No icon

தலையங்கம்

காவியடிக்கப்பட்ட கல்லறைகள்

நல்ல மாட்டுக்கு ஒரு சூடு. அடங்காத மாட்டுக்கு அங்கமெல்லாம் சூடு வைச்சாலும் அது அடங்கவே அடங்காதுஎன்பது கிராமத்து வழக்கு மொழி. இது யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ, பாஜகவினருக்கு இது முற்றிலும் பொருந்தும் போலும். அறிவுரை யார் சொன்னாலும் கேளாமல் காதுகேளாதோர் காதில் ஊதிய சங்காகவே கேளாமல் கடந்துவிடுகின்றனர். எதையுமே சிந்தித்து ஆராய்ந்து, மறுபரிசீலனை செய்து, அல்லவை நீக்கி, நல்லவைச் சேர்க்கும் பகுத்தறியும் மூளையே அவர்களிடம் அறவே இல்லை.

உச்ச நீதிமன்றமே கொட்டுவைத்தாலும் சரி, எது சொன்னாலும் உரைக்காதவர்களாக, அப்படியே துடைத்தெறிந்துவிட்டு அடுத்த வேலைக்குச் சென்றுவிடுகின்றனர். நுபுர் ஷர்மா வழக்கில் ஒரு நீதிபதி தெரிவித்த கண்டன கருத்து இந்திய அளவில் பாஜகவினரிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அண்மையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைச்சர் மனோ தங்கராஜூ ஒரு கிறிஸ்தவர் என்பதற்காக, அவருக்கு எதிராக பாஜகவினர் செய்த மதவெறி அரசியல் நீதிமன்றத் தீர்ப்பில் இடித்துரைக்கப்பட்டுள்ளது நமக்கெல்லாம் மிகப்பெரிய ஆறுதல். அவர்களின் கீழ்த்தரமான அரசியல் புத்திக்கு ஓர் உதாரணம். அவ்வளவே.

கன்னியாகுமரி மாவட்டம் வேளிமலை குமாரசுவாமி கோயில் தேர் வடம் பிடிக்கச் சென்ற தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பவியல் அமைச்சர் மனோ தங்கராஜூக்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். அதேபோல மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் நடைபெற்ற திருவிளக்கு பூஜை வழிபாட்டை தொடங்கிவைத்தபோதும் பாஜகவினர் எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் நடத்தினர். இந்த ஜூலை ஆறாம் தேதி திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோவிலில் கும்பாபிஷேகத்தின்போதும் பங்கேற்க எதிர்ப்பு தெரிவித்து எச்சரிக்கை விடுத்தனர்.

