No icon

மதமாற்றம் செய்ய முயன்றதாக அருள்சகோதரிமீது குற்றச்சாட்டு-07.03.2021

மத்திய பிரதேசத்தில், சாதார்பூர் கஜூராஹோவில் உள்ள திருஇருதய கான்வென்ட் பள்ளியின் முதல்வரான அருள்சகோதரி பாக்யா அவர்கள், அப்பள்ளியில் பணிபுரியும் இந்து சமயத்தைச் சேர்ந்த ஆசிரியை ஒருவரை மதமாற்றம் செய்ய முயன்றதாக மத்திய பிரதேச காவல்துறை குற்றஞ்சாட்டியுள்ளது. கடந்த ஜனவரி மாதம் முதல் கடுமையான மதமாற்ற தடைச் சட்டத்தை மத்திய பிரதேசம் அமுல்படுத்தியுள்ள நிலையில், சத்னா மறைமாவட்ட பொதுமக்கள் தொடர்பு பொறுப்பாளரான அருள்பணியாளர் பால் வர்கீஸ், இது தவறான குற்றச்சாட்டு என்றும் மறுத்துள்ளார். இப்பள்ளியில் 2016 ஆம் ஆண்டு முதல் பணிபுரிந்து ரூபி சிங் என்ற ஆசிரியை, பெற்றோர்கள் மற்றும் மாணவர்களிடமிருந்து வந்த அதிருப்தி புகார்களின் அடிப்படையில், கோவிட் பெருந்தொற்று காலத்திற்குப் பிறகு பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அவரோ, தன்னை மதம் மாற மறுத்த காரணத்தினால்தான் தன்னை பணி நீக்கம்செய்தார் என்று முதல்வர் அருள்சகோதரி பாக்யா மீது, பழி வாங்கும்  வகையில்  காவல் துறையில்  புகார் செய்துள்ளார். இப்பள்ளி சிஸ்டர்ஸ் ஆஃப் டெஸ்டிட்டியூட் என்னும் துறவறச்சபையால் நடத்தப்படுகிறது. பாஜகவினரின் வற்புறுத்தலின் காரணமாக, கைது செய்யப்படுவோம் என்ற அச்சத்தின் காரணமாக அருள்சகோதரி பாக்யா அவர்கள் முன்ஜாமின் கோரியுள்ளார்.

 

Comment