No icon

குடந்தை ஞானி

சமூக நல்லிணக்கம் நம்மிடைய மலர.. தமிழக அரசு உறுதுணை!

தமிழகத்தில்தாமரை மலர வைத்தே தீர வேண்டும்என்று கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படும் தீவிர வலதுசாரிகளும் பாஜக கட்சியினரும் அதற்கு துணை நிற்கும் அடிமை சாதிய தலைவர்களும் பெரியார் பூமிக்குள் பெரும்பான்மை - சிறுபான்மை பிளவை உண்டாக்குவதில் குறியாக இருக்கின்றனர். தனிநபர்களுக்கிடையேயான மோதலைக் கூட மதங்களுக்கிடையேயான மோதலாகக் கட்டமைப்பதில் நாக்பூர் நிபுணத்துவம் பெற்றுள்ளனர்.

கவிஞர் வைரமுத்து ஆண்டாளுக்கு எதிராக பேசிவிட்டார் என்ற கட்டுக்கதையாக இருந்தாலும் சரி, நடிகர் ஜோசப் விஜய்-ன் மெர்சல் எதிர்ப்பாக இருந்தாலும் சரி, மைக்கேல்பட்டி பள்ளி மாணவி தற்கொலையாக இருந்தாலும் சரி, மேலூர் இளம்பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் முஸ்லீம் இளைஞனுக்கு எதிராக திருப்பிவிட்டதாக இருந்தாலும் சரி.. எல்லா வகைகளிலும் அரசியல் ஆதாயம் அடைய பாஜகவும் வலதுசாரிகளும் முயல்கின்றனர்.

ஒவ்வொரு ஊரிலும் வேரூன்றியுள்ள பாஜக அமைப்பினரும் வலதுசாரிகளும் இந்து ஆலய உழவாரப்பணி முதல் இந்து ஆலய ஊர்த்திருவிழா வரை, சபரிமலை யாத்திரை முதல் சமயபுரம் மாரியம்மன் பாத யாத்திரை வரை அனைத்தையும் ஒருங்கிணைத்து, நன்கொடையளித்து, தன்வயப்படுத்தி வருகின்றனர். கிராமப்புற இந்து ஆலயங்களில் காலை மாலையும் அலறும் பக்திப்பாடல்கள் ஒலிபரப்பே இதற்கு சாட்சி.

விளையாட்டுப் போட்டிகள் வழியாக, மாலை நேரப் பள்ளிகள் வழியாக, ‘மோடி மகள்இலவச உதவித்திட்டங்கள், கார்ப்பரேட்டுகளின் சமூக நிதி பங்களிப்பைத் திருப்பிவிடுவதன் வழியாக, மிஸ்டு கால் வழியாக, சத்குருவின் சிவராத்திரி வழியாக, மார்கழி உற்சவ் வழியாக, திருப்பதி கொடையாத்திரை வழியாக, இராமகிருஷ்ணா மடாலயங்கள் வழியாக, திருத்தல பாதயாத்திரை வழியாக, இந்து பெரும்பான்மைவாதத்தைச் சீராக வளர்த்து வருகின்றனர். ஆர்எஸ்எஸ்-ன் ஷகா முகாம்கள் வழியாக, கலைப்பயிற்சி, களரிப்பயிற்சி வழியாக, தற்காப்புக் கலை வழியாக இளைஞர்களை ஒருங்கிணைக்கின்றனர்.

பாஜகவின் இந்து உணர்வு எல்லாத் தளங்களிலும் திணிக்கப்படுகிறது. தொலைக்காட்சி அலைவரிசைகளிலும் எஃப்.எம் அலைவரிசைகளிலும் ஆன்மீகம் என்ற போர்வையில் பக்திப் பாடல்களும் பிரச்சாரங்களும் சத்சங்கங்களும் மன்கிபாத் முறையில் மதம் வளர்க்கிறது. பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பினர், தமிழகத்தை, சிறப்பாக, தாலுக்கா அளவில் சாதி ரீதியாக கணக்கெடுத்து, சாதிப் பெரும்பான்மைக்கு சலுகைகள் அளித்து, சாதித்தலைவர்களை டெல்லிக்கு அழைத்துச் சென்று சுற்றுலா காட்டி, தேவேந்திர- நரேந்திர ஒற்றுமையை ஏற்படுத்தி, எஸ்.சியை பி.சியாக்கி, பி.சியை எஸ்.சியாக்கி, பக்தி பசையை தடவி வைத்திருக்கின்றனர்.

