No icon

ஒற்றை வரியில் தலையங்கம்

சௌக்கிதாரின் யோக்கியதை...

தமிழ்ப் பத்திரிகை வரலாற்றிலேயே முதல்முறையாக 620 வார்த்தைகளைப் பயன்படுத்தி,

முற்றுப்புள்ளியே இல்லாமல் ஒற்றை வரியில் எழுதப்பட்ட தலையங்கம்

நம்ம ‘நம் வாழ்வு’ பத்திரிகையிலிருந்து..(குடந்தை ஞானி)

கடந்த ஐந்து ஆண்டுகளில் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் குப்பையாக்கி, கொண்ட கொள்கையில் உறுதியாயிருந்து, இந்திய ஐனநாயகத்தின் அனைத்துக் கட்டமைப்புகளையும் தகர்த்தெறிந்து, ஏழை எளிய நடுத்தர மக்களின் இயல்பான வாழ்க்கையை பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி என்று சீரழித்து, ஸ்டார்ட் அப் இந்தியா, மேக் இன் இந்தியா என்று நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் செயல்படாத திட்டங்கள் தீட்டி, நாடகத்திற்காகத் தூவப்பட்ட குப்பைகளை ’தூய்மை இந்தியா’ என்ற பெயரில் மீடியா வெளிச்சத்தில் கூட்டி பெருக்கி, காந்தியை மறக்கச் செய்ய பட்டேலுக்கு வானுயர சிலையெழுப்பி, காந்தியத்தை மறக்கச் செய்ய கோல்வாக்கரின் கண்ணாடியை விளம்பரப்படுத்தி, ஆர்எஸ்எஸ் சகாக்களை ஆளுநர்களாக மாநிலமெங்கும் நியமித்து, ஆர்பிஐ,சிபிஐ, உச்சநீதிமன்றம், திட்டக் குழு, தேர்தல் ஆணையம் என்று அனைத்தையும் அடிமைகளாக்கி, யோகிகளையும் சாமியார்களையும் முதல்வர்களாக்கி, எம்பிக்களாக்கி, எவன் எதிர்த்துப் பேசினாலும் அவனை ’தேசத்தூரோகி’ என்று முத்திரைக் குத்தி, குற்றம் சுமத்துபவனை ’ஆன்டி இந்தியன்’ என்று அடையாளப்படுத்தி, எல்லா மீடியாக்களையும்  அடிவருடிகளாக்கி, அம்பானிகளுக்கும் அதானிகளுக்குக் கூஜா தூக்கி, திவாலான கம்பெனிகளுக்கெல்லாம் கடன்கொடுத்து கடன்கார முதலாளிகளாக்கி, மல்லையாக்களையும் மோடிகளையும் தப்புவித்து நாடகம் நடத்தி, ஐயப்பனை அரசியலாக்கி, பெண்களின் மாதவிடாயை விளம்பரப் படுத்தி, 56 இஞ்ச் மார்பளவுக்கு கோடிகளில் கோட் சூட் அணிவித்து அழகுப்படுத்தி, இராணுவ வீரர்கள் இரத்த வெள்ளத்தில் மிதக்கும்போது விளம்பர வெளிச்சத்தில் நடிகனாகி, நானும் டீக்கடைக்காரன்தான் என்று கற்பனையில் டிக்காசன் கலந்து, சாத்தியமே இல்லாத 10 சதவீத உயர்சாதி இடஒதுக்கீட்டை வலியத் திணித்து, உச்சநீதிமன்றத்தின் மாண்பைக் கெடுத்து, கைப்பாவையாக சில நீதிபதிகளை விலைக்கு வாங்கி, சராசரியாக மாதத்திற்கு இருமுறை மும்முறை என்று உலகம் சுற்றும் வாலிபனாக உல்லாச வாழ்க்கை வாழ்ந்து,  நம்பிவந்த மனைவியை நட்டாற்றில் விட்டு, செல்லும் மாநிலமெல்லாம் ஒரு