No icon

குடந்தை ஞானி

அண்ணாமலையா? ஏழுமலையா?

அண்ணாமலை! பாஜகவின் தலைவராகப் பொறுப்பேற்ற நாள்முதலே, தனக்குரிய தலைமைத்துவப் பண்புகளை வளர்த்துக்கொள்ளாமல், தான்தோன்றித்தனமாக, தமிழக அரசியலை களங்கப்படுத்தி வருகிறார். கரூர் மாவட்டம் சின்னதாராபுரத்தில் 1984 ஆம் ஆண்டு, ஜூன் 4 ஆம் தேதி பிறந்த இவர், கோவை பிஎஸ்ஜி கல்லூரியிலும் லக்னோ இந்திய மேலாண்மை நிறுவனத்தில் மேல்படிப்பையும் முடித்து, 2011 ஆம்  ஆண்டு ஐபிஎஸ் தேர்வில் வெற்றிப்பெற்றார்.

2013 ஆம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியாகப் பதவியேற்ற அண்ணாமலை 2019 வரை அங்கு பணியாற்றிவிட்டு, விருப்ப ஓய்வுப் பெற்று தமிழகம் திரும்பினார். இயற்கை விவசாயம் செய்யப்போவதாக பத்திரிகைகளுக்கு செய்தி தந்து, தன்னை விவசாயியாக காட்டிக்கொண்டார். காலப்போக்கில் நடிகர் ரஜினி அரசியல் கட்சி துவங்குவார் என்று இலவு காத்த கிளியாக காத்திருந்து, அது நிறைவேறாமல் போகவே, தனக்குத் தெரிந்த தொடர்புகளைக் கொண்டு, பாஜகவில் ஆகஸ்டு 25, 2020 இல் சேருகிறார். சிக்மக்களூரில் இவர் ஐபிஎஸ் ஆக பணியாற்றியபோது பாஜகவின் சி.டி.ரவியுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. அவர் பல முறை தனக்குப் பிடித்த தலைவர் நரேந்திர மோடி என்று தெரிவித்துள்ளார்.

திராவிடக் கட்சிகள் ஊழல்மிக்கதாக இருப்பதாலும் குடும்ப அரசியல் இருப்பதாலும் பாஜகவைத் தேர்ந்தெடுப்பதாக அதற்கு காரணமும் கூறினார். எனது கொள்கைகள் அவர்களுடன் ஒத்துப் போவதால் இவர்கள் இயற்கையாகவே இயைந்தவர்களாகவே இருக்கின்றனர் என்று அதற்கு சப்பைக்கட்டு கட்டினார். காலம் கனிய, காத்திருந்து, பல்வேறு பாஜக மூத்த தலைவர்களையெல்லாம் ஓரங்கட்டி அக்கட்சியின் தமிழகத் தலைவராக தலைமையால் ஜூலை 8, 2021 அன்று தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மைக்கேல்பட்டி பள்ளி மாணவி தற்கொலை விவகாரம் முதல் தருமபுரம் ஆதினம் பட்டினப் பிரவேசம் வரை, திருவாரூரில் தேரோடும் வீதிக்கு கருணாநிதி பெயர் வைப்பது முதல் பெட்ரோல் டீசல் விலையை மாநில அரசு குறைக்க போராடும் வரை, எதையாவது தின்றால் பித்தம் தெளியும் என்ற அளவில், அனைத்து நிலைகளிலும் மீடியா வெளிச்சம் தன் மேல் படும்படி பார்த்துக்கொண்டு கீழ்த்தரமான அரைவேக்காட்டுத்தனமான அரசியல் செய்கிறார். தமிழகத்தில் ஏதோ ஒரு வகையில் மதக் கலவரத்தைத் தூண்டுவதற்கான பகீரத முயற்சிகளை மிகுந்த சிரத்தையுடன் மேற்கொண்டு வருகிறார். ஒன்றுமேயில்லா மைக்கேல்பட்டி மாணவி தற்கொலை விவகாரத்தை மதமாற்ற முயற்சி என்று அதை திசைத் திருப்ப முயன்று, அது முடியாமல் மண்ணைக் கவ்வியுள்ளார்.

