No icon

தலையங்கம்

கொல்லைப்புறத்துக் கொள்ளையர்கள்!

இந்திய ஜனநாயகத்தின் மற்றுமொரு கேலிகூத்து இவ்வாரத்தில் மகாராஷ்டிராவில் நடந்துள்ளது. பாஜக, ஒன்றிய அரசில், தலைமையேற்ற கடந்த எட்டு ஆண்டுகளில், பத்து மாநிலங்களில், கொல்லைப்புறம் வழியாக நுழைந்த கொள்ளையனைப்போல ஆட்சியைப் பிடித்து அதிகார வெறியாட்டத்தை பாஜக இந்திய ஜனநாயகத்தில் ஆடியுள்ளது.

ஜனநாயகத்தின் உயிர்மூலமான தேர்தல் முறையில் மக்களை நேரடியாக தேர்தல் களத்தில் சந்தித்து, அவர்கள் அளிக்கும் ஜனநாயகத் தீர்ப்பை ஏற்று, அதன்படி நடந்துகொள்ளாமல், பாஜக அல்லாத கட்சி மக்கள் பிரதிநிதிகளை வளைத்தும், பாஜகவுடன் ஒத்துவராத கட்சிகளை உடைத்தும், ஆட்சியைக் கவிழ்த்து, கொல்லைப்புறமாக ஆட்சியைப் பிடிக்கிறது.

ஒருமுறை, இருமுறை என்றால் சகித்துக் கொள்ளலாம். எட்டுமுறை, பத்து மாநிலங்களில் என்று எண்ணும்போது இவர்களின் அதிகார வெறியாட்டம் ஜனநாயகக் கேலிக்கூத்தாகிறது. அவர்கள் நியமித்த அவர்களின் ஆளுநர்களே இதற்கு உறுதுணையாக அமைவதும், கண்டுகொள்ள வேண்டிய குடியரசுத்தலைவரோ அல்லது அவர்தம் அலுவலகமோ கண்களை மூடிக்கொண்டு வேடிக்கைப்பார்ப்பதும் வெந்தப் புண்ணில் வேலாக இறங்குகிறது. தன் கையைக் கொண்டே தன் கண்களைக் குத்துவதுபோல், ஒரு கட்சியின் மக்கள் பிரதிநிதிகளைக் கொண்டே, அந்தக் கட்சியினை ஒன்றுமில்லாமல் செய்து, ‘எம் அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா’ எமர்ஜென்சி முறையிலான அணுகுமுறையை மேற்கொள்கிறது.

ஏக் நாத் ஷிண்டே தலைமையிலான அதிருப்தி எம்எல்ஏக்களை, குஜராத் வழியாக அஸ்ஸாம் வரை கொண்டுசென்று, உத்தவ் தாக்ரே தலைமையிலான மகா கூட்டணியை மறுதலிக்க செய்து, கோவா வழியாக உள்நுழைகிறது இந்தக் கொள்ளைக்கூட்டம். கொல்லைப்புறத்தை ஆளுநர் இதற்காகவே திறந்துவைத்து வழிமேல் விழிவைத்து காத்திருக்கிறார்.

நல்ல ஆயனைப்போல நுழைவாயில் வழியாக நுழையாமல், திருடனைப்போல ஏறி குதித்து இவ-ர்கள் மந்தைக்குள் நுழைகின்றனர் (யோவா 10:8-10) அரசியல் பிழைத்தோருக்கு அறம் கூற்றாகும்’ என்பதுதான் எதார்த்தம். கொஞ்சம்கூட வெட்கமோ, மனசாட்சியோ இல்லாமல், அறச்சிந்தனையே அறவே இல்லாமல் அதிகாரத்தில் ஏறும் இந்த அரசியல்வாதிகள் எப்படி மக்கள் சேவகர்களாக இருக்க இயலும்? தேர்தல் ஆணையமோ, உச்சநீதிமன்றமோ.. தன்னாட்சிப் பெற்ற எந்த அமைப்புமே எதிர்க்கேள்வி கேட்பதில்லை. ஒட்டுமொத்த ஒன்றிய அரசு இயந்திரம் இதற்கு துணை போகிறது.

2014 ஆம் ஆண்டு அருணாச்சலப் பிரதேசத்தில் 60 தொகுதிகளில் 42 தொகுதிகளை வென்று தனிப்பெரும் பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்த காங்கிரஸ் கட்சியை, வெறும் 11 இடங்களே வென்ற பாஜக, அதிருப்தி காங்கிரஸ் எம்எல்ஏ கலிகோ புல் தலைமையில் உடைத்து, நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டுவந்து, கவிழ்த்து, தார்மீக ஆதரவளித்து, பிப்ரவரி 19, 2016-ல் கலிகோ புல்லை முதல்வராக்கியது. உச்சநீதிமன்றத்தில் தலையிட, கலிகோ புல் தற்கொலை செய்து கொள்ள.. அடுத்து, பீமா காண்டு தலைமையில் 40 காங்கிரஸ் எம்எல்ஏக்களை உடைத்து, அருணாச்சல மக்கள் கட்சியாகி, பாஜகவில் அனைவரும் சேர்ந்து, 2019 ஆம் ஆண்டு தேர்தலில் வென்று, இன்றும் முதல்வராகவே தொடர்கிறார். காங்கிரசின் ஒட்டுமொத்த இருப்பும் துடைத்தெறியப்பட்டது.

2017 ஆம் ஆண்டு மணிப்பூரில் 60 இடங்களில் 28 இடங்களை வென்று, காங்கிரஸ் கட்சியின் ஏழு எம்எல்ஏக்களை பாஜக தன் பக்கம் இழுத்து, பாஜக சார்பில் பிரேன் சிங்கை முதல்வராக்கியது. 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 32 இடங்களை வென்று பாஜக ஆழமாக வேரூன்றியுள்ளது.

