No icon

கோவிட்-19 தடுப்பூசிகள் பாரபட்சமின்றி விநியோகிக்கப்பட வேண்டும்- திருஅவை

கோவிட்-19 தடுப்பூசிகள் பாரபட்சமின்றி விநியோகிக்கப்பட வேண்டும்- திருஅவை
உலகின் அனைத்து நாடுகளிலும், கோவிட்-19க்கு எதிரான தடுப்பூசிகள் பாரபட்சமின்றி விநியோகிக்கப்படுவதை உறுதி செய்யுமாறு, WCC எனப்படும் உலக கிறிஸ்தவ சபைகள் மன்றமும், WJC எனப்படும், உலக யூத அவையும், சமயத் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளன.

கோவிட்-19க்கு எதிரான தடுப்பூசிகள் விநியோகிக்கப்படுவதில் எவரும் ஒதுக்கப்படாமல், அனைவருக்கும் வழங்கப்படுவது, தன் இயல்பிலேயே அடிப்படையான நன்னெறிசார்ந்த நடவடிக்கையாகும் என்று கூறியுள்ள, இந்த அவைகள், இந்த தடுப்பூசிகளை விநியோகிப்பது குறித்து, கொள்கைகளை வகுக்கும் கலந்துரையாடல்களில், சமயத் தலைவர்கள் தங்களின் குரல்களை ஓங்கி ஒலிக்கச் செய்யவேண்டும் என்று கூறியுள்ளன.

கிறிஸ்தவ மற்றும், யூதமத அவைகள், டிசம்பர் 22ம் தேதி வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவிட்-19 பெருந்தொற்றுக்கு வழங்கப்படும் புதிய தடுப்பூசிகள், அந்த நோய் சார்ந்த பிரச்சனைக்கு, உடனடியாக அல்லது, முழுவதுமாகத் தீர்வு வழங்காது என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வருவாய் குறைவாயுள்ள நாடுகளைவிட, வருவாய் அதிகமுள்ள நாடுகளே, இந்த தடுப்பூசிகளை, அதிக அளவில் பெறும் ஆபத்து உள்ளது என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளிப்படுத்திய கவலை, தங்களுக்கும் உள்ளது என்றும், அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Comment