எரிகிற வீட்டில் பிடுங்குகிற வரை லாபம் என்ற கணக்கில், 360 டிகிரி கோணத்தில் யோசித்து, 20000 புத்தகங்களை வாசித்த தனது ஆர்யபட்டர் அறிவைக் கொண்டு, சட்டப்பேரவையில் அதிக உறுப்பினர்களைக் கொண்டு எதிர்க்கட்சியாக உள்ள அதிமுகவை, தனக்கான ஊடக வலிமையைக் கொண்டு பின்னுக்குத் தள்ளி, மீடியா வெளிச்சத்தில் மினுக்கிக் கொண்டேயிருக்க முயல்கிறார். பத்திரிகையாளர்களைக் கொஞ்சமும் மதிக்காமல், தனது வலதுசாரித்தன மூளையோடு பதில் நெருக்கடி தந்து பாடாய்ப்படுத்துகிறார். ஆளுநர் அலுவலகம் என்னவோ ஆர்எஸ்எஸ் அலுவலகம் போல அடிக்கடி ஆலோசனைக்குச் சென்று தன் இருப்பை உலகிற்கு காட்டிக்கொள்கிறார்.

முற்றுகை, போர் என்று அறைகூவல் விடுத்து, ஐயாயிரம்பேரைக் கூட திரட்டமுடியாமல் திக்குமுக்காடி, துண்டைக்காணோம் துணியைக் காணோம் என்ற பாணியில், ஆட்டோவில் இலைமறை காயாக மறைந்து தப்பிக்கும் இந்த தம்பிரான் செய்வது கீழ்த்தரமான அரசியல். சாதியை அப்பட்டமாக தனது டுவிட்டரில் போடுவதும் சாடுவதும், போக்சே சட்டம் தடைசெய்த பாதிக்கப்பட்ட மாணவியின் பெயரையும் புகைப்படத்தையும் வீடியோவையும் உலகறிய பதிவேற்றம் செய்வதும், பந்தாவாக நிவாரணத்தொகை என்ற பெயரில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு பத்து இலட்சம் என்று பகிரங்கமாக இலஞ்சம் நீட்டுவதும் மிகவும் கேவலமான அரசியல். அரசியல் செய்வது அவரது உரிமை. ஆனால், அதற்கு விதிக்கப்பட்டுள்ள வரம்புகளை மீறுவது அரசியல் அடாவடித்தனம் ஆகும். காவிரி விவகாரத்தில், இந்தி மொழித்திணிப்பில், பெரியார் அணை விவகாரத்தில், பாம்புக்குத் தலையையும் மீனுக்கு வாலையும் காட்டும் குதர்க்கப்புத்தியோடு, மத்தியில் வேறொரு நிலைப்பாட்டையும் மாநிலத்தில் முற்றிலும் முரணான நிலைப்பாட்டையும் மேற்கொள்வதை என்னவென்று சொல்வது. யுவன் சங்கர் ராஜா, . ஆர். ரஹ்மான் என்று மதச் சிறுபான்மையினர் என்றாலே ஏகத்துக்கும் வசை பாடுவதும் புழுதி வாரி தூற்றுவதும் என்ன வகை அரசியல்?