இந்து ஆன்மீக மாநாடுகளை மாவட்ட அளவில் மாநில அளவில் நடத்தி, மடாதிபதிகளையும் சிவாச்சாரியார்களையும் பூசாரிகளையும் ஒருங்கிணைத்து மையப்படுத்துகின்றனர். இன்னும் இந்து மடங்களுக்கு நிதி ஒதுக்கி, அங்கீகாரம் தந்து அடையாளப்படுத்துகின்றனர். பூசை நடக்காத ஆலயங்களுக்கு மூன்று வேளை பூஜை நடத்த உதவுகின்றனர். மாநில அளவில் பூசாரிகள் சங்கத்தை ஏற்படுத்தி, கொடை விழாக்களை நடத்தி, எல்லா தளங்களிலும் இயங்கிக்கொண்டேயிருக்கின்றனர்; இயக்கிக்கொண்டேயிருக்கின்றனர்.

இந்து மிஷன் ஹாஸ்பிட்டல்கள் கிளை பரப்பிக்கொண்டேயிருக்கின்றன. மருத்துவச் சலுகைகளில் மதம் வளர்க்கின்றனர். தங்களைச் சார்ந்தவர்கள் நடத்தும் கல்லூரி நிறுவனங்களில் கட்டணச் சலுகைகளில் பலரையும் ஈர்க்கின்றனர். கடந்த முப்பது ஆண்டுகளில் பாஜகவின் சமூக கட்டமைப்பில் (சோஷியல் இஞ்சினியரிங்) பாண்டித்தியம் பெற்றுள்ளனர். நம்முடைய திரு அவைத் தலைவர்கள்தான்பூனை கண்ணை மூடிக்கொண்டால் பூலோகம் இருண்டுவிடும்என்பதை நம்பி, தாங்களும் கண்களை மூடிக்கொண்டு, நம்மையும் கண்களை மூடிக்கொள்ள செய்துவிட்டனர். திறந்துப்பார்த்தால் ஒரே ஒளி வெள்ளம்.

சிறுபான்மை கிறிஸ்தவர்களிடையே வலிமையான, இயல்பான, தன்னெழுச்சியான தலைமை உருவாகவில்லை; உருவாக்கவும் இல்லை. நீறு பூத்த நெருப்பாக, இங்கொன்றும் அங்கொன்றுமாக விரல் விட்டு எண்ணக்கூடிய கிறிஸ்தவ அரசியல் தலைவர்கள் மின்னி ஒளிர்ந்து சாம்பல் தரித்துக்கொண்டனர். கடந்த ஐம்பது ஆண்டுகளில் தமிழகத் திரு அவை, காலத்தின் அறிகுறிகளைக் கண்முன் கொண்டு, சமூக-அரசியல்-ஊடக வளர்ச்சிக்கேற்ப தன்னையும் தன் உறுப்பினர்களையும் வளர்த்துக்கொள்ளவில்லை.

நூற்றாண்டு கண்ட புகழ்பெற்ற நம் கல்வி நிறுவனங்கள் நமக்கான நிபுணர்களை, நமக்காக உருவாக்கவில்லை. நம்மிடம் வளர்ந்தவர்களே நம்மை வீழ்த்தப் பார்க்கின்றனர். நமக்கென தனிப்பெரும் செய்தித்தாள், வானொலி, தொலைக்காட்சி, சினிமாவலையொளி, இணையத்தளம், ஆன்ட்ராய்டு-ஐஓஎஸ் செயலி என்று தன்னை வலிமைப்படுத்திக்கொள்ளவில்லை. உருவாக்கிய தனிநபர்களையும் உருவாகிய அமைப்புகளையும் அடையாளம் கண்டு நம் திரு அவை கொண்டாடவில்லை. அதன் விளைவாகவே, நம் முன் உள்ள இருண்ட காலத்தில், ஐந்து கன்னியரைப் போல அகல் விளக்குகளுக்கும் திரிக்கும் எண்ணெய்க்கும் அலைந்து கொண்டிருக்கிறோம். நிற்க.

