில் இவர்கள் முன்வைத்த பிரச்சாரம். ஹிஜாப் அரசியல், மைக்கேல்பட்டி விவகாரம் இதற்கு பேருதவி செய்தது.

வளர்ச்சி, பொருளாதாரம், வேலைவாய்ப்பு.. இவையெல்லாம் இவர்களுக்கு முக்கியமல்ல. சமாஜ்வாதி கட்சியின் சின்னமான சைக்கிள் தீவிரவாதிகளுக்கானது என்று முஸ்லீம் வெறுப்பை மட்டுமே மூலதனமாக்கி பாஜக இந்த வெற்றியை அறுவடை செய்துள்ளது.

உத்தரப்பிரதேசம்தான் இந்திய ஜனநாயகத்தின் போக்கை தீர்மானிக்கும் ஆற்றல் பெற்ற மாநிலம். மக்களவையிலும் மாநிலங்களவையிலும் ஒரு கட்சி பெரும்பான்மை பெறுவதற்கு இங்கு பெறுகிற வெற்றி மிகவும் முக்கியம். இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தலில் ஆளுங்கட்சியின் செல்வாக்கையும் அவர்கள் முன்வைக்கும் குடியரசுத் தலைவர் வேட்பாளரையும் உத்தரப்பிரதேச களம் முக்கியமாகத் தீர்மானிக்கும்.

பாஜக, மக்களவையில் மட்டுமின்றி, மாநிலங்களவையிலும் அறுதி பெரும்பான்மை பெறும் நாள் வெகுதொலைவில் இல்லை. அப்படி இரு அவைகளிலும் அறுதி பெரும்பான்மை பாஜக பெற்றால் அது இந்திய ஜனநாயகத்திற்கும் சமயச் சார்பின்மைக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக அமையும். அப்படி ஒருவேளை நம் இந்திய அரசியலமைப்புச் சட்டம் மாற்றப்பட்டாலும் நிராகரிக்கப்பட்டாலும் இந்தியாவின் இறையாண்மையும் சமயச்சார்பின்மையும் இல்லாமல் போகும். ரஷ்யாவைப் போல எதிர்கட்சிகளே இல்லாத ஆட்சிக்கு இங்கு வாய்ப்புண்டு. நிரந்தர அதிபர் புடின்போல பிரதமர் மோடியும் நாக்பூர் தலைமையால் முன்வைக்கப்படலாம். இப்படி எதிர்கட்சிகளே இல்லாமல் போனால் ஜனநாயகமும் காணாமல்போகும். தேர்தலும் மறைந்து போகும்.

.பியில் ஆறு சதவீதம் குறைந்துபோன பாஜகவின் வாக்குகள் ஜனநாயகத்திற்கு நம்பிக்கை தருகின்றன. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலைவிட வெற்றியிழந்த பாஜகவின் 56 இடங்கள் ஜனநாயகத்திற்கு இன்னொரு வாய்ப்பைத் தருகின்றன. கடந்த சட்டப்பேரவைத் தேர்தல் போல் இத்தேர்தலில் காங்கிரசோடு கை கோர்க்காத சமாஜ்வாதி வரலாற்றுப் பிழை இழைத்திருக்கிறது. இனியாவது இந்தியாவெங்கும் உள்ள பாஜக எதிர்க்கும் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட்டாலொழிய இந்திய ஜனநாயகத்தைக் காப்பாற்றுவது என்பது முயற்கொம்பே. ‘ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு நாங்கள் தயார்!’ என்று இந்தியத் தேர்தல் ஆணையத் தலைவர் சுஷில் சந்திராவின் பிரகடனமும் அதற்கு அரசியலமைப்புச் சட்டத்தை மாற்ற வேண்டும் என்று அவர்தம் பரிந்துரையும் ஜனநாயகத்திற்கு அடிக்கப்பட்ட சாவுமணியே! ஜனநாயகம் இனி.. பிழைப்பது கடினமே!

Comment