2017 ஆம் ஆண்டு கோவாவில் 40 தொகுதிகளில்  13 இடங்களை மட்டுமே வென்ற பாஜக, 17 இடங்களை வென்ற காங்கிரஸை, உடைத்து, 12 காங்கிரஸ் எம்எல்ஏக்களை தங்கள் பக்கம் இழுத்து, ஆட்சியைப் பிடித்தது. 2022 இல் 20 இடங்களை வென்று, தற்போது சிறிய கட்சிகளின் துணையுடன் ஆட்சி அமைத்துள்ளது.

2017-ல் பீகாரில் லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளத்தின் மகா கூட்டணியில் 71 இடங்களை வென்று ஆட்சியைப் பிடித்த நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளத்தை, 53 இடங்களே வென்ற பாஜக தன் பக்கம் இழுத்து, கூட்டாக ஆட்சியைப் பிடித்துள்ளது. துணை முதல்வர் பதவியும் பெற்றுள்ளது.

2018-ல் 60 தொகுதிகளை உடைய மேகாலயாவில், 21 தொகுதிகளை வென்ற காங்கிரஸ் கட்சியையும், 19 தொகுதிகளை வென்ற தேசிய மக்கள் கட்சியையும், உடைத்து, ஒன்றுமில்லாமல் செய்து, வெறும் இரண்டு தொகுதிகளை மட்டுமே வென்ற பாஜக, தந்திரமாக கொல்லைப்புறமாக உள்ளே நுழைந்து, ஆட்சியைப் பிடித்துள்ளது. இது மிகப்பெரிய ஜனநாயக கேவலம்.

இதைவிட மிக கேவலம், 2019-ல், சிக்கிமில், ஒரு தொகுதியில் கூட வெற்றிபெறாத பாஜக, 15 இடங்களை வென்ற சிக்கிம் ஜனநாயக முன்னணியை உடைத்து, 10 பேரை தன் வசம் இழுத்து, 17 இடங்களை வென்று சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சவுடன் கூட்டணி அமைத்து, இடைத்தேர்தலில் பாஜக இரண்டே இரண்டு இடங்களை வென்று, இன்றும் ஆட்சியில் உள்ளது.

2018-ல் 222 தொகுதிகளைக் கொண்ட கர்நாடகாவில், 78 தொகுதிகளை வென்ற காங்கிரசும், 37 தொகுதிகளை வென்ற மதச்சார்பற்ற ஜனதா தளமும் அமைத்த கூட்டணி ஆட்சியை ஓராண்டிலேயே கவிழ்த்து, 104 இடங்களை வென்ற பாஜக, மதச்சார்பற்ற ஜனதா தளத்திலிருந்து 3 பேரையும் காங்கிரசிலிருந்து 13 பேரையும் ராஜினாமா செய்ய வைத்து, பாஜகவின் எடியூரப்பாவை முதல்வராக்கி, இடைத்தேர்தலில் பலம் பெற்று, பசவராஜ் பொம்மை தலைமையில் இன்றும் ஆட்சியில் நீடிக்கிறது.

2018 ஆம் ஆண்டு, மத்தியப் பிரதேசத்தில், 114 இடங்களை வென்று, மேலும் பிற கட்சிகளைச் சேர்ந்த ஏழுபேருடன், 121 எம்எல்ஏக்களுடன் ஆட்சியைப் பிடித்த கமல் நாத் தலைமையிலான காங்கிரஸை, இரண்டு ஆண்டுகளில் ஜோதிராதித்ய சிந்தியா தலைமையில் 22 எம்எல்ஏக்களுடன் தன் பக்கம் இழுத்து, சிவராஜ் சௌகான் தலைமையில் பாஜக ஆட்சியைப் பிடித்துள்ளது.

2016 ஆம் ஆண்டு பாண்டிச்சேரியில் உள்ள 30 தொகுதிகளில் 15 தொகுதிகளை வென்ற நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ், திமுகவின் ஆதரவுடன் 4 ஆண்டுகள் 9 மாதங்கள் ஆட்சி செய்த நிலையில், இரண்டு அமைச்சர்கள், ஆறு எம்எல்ஏக்களை பாஜக தன் பக்கம் இழுத்து, 3 நியமன பாஜக எம்எல்ஏக்களுடன் ஆட்சியைக் கவிழ்த்து, அடுத்த தேர்தலில் தற்போது ரங்கசாமி தலைமையிலான என்ஆர் காங்கிரசில் பங்கேற்று வேரூன்றியுள்ளது.

2022-ல் மகாராஷ்டிராவில் தன் கொள்கையை ஒத்த, இருபத்தைந்து ஆண்டுகால நட்பு கட்சியான சிவசேனாவுக்கே கரசேவை அளித்துள்ளது.

அயோத்தியில் கரசேவை செய்து கட்சி வளர்த்த பாஜக, தற்போது இந்திய ஜனநாயகத்தில் ஆட்சியைப் பிடிப்பதற்கு கேவலமான சிரச்சேத சேவை செய்கிறது.

அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும் - இது சிலப்பதிகாரம்

அரசியல் பிழைத்தோர்க்கு அறமின்மையே கூற்றாகும்- இதுதான் பாஜகவின் காவியதிகாரம்!

இவர்கள் ‘கொல்லைப்புறத்துக் கொள்ளையர்கள்!’ இந்திய ஜனநாயகத்தின் கருந்துளை! கேவலம்!! சாபம்!!!

 

Comment