நடிகனைப்போல விதவிதமாக தொப்பியணிந்து போஸ் கொடுத்து, புகைப்படம் எடுக்கும்போது தன்னை மறைப்பவரை ஓரங்கட்டி ஒய்யாரமாக விடைத்து நின்று, நான் ஏழைத்தாயின் மகன் என்று சூழ்நிலைக்கேற்ப நீலிக் கண்ணீர் வடித்து, மக்களவைக்கும் மாநிலங்களவைக்கும் பதில் சொல்லாமல் அவைக்கு வராமல் மட்டையடித்து, மெஜாரிட்டியே இல்லையென்றாலும் ஆட்சி எங்களுக்குத்தான் என்று தரையில் புரண்டு  அழுது அடம்பிடித்து, அழுகுணி ஆட்டம் ஆடி, தங்கள் நிர்வாணத்தைக் கூட பொருட்படுத்தாமல் மானம் பறிபோயி டெல்லி தலைநகரில் வாட்டும் வெயிலில் வாடிய விவசாயிகளை அவமதித்து, ஆதார் உட்பட ஆகாது என்று மறுத்த காங்கிரசின் திட்டங்களையெல்லாம் வெட்கமே இல்லாமல்  அமுல்படுத்தி, ஐக்கிக்களுக்கும் ரவி சங்கர்களுக்குப் பின்னால் மா மத யானையாய் மறைந்து கொண்டு,  ராம்தேவ்களின் பதாஞ்சலி வழியாக கோடிகளில் பணம் சம்பாதித்து, தரையில் படுத்து யோகா செய்து, தேசியக் கொடியைக் கொண்டு முகம் துடைத்து, கும்ப மேளாக்களில் கும்மியடித்து நதிகளை அசுத்தமாக்கி, துப்புரவுப் பணியாளர்களின் பாதங்களைக் கழுவி பாசாங்கு செய்து, ஒக்கிப் புயலடித்தாலும் கஜா புயல் நாசம் செய்தாலும் காம்பவுண்டு சுவரை விட்டுத் தாண்டாமல் வாளாவிருந்து, உலகில் எங்க எவன் செத்தாலும் ஒப்பாரி வைப்பதுபோல் டிவிட்டரில் கீச்சுகளைக் கூவ விட்டு, மாட்டுக்கறியை ஏற்றுமதி செய்து அந்நிய செலவாணியை ஈட்டிவிட்டு, மாட்டை வாகனத்தில் ஏற்றிச் சென்றாலும் அடித்து கொன்று, ரோடு ரோமியோக்களைக் கொண்டு காதலர்களைப் பிரித்து, ஆசிஃபாக்களை கோயில் கருவறையிலேயே கருவறுத்து, பத்திரிகையாளர்களைக் கண்டாலே முக்காடுபோட்டு பதுங்கி, அணுவுலை என்றாலும் நியுட்ரினோ என்றாலும் எட்டுவழிச் சாலை என்றாலும் மீத்தேன் என்றாலும் ஹைட்ரோ கார்பன் என்றாலும் காற்றாலை என்றாலும் சூர்ய ஒளி மின்சாரம் என்றாலும் என் இலக்கு தமிழகம்தான் குறிவைத்து குண்டு போட்டு, கீழடியைப் பற்றி ஆய்வுகளை வெளியே விடாமல் இருட்டடிப்புச் செய்து,  படித்த இளைஞர்களை பாரதத்தில் பக்கோடா விற்கச் சொல்லி, அனிதாக்களை ’நீட்’ டால் கொன்று, வெமுலாக்களை தற்கொலைக்கு தூண்டி, இலங்கை இராணுவம் மீனவனைச் சுடும்போதெல்லாம் தமிழன் என்று கண்டு கொள்ளாமல் இருந்துவிட்டு, சாகர் மாலா திட்டம்மூலம்  மீனவனுக்கு மலர் வளையம் வைத்து, கடற்கரை மேலாண்மைத் திட்டம் என்று கரையோர மக்களை அப்புறப்படுத்தி, ப்ரியங்கா சோப்ரா - நிக் ஜோனாவின் திருமண வரவேற்பில் குதுகாலித்து, காங்கிரஸ் இல்லாத இந்தியா