இந்த நிலையில், கன்னியாகுமரி மாவட்டம் பிரம்மபுரத்தைச் சேர்ந்த சோமன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார். அம்மனுவில் தாந்திரீக விதிப்படி மேல்சட்டை கழற்ற வேண்டும் என்று ஒரு விதியை மேற்கோள் காட்டியும் இந்துக்கள் அல்லாதோர் கோயிலுக்குள் நுழைய அனுமதிக்கக்கூடாது என்றும் உத்தரவிட கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஹேமலதா அமர்வு, ‘இந்துக்கள் அல்லாதோர் குடமுழுக்கு விழாவில் பங்கேற்கக் கூடாது என்று இந்து சமய அறநிலையத் துறையில் எந்த விதிகளும் இல்லை. 120 கோடி மக்கள்தொகை கொண்ட தேசத்தில் நம்பிக்கை கொண்டவர்கள் கோயிலுக்குச் செல்லும்போது அவர்களை நிறுத்தி, அவர்களுடைய மதத்தினை உறுதி செய்வது பெரும் பிரச்சனைக்கு வழிவகுக்கும்என்று தெரிவித்து, “பாடகர் யேசுதாஸ் வேறு சமயத்தைச் சார்ந்தவராக இருந்தாலும் அவர் ஏராளமான இந்துக் கடவுள்களின் பாடல்களைப் பாடியுள்ளார். அவை கோயில்களிலும் ஒலிக்கப்படுகின்றன. வேளாங்கண்ணி தேவாலயத்திற்கும், நாகூர் தர்காவிற்கும் ஏராளமான இந்துக்கள் சென்று வழிபட்டு வருகின்றனர். ஆகவே இந்த விவகாரத்தை நீதிமன்றம் குறுகிய பார்வையில் அணுக விரும்பவில்லை. இந்த விஷயங்களை பரந்த மனப்பான்மையுடன் அணுக வேண்டும் என்ற அடிப்படையில் இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது" என்று பாஜகவினரின் முகத்தில் காரி உமிழாத குறையாக தீர்ப்பளித்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஒரே பாஜக சட்டமன்ற உறுப்பினர் .சு. காந்தி. கால்களில் அவர் அணியாத செருப்பை தன் மனதில் அணிந்துள்ளார். உடலுக்கு உடுத்துவது வெள்ளாடை. உள்ளத்திற்கோ  காவியாடை. முழுக்க முழுக்க அழுக்கடைந்த மனமே இவருடையது. மூச்சு விடும்போதெல்லாம் மதவெறி அரசியல் செய்தே கட்சி வளர்க்கிறார். இவரைப் போலவே இவரது கட்சியினரும் எதை எடுத்தாலும் மதங்கொண்டு மாட்டு மூளையுடன் அணுகி, நாட்டுக்கு கேடு விளைவிக்கின்றனர். அமைச்சர் மனோ தங்கராஜ், ஒரு கிறித்தவர் என்பதுதான் இவர்களின் வெறுப்புக்கு காரணம். நெருப்பாக அனல் கக்குகின்றனர். அறநிலையத்துறையும் அரசாங்கமும் ஒன்றுதான் என்று தெரியாத அறிவிலிகள் இவர்கள். .சு.காந்தி, இந்துக்களின் ஏகோபித்த பிரதிநிதியாக தனக்குத்தானே மகுடம் சூடி களமாடுகிறார். இந்து வாக்கு வங்கிதான் இவரது ஒரே குறி. எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்று அறியாமலே கண்டதையும் தின்று வாந்தி எடுக்கும் வகையறாக்களே இந்த .சு. காந்தி வகையறாக்கள்.

அரசாங்கத்தின் பிரதிநிதி, மக்களின் பிரதிநிதி, எல்லாவற்றிற்கும் மேலாக சத்திய பிரமாணம் எடுத்துக்கொண்ட ஓர் அமைச்சர், சாதி-மதம்-இனங்களுக்கு அப்பாற்பட்டவர் என்பதையெல்லாம் வசதியாகவே இவர்கள் மறந்துவிடுகின்றனர் போலும்.

இம்மாவட்டத்தில் ஏறக்குறைய ஐம்பது கோடி செலவில் அறநிலையத்துறை சார்பில் கோயில் உழவாரப்பணிகள் நடப்பதை பொறுத்துக்கொள்ளாமல் சிறுமைத்தனத்துடன் அரசியல் செய்கிறார். இந்த கிறித்தவ அமைச்சர் மனோ தங்கராஜ், தேர் வடம் பிடித்து இழுக்கக்கூடாது என்று பாஜகவினர் போராட்டம் நடத்துகின்றனர்.

அந்தத் தேரை நகர்த்த பிணைக்கப்பட்டுள்ள வடக்கயிறு எங்கிருந்து வந்தது? யார் அந்தக் கயிறைத் திரித்தார், அதற்கான மூலப்பொருள் தேங்காய் எந்த தென்னந்தோப்பில் விளைந்தது? அந்த தென்னங்கன்றை நட்டவர் யார்? என்று இவர்கள் அறிவார்களா? இதனை அறிந்துகொள்ள விரும்பமாட்டார்கள். அந்தத் தேரைச் செய்த தச்சர் யார் என்றாவது இவர்களுக்குத் தெரியுமா?

நாம் ஒவ்வொருவரும் உண்ணும் உணவுக்கும் உடுத்தும் உடைக்கும் இது பொருந்தும். கிறிஸ்தவ விவசாயி பயிரிட்டான் என்பதற்காக இவர்கள் உண்ணாமல் பட்டினி கிடப்பார்களா? இஸ்லாமிய நெசவாளி நெய்தான் என்பதற்காக ஆடை உடுத்தாமல் நிர்வாணியாய் நிற்பார்களா?