திரு. தொல். திருமாவளவன் அவர்கள் குறிப்பிடுவதுபோல கவனஈர்ப்பு ஃபோபியாவால் இவர் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார். மேலோட்டமாக சிந்தித்து, அரையும் குறையுமாக அனைத்தையும் உள் வாங்கிக்கொண்டு, உலகில் உபயோகத்தில் இல்லாத டிக்சனரிகளையெல்லாம் உதவிக்கு அழைத்து, வாய்ப்புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்றுகூட தெரியாமல் எதிர்மறை அரசியல் செய்வது என்ன நியாயம்? வாதத்துக்கு வாருங்கள் என்று உயர் பதவியில் இருப்பவர்களைக்கூட மதிக்காமல் சரிக்குச் சமமாக சகட்டுமேனிக்கு அழைப்பதும் என்ன வகை அரசியல்? தன் பலம் என்னவென்று அறியாமல், தான் சவாரி செய்வது அதிமுகவின் தோளில் என்பதைக் கூட உணராமல், புல்லுருவியாக ஊடுருவி தாம் வீழ்த்துவது அதிமுகவின் கோட்டையை என்று கூட அறியாமல் சகட்டு மேனிக்கு சமூக வலைத்தள அரசியல் செய்வது என்ன நியாயம்? அரசியல் செய்வது உங்கள் உரிமை. ஆனாலும் தமிழ்ச்சமூகத்திற்கே உள்ள சகிப்புத்தன்மையைத் தனதாக்கிக் கொண்டு திராவிட மாடலில் அரசியல் செய்திட வேண்டும்.

ராஜாஜி - காமராஜர் - அண்ணா - எம்ஜிஆர் - கருணாநிதி - ஜெயலலிதா என்று பெருந்தலைவர்கள் கண்ணியத்தோடு களமாடிய அரசியல் தமிழக அரசியல். தமிழக பாஜகவின் முன்னாள் தலைவரும் இந்நாள் தெலுங்கானா ஆளுநருமான மேதகு தமிழிசை போன்றவர், எந்த நிலையிலும் தங்கள் கண்ணியம் குறையாமல், நேர்மையோடும் அறத்தோடும் அரசியல் செய்தார். ஒருபோதும் கேமராக்களுக்கு போஸ் கொடுத்து, முழங்கால் அளவு உள்ள தண்ணீரில் படகு சவாரி செய்து தமிழக மக்களுக்கு சலிப்பை ஏற்படுத்தவில்லை. மலிவு அரசியல் என்பது அவர்களிடம் கிஞ்சித்தும் இல்லை. தமிழக பாஜக தலைவரான அண்ணாமலையிடம் மிஞ்சியிருப்பது மலிவு அரசியல் மட்டுமே.

அரசியல் வியாபாரிகளாக தங்களைத் தாங்களே மூன்றாவது பெரிய கட்சி என்று தற்குறியாக தற்சான்று அளித்துக்கொள்வதும், நான்கே நான்கு சட்டமன்ற உறுப்பினர்களை மட்டுமே வைத்துக்கொண்டு, எதிர்க்கட்சி போல கட்டாந்தரையில் நீச்சல் அடிப்பதும் நகைப்புக்குரியதே. இளமைத்துடிப்புடன் நீங்கள் மக்களின் மனநிலை அறிந்து, நிதானமாக, நின்று நேர்மறை அரசியல் செய்திடுங்கள். கேட்கச் செவியுள்ளவர் நிச்சயம் கேட்பர்.

பணம் பாதாளம் வரை பாயலாம். ஆனால், நல்ல குணம் மட்டுமே வாக்காளரின் வாசற்படியில் தலைவைத்து படுக்கும். வேலைத் தூக்கினாலும் பல்லக்கைத் தூக்கினாலும் பசுத்தோல் போர்த்திய புலி அம்பலமாவது நிச்சயம். சுயமரியாதை மண்ணில் சுய விளம்பரம் எதிர்மறை விளைவையே ஏற்படுத்தும். எச்சரிக்கை. 360 டிகிரி கோணத்தில் யோசித்திடுங்கள்! 20000 புத்தகங்களின் சுருக்கம் உங்களின் மூளையை விரிவாக்கம் செய்யட்டும். திராவிட மண்ணை மாட்டுமூளையும் கோமியமும் ஒருபோதும் வெல்ல இயலாது. ஏழுமலையா? அண்ணாமலையா? யார் என்ற குழப்பம் திராவிடத்தின் தெளிவையே, தமிழனத் திமிரையே காட்டுகிறது. தமிழகம் என்றும் உங்களுக்கு சளைக்காமல் கற்றுத்தந்து கொண்டேயிருக்கும். தமிழணங்கு எப்போதும் தலைநிமிர்ந்தே உங்கள் தோள் சாய வாள் வீசும்!

Comment