என்று எதிர்கட்சியில்லாத ஐனநாயகத்தைக் கட்டமைக்கக் கனவு கண்டு, லோக்பால் மசோதா வரும் என்று அண்ணா ஹசாரேக்களின் வாயடைத்து, கெஜ்ரிவாலாக்களை அமலாக்கத்துறை கொண்டு எச்சரித்து, நாரயணசாமிகளை பேடிகளைக் கொண்டு நச்சரித்து, விவசாயிகள் சம்பளத்தை இரண்டு மடங்காக்குவேன் என்று கங்கணம் கட்டி அவன் கட்டிய கோவணத்தையும் களவாடி, இராமர் கோவிலைக் கட்டுவேன் என்று பூச்சாண்டி காட்டி, சினிமா தியேட்டரிலும் தேசிய கீதம்  பாடவேண்டும் என்று சட்டாம்பிள்ளை யாக சட்டமியற்றி, மன் கி பாத் மூலம் மாதந்தோறும் மக்களை நச்சரித்து, கோடிகளில் கொட்டி விளம்பரம் செய்து, எல்லா பெட்ரோல் பங்குகளிலும் கட் அவுட்டு களில் பல்லிளித்து, கறுப்புப் பணத்தை ஒழிப்பேன் என்று மக்களின் ரொக்க கையிருப்புகளுக்கு வேட்டு வைத்து, ரூபாய் நோட்டுகளுக்கெல்லாம் ரோசாப்பூ கலரில் சாயம் போட்டு,  ரஃபேல் போர்விமானப் பேரத்தை அம்பானிக்கு சாதகமாக கமுக்கமாய் பிரான்சில் சோலி முடித்து, இபிஎஸ்சையும் ஓபிஎஸ்சையும் சிண்டு முடித்து தன் சீட்டுக்கு அருகில் வேட்டைக்கு வைத்து, நமோ ஆர்மியைக் கொண்டு சமூக வலைதளங்களில் ’ஜவெல்கம் மோடி’ என்று தனக்குத்தானே ஹேஷ்டாக்  போட்டு, சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் என்று புரியாத சங்கேத மொழியில் புருடா விட்டு, கார்கிலைப் போல் புல்வாமா தாக்குதலைத் தனக்குச் சாதகமாக திசை திருப்பி, இராணுவ வீரர்களின் சடலங்களுக்கு முன்பு செல்பி எடுத்து, நமோ... நமோ என்று சுயதம்பட்டத்திற்காக சுயவரலாற்றுப் படத்தை ரிலிஸ் செய்து, நமோ நமோ என்று தன் சுயபுராணத்திற்காக ஒரு டிவி சேனலையே ஆரம்பித்து, மிஷன் சக்தி என்று பூமியின் அண்ட வெளியிலும் அண்டப் புளுகு ஆகாசப் புளுகு புளுகி, இவர் ஒரு சதுரங்க வேட்டைக்காரர் என்று தேசம் விழித்து கொண்ட வேளையில் ’நானும் சௌக்கிதார்’ என்று தூக்கத்திலிருந்து விழித்தவரைப்போல் உதட்டைப் பிதுக்கி, அதிமுகவின் தோளிலும் தேமுதிகவின் தலையிலும் பாமகவின் கழுத்திலும் சாதிக் கட்சிகளின் முதுகிலும் ஏறி, பாசிசத்தின் மறுமுகம் பாஜகவின், ஒற்றைப் பிரதிநிதியாக வரும் மோடியையும், அவர் கால் கல்லில் மோதாதபடி தாங்கும் அதன் கூட்டணியை யும், உதிரிக் கட்சிகளையும் மதச்சார்பின்மையைக் காப்பதற்காக, ஜனநாயகத்தை நிலைப்படுத்துவதற்காக, பன்முகத்தன்மையைப் பாராட்டுவதற்காக நம் தமிழகத்தில் வேரோடும் வேரடி மண்ணோடும் நம் ஒருவிரல் புரட்சியால் ‘மிகப்’ பெரிய வியாழக்கிழமையன்று  அப்புறப்படுத்துவோம்.

Comment