இப்படி தேர் வடம் பிடிப்பதை அடம் பிடித்து, தரையில் விழுந்து அழுது புரண்டு நிப்பாட்ட போராடியதில் இடுப்பில் இருந்த பட்டாபட்டி தேய்ந்து ஓட்டையாகி இறுதியில் தபால்பெட்டியாகி, அவமானப்பட்டதுதான் மிச்சம். சும்மாயிராமல் நீதிமன்றத்தை நாடினார்கள். அதுவும் சாட்டையெடுத்து, ஓட்டை விழுந்த இடத்திலேயே இப்படி ஒரு போடு போட்டுள்ளது.

புறாவுக்கு மசூதியாயிருந்தால் என்ன? மாதா கோவிலாக இருந்தால் என்ன? மாரியாத்தா கோயிலாக இருந்தால் என்ன? எல்லாம் ஒன்றுதான்.

தூங்குபவரை எழுப்பிவிடலாம். ஆனால், தூங்குபவர்களைப் போல பாசாங்கு செய்பவர்களை எழுப்புவது கடினம். .சு காந்தி போன்றவர்கள் சாப்பிடமாட்டார்கள்; பசியோடு உண்பாரையும் உண்ண விடமாட்டார்கள். தானும் படுத்து தூங்கமாட்டார்கள்; தள்ளியும் படுக்க மாட்டார்கள். எப்போதும் மக்களை, தன்னைப் போலவே பதற்றத்தில் வைக்கவே இவர்கள் மோடியின் வழியில் முயற்சிக்கின்றனர்.

அமைச்சர் என்பவர் அரசியல் சாசனத்தின் காவலன் என்பதை இவர்கள் உணர்ந்திட வேண்டும். காவியடிக்கப்பட்ட கல்லறைகளாக இருப்பதில் பெருமை ஒன்றும் இல்லை. கல்லறை காவியாக இருந்தால் என்ன? பச்சையாக இருந்தால் என்ன? வெள்ளையாக இருந்தால் என்ன? கல்லறை என்பது மட்டுமே அதன் வரையறை.

வாக்கு சேகரிக்கும்போது ஆயர் இல்லங்களைத் தேடும் இவர்கள், நோன்பு திறக்கும்போது கஞ்சிகுடிக்க கெஞ்சும் இவர்கள், தங்கள் கடந்த காலத்தையும் எண்ணிப் பார்க்க வேண்டும். எதையும் காவிக்கண்ணாடி கொண்டே பார்ப்பது நல்லதல்ல.

பாஜக வகையறாக்களே! நாம் குடியிருப்பது கோவிலிலோ, மசூதியிலோ, ஆலயத்திலோ அல்ல; மாறாக, இந்தச் சமூகத்தில். பிறப்பு முதல் இறப்பு வரை ஒருவரையொருவர் நாம் சார்ந்தே வாழ வேண்டும். இதுதான் விதி. தனி மரம் ஒருபோதும் தோப்பு ஆகாது. கூடி வாழும் ஊரில் எல்லாருக்கும் இடமுண்டு. உங்கள் கோவிலுக்குள் உள்ள தீண்டாமையை போக்கிவிட்டு, இந்துக்கள் அல்லாத அமைச்சர் வடம் பிடிப்பதற்கும் திருவிளக்கு ஏற்றுவதற்கும் குடமுழுக்கில் குடம் தூக்குவதற்கும் எதிராகப் போராடுங்கள்.

நீதியின் சதகம்என்ற நூலில் அதன் ஆசிரியர் பர்த்ருஹரிசமூகம் என்பது நாலுபேர்என்று வரையறுக்கிறார். முதலாவதாக, பிறர்வாழத் தாம் வாழும் சான்றோர் (மிகவும் நல்லவர்கள்). இரண்டாவதாக, சுயநலமும் பொதுநலமும் கலந்த சாதாரண மனிதர்கள் (நல்லவர்கள்). தன்னலத்திற்காகப் பிறர் நலத்தை அழிக்கும் மனித மிருகங்கள் (கெட்டவர்கள்). பிறரைக் காரணமின்றி அழிப்பதிலேயே ஆனந்தம் காணும் மனித அரக்கர்கள் (மிகவும் கெட்டவர்கள்). அதாவது சுயநலத்தைக் கொன்று அழித்தவர்கள்: சுயநலத்தைக் கடக்க முனைபவர்கள்: சுயநலத்தில் நிலைத்து நிற்பவர்கள்: சுயநலத்தில் மூழ்கியவர்கள். யார் இவர்கள்?

Comment