2015 ஆம் ஆண்டிற்கு பிறகு, ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், டெலிகிராம், டிக்டாக், வாட்ஸ்அப், டுவிட்டர், யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடகங்களின் அபார வளர்ச்சியை தனதாக்கிக்கொண்ட சனாதன, வலதுசாரி அமைப்புகளும் கட்சிகளும் லாவகமாக பயன்படுத்தி வெறுப்பு அரசியலை ஒவ்வொரு தனிமனிதரிடத்திலும் வளர்த்துள்ளன. பாஜகவிற்கென்றே தனி ஊடகப் பிரிவு, கால்சென்டர், ஊடகப் பங்காளிகள் சம்பளத்தோடும் சன்மானத்தோடும் உருவாக்கப்பட்டுள்ளனர். வலிமையான டேட்டா பேங்க் உருவாக்கி பெரும்பான்மை மத ரீதியாகவே ஒவ்வொன்றையும் அணுகி அணுகி தமிழகத்தில் சமூக பிளவை மத அடிப்படையில் வளர்த்து வருகின்றன.

அண்மைக்காலமாக, சமூக ஊடகங்கள் வழியாக, ஒரு சிறு பிரச்சனையையும் மதச் சாயம் பூசி மாநிலம் தழுவிய பிரச்சனையாக பாஜகவினரும் வலதுசாரிகளும் கட்டமைக்கின்றனர். மைக்கேல்பட்டி மாணவி தற்கொலை விவகாரம் ஒரு சிறு உதாரணம். முளையிலேயே இதனை அரசும் உளவுத்துறையும் கிள்ளியெறியாவிட்டால், ஒரு சிறு தீப்பொறி காட்டை அழிப்பதுபோல், மூன்றே மூன்று மணிநேரத்தில் தேசிய அளவில் டிரெண்ட் ஆக்கிவிடுகின்றனர்.

ஆகையால்தான் அண்மையில், மாவட்ட ஆட்சியர்கள் - காவல்துறை - வனத்துறை அதிகாரிகள் மாநாட்டில், 1998 க்கு பிறகு கோவையில் மத மோதல்களைத் தடுப்பதற்காக ஒரு சிறப்புப் பிரிவு உள்ளதுபோல் அனைத்து மாவட்டங்களிலும் ஏற்படுத்த வேண்டும் என்ற (தென்காசி எஸ்.பி) வேண்டுகோளை ஏற்று, அனைத்து மாவட்டங்களிலும் அதனை ஏற்படுத்துவதற்கு தமிழக முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆவணச் செய்துள்ளார்; அதற்காக இந்த நிதியாண்டில் நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. சமூக ஊடகங்களில் செய்யப்படும் தவறான பரப்புரைகளின் விளைவாக அதிகரிக்கும் குற்றச் செயல்களை தடுத்திடசமூக ஊடக சிறப்பு மையம்காவல்துறையில் அமைக்கப்படுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. இது மிகவும் பாராட்டுக்குரிய முன்மாதிரியான திட்டமாகும்.

மத மோதல்கள் என்பவை சட்ட ஒழுங்கு பிரச்சனை மட்டுமல்ல; அதற்குப் பின்னால் அரசியல் பின்புலம் இருக்கிறதுஎன்பதை துல்லியாக முதல்வர் ஸ்டாலின் கணித்து, மத நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவிக்கக் கூடிய வகையில் யார் செயல்பட்டாலும் அவர்கள் மீது தயவு தாட்சண்யமின்றி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.

இது மத மோதல்களால் தனக்குத்தானே நீர்வார்த்துக்கொள்ளும், மதவாதத்தைக் கொண்டு அரசியல் பிழைப்பு நடத்தும் பாஜகவுக்கு வைக்கப்பட்ட தடைக்கல்லாகும். காவல்துறையினரும் உளவுத்துறையினரும் மாவட்ட ஆட்சியர்களும் விழிப்புணர்வுடன் செயல்பட்டு, சமூக நல்லிணக்கத்தை வளர்த்தெடுக்க வேண்டும். தமிழக அரசின் இந்தச் செயல்பாடு சிறுபான்மையினருக்கு பெரிய நம்பிக்கையைத் தந்துள்ளது.

Comment